நலன்களை அள்ளித் தரும் நவராத்திரி வழிபாடு!

ஒன்பது நாட்களும் மூன்று தேவிகளையும் வழிபட்டு பத்தாவது நாளன்று ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது.

Update: 2023-10-16 18:30 GMT
Click the Play button to listen to article

நவம் என்றால் புதுமை மற்றும் ஒன்பது என்று இரண்டு பொருள்கள் உள்ளன. ராத்திரி என்றால் ‘இரவு’ என்று பொருள்படுவதால் அதனையே நவராத்திரி என்று அழைக்கிறோம் . இந்த ஒன்பது நாட்களும் மூன்று தேவிகளையும் வழிபட்டு பத்தாவது நாளன்று ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் பலரது வீட்டிலும் கொலு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 3, 5, 7, 9, 11 என்ற ஒற்றைப்படை எண்களின் அடிப்படையில் கொலு படிகள் அமைப்பது வழக்கம். முதற்படியில் ஓரறிவு கொண்ட மரம், செடி, கொடிகளையும், இரண்டாம் படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கையும், மூன்றாம் படியில் கரையான், எறும்பு, நான்காம் படியில் நண்டு, வண்டு, ஐந்தாம் படியில் பறவை, விலங்கு உள்ளிட்ட 5 அறிவு படைத்த ஜீவராசிகளையும், ஆறாம் படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் தொடர்புடைய பொம்மைகளையும், ஏழாம் படியில் வள்ளலார், பட்டினத்தார் போன்ற மகான்கள் அல்லது ஞானிகளையும்,, எட்டாவது படியில் அஷ்டலக்ஷ்மிகள், தசாவதாரம் போன்ற பொம்மைகளையும், ஒன்பதாவது படியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளையும் வைப்பதே கொலுவின் முறையாக பின்பற்றப்படுகிறது. இப்பொழுதெல்லாம் கொலு வைப்பது நவீனமாகி வருகிறது. அந்த வகையில், ஏதாவது ஒரு கருத்தை மையபப்டுத்தி ( தீம் அடிப்படையில் ) கொலு வைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட கொலுவை அமைப்பதற்கான காரணம் என்ன? அதன் வரலாறு என்ன? என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

நவராத்திரி வரலாறு

காசிப முனிவருக்கும் அவரது மனைவி திதி தேவிக்கும் பிறந்தவர்கள் தான் அரக்கர்கள். இந்த அரக்கர்கள் பல வருடங்களாக தவமிருந்து பிரம்மன் மற்றும் சிவனிடம் பல்வேறு வரங்களை பெற்று மக்களுக்கும், தேவர்களுக்கும் பல்வேறு துன்பங்களை அளித்து வந்தனர். அசுரனான சும்பன் மற்றும் நிசும்பன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வருடங்களுக்கு மேல் தவம் இருந்து பிரம்மனிடம், ‘தங்களை யாரும் அழிக்க கூடாது’ என்ற வரத்தை கேட்க, அதற்கு பிராமனானவர் அது எப்படி அழியாமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் அந்த அரக்கர்கள் அப்படி நாங்கள் இறக்கும் தருணம் ஒன்று ஏற்பட்டால், நிச்சயம் நாங்கள் ஒரு கன்னிப் பெண்ணின் கையினால் தான் இறக்க வேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் இருந்து கேட்டு பெற்றனர். இதையடுத்து சும்பனும், நிசும்பனும் மூவுலகையும், தேவர்களையும் ஆட்டி படைத்தனர். இதுகுறித்து தேவர்கள் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்று முறையிடவே மும்மூர்த்திகள் தங்கள் சக்தியை பயன்படுத்தி மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி என பல அவதாரங்களை ஒரே அவதாரமாக அதுவும் துர்க்கை அவதாரமாக தோற்றுவித்தார்.


அரக்கர்கள் தவமிருந்து பிரம்மன் மற்றும் சிவனிடம் வரம் பெரும் கார்ட்டூன் காட்சிகள்  

இதற்கு பிறகு துர்கா தேவி அழகிய இளம் பெண் உருவம் கொண்டு பூலோகத்திற்கு சென்றார். அசுரனான சும்பன் மற்றும் நிசும்பனின் உதவியாளராக இருந்த சண்டனும், முண்டனும் இந்த அழகான இளம்பெண்ணை அவர்களின் அசுர ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இளம் பெண்ணாக அவதரித்த துர்க்கை தேவியை வற்புறுத்தியுள்ளனர். அதற்கு துர்கா தேவி, “என்னை போரில் வீழ்த்தி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சபதம் எடுத்துள்ளார். இதை அந்த உதவியாளர்கள் தங்கள் படைத்தளபதிகளிடம் கூற நிசும்பன் நிச்சயம் போரில் வெற்றி பெற்று இளம்பெண்ணை தன்னுடைய மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டு ஒவ்வொரு அசுரர்களையும் போருக்கு அனுப்ப தொடங்கினான். கிட்டத்தட்ட 60 ஆயிரம் அரக்கர்களை அனுப்பி தேவியை கடத்த சொல்லிய நிலையில், கடுங்கோபம் கொண்ட பார்வதி தேவி அந்த அரக்கர்களை எல்லாம் அழித்து கொன்று குவித்தார்.


துர்கா தேவி அழகிய இளம் பெண்ணாக பூலோகத்திற்கு சென்று அரக்கர்களை வதம் செய்யும் காட்சி 

கடைசியாக சண்டாவையும் முண்டாவையும் தேவியைக் கடத்தி வர சொல்லி அனுப்பினார் சும்பன். ஆனால் பார்வதி தேவி சண்டா மற்றும் முண்டாவின் தலையை வெட்டி வீசினார். இவற்றையெல்லாம் கண்டு சும்பனும், நிசும்பனும் ரத்த பீஜன் என்ற அரக்கனை தேவிக்கு எதிராக அனுப்பினார்கள். இந்த ரத்த பீஜன் கடுமையான தவம் இருந்து அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்து இன்னொரு ரத்த பீஜன் தோன்றுவான் என்ற வரத்தை பெற்றிருக்க தேவி அவனை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் தோன்றினான் ரத்த பீஜன். இறுதியாக துர்க்கை அம்மன் தன்னுள் உள்ள சாமுண்டி என்ற காளியின் வாயை விரிவாக திறந்து ரத்த பீஜனின் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் குடிக்கச் சொல்லி ஆணையிட்டார். துர்க்கையின் கட்டளை படி காளியும் ரத்த பீஜனின் எல்லா ரத்தத்தையும் உரிய உயிரிழந்தான் ரத்த பீஜன். இப்படி எல்லா அரக்கர்களும் இறந்த நிலையில், இறுதியாக சும்பன் மற்றும் நிசும்பனே நேரடியாக தேவியுடன் போரிட முன்வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் பெற்ற வரங்கள் எல்லாம் எதுவுமற்றதாகி தேவியால் வதம் செய்யப்பட்டார்கள். இப்படி, துர்கா தேவி 9 நாட்களும், 9 அவதாரத்தை எடுத்து 9 நாட்கள் போரிட்டார். இந்த 9 நாட்கள் தான் நவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 9 அவதாரங்களையும் அவர்களின் சக்திகளையும், வாகனங்களையும் எடுத்து கூறும் விதமாக தான் 9 நாள் கொலு வைக்கப்படுகிறது.


துர்கா தேவி ஒன்பது நாட்கள் அரக்கர்களுடன் போர் புரிந்த காட்சிகள் 

முதல் நாள்

இந்த ஒன்பது நாள் கோலாகல நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் வீரத்தின் ஸ்வரூபமாக இருக்கும் துர்க்கைக்கு விசேஷமானது. இந்த மூன்று நாட்களில் துர்கா தேவி மலைமகளாக இருந்து நம்முள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தை வழங்குகிறார். இந்த முதல் நாளில் துர்க்கை உமா மகேஸ்வரி ரூபத்தில் விளங்குகிறார். இந்த நாளில் பொட்டு வகை கோலமிட்டு, மல்லிகை/ வில்வ இலையால் அலங்கரித்து வெண் பொங்கல் அல்லது சுண்டலை நைவேத்தியமாக வைத்து, தோடி ராகத்தில் பாடல்கள் பாடி வழிபடுவது சிறந்தது. மேலும் இந்நாளில் பெரிதும் பச்சை நிறம் உபயோகிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது . முதல் நாளில் இவ்வாறு வழிபட்டால் வறுமை நீங்கி வளம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.


நவராத்திரியின் முதல் நாள் வழிபாடு மற்றும் நடிகை ப்ரீத்தா ஹரி

இரண்டாம் நாள்

துர்கையின் இரண்டாவது நாள் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ரூபமாகும். இந்த ரூபவதி நாம் எந்த மந்திர சித்திகளை நினைக்கிறோமோ அதை வழங்குபவளாகவும் அவர்களை மற்றவர்களால் வசியம் செய்ய முடியாத பலனை தருகிறவளாகவும், போராட்டமற்ற வாழ்க்கையை தருபவளாகவும் இருக்கிறாள். தோல்வியை நீக்கி,வெற்றியை தருபவளாகவும் இருக்கிறாள். இந்த இரண்டாவது நாளில் முல்லை அல்லது மருகுவால் அலங்கரித்து புளி சாதம், வேர்க்கடலை சுண்டல் நைவேத்தியமாக செய்து மாம்பழம் வைத்து கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி, கட்டம் வகை கோலம் போட்டு வழிபடுவது சிறந்தது. இந்நாளில் மஞ்சள் நிறம் உபயோகிப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

மூன்றாம் நாள்

துர்க்கைக்கு என்று வழிபடப்படும் இறுதிநாளான மூன்றாம் நாளில் துர்க்கை வராகி ரூபத்தில் இருக்கிறார். பழியை தீர்க்கும் தேவியாக பாவத்தை போக்கும் தேவியாக காக்கும் தெய்வமாகவும் வராஹி தேவி இருக்கிறார். இந்த நாளன்று மலர்களால் கோலம் போட்டு, சம்பங்கி அல்லது துளசி இலையால் அலங்கரித்து, சர்க்கரை பொங்கல் மற்றும் காராமணி சுண்டலை நைவேத்தியமாக படைத்து, பலாப்பழம் வைத்து, காம்போதி ராகப் பாடலை பாடி வழிபடுவது சிறந்தது. இந்த நாளில் நீல நிறத்தை பயன்படுத்துவது சிறப்பாகக் கூறப்படுகிறது.


நவராத்திரியின் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் வழிபாடு 

நான்காம் நாள்

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உகந்ததாக அமைந்த நிலையில் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு உகந்ததாகும். லட்சுமி தேவி நமக்கு வேண்டிய எல்லா சக்தியையும் செல்வங்களையும் வழங்கும் அலைமகளாக இருக்கிறாள். இந்த நாளில் லட்சுமி தேவி மகாலட்சுமி ரூபத்தில் காட்சியளிக்கிறார். இன்றைய தினம் படிக்கட்டு கோலம் வரைந்து, ஜாதி மல்லி அல்லது கதிர்பச்சை இலைகளால் அலங்கரித்து, கதம்ப சாதம் அல்லது பட்டாணி சுண்டல் நைவேத்தியமாக படைத்து, கொய்யா பழம் வைத்து, பைரவி ராகப் பாடல்களை பாடி மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. இன்றைய நாளில் கருநீல நிறம் பயன்படுத்துவது உகந்ததாக இருக்கிறது.

ஐந்தாம் நாள்

கொலுவின் ஐந்தாம் நாளில் லட்சுமி தேவி, வைஷ்ணவி தேவி அல்லது மோகினி ரூபத்தில் எழுந்தருளுகிறார். இவள் துன்பங்களை நீக்கி கேட்கிறதை கேட்டபடியே வழங்கும் தேவியாகவும், செல்வ விரயத்தை கட்டுப்படுத்துபவளாகவும் விளங்குகிறார். இந்த ஐந்தாம் நாளில் பறவை வகை கோலம் போட்டு, மனோரஞ்சித மலர் அல்லது பாரிஜாதம் மலர் அல்லது திருநீற்றுப் பச்சை இலையால் அலங்கரித்து தயிர் சாதம் மற்றும் கடலை பருப்பு சுண்டல் செய்து. மாதுளை பழம் வைத்து. பந்துவராளி ராகம் கொண்ட பாடலை பாடி வைஷ்ணவி தேவியை வழிபடுவது சிறந்தது. அதேபோல் இந்த ஐந்தாம் நாளில் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது சிறப்பாக அமையும்.


 நவராத்திரியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் வழிபாட்டின் சிறப்புகள்

 ஆறாம் நாள்

ஆறாம் நாளில் லட்சுமி தேவி சண்டிகா தேவியாக எழுந்தருளுகிறார். ஜன்மாந்திரமாக இருக்கும் சாபங்களையும் பாவங்களையும் போக்கும் தேவியாகவும் பயத்தை போக்கும் தேவியாகவும் தரித்திரத்தை நீக்கும் தேவியாகவும் இந்த சண்டிகா தேவி விளங்குகிறார். இந்த ஆறாம் நாளில் கடலை மாவு கொண்டு தேவியின் நாமத்தையே கோலமாக வரைந்து செம்பருத்தி பூ அல்லது சந்தன இலை கொண்டு, பூஜை செய்து தேங்காய் சாதத்தை நைவேத்தியமாக செய்து, நார்த்தம் அல்லது ஆரஞ்சு பழம் வைத்து, பச்சை பயறு சுண்டல் செய்து நீலாம்பரி ராகத்தில் பாடலை பாடி, சண்டிகா தேவியை வழிபடுவது மிக சிறப்பாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் கிளிப்பச்சை நிறம் பயன்படுத்துவது சிறப்பு.

ஏழாம் நாள்

கொலுவின் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு விசேஷமானது. இந்த சரஸ்வதி தேவி ஞானத்தையும் மோக்ஷம் அடையும் வழியை காட்டும் தேவியாக இருக்கிறார். கலைமகளாக விளங்கும் சரஸ்வதி தேவி இந்த ஏழாம் நாளில் சாம்பவி ரூபத்தில் எழுந்தருளுகிறார். இந்த நாளில் மலர்களை கொண்டு சங்கு வடிவில் கோலத்தை வரைந்து தாழம்பூ அல்லது தும்பை இலையை பயன்படுத்தி அலங்காரம் செய்து, எலுமிச்சை சாதத்தை நைவேத்தியமாக படைத்து, பேரீச்சம் பழம் வைத்து கொண்டைக்கடலை சுண்டல் செய்து, பிலஹரி ராகத்தில் அமைந்த பாடலை பாடி சாம்பவி தேவியை வழிபடுவது சிறந்தது. இன்றைய நாளில் இளஞ்சிவப்பு நிறத்தில் அமைந்த ஆடைகளை அணிவது சிறப்பு.


 நவராத்திரியின் ஆறு மற்றும் ஏழாம் நாள் வழிபாட்டின் சிறப்புகள்

எட்டாம் நாள்

எட்டாம் நாளில் சரஸ்வதி தேவி, நரசிம்ம தாரணியாக எழுந்தருளுகிறார். நரசிம்ம தாரணியை வழிபடுவதால் பகை தீரும் பயம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் அரிசி மாவு அல்லது தாமரை மலர்களால் பத்ம வகை கோலம் போட்டு, ரோஜா அல்லது மருதாணி இலையால் அர்ச்சனை செய்து, பால் சாதத்தை நைவேத்தியமாக படைத்து, மொச்சை பயறு சுண்டல் செய்து, திராட்சை பழம் வைத்து, புன்னாக வராளி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி வழிபடுவது சிறப்பானது. இந்த எட்டாம் நாளில் பச்சையும் அரக்கும் சேர்ந்திருக்கிற நிறத்தை பயன்படுத்துவது நல்லது.


ஒன்பதாம் நாளில் சரஸ்வதி தேவி பரமேஸ்வரி ரூபத்தில் காட்சி தரும் நிகழ்வு

 ஒன்பதாம் நாள்

கொலுவின் இறுதி நாளான இந்த ஒன்பதாம் நாளில் சரஸ்வதி தேவி பரமேஸ்வரி ரூபத்தில் காட்சி தருகிறார். இவர் தைரியம், வீரம், ஆற்றல் தரும் தேவியாக இருக்கிறாள். இந்த இறுதி நாளில் தாமரை வகை கோலமிட்டு தாமரை அல்லது மரிக்கொழுந்துகளால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல் மற்றும் கொண்டைக்கடலையை நைவேத்தியமாக வைத்து, நாவல் பழம் வைத்து, வசந்தா ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி பரமேஸ்வரி தேவியை வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் வெந்தய நிறத்தை பயன்படுத்துவது சிறப்பெனக் கூறப்படுகிறது. இப்படி வழிபட்டால் இந்த பரமேஸ்வரி தேவி நினைத்ததை நிறைவேற்றுவாள் என்றும் நம்பப்படுகிறது. கொலுவின் இந்த ஒன்பதாம் நாள் தான் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புத்தகம் மற்றும் கலை பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.


கொலு அமைத்து, ஒன்பது நாட்களும் செய்யப்படும் வழிபாடுகள்

 பத்தாம் நாள்

வரலாற்றின் படி துர்கா தேவி அரக்கர்களை எதிர்த்து போரில் வெற்றிவாகை சூடிய நாளாக விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று அம்பாள் விஜயா ரூபத்தில் தோற்றமளிப்பாள். வெற்றியை தரக்கூடிய விஜயா தேவிக்கு பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகளை நைவேத்தியமாக வைத்து, வாசனை மலர்களால் அலங்கரித்து, அர்ச்சனை செய்து பாடல்களை பாடி தேவியை போற்றி வழிபட வேண்டும். இப்படி பல சிறப்புகளும் மகத்துவமும் கொண்ட நவராத்திரியானது இந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி முடிவடைகிறது. மேற்குறிப்பிட்ட வகையில் கொலு அமைத்து, ஒன்பது நாட்களும் வழிபாடுகள் செய்து நவ தேவிகளை வழிபட்டால் வீரம், செல்வம், வெற்றி, ஞானம் என்று பல சக்திளையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்