நவராத்திரி நாள் 9 - அம்மா சித்திதாத்ரி வழிபாடு

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் தேவியை சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். பராசக்தியின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாக இது கருதப்படுகிறது.

Update:2024-10-11 11:17 IST

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் தேவியை சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். பராசக்தியின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாள், நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. எனவே இதனை துர்கா நவமி என்றும் சொல்லுவதுண்டு. மேலும் இத்தினம் நவராத்திரியின் நிறைவு என்பதால் இன்றைய இரவு தெய்வீக சக்தி உச்சம் பெற்றிருக்கும். நவராத்திரி விரதம் இருந்து பக்தியுடன் வழிபட்டதற்கான பலன்களை பக்தர்களுக்கு அம்பிகை தந்தருள்வாள்.

அன்னை சித்திதாத்ரிக்கு உரிய பாடல் 

அபிராமி அந்தாதி (பாடல் 29)

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா

சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்

முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

சித்திதாத்ரி என்ற பெயரின் பொருள்

சித்தி என்றால் வெற்றி. தாத்ரி என்றால் தருபவள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள். படைப்புக்கான திறவுகோலை பெற்றுவிட்டால் நாம் நினைக்கும் அனைத்தையும் ஒரே நொடியில் நம்மால் உருவாக்க இயலும்.அதற்கான திறவுகோலை நம்மிடம் தருபவள் இந்த தாய் தான்.

யார் இந்த சித்திதாத்ரி?

பார்வதி தேவியின் மூல ரூபமாக சித்திதாத்ரி கருதப்படுகிறார். சிவப்புநிற உடையில் காணப்படும் அன்னைக்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை வைத்திருக்கிறாள். அவள் முழுமையாக பூத்த தாமரை அல்லது சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கிறாள். அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, இஷித்வா, வசித்வா என அழைக்கப்படும் எட்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது சித்திகளைக் கொண்டிருக்கிறாள். எனவேதான் அஷ்டமா சித்திகளும் பெற அனைத்து சித்தர்களும் தினமும் அம்மா சித்திதாத்ரியை வழிபடுகின்றனர். சித்திகள் பெற்று பரிபூரண நிலை பெற்று ஆக்கல் அழித்தல் காத்தல் ஆகியவை செய்திடும் ஆற்றலை இவளிடமே தேவர்களும் பெற்று கொள்கின்றனர். மாயை எனும் திரையை விளக்கி ஞானம் எனும் வரத்தை பெற்று வாழ்வின் யதாரத்தை உணர்ந்து வெற்றி பெற வைப்பவள் இவளே!

சித்திதாத்ரி வழிபாட்டு முறை

அம்மா சித்திதாத்ரியை வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் நிறைந்து காணப்படும். சங்கு, சக்கரம், அபய, வரத முத்திரையுடன் இருக்கும் அம்மா சித்திதாத்ரியை போற்றி வழிபட்டால், வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதான். தேங்காய், பாயசம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்கள் அம்மா சித்திதாத்ரி வழிபாட்டிற்கு உகந்தவை. மேலும் இந்த தேவிக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபடுவது அன்னையின் மனதை குளிர்வித்து குடும்பத்தினர் அனைவருக்கும் ஞானத்தை பெருக்கி, ஆயுள், ஆரோக்கியத்தை அளிக்குமாம். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்களாம்.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Tags:    

மேலும் செய்திகள்