நவராத்திரி நாள் 5 - ஸ்கந்த மாதா வழிபாடு

பெண்மையின் அனைத்து அம்சங்களையும் வழிபடுவதே நவராத்திரியின் நோக்கம். அந்த வகையில் ஸ்கந்தனின் தாயாகிய ஸ்கந்த மாதாவை வழிபடுவது குறித்து நவராத்தியின் ஐந்தாம் நாளான இன்று பார்ப்போம்.

Update:2024-10-07 15:23 IST

நவராத்திரியின் ஐந்தாம் நாளில், துர்க்கையின் ஐந்தாவது அவதாரமான ஸ்கந்த மாதா வழிபடப்படுகிறார். மகளாக, கன்னியாக, மணமான சுமங்கலியாக, கர்ப்பிணியாக என்பதனை தொடர்ந்து தாயான ரூபத்தை இன்று வழிபடும் நாள். பெண்மையின் அனைத்து அம்சங்களையும் வழிபடுவதே நவராத்திரியின் நோக்கம். அந்த வகையில் ஸ்கந்தனின் தாயாகிய ஸ்கந்த மாதாவை வழிபடுவது குறித்து நவராத்தியின் ஐந்தாம் நாளான இன்று பார்ப்போம்.  

ஸ்கந்த மாதாவிற்கு உரிய பாடல் :

அபிராமி அந்தாதி (பாடல் 9)

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

ஸ்கந்த மாதா பொருள் :

ஸ்கந்தா என்பது முருகனை குறிக்கும் சொல். முருகனின் அன்னையான பார்வதி தேவியை கந்தனின் அன்னை என்றழைப்பதே ஸ்கந்த மாதா எனும் அவதாரத்தின் பொருளாகும்.

ஸ்கந்த மாதா பற்றிய கதை :

ஞானிகளையும், ரிஷிகளையும், தேவர்களையும், மனிதர்களையும் கொடுமை செய்துவந்த அரக்கன் தாரகாசுரன், சிவபெருமானின் மகனைத் தவிர வேறு யாரும் தன்னை கொல்ல முடியாது என்று பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட தாரகாசுரனை வதைக்க அன்னையின் வரம் வாங்கி பிறந்தவர் கந்தப்பெருமான். அம்மா ஸ்கந்த மாதா குழந்தையாக தன் அடியவரை காப்பாற்றும் கருணை வடிவம். முருகனுக்கு சக்திவேல் தந்த பெரும் கருணை. அரக்கனை அழிக்க மூல காரணமாக இருந்த அன்னையை நவராத்திரியின் ஐந்தாம் நாளில் வணங்கி பணிந்தால், எதிரிகளின் அச்சமின்றி நல்வாழ்வை பெற முடியுமாம்.

ஸ்கந்த மாதாவின் தோற்றம் :

தாமரை மலர்களை ஏந்தி சிங்கத்தின் மீது அமர்ந்த சிம்மவாகினி நம் அன்னை. இந்த வடிவத்தில் அவள் நான்கு கரங்களைக் கொண்டிருக்கிறாள். ஒன்றில், ஆறுமுகக் குழந்தையான கார்த்திகேயனைப் பிடித்திருக்கிறாள். இரண்டாவது மற்றும் மூன்றாவது கரத்தில் தாமரையை ஏந்தியிருக்கிறாள். நான்காவது கரத்தில் பக்தர்களை ஆசீர்வதிக்கிறாள். அடியவருக்கு தியானம் செய்யும்போது தாமரை மீது காட்சி தருகிறாள். 

ஸ்கந்த மாதா வழிபாட்டு முறை :

விஷுத்தி அல்லது தொண்டை சக்கரத்தை ஆட்சி செய்யும் அன்னை ஸ்கந்த மாதா, பக்தர்களுக்கு நல்ல எண்ணங்களை ஆசீர்வதிப்பவள். அவள் தனது குழந்தைகளான பக்தர்களுக்கு எந்த தீங்கு வந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டாள். சிறந்த பேச்சாற்றல், நல்ல எண்ணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றிட இந்த அன்னையின் வழிபாடு உதவுகிறது. வாழைப்பழம், லட்டு போன்ற மஞ்சள் நிற இனிப்பு வகைகள் ஸ்கந்த மாதா அன்னையின் வழிபாட்டிற்கு உகந்தவையாக கருதப்படுகின்றன.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Tags:    

மேலும் செய்திகள்