கடுமையான நாக தோஷத்தையும் போக்கும் "நாக பஞ்சமி விரதம்"!

"நானோ அல்லது என்னுடைய தலைமுறையை சேர்ந்தவர்களோ, நாகர் குலத்திற்கு ஏதாவது தீங்கு செய்திருந்தால் அதனை மன்னித்து, எங்களின் துயரங்களை போக்குவாயாக"

Update: 2024-08-08 11:46 GMT

ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி, நாக பஞ்சமியாக அனுசரிக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இந்நாளில் இந்துக்கள் விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாக பஞ்சமி வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் நாக பஞ்சமி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாக பஞ்சமியின் சிறப்புகள், விரதத்தின் மகிமை மற்றும் வழிபடும் முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாக பஞ்சமி எப்போது?

இந்த ஆண்டு நாக பஞ்சமி, ஆகஸ்டு 9-ம் தேதி(வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலை 12:36 மணிக்கு ஆரம்பமாகும் பஞ்சமி திதி, ஆகஸ்டு 10-ம் தேதி அதிகாலை 03:14 மணிவரை இருக்கிறது. அதாவது வெள்ளிக்கிழமை முழுவதும் பஞ்சமி திதி இருக்கிறது. இதுபோல வெள்ளிக்கிழமையில் பஞ்சமி திதி வருவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. 


கோயில் அல்லது அரச மரத்தடியில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யலாம்!

நாக பஞ்சமி மந்திரம்

"ஓம் நவ்குல்லாய வித்மஹே விஷ்டந்தாயே தீமஹீ தன்னோ ஸர்பஹ் பிரச்சோதயாத்" என்ற மந்திரத்தை நாக பஞ்சமி நாளில் உச்சரிக்க, தோஷங்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

நாக பஞ்சமியின் பின்னணி

நாக பஞ்சமி கொண்டாட்டத்திற்கு பல்வேறு பின்னணிகள் கூறப்படுகின்றன. அதில் மிகவும் பிரபலமானதை பார்ப்போம். ஒரு நாள் விவசாயி ஒருவர், தனது நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, அவரது கலப்பை மூன்று பாம்பு குட்டிகள் மீது பாய்ந்து, அவை உயிரிழந்தன. தன் குட்டிகளின் மரணத்தை கண்டு வருந்திய தாய் பாம்பு, அந்த விவசாயியை பழிவாங்க துடித்தது. நள்ளிரவில் விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த தாய் பாம்பு, விவசாயி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கடித்தது. விவசாயியின் மகள் தவிர அனைவரும் உயிரிழந்தனர். மகளை விட்டுவிட்டோமே என்று எண்ணிய பாம்பு, மீண்டும் விவசாயியின் வீட்டிற்குள் நுழைந்தது. அப்போது, அந்த தாய் பாம்புக்கு ஒரு கிண்ணத்தில் பால் வைத்த விவசாயியின் மகள், தனது தந்தையை மன்னிக்கும்படி மனதார கேட்டுக்கொண்டாளாம். விவசாயி மகளின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன தாய் பாம்பு, முந்தைய இரவில், தான் கடித்த விவசாயி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க செய்ததாம். அன்றிலிருந்து ஆண்டுதோறும் நாக பஞ்சமி திருநாள் கொண்டாடப்படுகிறதாம். பிரிந்த உயிரை கூட மீட்டு தரும் சக்தி படைத்தது என்பதால் நாகங்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து விடுபட நாக பஞ்சமி வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது.


எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கும் சக்தி படைத்தது நாக பஞ்சமி விரதம்!

நாக பஞ்சமி வழிபாட்டு முறை

நாக பஞ்சமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, கோயில் அல்லது அரச மரத்தடியில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து, மலர்கள் சூட்டி வழிபட வேண்டும். "நானோ அல்லது என்னுடைய தலைமுறையை சேர்ந்தவர்களோ, நாகர் குலத்திற்கு ஏதாவது தீங்கு செய்திருந்தால் அதனை மன்னித்து, எங்களின் துயரங்களை போக்குவாயாக" என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் நாகர் உருவம் இருந்தால், அதற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். நாகர் உருவம் இல்லை என்றால் நாகத்தை ஆபரணமாகவோ, வாகனமாகவோ கொண்ட கடவுளர்களை வணங்கலாம். உதாரணத்திற்கு, சிவன், முருகன், பெருமாள், விநாயகர், அம்மன் போன்ற ஏதாவது ஒரு தெய்வத்தின் படத்திற்கு பால் வைத்து வழிபடலாம். வழிபாட்டிற்கு பின்னர் அந்த பாலை, கிணற்றிலோ, மரத்திலோ ஊற்றிவிட வேண்டும். தங்களால் முடிந்ததை நைவேத்தியமாகவும் படைத்து வழிபடலாம். அனைத்திலும் முக்கியமானது, "நாகர் வழிபாட்டினை ராகு கால வேளையில் செய்வதே சிறப்பானதாகும்".

நாக பஞ்சமி விரதத்தின் மகிகை!

தெய்வங்களுக்கு ஆபரணமாகவும், வாகனமாகவும் இருக்கும் பாம்புகள், மனிதர்களை விட சக்தி வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன. மேலும் மனிதர்களின் ஜாதகத்தில் இருக்கும் ராகு மற்றும் கேது, சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களால் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் ஆகிய கடுமையான தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாக பஞ்சமி தினத்தில் விரதம் இருந்தால், இந்த இரண்டு தோஷங்கள் உள்பட எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. தேவையில்லாத பயம், நடுக்கம் உள்ளிட்டவற்றையும் நாக பஞ்சமி வழிபாடு நீக்குமாம்.

Tags:    

மேலும் செய்திகள்