மழலைச் செல்வம் வாய்க்க கடைப்பிடிக்க வேண்டிய கிருஷ்ண ஜெயந்தி விரதம்.

தேவகிக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் தந்தையின் கண் முன்னாலேயே இரக்கமின்றி கொன்றான்.

Update:2023-08-29 00:00 IST
Click the Play button to listen to article

கிருஷ்ண ஜெயந்தி வரலாறு

துவாபர யுகத்தில் மதுரா தேசத்தை ஆண்டு வந்தவன் அசுர வம்சத்தை சேர்ந்த கம்சன். மன்னனுக்கு தேவகி என்ற தங்கை இருந்தாள். அசுரனாக இருந்தபோதும் தங்கை மீது அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவன் கம்சன். தனது அன்புத் தங்கையை வசுதேவர் என்பவருக்கு திருமணம் செய்வித்து மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஒரு ரதத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானிலிருந்து ஒலித்த அசரீரி, “கம்சா உன் தங்கைக்கு திருமணம் செய்வித்து நீ மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறாய். ஆனால் உன் தங்கைக்கு பிறகும் எட்டாவது குழந்தையால்தான் உனக்கு மரணம்” என்று கூறி மறைந்தது. இதைக் கேட்டதும் கம்சன் அதிர்ச்சியடைந்தான். பாசத்தை விட உயிரே முக்கியம் என்று நினைத்தவன் தன் உயிராய் கருதிய தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்லத் துணிந்தான். கம்சனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர் தேவகிக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கம்சனிடமே ஒப்படைத்து விடுவதாகவும், மணக்கோலத்தில் இருக்கும் தேவகியை பிணக்கோலமாக்கி விடவேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டு மனம் மாறிய கம்சன் அவர்கள் இருவரையும் சிறையிலடைந்து கடுங்காவலில் வைத்தான். தேவகிக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் தந்தையின் கண் முன்னாலேயே இரக்கமின்றி கொன்றான்.


தேவகியை கொல்லத் துணிந்த கம்சன் மற்றும் தேவகியின் குழந்தையை கொல்வதற்கு முனையும் கம்சன்

இந்நிலையில் கம்சன் எதிர்பார்த்து காத்திருந்த எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் தேவகியின் கருவில் உருவானான். இதையறிந்ததும் கம்சன் மனதுக்குள் நடுக்கம் கொண்டான். அடிக்கடி சிறைச்சாலைக்கு சென்று தேவகியைப் பார்த்து வந்தான். தேவகியோ மிகுந்த அச்சத்துடன் அழுது கொண்டே இருந்தாள். தேவகி முன்பு மகாவிஷ்ணு தோன்றி, “கவலை வேண்டாம். நானே உனக்கு எட்டாவது குழந்தையாகப் பிறப்பேன். கம்சனை வதம் செய்வேன்” என்று கூறி மறைந்தார். தேவகியின் மகனாக சிராவண மாத தேய்பிறை அஷ்டமி நாள் நள்ளிரவு ரோகிணி நட்சத்திரத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்தார். நள்ளிரவில் கிருஷ்ணன் பிறந்ததும் வசுதேவரின் கை விலங்குகள் எல்லாம் தானாகவே கழன்றன. வாயிற்காப்போர் அனைவரும் மயங்கி விழுந்தனர். திடீரென்று தோன்றிய அசரீரி கிருஷ்ணனை ஒரு கூடையில் வைத்து கோகுலத்தில் இருக்கும் வசுதேவரின் நண்பர் நந்தகோபன் வீட்டில் சேர்த்து விட்டு, அங்கிருக்கும் வசுதேவரின் பெண் குழந்தையை எடுத்து வருமாறு வசுதேவருக்கு ஆணையிட்டது. வசுதேவரும் ஆணைக்கு கட்டுப்பட்டு உடனே கிருஷ்ணனை ஒரு கூடையில் வைத்து கிளம்ப ஆயத்தமானார். சிறைக்கதவுகள் ஒவ்வொன்றும் தானாகவே திறந்துகொள்ள வசுதேவர் கூடையை தலையில் சுமந்து கொண்டு சிறைக்கூடத்தை விட்டு வெளியேறினார்.

மதுராவிலிருந்து கோகுலத்திற்கு செல்லும் வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. யமுனை நதியிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவு மையிருட்டில் அடாத மழையில் நனைந்தபடி நதியை கடக்கக் தொடங்கினார் வசுதேவர். நதியில் இறங்கி நடந்து கொண்டிருக்கையில் மழையின் தீவிரத்தால் வெள்ளம் அதிகமானது. வசுதேவரோ வெள்ளத்தின் வேகத்தை சமாளிக்க இயலாமல் திணறிக் கொண்டிருந்தார். கண்ணனோ கூடைக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். ஆற்று வெள்ளம் உயர்ந்து உயர்ந்து வசுதேவர் நீருக்குள் மூழ்கத் தொடங்கினார். வெள்ளமோ ஆடி ஆடி கூடையைத் தொட்டதும், கிருஷ்ணன் தன் பிஞ்சுப் பாதங்களை வெளியே நீட்டி பெருவிரலால் ஆற்று வெள்ளத்தைத் தொட்டார். கிருஷ்ணனின் பாதம் பட்டதும் வெள்ளம் மடமடவென வடியத் தொடங்கியது. திணறிக் கொண்டிருந்த வசுதேவர் ஆசுவாசமடைந்து வேகமாக நதியைக் கடக்கத் தொடங்கினார். ஒருவழியாக நதியைக் கடந்து கோகுலத்தை சென்றடைந்தார். மதுராவில் பிறந்த கிருஷ்ணன் யமுனை நதியை கடந்து கோகுலம் சென்றதாலேயே கிருஷ்ண ஜெயந்தியானது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது.


கூடையில் கிருஷ்ணனை சுமந்து யமுனை நதியைக் கடக்கும் வசுதேவர்

கோகுலத்தை அடைந்த வசுதேவர் தன்னுடைய நண்பரான நந்தகோபன் வீட்டில் குழந்தை கிருஷ்ணனை ஒப்படைத்து விட்டு, நந்தகோபனின் மனைவி யசோதாவுக்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு எதுவும் நடக்காததைப் போன்று மதுராவின் சிறைக்கூடத்திற்குத் திரும்பி விட்டார். குழந்தை பிறந்த செய்தி கேட்டு ஓடி வந்த கம்சன் பெண் குழந்தையைப் பார்த்து அதிர்ந்து போனான். இந்தப் பெண் குழந்தையா நம்மைக் கொல்லப்போகிறது என்று ஏளனத்துடன் சிரித்துக் கொண்டே குழந்தையைக் கொல்வதற்காக கையிலெடுத்தான். கம்சன் குழந்தையைப் பற்றித் தூக்கியதும், அந்தக் குழந்தைப் பேசத் தொடங்கியது. “உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறிடத்தில் பத்திரமாக வளர்ந்து வருகிறான். உன்னால் அவனை எதுவும் செய்ய முடியாது. நீ அழிவது நிச்சயம்” என்று கூறி விண்ணதிர சிரித்துக் கொண்டே மறைந்து போனது. இந்த விண்ணில் மறைந்த பெண் குழந்தை துர்கையின் அம்சமாகக் கருதப்படுகிறது. இதைக் கண்டு செய்வதறியாத திகைத்த கம்சனுக்கு கோபம் தலைக்கேறியது. “நாட்டில் இன்று பிறந்த எல்லா பச்சிளங்குழந்தையையும் கொன்றுவிடுங்கள்” என்று தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்டான் கம்சன். ஆனால் கிருஷ்ணனோ கோகுலத்தில் பத்திரமாக வளர்ந்து வந்தான். மதுராவில் குழந்தைகளை எல்லாம் கொன்று குவித்த கம்சனுக்கோ உள்ளூர சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று அஷ்டமி நாளில் பிறந்த குழந்தையை கொன்று வருமாறு அசுரர்களை அனுப்பி வைத்தான் கம்சன். கோகுலத்திற்கு கிருஷ்ணனை தேடிச் சென்ற பூதகி, சகடாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை எல்லாம் பாலகிருஷ்ணன் வதம் செய்தான். சுட்டித்தனங்கள் பல செய்து மாய கண்ணனாக கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணன் தனது ஏழாவது வயதில் மாமனான அரக்கன் கம்சனை கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. கம்சன் மட்டுமின்றி பல அரக்கர்களை வதம் செய்து உலகைக் காத்த கிருஷ்ணன், பாரதப் போரின் அச்சாணியாக இருந்து அதர்மத்தை ஒழித்து தர்மம் தழைத்தோங்கச் செய்தான். அந்த கண்ணன் பிறந்த நன்னாளே இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி என்ற கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமியா ஸ்ரீ ஜெயந்தியா

வைணவ சம்பிரதாயத்தில் வைகானச ஆகமம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமம் என இரண்டு ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வைகானச ஆகமத்தின்படி சிராவண மாத தேய்பிறை அஷ்டமி நாளை கணக்கில் கொண்டு அனுசரிக்கப்படுவது கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி. பாஞ்சராத்ர ஆகமத்தின்படி ரோகிணி நட்சத்திரத்தை முதன்மைப்படுத்தி ஸ்ரீ ஜெயந்தி அல்லது பாஞ்சராத்ர ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் அஷ்டமி முதல் நாளிலும் ரோகிணி மறுநாளிலும் வருவதுதான் வழக்கம். ஏதேனும் ஒரு வருடத்தில் இரண்டும் ஒரே நாளிலும் வருவதுண்டு. இந்த ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி கோகுலாஷ்டமி என்ற கிருஷ்ண ஜெயந்தியும் மறுநாளான 7-ஆம் தேதி ஸ்ரீ ஜெயந்தி என்ற பாஞ்சராத்ர ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள்

கிருஷ்ண ஜெயந்தி என்று கூறியதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வீட்டு வாசலில் வரையப்படும் கிருஷ்ணனின் பிஞ்சுப் பாதங்கள்தான். இந்த பாதச்சுவடுகளானது கிருஷ்ணரை மக்கள் தங்கள் வீட்டிற்கு அழைக்கும் ஒரு வரவேற்பாக கருதப்படுகிறது. இந்நன்னாளில் கிருஷ்ணருக்கென்று பல வகையான பட்சணங்கள் செய்வது வழக்கம். சீடை, முறுக்கு, தட்டை, அதிரசம், கொழுக்கட்டை, பாயாசம், லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு, திரட்டுப்பால், வெண்ணெய் என்று விதவிதமான பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவர். இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வெறும் அவல் மட்டும் படைத்து வழிபடலாம். இதைத் தவிர்த்து மாயக் கண்ணனுக்கு பிடித்தமான பால், தயிர், வெண்ணெய், மோர், நெய் போன்ற ஐந்தமுதையும் படைக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்

‘கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தையில்லா தம்பதியர் விரதம் கடைபிடித்தால் விரைவில் கிருஷ்ணரோ ராதையோ தங்களுக்கு குழந்தையாகப் பிறப்பார்கள் என்று நம்பப்படுகிறது. விரதத்தின் முதற்படியாக காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்து, கிருஷ்ணரின் உருவப் படத்தையோ அல்லது கிருஷ்ணரின் விக்ரகத்தையோ வைத்து அதைப் பூக்களால் அழகாக அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியின் பிரத்யேக கோலமாக கருதப்படும் கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் கிருஷ்ணனை பூஜித்து நைவேத்தியங்களை எல்லாம் படைத்து கிருஷ்ணரிடம் மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் போற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்யலாம்; பாடல்கள் மூலம் மாயக் கண்ணனை துதித்துப் பாடலாம். இறுதியில் தீபாராதனை செய்து வழிபட வேண்டும். கண்ணனாக பாவிக்கும் குழந்தைகளுக்கு நைவேத்திய பிரசாதங்களை வழங்கி தாங்களும் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதம் கடைப்பிடித்து மனமுருகப் பிரார்த்தித்தால் மழலைச் செல்வம் வாய்க்கப்பெறும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்