கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்கள்!

இந்தியாவுக்கு வந்த தோமா முதலில் கேரளாவில் தனது மறைபணியை தொடங்கினார்.

Update:2023-12-19 00:00 IST
Click the Play button to listen to article

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று எந்த பிரிவினர்களை எடுத்தாலும் விசேஷம் என்றாலே முதலில் மக்கள் சென்று வழிபடுவது என்னவோ கோயில், சர்ச் மற்றும் மசூதிதான். அப்படி கிறிஸ்தவர்களால் பெரிதாக கொண்டாடப்படும் இயேசுவின் பிறப்பு நாளான கிறிஸ்துமஸின் வருகையையொட்டி சென்னையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க, பழமை வாய்ந்த, புகழ்பெற்ற தேவாலயங்களுள் சில தேவாலயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

சாந்தோம் தேவாலயம்

இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவரின் சுவிசேஷத்தை மக்களுக்கு எடுத்துரைக்க அவருடைய சீடர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்ல, சீடர் தோமா இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவுக்கு வந்த தோமா முதலில் கேரளாவில் தனது மறைபணியை தொடங்கினார். அங்கு அவருக்கு நல்ல ஆதரவு கிடைத்திருந்தாலும் எதிர்ப்பும் கிளம்பியது. அப்படி எதிர்ப்பு கிளம்பிய நிலையில் புனித தோமா கேரளாவிலிருந்து சென்னை மயிலாப்பூருக்கு வருகை தந்தார். அவர் மயிலாப்பூரில் தங்கிய இடம்தான் சாந்தோம். அவர் தங்கிய சாந்தோமில் மிக பிரம்மாண்டமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டதே சாந்தோம் பேராலயம். இந்த தேவாலயம் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையாரின் கல்லறை உள்ளடக்கிய புனித திருத்தலம் ஆகும். கி.பி 52 முதல் கி.பி 72 என 20 ஆண்டுகள் வரை புனித தோமையார் ஜெருசலேமிலிருந்து இந்தியாவுக்கு வந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியையும், அன்பையும் மக்களுக்கு எடுத்துரைத்து கிறிஸ்தவ மதத்தை பரப்பினார். இதை எதிர்த்த பலரும் அவரை கொல்வதற்கு முயற்சித்தனர். இந்த எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள புனித தோமா இவ்விடத்திலிருந்து சென்று சின்னமலை என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் தங்கினார். ஆனால் அங்கும் அவரை எதிர்த்தவர்கள் தேடிச்செல்ல அவர் சின்ன மலையிலிருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் என்ற பகுதிக்கு ஓடிச் சென்றார். இப்படி தன்னை காத்துக்கொள்ள மூன்று இடங்களுக்கு சென்றிருந்தாலும் இறுதியில் அவர் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் பகைவர்களால் ஈட்டியால் குத்தப்பட்டு ரத்த சாட்சியாக மரித்தார்.


வரலாற்று சிறப்புமிக்க சாந்தோம் தேவாலயம்

16 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்த போர்ச்சுகீசியர்கள் புனித தோமா வாழ்ந்த இடமாகிய மயிலாப்பூரில் இருந்த கோயிலை ஆய்வு செய்தபோது அங்கு புனித தோமா பயன்படுத்திய பொருட்களைக் கண்டெடுத்தார்கள். அந்த சமயத்தில் அவரை குத்திய ஈட்டியினுடைய முனை ஒரு கலசத்தின் செம்மண்ணில் இருப்பதைப் பார்த்து தோமாவினுடைய கல்லறையை அந்த இடத்திலேயே அமைத்ததுடன், அங்கு அவருடைய பெயரால் ஒரு பெரிய ஆலயத்தையும் கட்டினார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்கள் கட்டிய அந்த பேராலயம் 1883 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு, அப்போது ஆட்சிசெய்த பிரிட்டிஷ் அரசால் இப்போதிருக்கும் பேராலயம் கட்டப்பட்டது.

இந்த பேராலயம் 1886 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டு, அன்று முதல் இன்றுவரை எல்லா மக்களையும் ஒன்றிணைக்கின்ற திருத்தலமாக இருந்து வருகிறது. இவ்வாலயத்திற்கு வெளிநாட்டவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து ஜெபித்து மனவலிமையை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பேராலயத்தில் புனித தோமா இறந்த ஜூலை மூன்றாம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பெரிய திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதத்தின் 26 ஆம் தேதி நன்றியின் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் தோமாவின் கல்லறை மட்டுமல்லாமல் அவரின் அற்புத மரத்தூணும் இடம்பெற்றுள்ளது. தோமாவின் அருளால் அந்த அற்புத மரத்தூண் 2004 ஆம் ஆண்டு சென்னையை பாதித்த சுனாமியிலிருந்து காப்பாற்றப்பட்டது என்று பலரும் நம்புகின்றனர். புனித தோமாவின் அந்த அதிசய நிகழ்வை போற்றும்விதமாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதி நன்றியின் நாளாக சிறப்பிக்கப்படுகிறது. இப்படி பல புனிதங்கள் நிறைந்த இந்த தலத்திற்கு சாதி, மத வேறுபாடின்றி பலரும் வந்து ஜெபித்து கடவுளுடைய அருளை, ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கிறார்கள்.

சின்னமலை தேவாலயம்

சென்னை மாநகரில் சைதாப்பேட்டை என்ற பகுதியில் பல ஆண்டு காலமாக வீற்றிருக்கும் பழமையான திருத்தலம்தான் சின்னமலை தேவாலயம். இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தோமா, சாந்தோம் பகுதியிலிருந்து குகை வழியாக பயணம்செய்து தனது கால் தடங்களை பதித்த தேவாலயம் இது. தோமாவின் சுவிசேஷத்தால் ஐரோப்பாவிற்கு முன்னரே கிறிஸ்தவம் இந்தியாவில் பிறந்துவிட்டது. இந்தியாவில் 20 ஆண்டுகளாக வாழ்ந்த புனித தோமா 13 ஆண்டுகளாக இந்த சின்னமலை பகுதியில் வாசம் செய்துள்ளார். புனித தோமா அன்னை மரியாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர் என்பதால் அவர் இறை பணியாற்றிய இவ்விடத்தில் போர்ச்சுகீசியர்களால் கி.பி 1551 ஆம் ஆண்டு இந்த சின்னமலையில் அன்னை மரியாளுக்கென ஒரு சிறிய சிற்றாலயம் அர்ப்பணிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பேராலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் முதன்முதலாக கட்டப்பட்ட ஒரு பகுதி இன்றளவும் அங்கு இருக்கிறது. தற்போது காணப்படும் சின்னமலை தேவாலயம் 1971 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதாகும். இவ்வாலய பீடத்தின் இடதுபுறம் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் இருக்கும் சிறு நுழைவாயிலின் வழியாக உட்புறம் சென்று சீடர் தோமா வாழ்ந்த குகையை காணலாம். அக்குகையின் வலப்புறத்தில் ஒரு துவாரம் காணப்படும். சீடர் தோமா, பகைவர்கள் தன்னை கொலைசெய்ய வருவதை அறிந்து முன்னெச்சரிக்கையாக அச்சிறு துவாரத்தின் வழியாகவே பரங்கி மலையில் அமைந்திருக்கும் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்ற இடத்திற்கு சென்று பதுங்கினார். குகையின் பின்புற உயரத்தில் புனித தோமா மறைபணியாற்றிய போது தாகத்தால் வாடிய மக்களுக்கு தனது கோலை தட்டி பாறையை உடைத்து தண்ணீர் தந்து தாகத்தை தணித்த அந்த அதிசய இடத்தை இன்றும் காணலாம்.


சின்னமலையில், புனித தோமையார் மறைந்து வாழ்ந்த குகை மற்றும் அதிசய நீரூற்று 

மேலும் புனித தோமா அவருடைய கையால் செதுக்கிய கற்சிலுவை இன்றும் அக்குகையில் சாட்சியாக இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் புனித தோமாவின் கை, கால் தடயங்களும் அக்குகையில் பதிந்திருப்பதைக்கூட கண்கூடாக காண முடிகிறது. சிலுவைப்பாதையின் பன்னிரெண்டாவது நிலையின் திருச்சிலுவை சிற்றாலயமும் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிற்றாலயத்தில் இயேசு கிறிஸ்து கல்வாரியில் உயிர் நீத்த திருச்சிலுவையின் ஒரு சிறிய திருப்பண்டம் ஆராதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் நற்செய்தியை அறிவித்த தோமாவின் நினைவாக அவர் வாழ்ந்த பாறையிலிருந்து அவருக்கென நினைவுத்தூண் ஒன்று வெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கிறஸ்தவம் பிறந்துவிட்டது என்ற வரலாறுக்கு சின்னமாக இந்த தூண் அமைந்திருக்கிறது.

செயின்ட் தாமஸ் மவுண்ட்


புனித தோமையார் கொல்லப்பட்ட இடம் மற்றும் அவரது நினைவாக கட்டப்பட்ட தேவாலயம் 

சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கிண்டி மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு நடுப்பகுதியில் பரங்கிமலை என்று சொல்லக்கூடிய இடத்தில் வரலாறு நிறைந்த இந்த செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம் 300 படிகள் கொண்டு அழகிய மலையின் மேல் அமைந்திருக்கிறது. இது சென்னையில் இருக்கக்கூடிய பழமைவாய்ந்த பேராலயம் ஆகும். இயேசுவின் நற்செய்தியை இந்திய மக்களிடையே போதிக்க வந்த சீடர் தோமா இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு வந்து போதித்து, பின்னர் அங்கிருந்து சென்னை சாந்தோம், சின்னமலைக்கு வந்த நிலையில், அவர் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்ற பகுதிக்கும் வந்து தனது சுவிசேஷத்தை அறிவித்தார். கிறிஸ்தவ மதத்திற்கு வரவேற்புகள் எழும்பிய நிலையில், அம்மதத்தை எதிர்த்தவர்கள் புனித தோமாவை ஈட்டியால் குத்திவிட்டனர். அவர் உயிர் நீத்த இப்பகுதியை நினைவுகூரும் வகையாகத்தான் அவருக்காக இப்பகுதியில் ஒரு ஆலயமும், அப்பகுதிக்கு செயின்ட் தாமஸ் மவுண்ட் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. தோமாவிற்கென சாந்தோம், சின்னமலை ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர்களால் தேவாலயங்கள் எழுப்பப்பட்டது போல, அவர் மறைந்த இப்பகுதியிலும் 1523 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களாலேயே தேவாலயமும் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் 1704 ஆம் ஆண்டு சீடர் தோமாவின் ரத்தம் காணப்பட்டதாக கிறிஸ்தவ மறை கூறுகிறது. இவ்வாலயத்திற்கு 1986 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் வருகை தந்திருக்கிறார். மேலும் இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு இத்திருத்தலத்தை தேசிய திருத்தலமாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளது. இந்த ஆலயம் கட்டப்பட்டு 2023 ஆம் ஆண்டு 500 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம்


பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் புதிய மற்றும் பழைய தோற்றம் 

சென்னை மயிலாப்பூரில் புனித தோமாவுக்கு அமைந்திருக்கும் சாந்தோம் ஆலயத்தைத் தொடர்ந்து அங்கிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தூரத்தில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பேராலயமாக அமைந்திருக்கும் கிறிஸ்தவ தலம்தான் சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படக்கூடிய பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம். இது முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு ஒரு சிறிய குடிசை ஆலயமாகவே அமைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த ஆண்டான 1972 ஆம் ஆண்டே இந்த ஆலயம் குடிசை ஆலயமாக இல்லாமல் பிரம்மாண்ட ஆலயமாக கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் உச்சியில் அமைந்திருக்கும் ஒளி நிறைந்த சிலுவை அப்பகுதி மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக இருந்து வருகிறது. குடத்தில் பால் பொங்க செய்தது, முடவனை நடக்க வைத்தது, போர்ச்சுகீசியர்கள் பாதுகாப்பாக கரை சேர உதவியது என அன்னை மரியாளின் அதிசயங்களைக் கண்டு மரியாளுக்கென நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேராலயம் அமைக்கப்பட்டது. அங்கு பேராலயம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மயிலை மறைமலை மாவட்டத்தின் அருட்தந்தையாக இருந்த பேராயர் பி.டி. அருளப்பாவின் கனவில் ஆரோக்கிய மாதா தோன்றி நாகப்பட்டினத்தில் தேவாலயம் அமைத்தது போல இப்பகுதியில் தனக்கு தேவாலயம் அமைக்கும்படி கூறியதாலேயே இங்கு இந்த ஆலயமானது அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி 75 அடி உயரம் கொண்டுள்ள கொடிமரத்தில் 12 அடி உயரம் கொண்ட மாதா சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு, மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8 அன்று கோலாகலமான திருவிழா நடத்தப்பட்டு கொடி இறக்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் பலரும் பாத யாத்திரையாக வந்து திருப்பள்ளியில் பங்கேற்று அன்னை மாதாவிடம் தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து அருள் பெற்று செல்கின்றனர். இதுதவிர இவ்வாலயத்தில் பக்தர்கள் பலரும், விரைவில் திருமணம் கைகூட, புத்திர பாக்கியம் கிடைக்க, நல்ல வேலை அமைய, வியாதிகள் தீர என பல்வேறு விஷயங்களுக்காக தொட்டில் கட்டுவது, பூட்டு கட்டுவது, தாலி கயிறு கட்டுவது என மாதாவின் மேல் அளவற்ற நம்பிக்கைக்கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.

‘கோடி அற்புதராம்’ புனித அந்தோணியார் தேவாலயம்


சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் முகப்பு பகுதி  

சென்னையின் பரபரப்பான இடமாக விளங்கக்கூடிய பாரிமுனையில் புனித அந்தோணியார் தேவாலயம் இடம்பெற்றிருக்கிறது. இத்தேவாலயத்திற்கு மக்கள் பலரும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் வருகை தந்து தங்களின் பிரார்த்தனைகளை ஒரு காகிதத்தில் எழுதி வேண்டி செல்வது மிக சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் அன்னை மரியாளின் பெயரில் அமைந்திருந்தாலும் கூட அங்கு வீற்றிருக்கும் அந்தோணியாரின் புகழ் சென்னை எங்கும் பரவியுள்ளது. 1929 ஆம் ஆண்டு கோவா மாலுமிகள் புயல் ஒன்றில் சிக்கிக்கொள்ளவே அவர்களிடமிருந்த கோடி அற்புதரான அந்தோணியார் சுரூபத்திடம் அந்த மாலுமிகள், ‘ஒருவேளை நாங்கள் இந்த புயலிலிருந்து மீண்டு உயிர் பிழைத்துவிட்டால் எவ்விடத்தில் கரையை கடக்கிறோமோ அங்கிருக்கும் ஆலயத்தில் அந்தோணியாரை நிறுவி வைக்கிறோம்’ என்று பிரார்த்தித்து கொண்டனர். அதிசயமாக அந்த கோவா மாலுமிகள் அப்புயலிலிருந்து தப்பித்து சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கினார்கள். அவர்கள் வேண்டியது போலவே அங்கிருக்கும் ஆலயத்தில் அந்தோணியாரின் சுரூபத்தை நிறுவ ஒரு சிற்பியிடம் சென்றார்கள். அக்காலத்தில் அந்தோணியாரின் சுரூபம் செய்வதற்கு எந்தவொரு மாதிரி வடிவமும் இல்லாததால் பிரான்சிஸ்கன் சபை அருட்தந்தை எவ்வாறு காட்சியளிக்கிறாரோ அதே வடிவத்தில் அந்தோணியாரின் சுரூபமும் வடிவமைக்கப்பட்டது. அப்படி வடிவமைக்கப்பட்ட அந்தோணியார் எங்கும் இல்லாமல் இங்கு தாடியுடன் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும். வடிவமைக்கப்பட்ட இந்த அந்தோணியாரின் சுரூபம் முதலில் பார்க் டவுனில் உள்ள ஒரு ஆலயத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புனித பாட்ரிக் கல்லறைத் தோட்டத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் அவ்விடத்திலிருந்து புனித மேரி துணை கதீட்ரல் ஆலயத்தில் இந்த கோடி அற்புதரான அந்தோணியாரின் சுரூபம் வைக்கப்பட்டது. இதுவே நாம் இன்று பாரிமுனையில் வழிபடும் அந்தோணியார் தேவாலயமாகும். இந்த புனித அந்தோணியார் மக்கள் வேண்டுதல்களை கேட்டு பல அற்புதங்களை நிகழ்த்துவதாலேயே ‘கோடி அற்புதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்