வெற்றிலை பெட்டியில் பணத்தை வைங்க! கூடவே கிளி வெச்சிக்கோங்க! - கண்டிப்பா செல்வம் சேரும்!

படிப்பதற்கென்று தனி ஒரு இடத்தை வைத்துக்கொண்டு, ‘இறைவா! கல்வியில் மேம்பட வேண்டும்’ என வேண்டிவிட்டு படிக்கத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். புத்தகம் என்பது புதனின் தத்துவம் என்பதால் அதன் ஓரங்கள் மடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Update:2024-08-06 00:00 IST
Click the Play button to listen to article

எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்கிறதில்லை, அப்படியே வருமானம் வந்தாலும் அதைவிட செலவு அதிகமாக இருக்கிறது என்றுதான் இன்று பத்தில் ஒன்பது பேர் புலம்புகின்றனர். இப்படி பணவரவு குறைவதற்கும், பணம் வீட்டில் தங்காததற்கும் காரணங்கள் என்ன? நாம் எப்படி இருந்தால் செல்வமும் புகழும் பெருகும்? ஒவ்வொரு தெய்வத்திற்குமான சிறப்பு தன்மையை அறிந்து வழிபடுவது எப்படி? என்பதுபோன்ற பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். குறிப்பாக, வாராகி அம்மனை வழிபடுவதற்கு பலர் பயப்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அம்மனை எப்படி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்தும் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளார்.

வாராகி அம்மனை கும்பிடலாமா? அப்படி கும்பிட வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

அபிராமி அந்தாதியிலே, ‘நாயகி நான்முகி வாராகி’ என்றெல்லாம் வாராகி பற்றிய குறிப்பு வரும். ‘வாராகி காரனிடம் வாலாட்டாதே! பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக்கொள்ளாதே’ என்ற பழமொழியும் உண்டு. வாராகி என்பவள் வரத்தை நல்குபவள் என்பதால் அஞ்சத் தேவையில்லை. எனினும் எந்தவொரு வழிபாடு என்றாலும் அதில் கட்டுப்பாடுகள் கட்டாயம் தேவை. வாராகி நேர்மையை மிகவும் அதிகமாக எதிர்பார்ப்பவள். தினமும் 18 முறை மந்திரம் சொல்லி வாராகியை வழிபட்டால் அது சாதாரண கடைநிலை பக்தி. அதுவே வாராகி வழிபாட்டில் ஒரு மந்திரத்தை ஒருகோடி முறை சொன்னால்தான் அது உபாசனையில் அடிப்படையாகவே ஏற்றுக்கொள்ள முடியும். அதுபோன்ற நிலைக்கு வந்துவிட்டால், ஒரு குழந்தையிடம், ‘பூச்சாண்டி வருகிறது பார்’ என்று சொல்லி சாப்பாடு ஊட்டும் அளவிற்குக்கூட ஒரு சிறு பொய்கூட, விளையாட்டுக்கூட சொல்லக்கூடாது. அந்த அளவிற்கு நேர்மை இருந்தால் மட்டுமே வாராகி உபாசனையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லமுடியும். இது நவீனகால வாழ்க்கை முறையில் சற்று சிரமம்.


வாராகி அம்மனை கும்பிடுபவர்கள் ஒரு சிறு பொய்கூட சொல்லக்கூடாது!

அதனால் ‘வாராகி தாயே காப்பாற்று!’ என்று வழிபட்டு விளக்கேற்றலாம். ஏனென்றால் வாராகி, ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் குதிரைப்படை தளபதி. எனவே வாராகியை வழிபடுபவர்கள் குதிரைக்கு தன்னால் முடிந்த நன்மைகளை செய்யவேண்டும். வாராகி மிகப்பெரிய செல்வத்தையும், ரத்தினங்களையும் தரக்கூடியவள். வாராகியின் கணவர் உன்மத்த பைரவர். ஆலயங்களுக்கு செல்லும்போது அங்கு உன்மத்த பைரவர் சன்னதி இருந்தால் அவருக்கு ஒரு நமஸ்காரத்தை செய்யலாம். வாராகி வழிபாடு செய்பவர்களுக்கு கேது அதிகம் நன்மையையே செய்வார். சப்தகன்னிமார் கோயிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5.30 - 6 மணிக்கு ப்ளாக் சா்கலேட் போன்ற ஏதேனும் ஒரு இனிப்புப்பொருளை வாங்கிச்சென்று பூசாரியிடம் கொடுத்து, பூஜை செய்துவிட்டு, தானம் செய்ததுபோக, ஒன்றிரண்டை நாம் கையில் வாங்கி வந்துவிட வேண்டும். அதேபோல் இந்த கோயிலுக்கு கூட்டத்துடன் போகாமல் தனிப்பட்ட முறையில் குடும்பமாகத்தான் போகவேண்டும். இப்படி மூன்று, நான்கு வாரங்கள் தொடர்ந்து போகும்போது பெரும் கடன்கள் அடையத் தொடங்கும். நிலம்சார்ந்த சட்ட சிக்கல் தீரத் தொடங்கும். உடனடியாக நேரடி எதிரி மட்டுமல்லாமல் மறைமுக எதிரிகளையும் அடித்து விரட்டிவிடுவாள் வாராகி.

கையில் கிளிகளை வைத்து பேசுகிறீர்களே! இதற்கு என்ன சிறப்பு?

நான் என்னுடைய வாழ்க்கையில் பெரும் முன்னேற்றமடைய காரணமானவர் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி. குபேரனுக்கு குருவாக இருந்தவர் இவர். பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்பவர்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் சற்று பலமாக இருந்தால் வாழ்க்கையில் அதுபோன்ற சூழ்நிலைகள் அமையும் என்பது பலரது நம்பிக்கை. ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷியின் அருள்வடிவம்தான் கிளி என்பார்கள். மீனாட்சி அம்மன் தோளிலும் ஒரு கிளி இருக்கும். அதேபோல் ஆண்டாளின் வரலாற்றிலும் கிளிக்கு ஒரு பங்குண்டு. எங்கெல்லாம் கிளி இருந்ததோ அங்கெல்லாம் பெரும் செல்வம் பெருகியதாக வரலாற்றில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.


கிளி பொம்மையை வைத்திருப்பவர்கள் பொருளாதாரத்தில் பிரம்மாண்ட நிலையை அடைகின்றனர் - பவானி ஆனந்த்

அதேபோல் நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறியீடு உண்டு. ஒருவருடைய நட்சத்திரத்திலிருந்து இரண்டாவது நட்சத்திரம் என்று சொல்லக்கூடியது சம்பத்து தாரை. என்னுடைய நட்சத்திரம் கிருத்திகை, அதற்கு இரண்டாவது நட்சத்திரம் ரோகிணி. மற்றொன்று அஸ்தம். அஸ்தம் என்றாலே காயத்ரி மந்திரத்தையோ, கணபதியையோ சொல்லலாம். திருவோணம் என்பதும் எனக்கு சம்பத்து தாரையில்தான் வரும். அந்த திருவோணத்தின் வடிவமாக ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அருளுகிறார். கிளி வடிவத்தை வைத்திருப்பவர்கள் பலர் பொருளாதாரத்திலும், மீடியா துறையிலும் பிரம்மாண்ட நிலையை அடைகின்றனர். பணம் எல்லா பிரச்சினைக்கும் தீர்வல்ல என்று சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பணமே தீர்வாகிவிடுகிறது. அந்த பெரும் பொருளாதார முன்னேற்றத்தை கிளி பொம்மையை வைத்துக்கொண்டிருந்த பலர் அடைந்ததாக தங்களது அனுபவத்தில் சொன்னார்கள். அதனால்தான் நானும் இந்த கிளிபொம்மையை என்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் பெரும் புகழும் பணமும் என்னுடைய வாழ்க்கையில் வந்துகொண்டிருப்பதை நான் உணர்கிறேன்.

கிளி பொம்மையை எல்லாரும் வைத்துக்கொள்ளலாமா?

‘தி சீக்ரெட்’ என்ற புத்தகத்தில், ஏதேனும் ஒரு பொருள் நமக்கு நன்மை தரும் என்று நம்பி வைத்துக்கொண்டால் அந்த பொருள் நமக்கு நலத்தை தரும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல், 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘வேதியியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் பரேசெல்சஸ், ‘ஒரு விக்ரகத்தை அது மேரி மாதா என்று நம்பி வேண்டிவிட்டால் அவள் அருள்புரிவாள்’ என்று சொல்கிறார். அதேபோலத்தான் இந்த கிளிபொம்மையை ஸ்ரீ சுகபிரம்மர் என்று நான் நம்பிவிட்டேன். நலம் பல பெறுகிறேன்.


பண வரவை அதிகரிக்க வெற்றிலை பெட்டியை பயன்படுத்துங்கள் - பவானி ஆனந்த்

பணவரவை விட செலவு அதிகமாக இருப்பதாக பலர் சொல்கிறார்கள். செலவை குறைக்க என்ன செய்வது?

ஒரு காலத்தில் கிராமங்களில் இருக்கும் வயதானவர்கள் பெட்டிக்குள் எப்போதும் வெற்றிலையை வைத்திருப்பார்கள். வெற்றிலை என்பது 5 தெய்வங்களின் அம்சம் என்பது பழம் தமிழர்களின் நம்பிக்கை. எனவேதான் அதை வெற்றிலை பிரசன்னம் என்பார்கள். பிரசன்ன ஜோதிடம் என்பது அந்த காலத்திலேயே தமிழர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய பொக்கிஷம். கீழே மூன்று - மேலே மூன்று என வெற்றிலைகளை நன்றாக துடைத்து அதற்கு நடுவில் பணத்தை வைத்து, அதன்மேல் நாட்டு வெற்றிலைபாக்கை வைத்து அப்படியே ஓரிரு நாட்கள்விட்டு, பிறகு எடுத்து செலவுசெய்தால் பணம் தங்குவதை பார்ப்பீர்கள். அதன்பிறகு காய்ந்த வெற்றிலையை, கால் படாத இடத்தில் போட்டுவிடுங்கள்.

பலபேர் வீட்டில் செய்யும் மற்றொரு தவறு, பீரோவிற்கும் சுவருக்கும் நடுவே இடைவெளி விடாததுதான். அப்படி வைத்தாலும் பொருள் தங்குவது தடையாகும். அதேபோல், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது தவறு. படிப்பதற்கென்று தனி ஒரு இடத்தை வைத்துக்கொண்டு, ‘இறைவா! கல்வியில் மேம்பட வேண்டும்’ என வேண்டிவிட்டு படிக்கத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். புத்தகம் என்பது புதனின் தத்துவம் என்பதால் அதன் ஓரங்கள் மடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு புத்தகங்களை சரியாக பார்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு வீட்டிலே பணம் தங்கும். ஏனென்றால் அச்சடிக்கப்பட்ட கலர் காகிதம்தான் புத்தகங்களும், பணமும். புத்தகங்களை சரியாக பார்த்துக்கொண்டாலே பணம் சேரும்.

Tags:    

மேலும் செய்திகள்