ஆடி மாதத்தில் சென்னையில் தரிசிக்க வேண்டிய முக்கிய அம்மன் ஆலயங்கள்!

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. வண்ண வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உலகை ஆளும் அம்பிக்கையை சிறப்பிக்கின்றன.

Update:2024-07-24 13:34 IST

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. வண்ண வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உலகை ஆளும் அம்பிக்கையை சிறப்பிக்கின்றன. அந்த வகையில் சென்னை மற்றும் சென்னைக்கு அருகே, ஆடி மாதத்தில் தரிசிக்க வேண்டிய முக்கிய அம்மன் ஆலயங்கள் குறித்து பார்ப்போம்.

காளிகாம்பாள் கோயில்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் காளிகாம்பாள் கோயில் முதன்மையானதாக உள்ளது. சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள இந்த புனித தலம், காமாட்சி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில், உலகை ஆளும் அம்பிகை, ஸ்ரீ காளிகாம்பாளாக காட்சி தருகிறார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இரண்டு பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு நிகரான புனிதத்தன்மை இக்கோயிலுக்கும் உண்டு. தேவியின் காலடியில் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஆதி சங்கரர் நிறுவிய அர்த்தமேரு உள்ளது. மராட்டிய மாமன்னர் சிவாஜி இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்துள்ளார்.


மராட்டிய மன்னர் வீர சிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் கோயில்

வடிவுடையம்மன் கோயில்

அன்னை பராசக்தி, ஞான சக்தியின் வடிவமாக திருவொற்றியூரில் உள்ள இத்தலத்தில் வடிவுடை அம்மனாக எழுந்தருளியுள்ளார். தன்னை வணங்கும் பக்தர்கள் இப்பூவுலகில், ஞானமும், தெளிந்த அறிவுடையவர்களாகவும் திகழ வடிவுடையம்மன் அருள்புரிகிறார். நாள்தோறும் இங்கு உச்சிக்கால பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்க, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் கோயிலாக இது கருதப்படுவது கூடுதல் சிறப்பு.


திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயம்

அஷ்டலட்சுமி கோயில்

பெசன்ட் நகர் எலியட் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயிலில், லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். இங்கு அன்னையின் ஒவ்வொரு வடிவமும் வெற்றி, சந்ததி, செழிப்பு, செல்வம், தைரியம், வீரம், உணவு, அறிவு ஆகியவற்றைக் குறிக்கிறது.


தேவியின் எட்டு வடிவங்களையும் ஒரு சேர தரிசிக்கும் தலமான அஷ்டலட்சுமி திருக்கோயில்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

சென்னையில் குன்றத்தூருக்கும் பூந்தமல்லிக்கும் இடைப்பட்ட புறநகர் பகுதியில் புகழ்பெற்ற தலமாக மாங்காடு காமாட்சியம்மன் கோயில் திகழ்கிறது. ஒருமுறை தேவி, விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடியதால் உலகம் இருளில் மூழ்கியதாம். இதற்கு எதிர்வினையாக தேவியை சிவபெருமான் கடும் தவம் செய்ய சொன்னாராம். அப்போது மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தற்போது வீற்றிருக்கும் இடத்தில்தான் தேவி தவம் செய்ததாக கூறப்படுகிறது. தேவியின் தவத்தை மெச்சி சிவபெருமான், அவர் முன் தோன்றி அன்னையை மணந்தாராம். எனவே இங்குள்ள காமாட்சியை வழிபடும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் திடமாக உள்ளது.


மாங்காடு காமாட்சி அம்மன் திருத்தலம்

தேவி கருமாரியம்மன் கோயில்

திருவேற்காட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன், பல்வேறு ரூபங்களில் அப்பகுதியில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. அதற்கு சாட்சியாக, "வேண்டும் வரங்களை தருவாள் கருமாரி" என்ற புகழ்பெற்ற வாசகம் திருவேற்காடு கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருமாரி தாயை ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


வேண்டும் வரங்களை அருளும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயம்

பவானி அம்மன் கோயில்

சென்னைக்கு அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும். பவானி அன்னையே இக்கோயிலின் பிரதான தெய்வமாக வீற்றிருக்கிறாள். ஆடி மாதம் இங்கு 14 வார விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மீனவக்குலப் பெண்களின் தாயாக இந்த பெரியபாளையத்து பவானி அம்மன் விளங்குகிறாள். திருமணம் கைகூடவும், குழந்தை வரம் கிடைக்கவும் அன்னை பவானி உடனடி அருள்புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


திருமணம் மற்றும் குழந்தை வரும்தரும் பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில்

பிற முக்கிய அம்மன் கோயில்கள்

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி திருக்கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில், மைலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில், அம்பத்தூர் வாராஹி அம்மன் கோயில், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன் திருக்கோயில், திரிசூலம் திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோயில், சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி ஆலயம், செங்குன்றம் கங்கையம்மன் கோயில், சைதாப்பேட்டை காமாட்சி அம்மன் கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில், நங்கநல்லூர் சர்வமங்கள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், திருவல்லிக்கேணி நாகாத்தம்மன் கோயில், தண்டையார்பேட்டை ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில், அயனாவரம் செல்லியம்மன் கோயில், மண்ணடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்டவையும் ஆடி மாதத்தில் தரிசிக்க வேண்டிய முக்கிய அம்மன் கோயில்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்