ஆகஸ்டு 3 "ஆடிப்பெருக்கு" - தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் எது?

ஆடிப்பெருக்கில் எதை தொடங்கினாலும் அது பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம்.

Update:2024-07-31 18:09 IST

ஆடி மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். இம்மாதத்தில் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆடியில் விதை விதைக்கும் விவசாயிகளுக்கு, ஆறுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் அமோக விளைச்சலை பெற உதவியாக இருக்கும். எனவே புதுவெள்ள நீரை வணங்கி விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். விவசாயத்தை செழிக்க செய்யும் "நீர் அன்னைக்கு" மரியாதையும், வழிபாடும் செய்யும் திருநாளே ஆடிப்பெருக்கு. இந்த நாளில் நதிகளை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து வரவேற்று வழிபடுவது தமிழர்களின் பண்பாடு.

ஆடிப்பெருக்கு வழிபாட்டு நேரம்

வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு வருகிறது. அன்றைய தினம் பிற்பகலில் புனர்பூசம் நட்சத்திரம் முடிந்து பூசம் நட்சத்திரம் தொடங்குகிறது. மேலும் அன்றைய நாள் சனிக்கிழமை என்பதால், காலை 9 முதல் 10.30 மணிவரை ராகு காலம். பிற்பகல் 1.30 முதல் 3 மணிவரை எமகண்டம். நல்ல நேரம் என்று பார்த்தால், காலை 7.45 முதல் 8.45 மணி வரையும், மாலை 4.45 முதல் 5.45 மணி வரையும் உள்ளது. எனவே ஆடிப்பெருக்கு வழிபாட்டினை காலை 9 மணிக்குள் முடித்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தாலி கயிற்றை மாற்றிக்கொள்ளவும் அதுவே சரியான நேரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழிபாட்டு முறை

ஆடிப்பெருக்கு தினத்தன்று காலையிலேயே நீர்நிலைகளுக்கு சென்று முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதற்கு அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். பிறகு அங்கேயே மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றி, குல தெய்வத்தையும், நீர் அன்னையையும் வழிபட வேண்டும். வீட்டிலேயே பலவகையான சாதங்களை செய்து எடுத்துச்சென்று நீர்நிலையில் படையலிட்டும் சிலர் வழிபாடு நடத்துவர். 


ஆடிப்பெருக்கன்று தாலிக் கயிறையோ, சரடினையோ மாற்றினால் கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்

புதிதாக திருமணமான தம்பதிகள், நீர்நிலைகளில் நீராடி, கிழக்கே பார்த்தவாரு தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, இல்லற வாழ்க்கை சிறக்க வேண்டிக் கொள்வார்கள். இவ்வாறு நீர்நிலைகளுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே பலகாரங்களை செய்து, வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவழிபாடு நடத்தலாம். அப்போது, கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை மனதிலேயே நினைத்து வணங்கலாம்.

தாலி கயிறு மாற்றும் நிகழ்வு 

ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலிகள் தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். ஆடிப்பெருக்கன்று தாலி கயிற்றை மாற்றினால், கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். தாலி கயிற்றையோ, சரடினையோ மாற்றிக்கொள்வது என்பது, மூத்த சுமங்கலி பெண்களின் கைகளால் புதிதாக திருமணமான பெண்கள் செய்துகொள்வது விசேஷம்.

தாலி கயிற்றை மாற்றுவதற்கு முன்னர் ஒரு செம்பு தண்ணீரில் மஞ்சளை கலந்து, அதில் சிறிது பூக்கள் போட்டு, அதனை பூஜை அறையில் வைத்து, ஏதேனும் இனிப்புடன் நெய்வேத்தியம் செய்து, அதில் மகாலட்சுமி அமர வேண்டும் என்று வணங்கி மாற்றிக்கொள்ள வேண்டும். முடிந்தால் 9 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாலி கயிறு, சட்டை துணி ஆகியவறை வைத்து வழங்கலாம்.

ஆடிப்பெருக்கின் சிறப்பு 

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என சொல்லப்படுவது உண்டு. ஆனால் ஆடிப்பெருக்கு, அதாவது ஆடி 18-ம் தேதிமுதல் சுபகாரியங்களை செய்யலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கன்று திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு பேச்சை தொடங்குவது, சுப காரியங்களுக்கு புடவை, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, தொழில் விருத்திக்கான முதலீடுகளை செய்வது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஏனெனில், ஆடிப்பெருக்கில் எதை தொடங்கினாலும் அது பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து அம்பாளை வழிபட்டால் செல்வ வளம் பெருகுமாம்.

குழந்தை வரம் அருளும் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு நாளில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என வழிபாடு செய்து மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கம். அவ்வாறு வழிபட்டால் சிறந்த கணவர் அமைவார் என்பது நம்பிக்கை. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் திருமணம் கை கூடுமாம். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதமிருந்து வழிபட்டல் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்