செவ்வாய் தோஷத்தை போக்கும் சக்திபடைத்த ஆடி கிருத்திகை விரதம்!

கந்தனுக்கு வெற்றி வேலை அளித்த அன்னை பராசத்திக்கு உகந்த மாதமான ஆடியில் முருகப் பெருமானையும் சேர்த்து வழிபட்டால், இரு தெய்வங்களின் அருளையும் ஒருசேர பெறமுடியும்.

Update:2024-07-29 11:54 IST

முருகப் பெருமானுக்கு உரிய கிருத்திகை, மாதம்தோறும் வந்தாலும், தை, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கந்தனுக்கு வெற்றிவேலை அளித்த அன்னை பராசத்திக்கு உகந்த மாதமான ஆடியில் முருகப் பெருமானையும் சேர்த்து வழிபட்டால், இரு தெய்வங்களின் அருளையும் ஒருசேர பெறமுடியும். அத்துடன் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, 2 நாட்கள் வருகிறது. இதனால் இது தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

2 நாட்கள் ஆடி கிருத்திகை!

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களும் உள்ளது. ஜூலை 29ம் தேதி பகல் 2.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 1.40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. எனவே ஆடி கிருத்திகை விரதத்தை முழுமையாக இருக்க விரும்புவோர், ஜூலை 29ம் தேதி காலையில் விரதத்தை தொடங்கி, பகல் மற்றும் இரவில் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று ஜூலை 30ம் தேதி காலை மற்றும் பகலில் உபவாசம் இருந்து, மாலையில் விளக்கேற்றி விரதத்தை நிறைவு செய்யலாம்.


 முருகனுக்கு வெற்றிவேலை தந்த அன்னை பராசக்திக்குரிய ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சக்தி வாய்ந்தது

2 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பவர்கள், ஜூலை 30ம் தேதி செவ்வாய்கிழமையுடன் சேர்ந்து வரும் கிருத்திகையில் காலை மற்றும் பகலில், உபவாசம் இருந்து (முடிந்தால் முழுவதும் உபவாசம் இருந்து), மாலையில் விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

முருகனுக்கு என்ன படைக்கலாம்?

பால், பழம், பஞ்சாமிர்தம், தேன், திணை மாவு உள்ளிட்டவை முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றை நைவேத்தியமாக படைத்து செந்தில் ஆண்டவனை வழிபடலாம். குறிப்பாக எது படைத்தாலும் அதில் தேன் கலந்து படைப்பது மிக உயர்வான பலன்களை தருமாம். கோயிலுக்கு செல்பவர்கள் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுத்து வழிபடலாம். வீட்டிலேயே வழிபடுபவர்கள், விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து, முருகனுக்கு உரிய பாடல்களை பாடி மனமுருக வேண்டிக்கொள்ளலாம். 

சிவ பெருமான் அளித்த வரம்!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள், ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்கள் மீது விழுந்து, ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. இந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்கள் ஏற்றனர். எனவே முருகப் பெருமானை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபடுகிறவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் முருகன் அருள்வான் என்று  சிவபெருமான் வரம் அளித்தாராம்.

செவ்வாய் தோஷம் அகலும்!

செவ்வாயின் அம்சமாக கருதப்படும் முருகனை ஆடி கிருத்திகை நாளன்று மனம் உருக பிரார்த்தித்து விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீய பலன்கள் நீங்குமாம். இதன் காரணமாகவே சிலர், ஆடி மாத கிருத்திகையில் விரதத்தைத் தொடங்கி, 6 மாதங்கள் அதனை மேற்கொண்டு தை மாத கிருத்திகையில் விரதத்தை முடிப்பார்கள். மேலும், திருமண தடை உள்ளவர்கள், திருமண வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய போராடுபவர்கள், ஆடி கிருத்திகை விரதம் இருந்தால் தக்க பலன் கிடைக்குமாம்

கேட்டதை அருளும் ஆடி கிருத்திகை விரதம்!

கருணையே வடிவான கந்தன், தனது ஜென்ம நட்சத்திரமான விசாகத்தன்று விரதம் இருப்பதைக் காட்டிலும் தன்னை தாயாக இருந்து வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் கிருத்திகை நன்னாளில் விரதம் மேற்கொள்வதையே மிகவும் விரும்புகிறாராம். எனவே இந்த தினத்தில் விரதமிருந்தால், என்ன வரம் கேட்டாலும் அருள்வாராம்.

ஒரே விதிவிலக்கு, பொறாமை, தீய எண்ணம், அகங்காரம், கடுஞ்சொல் உள்ளிட்டவற்றை தவிர்த்து மனத்தூய்மையுடன் முருகனை வேண்டினால் எந்த வேண்டுதலும் நிறைவேறுமாம். நெஞ்சில் வஞ்சம் கொண்டு எப்படிப்பட்ட விரதம் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை என்கின்றனர் முருகனடியார்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

Tags:    

மேலும் செய்திகள்