300 ஆண்டுகளுக்கு பின்வரும் அபூர்வ சிவராத்திரி! 5 யோகங்கள் ஒன்று சேரும் அதிசய நிகழ்வு!
சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், திருவோணம் நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி என ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது மிகவும் யோகமான நிகழ்வாம். 300 ஆண்டுகளுக்கு பிறகே இதுபோன்று வருவதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு தினங்களுக்கு முன்னர் வரும் சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதுவும் இந்த ஆண்டு மகா சிவராத்திரி 300 ஆண்டுகளுக்கு பின்வரும் அபூர்வ சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. ஏன் அபூர்வம்? மகா சிவராத்திரியின் நேரம் என்ன? எப்படி விரதம் இருப்பது? ஈசனை வணங்குவதோடு சிவாலயங்களில் அபிஷேகத்திற்கு என்னென்ன வாங்கி கொடுக்க வேண்டும்? சிவராத்திரி தினத்தில் வீட்டில் என்ன செடிகளை நட்டுவைக்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்தெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மகா சிவராத்திரி என்றால் என்ன?
இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் இருந்து வேறுபட்டது. புராணத்தின் படி, பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதையொட்டி, இரவு பொழுதுகளில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார் அம்பிகை. நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார். பூஜையின் முடிவில், தங்களை வணங்கி பூஜித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தால், அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிவன், பார்வதி திருமணக்கோலம் - சிவலிங்கத்திற்கு நடைபெறும் பூஜை
சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அம்பிகை வேண்டிக்கொண்டார். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என அருளாசி வழங்கினார். அந்த இரவே சிவராத்திரி என அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்று கூறப்படுவது உண்டு. ஆனால், சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலால் உருவானதால், சிவனுக்கே உரியதாக கொண்டாடப்படுகிறது. மற்றொரு புராணக்கதைப்படி, மகாசிவராத்திரி நாள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை குறிக்கிறது.
மேலும் ராத்திரி என்றால் பொதுவாக இரவு பொழுதை குறிக்கும் என்பார்கள். ஆனால் ராத்ரம் என்ற சொல்லுக்கு அறிவு என்றும் பொருள் உண்டு. உலகின் தலைவனான சிவ பெருமானை உணர்ந்து அனுபவிக்கும் அறிவை தரக்கூடிய ராத்திரி என்பதாலேயே மகாசிவராத்திரி இத்தனை சிறப்புடையதாக கருதப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், இரண்டாம் காலத்தில் பார்வதி தேவியும், மூன்றாம் காலத்தில் தேவர்களும், நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் சிவனை வழிபட்டு பயனடையும் காலம் என சொல்லப்படுகிறது.
என்று மகா சிவராத்திரி?
இந்த ஆண்டு மார்ச் 8(வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவு 8.20 மணி தொடங்கி, மார்ச் 9ம் தேதி மாலை 6 மணி வரை சதுர்த்தசி திதி உள்ளது. இதனால் மார்ச் 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிறகே சிவராத்திரி பூஜையை தொடங்க வேண்டும். சூரிய பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தியின் முதல் நாள் மாலை தொடங்கி, அடுத்த நாள் காலை வரை சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
மகர ராசி மண்டலத்தில் இருக்கும் திருவோணம் நட்சத்திரத்தின் பல்வேறு விதமான காட்சிகள்
இந்த வருட மகா சிவராத்திரி ஏன் அபூர்வம்?
ஜோதிட சாஸ்திரங்களின்படி, மார்ச் 8(வெள்ளிக்கிழமை) அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், திருவோணம் நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி என ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது மிகவும் யோகமான நிகழ்வாம். 300 ஆண்டுகளுக்கு பிறகே இதுபோன்று வருவதாக சொல்லப்படுகிறது.
மகர ராசி மண்டலத்தில் இருக்கும் திருவோணம் நட்சத்திரம் பார்ப்பதற்கு மூன்று பாதங்கள் போலவும், அம்பு போலவும், அன்னப்பறவை போலவும், முழக்கோல் போலவும் காட்சி அளிக்கும். இதன் அதிபதி சந்திர பகவான். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். எனவே இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது மிக மிக சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகும் என்றும், அன்றைய சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும் என்றும், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை
சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நெற்றியில் விபூதியிட்டு, பூஜை அறையில் இருக்கும் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபத்தை ஏற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். விரதம் கடைபிடிக்கும் நாளில் இரவு, பகல் என முழுவதும் உணவு ஏதும் சாப்பிடாமல் விரதம் இருந்து தண்ணீர் மட்டும் குடிக்கலாம் என்றும், ஒருவேளை உணவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சிவபெருமான் மற்றும் சிவலிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேகம்
மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். அன்று சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ அர்ச்சனை செய்வதும் மிக சிறப்பானதாகும். சிவராத்திரி இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாடு செய்து, அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து, சிவ மந்திரங்களை உச்சரித்து சிவனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்யலாம். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கும், துன்பங்கள் மற்றும் பாவங்களில் இருந்து விடுபட்டு, மோட்சத்தை அடைவதற்கும் ஏற்ற நாள் இதுவாகும்.
மகா சிவராத்திரி விரத பலன்
சிவ பெருமானுக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மகாதேவன் என்ற திருநாமம். மகாதேவன் என்றால் கடவுள்கள் அனைவருக்கும் மேலான கடவுள், கடவுள்களுக்கு எல்லாம் தலைவன் என்ற பொருள். சிவாய நம என சிந்திப்பவருக்கு அபாயம் ஏற்படாது என்பார்கள். அப்படி கர்மவினைகளில் இருந்தும், அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு சிவனே கதி என சிவபெருமானை சரணடைவதற்கு ஏற்ற நாள் மகா சிவராத்திரி.
மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து மனம் உருகி விரதம் இருந்தால் செல்வ செழிப்போடு வாழ்க்கையில் முன்னேறலாம். அதுமட்டுமின்றி, விரதம் இருப்பவர்கள் நற்கதி அடைவதோடு சொர்க்க லோகத்தையும் சேரும் பாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் நம் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கையில் வளம் உண்டாகும்.
தியான நிலையில் சிவபெருமான்
சிவராத்திரி நாளில் 3 செடிகளை வீட்டில் நட்டால் மிகவும் நன்மை
மகா சிவராத்திரி நாளில் 3 செடிகளை வீட்டிற்கு கொண்டு வந்தால், சிவபெருமானின் அருள் அந்த குடும்பத்திற்கு நிலையானதாக இருக்கும் என்கின்றது ஜோதிட சாஸ்திரம். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது வில்வ இலை. சிவராத்திரி தினத்தில் சிவலிங்க வழிபாட்டின் போது வில்வ இலைகளை வைத்து அர்ச்சனை செய்தால் நன்மை உண்டாகும். எனவே சிவராத்திரி நாளில் வீட்டில் வில்வ மரத்தை நடுவது அவ்வளவு சிறப்பானதாம். வில்வ மரம் வீட்டில் இருந்தால் எதிர்மறை சக்திகள் நீங்கி, நேர்மறை ஆற்றல் பரவுமாம்.
சிவபெருமானுக்கு பூஜை செய்யும் போது, ஊமத்தை மலர் இல்லாமல் பூஜை செய்தால் முழுமையடையாதாம். மேலும் சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு ஊமத்தை மலர்களை வைத்து அர்ச்சனை செய்வது மிகவும் பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சிவராத்திரி நாளில் ஊமத்தை மலர் செடியை வீட்டில் நட்டுவைத்தால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்குமாம். அத்துடன் சிவராத்திரி தினத்தன்று வீட்டில் மணம் வீசும் மல்லிகை செடியை நடுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. பார்வதிக்கு மிகவும் பிடித்த மலர் மணம் வீசும் மல்லிகை. இந்த மல்லிகை செடியை வீட்டில் நடுவதால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள பிணக்குகள் நீங்கி, திருமண பந்தம் வலுவடையுமாம்.