கல் தூண்களால் ஆன பிரம்மாண்ட "ஈமச்சடங்கு இடம்" - பல மர்மங்களை உள்ளடக்கிய ஸ்டோன்ஹெஞ்ச்

இங்கிலாந்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்று வரை விளக்க முடியாத பல மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது. வட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த "நடுகற்களை" தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2024-10-14 18:30 GMT
Click the Play button to listen to article

இங்கிலாந்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன்ஹெஞ்ச் இன்றுவரை விளக்க முடியாத பல மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது. வட்டவடிவில் கல்தூண்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில், நிலத்துக்கு மூன்றடி ஆழத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிரம்மாண்ட ஈமச்சடங்கு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருக்கும் தூண்கள் 15 அடி உயரம் வரை இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டோன்ஹெஞ்ச் யாரால் கட்டப்பட்டது? ஏதற்கு கட்டப்பட்டது? என்பதுதான் பெரிய மர்மமாகவே உள்ளது. இன்னும் சிலர் இது தானாகவே உருவாகியிருக்குமோ என்று சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.


உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன்ஹெஞ்ச்

பிரிட்டனின் அடையாளம் 

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஷலிஸ்பெரி சமவெளியில் உள்ளது ஸ்டோன்ஹெஞ்ச். நியோலித்திக் கால ஸ்டோன்ஹெஞ்ச் பிரிட்டனின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. 1986-ஆம் ஆண்டு துவங்கி இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரிட்டன் வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாக உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் இதில் இருக்கும் கற்கள் பெரிய சார்னொக்கைட் மற்றும் சார்சன் கற்களால் ஆனது. இதன் அமைப்பு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி இது நியோலித்திக் மற்றும் வெண்கல காலத்தைச் சேர்ந்தது. இது எதற்காக கட்டப்பட்டது என்பதற்கான சரியான நோக்கம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இன்னும் சிலர் பல கருத்துக்களை முன்வைகின்றனர். இது அப்பொழுது வானியல் கண்காணிப்பு மையமாகவும், மத வழிபாட்டு தலமாகவும் மற்றும் நோய்களை குணப்படுத்தும் இடமாகவும் இருந்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதன் கட்டுமானம் பல காலகட்டங்களில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு சில கற்கள் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழும் ஸ்டோன்ஹெஞ்ச்

ஸ்டோன்ஹெஞ்சின் காலகட்டம் 

ஸ்டோன்ஹெஞ்சின் முதல்கட்ட கட்டுமானம் கி.மு. 3000 அளவில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய கட்டுமானம் கி.மு. 2500 அளவில் கட்டப்பட்டது என்றும், அதன்பிறகு ஸ்டோன்ஹெஞ்சின் இறுதி கட்டுமான பணிகள் கி.மு. 1500 வரை நடந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதன் கற்கள் சார்சன், அதாவது பெரிய மணல்கற்கள் கொண்டு உள்வட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு நீலக்கற்கள் வேல்ஸிலிருந்து கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் அமைப்பு வெளிப்புற வட்டத்தில் 30 நிமிர்ந்த கற்களாக உள்ளன. உள் வட்டத்தில் 5 திரிலித்தான்கள் (மூன்று கற்களால் ஆன அமைப்புகள்) இருக்கின்றன.


சந்திரன் மற்றும் சூரியனின் இயக்கங்களை கணிக்க உதவும்  ஸ்டோன்ஹெஞ்ச்

வானியல் முக்கியத்துவம் மற்றும் சமூக முக்கியத்துவம் 

சந்திரன் மற்றும் சூரியனின் இயக்கங்களை கணிக்க இந்த ஸ்டோன்ஹெஞ்ச் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது . இந்த இடம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்டோன்ஹெஞ்ச், பழங்குடி மக்களின் ஒற்றுமையை குறிக்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் பல புதைகுழிகள் உள்ளன. இங்கு எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி முன்னேற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். தற்போது கூட தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றன. தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மிகவும் உதவும் என்று நம்பப்படுகின்றன.


புத்தாண்டு பிறப்பின்போது ஸ்டோன்ஹெஞ்ச் பகுதியில் குவியும் மக்கள்

ஸ்டோன்ஹெஞ்சின் கலாச்சார தாக்கம்

இந்த ஸ்டோன்ஹெஞ்ச் பல கலை, இலக்கிய படைப்புகளுக்கு ஊக்கமளித்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த இடம் பல ஆன்மீக மற்றும் மர்ம நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. இதை பாதுகாப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதனாலேயே இந்த இடத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் புதிரான கட்டுமான நுட்பங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. இவ்வளவு பெரிய கற்களை எவ்வாறு நகர்த்தி நிறுத்தினர் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.


பல மர்மங்களை தனக்குள் கொண்டுள்ள ஸ்டோன்ஹெஞ்ச்

பரவலாக கூறப்படும் தகவல்

இந்த கற்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அவை ஒலி அதிர்வுகளை உருவாக்கலாம் என்றும், இது ஒருவகை பண்டைய ஒலிபெருக்கியாக செயல்பட்டிருக்கலாம் என்றும் ஒரு சார்பு மக்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்கு பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு இறுதிச்சடங்கு தலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹெஞ்ச் ஒரு பண்டைய கால மருத்துவமனையாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏன் இப்படி கூறுகின்றனர் என்றால், நீலக்கற்களுக்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாக அந்த காலத்தில் நம்பப்பட்டது. இன்னும் ஒரு சிலர் ஸ்டோன்ஹெஞ்ச் ஒரு பெரிய சூரிய கடிகாரமாக செயல்பட்டிருக்கலாம்; அதுமட்டுமில்லாமல் இது ஆண்டின் காலங்களை துல்லியமாக கணிக்க உதவியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்