IVF சிகிச்சை அவ்வளவு சுலபமானதா? - விளக்குகிறார் கருவுறுதல் சிகிச்சை நிபுணர்

IVF-க்கு முன்பு இருவரின் உடல்நிலையும் என்ன கன்டிஷனில் இருக்கிறது? உடல் ஃபிட்டாக இருக்கிறதா? அனஸ்தீஸியா கொடுத்து கருமுட்டையை உள்ளே செலுத்த தம்பதியருக்கு சம்மதமா? இருவரின் ஹார்மோனும் சரியாக இருக்கிறதா? என்ன மாதிரியான சிகிச்சைமுறைகள் மற்றும் ஊசிகள் பொருத்தமான இருக்கும்? என்பதை IVF சிகிச்சை அளிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தம்பதியரிடம் நிபுணர் பேசி முடிவெடுப்பார்.

Update: 2024-12-09 18:30 GMT
Click the Play button to listen to article

குழந்தைப்பேறு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ, அதைவிட மோசமான மன அழுத்தத்தை தருகிறது குழந்தையின்மை. சமீப காலமாக திருமணமாகும் நிறையப்பேருக்கு இயற்கையாக கருத்தரிப்பதில் பிரச்சினை இருக்கிறது. அதற்காக பல்வேறு சிகிச்சைமுறைகளை நாடிச்செல்கின்றனர். சிலருக்கு அடிப்படை மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலம் சிறு பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு கருத்தரிக்க வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் சிலருக்கு அதற்கு அடுத்தபடியான IUI சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையும் தோல்வியடையும்போதுதான் IVF சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. லட்சங்களில் செலவழித்து இந்த சிகிச்சையை மேற்கொண்டாலும் அதுவும் 100% பலன் தருமா என்றால் அதுதான் இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் தம்பதிகள் இங்கு ஏராளம். இதுபோக, முதல் குழந்தையை சுலபமாக பெற்ற சிலருக்கு இரண்டாம் குழந்தையை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குழந்தையின்மைக்கான காரணங்கள் குறித்தும், இந்த சிகிச்சைமுறைகள் குறித்தும் நம்முடன் தெளிவாக உரையாடுகிறார் கருவுறுதல் சிகிச்சை நிபுணர் வசுந்தரா ஜெகன்நாதன்.

கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் முன்கூட்டியே அதை சேகரித்து வைக்கலாம் என்று சொல்கிறார்களே! அது எப்படி?

Social Egg Freezing குறித்து இப்போது அதிகம் பேசுகிறார்கள். நிறைய பிரபலங்கள் இதுகுறித்து விளம்பரமும் செய்கிறார்கள். ஆனால் Fertility preservation என்று மருத்துவரீதியாக இதை சொல்கின்றனர். கருமுட்டை மற்றும் விந்தணுவை தனியாகவோ அல்லது இரண்டையும் சேர்த்து கருவாக்கியோ உறைநிலையில் சேகரித்து வைப்பதைத்தான் Fertility preservation என்கின்றனர். ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே கருமுட்டை உற்பத்தி குறைவாக இருக்கிறது என்பது தெரிந்தால் முட்டைகளை எடுத்து சேகரித்து வைத்துக்கொண்டால், திருமணம் தாமதமாக நடந்தாலும் பிறகு அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். சிலருக்கு ரத்தக்கட்டி பிரச்சினை அல்லது எண்டோமெட்ரியோசிஸ் தீவிர நிலையில் இருந்தாலும் கருமுட்டையை சேகரித்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வந்தால் சர்ஜரி அல்லது ரேடியேஷன் கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது அது கருப்பை மற்றும் கருமுட்டைகளை நிரந்தரமாக சேதப்படுத்தி செயற்கையாக மெனோபாஸ் நிலைக்கு கொண்டுசென்றுவிடும். எனவே இதுபோன்று சிகிச்சையெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் சிகிச்சைக்கு முன்பே கருமுட்டைகளை சேகரித்து வைத்துக்கொண்டு பிறகு சிகிச்சையெடுக்கலாம்.


கருமுட்டை மற்றும் விந்தணுக்களை சேகரித்து Egg Freezing செய்தல்

ஆனால் இளம்வயதில் கேன்சர் என்பதே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களால் இதுபற்றியெல்லாம் யோசிக்கமுடியாது என்பதால் மருத்துவர்களே ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு அதுபோன்ற நோயாளிகளிடம் பேசி புரியவைக்கிறார்கள். திருமணமாகாதவர்களுக்கு கருமுட்டைகள் சேகரிக்கப்படும். அதுவே திருமணமானவர்கள் என்றால் கருவே உருவாக்கி சேகரிக்கப்படுகிறது. இதேதான் ஆண்களுக்கும். அதுபோல குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகளுக்காக சிலர் சிகிச்சை எடுப்பார்கள். அந்த சிகிச்சையால் விந்தணு மற்றும் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதால் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே சேகரித்து வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. அதேசமயம் கருமுட்டையை சேகரித்து வைத்துக்கொண்டு 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் சிறிதாக இருந்த கட்டி இப்போது பெரிதாகி இருக்கலாம் அல்லது அந்த பெண்ணுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வரலாம். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு குழந்தை பெற்றெடுக்கும்போது அதில் பல சிக்கல்கள் ஏற்படும். பெரும்பாலும் சிசேரியன் மூலம்தான் குழந்தை பெற்றெடுக்கவேண்டி இருக்கும். எனவே கருமுட்டையை சேகரித்து வைக்கும் முன்பு இதுபோன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நிபுணரிடம் கலந்தாலோசித்து பிறகுதான் சேகரிக்கவேண்டும்.

இயற்கையாக கருத்தரிக்க எல்லா வழிகளிலும் முயற்சித்து கருத்தரிக்க முடியாதவர்கள் கடைசியாக IVF சிகிச்சைக்கு போக நினைப்பார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

முறைப்படி படிப்படியான சிகிச்சை எடுத்தும் கருத்தரிக்க முடியவில்லை என்பதை unexplained infertility என்கின்றனர். அதாவது ஆணை பரிசோதிக்கும்போது விந்தணுவில் பிரச்சினைகள் இருக்காது. அதேபோல் பெண்ணை பரிசோதிக்கும்போதும் எல்லாமே சரியாக இருக்கும். ஹார்மோன் பிரச்சினை இருக்காது, மருந்து கொடுக்கப்படும்போது கரு உருவாகும், கருக்குழாயில் அடைப்பு இருக்காது. இந்த சூழ்நிலையில் என்ன பிரச்சினை என்று மருத்துவருக்கே புரியாது. அதை சிகிச்சைக்கு வரும் தம்பதியிடம் சொல்லும்போது, ‘பிரச்சினையே என்னவென்று தெரியவில்லை என்று சொல்கிறீர்களே, இதுதான் பிரச்சினை என்றாவது சொல்லுங்கள்’ என்று கேட்பார்கள். இதுபோல் unexplained infertility இருப்பவர்களுக்கு ovulation induction and timed intercourse குறித்து மருத்துவர் சொல்லுவார். அதாவது முறைப்படி மருந்து கொடுத்து ovulation நடக்கிறதா என்பதை ஸ்கேன்மூலம் பார்த்து அதை அவர்களிடம் சொல்லுவோம். இது 6 மாதம் நடைபெறும். அது கைகொடுக்காத பட்சத்தில் விந்துவை உள்செலுத்தும் சிகிச்சையை 3 அல்லது 4 முறை செய்து பார்ப்பர். அதுவும் நடக்காதபோதுதான் IVF சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் unexplained infertility-யால் கருத்தரிக்க முயற்சிப்பவர்களில் நூறில் 6 அல்லது 7 தம்பதிகளுக்குத்தான் கரு உருவாகும். 93 பேருக்கு உருவாகாது.


IUI சிகிச்சை மூலம் கருத்தரிப்பு சாத்தியக்கூறுகள்

அதன்பிறகு IUI சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் கருமுட்டை பெரிதாவதற்கு ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, ovulation நடைபெறும் நேரத்தில் விந்தணுக்களும் சரிபடுத்தப்பட்டு செலுத்தப்படும். இந்த சிகிச்சைமூலம் நூறில் 15 பேர் கருத்தரிப்பர். இப்படி எந்த சிகிச்சைகளிலும் பலன் கிடைக்காதபோது IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இந்த நேரத்தில் 100% கருத்தரித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சிகிச்சைக்கு வரும் தம்பதியர் இருப்பர். ஆனால் IVF-க்கு முன்பு இருவரின் உடல்நிலையும் என்ன கன்டிஷனில் இருக்கிறது? உடல் ஃபிட்டாக இருக்கிறதா? அனஸ்தீஸியா கொடுத்து கருமுட்டையை உள்ளே செலுத்த தம்பதியருக்கு சம்மதமா? இருவரின் ஹார்மோனும் சரியாக இருக்கிறதா? என்ன மாதிரியான சிகிச்சைமுறைகள் மற்றும் ஊசிகள் பொருத்தமாக இருக்கும்? என்பதை IVF சிகிச்சை அளிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தம்பதியரிடம் நிபுணர் பேசி முடிவெடுப்பார். அதில் மனநிலை, டயட் மற்றும் பொருளாதார வசதி போன்றவை குறித்தும் பேசுவர். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்பதால் டயட்டீஷியன், யோகா மற்றும் ஃபிட்னெஸ் தெரபிஸ்ட், சைக்காலஜிஸ்ட், பொருளாதார நிபுணர் மற்றும் கருவுறுதல் சிகிச்சை நிபுணர் அடங்கிய குழு தம்பதியருக்கு வழிகாட்டும்.

ஒரு மருத்துவமனைக்கு முதன்முறையாக fertility சிகிச்சைக்கு வருபம் சிலருக்கு அதுதான் முதல் IVF-ஆக இருக்காது. அவர்கள் ஏற்கனவே இரண்டு மூன்று முறை IVF சிகிச்சை மேற்கொண்டு தோல்வியடைந்திருக்கும் அல்லது கரு உருவாகி அது கலைந்திருக்கும், இதனால் நம்பிக்கையற்ற நிலையில் சிகிச்சைக்கு வருவார்கள். சிலர் டோனரைத் தேடிப்போகவேண்டும் என்ற நிலையில் வந்திருப்பார்கள். சிலருக்கு டோனரிடமிருந்து பெற்றும் சிகிச்சை தோல்வியடைந்திருக்கும். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சிகிச்சை வருபவர்களை முதலில் நன்றாக புரிந்துகொண்டு பிறகு அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கத் தேவையான தெரபிகள் அளிக்கப்படும். அதன்பிறகு IVF செய்யும்போதும் மற்ற அனைத்து நிபுணர்களின் உதவியும் தம்பதியருக்கு வழங்கப்படும். அப்படியே கருத்தரித்துவிட்டாலும் அந்த குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்கவேண்டுமே என்ற மன அழுத்தம் அடுத்து உருவாகிவிடும். ஒவ்வொரு முறை ஸ்கேன் செய்ய வரும்போது மன அழுத்தத்துடனேயே வருவார்கள். அவர்களுக்கு வேறுவிதமாக கவுன்சிலிங் கொடுக்கப்படும்.


இரண்டாம் குழந்தை கருத்தரிப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து மருத்துவரின் அறிவுரை

முதல் குழந்தையை சுலபமாக பெற்றெடுத்தவர்களுக்கு இரண்டாவது குழந்தையை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். இவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படும்?

திருமணமானவுடன் சிலருக்கு குழந்தை பிறந்துவிடும். ஆனால் அதன்பிறகு 5 வருடங்களுக்கு அடுத்த கருத்தரிப்பே நடக்காது. இதைத்தான் Secondary Infertility என்கின்றனர். இதுபோன்று சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இயற்கையாக கருத்தரிக்கவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு சரியா என்பது முதல் இரண்டு முறை பேசும்போதே மருத்துவருக்கு தெரிந்துவிடும். எனவே அந்த பெண்ணின் வயது 35க்கும் மேலாகிவிட்டதா? கருமுட்டைகளின் எண்ணிக்கை அளவு சரியாக இருக்கிறதா? என பரிசோதிக்கப்படும். கருமுட்டைகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள மாதவிடாயின் இரண்டாம் நாளில் Transvaginal Ultrasound பரிசோதனை மேற்கொண்டு, இரண்டு ஓவரிக்களிலும் AFC (antral follicle count) எண்ணிக்கை பரிசோதிக்கப்படும். அப்படி பரிசோதிக்கும்போதே பெண்ணின் வயதுக்கு கருமுட்டைகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். அதை சரிபார்க்க சில ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், இயற்கை வழியில் கருத்தரிக்க மருந்து மாத்திரைகள், அடுத்து IUI, இல்லாவிட்டால் IVF சிகிச்சை அளிக்கப்படும். பெரும்பாலும் கருமுட்டை எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் IVF செய்ய பரிந்துரைக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்