இயற்கை ஹேர் டை ஏன் பயன்படுத்தவேண்டும்? அதிலுள்ள பயன்கள் தெரியுமா?

கத்தரிக்காய் இயற்கையாக விளையக்கூடியது என்றாலும் அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுபோல ஹேர் டையில் அடர்ந்த அவுரியை பயன்படுத்துகிறோம். அது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஹேர் டை என்றாலே ஒருசிலருக்கு அலர்ஜி ஆகும். அதனால் ஒவ்வொருவரையும் டெஸ்ட் செய்யமுடியாது.

Update:2024-12-31 00:00 IST
Click the Play button to listen to article

அழகாக தெரியவேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அதுவும் இயற்கையான முறையில் அழகாகலாம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? செயற்கை ப்ராடக்ட்ஸை வாங்கி பயன்படுத்தி அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் செலவழிப்பதைவிட, உடனடி தீர்வு கிடைக்காவிட்டாலும் நிரந்தர தீர்வை பெற இயற்கை ப்ராடக்ட்ஸை தேர்ந்தெடுப்பது சிறந்தது என்கிறார் லெக்சஸ் பியூட்டி ப்ராடக்ட்ஸ் நிறுவனர் ஸ்ரீதேவி  கௌரிசங்கர். குறிப்பாக, ஹேர் கலரிங் செய்பவர்களும் ஹேர் டை பயன்படுத்துபவர்களும் இயற்கையான டைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து நம்முடன் பகிர்ந்துள்ளார்.

பியூட்டி ப்ராடக்ட்ஸ் தயாரிக்கும் எண்ணம் எங்கிருந்து வந்தது?

எங்களுடைய வீட்டில் பெண்கள் அதிகம். அனைவருக்குமே அம்மா பச்சைப்பயறு, கடலைமாவு போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்த கொடுப்பார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால்தான் நாமே ஏன் பியூட்டி பொருட்களை தயாரிக்கக்கூடாது என்ற எண்ணம் உருவானது. ஆரம்பத்தில் பொருட்களை தயாரித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்குத்தான் கொடுத்துவந்தோம். பொருட்களின் தரம் நன்றாக இருப்பதாக அவர்கள் கூறியதால் நிறையப்பேர் வாங்கினர். அதனைத்தொடர்ந்துதான் இதையே முறைப்படி பிசினஸாக மாற்றிவிட்டோம்.

பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

இயற்கை முறையில் இயங்கும் பண்ணைகளிடம் இருந்தும், ஆர்கானிக் கடைகளிலிருந்தும், பூக்கள் போன்றவற்றிலிருந்தும் மூலப் பொருட்களை வாங்குகிறோம். ரசாயன உரங்களை பயன்படுத்தும் பண்ணைகளிலிருந்து நாங்கள் வாங்குவதில்லை.

மற்ற பியூட்டி ப்ராடக்ட்ஸுக்கும் உங்களுடைய ப்ராடக்ட்ஸுக்கும் என்ன வித்தியாசம்?

கெமிக்கல் ப்ராடக்ட்ஸை பயன்படுத்தும்போது ஓரிரு நாட்களுக்கு அது சருமத்தில் நல்ல ரிசல்ட்டை தருகிறது. ஆனால் அதன்பிறகு கருமை உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். உதாரணத்திற்கு எங்களிடம் வரும் நிறைய வாடிக்கையாளர்கள் ஹேர் டைக்காக வருவார்கள். ஏனென்றால் கெமிக்கல் ஹேர் டை போடுவதால் பல்வேறு அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர். முதலில் நெற்றி கருமையாகிவிடும். பிறகு கன்னத்திலும் கருமை படிந்துவிடும். இதனால் தலை மற்றும் முகத்தில் ஒருவித எரிச்சல் இருக்கும். அதேபோல் சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் நாளடைவில் தெரியவரும். அப்போது கெமிக்கல் பீல் ஆஃப்ஸ், லேசர் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அந்த சமயத்தில் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரிந்தாலும் போகபோக அதிலும் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் இயற்கை ப்ராடக்ட்ஸை பொருத்தவரை ரிசல்ட் கிடைக்க கொஞ்ச நாட்கள் ஆனாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.


இயற்கை ஹேர் டை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்

கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் அலர்ஜி வரும் என்று சொல்கிறீர்கள். உங்களுடைய ப்ராடக்ட்ஸ் பயன்படுத்தினால் அப்படி ஆகாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

எங்களுடைய ஹேர் டையை லேப் டெஸ்ட்டுக்கு கொடுத்து தமிழ்நாடு அரசு அங்கீகரித்ததன் சான்றிதழும் வைத்திருக்கிறோம். அதன்மூலம்தான் இது முழுக்க முழுக்க ஆர்கானிக் ப்ராடக்ட் என்று சொல்லி விற்கிறோம். ஆனாலும் அதையும் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்தபிறகுதான் பயன்படுத்த வேண்டுமென்று அதிலேயே குறிப்பிட்டிருக்கிறோம். ஏனென்றால் கத்தரிக்காய் இயற்கையாக விளையக்கூடியது என்றாலும் அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுபோல ஹேர் டையில் அடர்ந்த அவுரியை பயன்படுத்துகிறோம். அது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஹேர் டை என்றாலே ஒருசிலருக்கு அலர்ஜி ஆகும். அதனால் ஒவ்வொருவரையும் டெஸ்ட் செய்யமுடியாது. அதனால் எந்தவொரு ஹேர் டை பயன்படுத்தினாலும் முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு பிறகு பயன்படுத்துவது நல்லது.

பேட்ச் டெஸ்ட் என்பதன் முழுமையான அர்த்தம் என்ன?

பேட்ச் டெஸ்ட் என்பது கொஞ்சம் டையை எடுத்து காதுக்கு பின்புறம் சிறிதுநேரம் தடவி வைக்கவேண்டும். அந்த இடத்தில் எரிச்சலோ அரிப்போ அல்லது பிற பக்க விளைவுகளோ ஏற்பட்டால் அந்த டை அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். அது அம்மோனியா அல்லது பிபிடியாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆர்கானிக்காக செய்யக்கூடிய டையில் பயன்படுத்தும் அவுரி இலையே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் இயற்கை பொருட்களை பொருத்தவரை 99% பேருக்கு ஒத்துக்கொள்ளும்.


சருமத்தை பராமரிக்க உதவும் இயற்கை பொருட்கள்

கெமிக்கல் ப்ராடக்ட்ஸை போன்று நேச்சுரல் டையும் சீக்கிரத்தில் ரிசல்ட் கொடுக்குமா?

கெமிக்கல் ப்ராடக்ட்ஸை பயன்படுத்துவது மிகவும் சுலபம். இயற்கை டைகளில் ஷாம்பு கலந்து கொண்டுவர முடியவில்லை. கெமிக்கல் டையை 5 நிமிடம் வைத்திருந்து அலசினாலே போதும். ஆனால் இயற்கை டையை குறைந்தது 40 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதேசமயம் கெமிக்கல் டையை பயன்படுத்துவதால் தலைமுடி மற்றும் சருமத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள் மிகவும் அதிகம். எனவே அதனுடன் ஒப்பிடும்போது நமக்காக 40 நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை.

பார்லர்களுக்கு சென்று தலைமுடிக்கு கலரடிப்பது, முடியின் தன்மையை மாற்றுவது போன்றவை எந்த விதத்தில் தலைமுடியை பாதிக்கும்?

பார்லர்களில் ஸ்ட்ரெய்ட்டனிங், ப்லோயர்கள் என நிறைய பயன்படுத்துவார்கள். ஆனால் வெதுவெதுப்பான தண்ணீரில்தான் தலைக்கு குளிக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த சூடே போதுமானது. ஆனால் பார்லர்களில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மிகவும் சூடாகவே இருக்கும் என்பதால் முடி உதிர்வு அதிகமாக இருப்பதுடன், முடியின் தன்மையே மாறிவிடும். இதுபோன்ற பிரச்சினைகளால்தான் நிறையபேர் இயற்கை ப்ராடக்ட்ஸை தேடிவருகிறார்கள். அதேபோல் எப்போதாவது தலைமுடியை கலரிங் செய்துகொள்ளலாம். ஆனால் அதையே தொடர்ந்து செய்வதால் பாதிப்புகள் அதிகம்.

இப்போது நிறையப்பேருக்கு ஏஜிங் என்பதே பிடிப்பதில்லை. 50 வயதில் நரைமுடி என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இப்போது மிக இளம்வயதிலேயே கர்லிங், ஸ்ட்ரெய்ட்டனிங் என மாறி மாறி செய்வதால் 20களிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. அதேபோல் கெமிக்கல் பீல் ஆஃப் செய்வதால் சருமமும் மிகவும் மோசமாகிவிடுகிறது. செயற்கையாக வயதான தோற்றத்தை 20 முதல் 25 வயதிற்குள் அடைவதால் அதை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கவேண்டும். அதேபோல் கெமிக்கல் ப்ராடக்ட்ஸை பயன்படுத்திதான் அழகை கொண்டுவர வேண்டும் என்று அவசியமில்லை. இயற்கையாக பராமரிக்கும்போதே அழகாக தெரியலாம்.


கெமிக்கல் ப்ராடக்ட்ஸால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள்

செயற்கை முறையில் பச்சை, மஞ்சள் என நிறைய கலர் அடித்துக்கொள்கிறார்கள். அதுபோல் இயற்கை முறையிலும் செய்துகொள்ள முடியுமா?

அப்படியெல்லாம் இயற்கை முறையில் செய்யமுடியாது. செயற்கை முறையில் நிறைய கலர்கள் செய்துகொள்ளலாம். பொதுவாகவே ஆர்கானிக் ப்ராடக்ட்ஸை பொருத்தவரை கெமிக்கல் ப்ராடக்ட்ஸை போன்று நிறைய வகைகளை கொண்டுவரமுடியாது. ஆர்கானிக் பொருட்களை பொருத்தவரை மேக்கப்பிற்கு பெரிதளவில் இல்லாவிட்டால், சருமத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

மாநிறமுள்ள சருமத்தின் நிறத்தை அதிகரித்து பளபளப்பாக்க முடியுமா?

பொதுவாக மாநிற சருமத்தை வெள்ளையாக மாற்றமுடியாது. அது இயற்கையும் கிடையாது. மாநிற சருமத்தில் ஏதேனும் ப்ராடக்ட்ஸ் பயன்படுத்தி அதனால் சரும கருமை ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்தாலே சருமத்தின் நிறம் சற்று கூடிவிடும். இயற்கையான ப்ராடக்ட்ஸை பயன்படுத்துவதால் சருமத்தின் நிறம் ஒன்று அல்லது இரண்டு ஷேடுகள் அதிகரிக்குமே தவிர வெள்ளையாகாது.

ஏஜிங் ஆவதை தடுக்க வழிமுறைகள் இருக்கிறதா?

50 வயதிற்கு மேல் சருமத்தில் வரும் சுருக்கமோ அல்லது நரைமுடியோ ஒருவித அழகை கொடுக்கும். அதுவே 20 வயதில் வரும்போது, ஒருவருடைய தன்னம்பிக்கை அளவையே அது குறைத்துவிடும். இது மரபணுக்களாலோ, வாழ்க்கைமுறையாலோ, புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கவழக்கங்களாலோ, மன அழுத்தத்தாலோ அப்படி வரலாம். சிறுவயதிலேயே சுருக்கங்கள், கரும்புள்ளிகள், க்ரோ ஃபீட் என்று சொல்லக்கூடிய கண்களின் ஓரத்தில் வரிவரியாக வருதல் போன்ற அறிகுறிகள்மூலம் இளம்வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதை தெரிந்துகொள்ளலாம். இதனை சரிசெய்ய முதலில் உணவுபழக்கத்தை மாற்றவேண்டும். மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறகுதான் ப்ராடக்ட்ஸை பயன்படுத்தவேண்டும். வெளிப்புறத்தில் என்னதான் பராமரித்தாலும் உள்ளே எடுத்துக்கொள்பவைகளில் கவனம் தேவை. இவற்றையெல்லாம் சரியாக தொடர்ந்து செய்துவந்தால்தான் வயதான தோற்றத்தை தள்ளிப்போட முடியும். 

Tags:    

மேலும் செய்திகள்