முக அழகுக்கு உடல் ஆரோக்கியமும் அவசியம் - நாட்டு மருத்துவத்தில் இதை மட்டும் செய்து பாருங்க!

மரு தானாக கீழே விழுவதை நம்மால் பார்க்க முடியும். வேரோடு விழுந்துவிடுவதால் அந்த இடத்தில் மரு மீண்டும் வராமல் இருக்கும். மேலும் குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு மரு, மங்கு போன்ற பிரச்சினைகள் வர அதிக வாய்ப்புள்ளதால், அதனை சரிசெய்ய வேண்டும்.

Update:2024-10-29 00:00 IST
Click the Play button to listen to article

முகத்தில் வரும் மங்கு, மரு, உடல் வியர்வையால் ஏற்படக்கூடிய துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் வீட்டில் பலவிதமான ரெமடிஸ் நம்மால் செய்ய முடியும். வியர்வையால் தலையில் வரும் பொடுகு, பேன், ஈறு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்றவற்றை சரி செய்ய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்கள் பேருதவியாக இருக்கும். மேலும் நிரந்தர பலனையும் தரும். அந்தவகையில் என்னென்ன பொருட்களை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கிறார் பல்துறை வல்லுநர் தாமரை செல்வி.


மரு, மங்கு போன்றவற்றை எப்படி சரி செய்வது?

முகத்தில் மரு, மங்கு நீங்க, கடுக்காய் பொடியை பயன்படுத்தலாம். கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, மைய அரைத்துக்கொள்ள வேண்டும். அதனை பசும்பாலில் சேர்த்து கலந்து இரவில் தேய்த்து வர விரைவில் குணமாகும். மரு இருந்தால் மற்றொரு முறையில், அதாவது நமது தலை முடியை எடுத்து அதில் கட்டி வைக்க வேண்டும். மரு தானாக கீழே விழுவதை நம்மால் பார்க்க முடியும். வேரோடு விழுந்துவிடுவதால் அந்த இடத்தில் மரு மீண்டும் வராமல் இருக்கும். மேலும் குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு மரு, மங்கு போன்ற பிரச்சினைகள் வர அதிக வாய்ப்புள்ளதால், அதனை சரிசெய்ய வேண்டும்.


சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் பளபளப்பான சருமம் வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத விஷயம். உடல் உள்ளே இருக்கும் உறுப்புகள் சரியாக, சீராக இயங்கினால் மட்டுமே வெளித்தோற்றம் நன்றாக இருக்கும். கசகசா 100 கிராம் மற்றும் பாதாம் பருப்பு 10 எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் கசகசா, பாதாம் இரண்டையும் நன்கு மைய அரைத்து எடுக்க வேண்டும். அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி கேப்சூல் இரண்டு சேர்த்து கலந்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து 45 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் உடனடியாக பளபளப்பாக மாறுவதை பார்க்க முடியும்.


தலையில் இருக்கும் ஈறு, பேன், பொடுகு போக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும்?

வாரத்தில் இரண்டு நாளாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து வெயிலில் சிறிது நேரம் படும்படி இருப்பது மிகவும் அவசியம். பொடுகு அதிகம் இருப்பின் பொடுதலை பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து தலை முடிக்கு தகுந்தாற்போல தயிர் எடுத்து கலந்து தலை முடி வேர்களில் தேய்த்து நன்றாக காய்ந்த பிறகு சியக்காய் அல்லது அரப்பு தூள் பயன்படுத்தி தலைக்கு குளித்து வர பொடுகு மீண்டும் வராமல் இருக்கும். முடி உதிர்தலை தடுக்க, 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து நன்கு சூடு செய்து, அதில் சின்ன வெங்காயம் 25 எடுத்து இரண்டாக வெட்டியும், ஒரு மாதுளம் பழம் எடுத்து நான்காக வெட்டியும் சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம், மாதுளம் பழம் சேர்த்த எண்ணெய் நன்கு கொதித்ததும், அதனை ஆறவைத்து  கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 4 முதல் 5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, வாரம் இரண்டு முறையேனும் தலைக்கு தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும். அதனுடன் கீரை, ஜூஸ் என ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும் வேண்டும். 


குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால் ஏற்படும் சரும பிரச்சினைகளை எப்படி சரி செய்வது?

கடலை மாவு, பாசிப்பயறு மாவு அதனுடன் கொழுந்து வேப்பிலை சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் குப்பைமேனி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து குளித்தால் சருமம் மிருதுவாக மாறுவதுடன், சரும பிரச்சினைகளும் சரியாகும். 


நரை முடியை இயற்கையான முறையில் கருமையாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

அவுரி பொடி, மருதாணி பொடி, கத்தா ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு கலந்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற வைத்து தலையில் அப்ளை செய்து 30 முதல் 45 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்தால் இயற்கையான முறையில் முடி கருமையாவதை பார்க்க முடியும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் தயிரையும் சேர்த்து பயன்படுத்தலாம். உடல் சூடு குறையும்.


உதடு கருமை நீங்க என்ன செய்ய வேண்டும்?

கிளிசரின் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் பீட்ரூட் சாறு, கேரட் சாறு சம அளவு கலந்து தினமும் இரவில் உதட்டில் அப்ளை செய்து வருவதால் ஓரிரு நாட்களில் உதட்டின் நிறம் மாறுவதை பார்க்க முடியும். இறந்த செல்கள் நீங்கி உதடு பளிச்சென தோற்றமளிக்கும்.


வியர்வை துர்நாற்றம் போக்க அல்லது வராமல் இருக்க என்ன வழிகளை பின்பற்ற வேண்டும்?

தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருப்பதும், எண்ணெய் உணவுகளை அதிகமாக உட்கொள்வதும், வியர்வை துர்நாற்றம் ஏற்பட மிக முக்கிய காரணங்களாக உள்ளன. வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர பொடித்து வைத்து, குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் வியர்வை துர்நாற்றம் வராமல் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்