சாதனை பெண்கள்! மெட்ரோ ரயிலை ஓட்டும் பெண் லோகோ பைலட்ஸ்!
நான் முதலில் மெட்ரோ ரயிலை பார்த்த பொழுது பெண் லோகோ பைலட்தான் ஒட்டி சென்றார்கள். தற்போது நானும் இங்கு லோகோ பைலட்டாக இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.
ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று சொல்லும் விதத்தில் எல்லா துறைகளிலுமே பெண்கள் தடம் பதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெண்கள் செய்யும் சில பணிகளை பார்க்கும் பொழுது ஆண்களே வாய் பிளக்கும் அளவிற்கு இன்றைய காலகட்டம் இருக்கிறது. மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் ஓட்டும் இரு பெண் லோகோ பைலட்களின்( பாக்கியலட்சுமி, கனகலட்சுமி ) நேர்காணலை கட்டுரை வடிவில் இங்கு காணலாம்.
ராணி நேயர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..
பாக்கியலட்சுமி : என் பெயர் பாக்கியலட்சுமி. நான் ஆவடியிலிருந்து வருகிறேன். பல பெண்கள் லோகோ பைலட் ஆக இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களை பார்க்கும் பொழுது எனக்கும் ஆசை வந்தது. நாமும் லோகோ பைலட் ஆக மாட்டோமா என்று பல நாள் ஏங்கியிருக்கிறேன். 5 வருடங்களுக்கு முன்பு எனக்கு லோகோ பைலட் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் கெட்டியாக பிடித்து கொண்டேன். நான் முதலில் மெட்ரோ ரயிலை பார்த்த பொழுது பெண் லோகோ பைலட்தான் ஒட்டி சென்றார்கள். தற்போது நானும் இங்கு லோகோ பைலட்டாக இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.
கனகலட்சுமி : என் பெயர் கனகலட்சுமி. எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர். வேலைக்காகத்தான் நான் சென்னை வந்தேன். வேலைக்காக பல இடங்களில் தேடி கொண்டிருந்த பொழுது சென்னை மெட்ரோவில் லோகோ பைலட் தேர்வு நடப்பதாக கேள்விப்பட்டேன். பிறகு அந்த வேலைக்கு அப்ளை செய்து, தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொண்டு வேலையை பெற்றேன். சென்னை மெட்ரோவில் எனக்கு மெட்ரோ ரயில் இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. நான் முதலில் மெட்ரோ ரயிலை பார்த்த பொழுது பெண் லோகோ பைலட்தான் ஒட்டி சென்றார்கள். தற்போது நானும் இங்கு லோகோ பைலட்டாக இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக இங்குதான் வேலைசெய்து வருகிறேன்.
லோகோ பைலட்ஸ் பாக்கியலட்சுமி மற்றும் கனகலட்சுமி
இருவரும் சேர்ந்து அளித்த பேட்டியின் விவரத்தை விரிவாக கீழே காணலாம்...
லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்று எப்படி தோன்றியது?
இங்கு பல பெண்கள் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். அதுபோல நான் பார்க்கும் வேலையும் அனைவரையும் ஆச்சர்யமூட்டும் விதத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். என் சொந்தக்காரர்களிடம் நான் ரயில் ஓட்டுகிறேன் என்று சொல்லும்போது அவர்கள் என்னை வெகுவாக பாராட்டுகிறார்கள். எனக்கு லோகோ பைலட் ஆக வேண்டும் என்கிற ஆசை முதன்முதலில் வந்தபாதும் சரி, நான் மெட்ரோ ரயிலில் முதலில் பயணம் செய்தபோதும் சரி, ரயிலை ஒரு பெண் ஓட்டிச்செல்வதை பார்த்தேன். அது என்னை ஊக்கப்படுத்தியது. அதன்பிறகு சென்னை மெட்ரோவிற்கு பெண் லோகோ பைலட் தேவை என்று அறிவிப்பு வந்ததை கண்டவுடன் அதற்கு விண்ணப்பித்துவிட்டேன்.
சென்னை மெட்ரோவில் எத்தனை நாள் பயிற்சி அளிக்கப்பட்டது?
6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களுக்கு செய்முறை பயிற்சிகள் அனைத்தும், பயணிகள் இல்லாமல், காலியான ரயிலில் இரவு நேரத்தில் அளிக்கப்படும். அதுபோல் எவ்வளவு தூரம் மெட்ரோ ரயிலை இயக்குகிறோம் என்பதையும் சோதிப்பார்கள். 6 மாதங்களுக்கு பிறகு தேர்வு வைப்பார்கள். அனைத்திலும் தேர்ச்சி பெற்ற பிறகுதான் லோகோ பைலட் ஆக முடியும். எங்களுக்கு பயம் இல்லாத பொழுதுதான் பயணிகளுடன் கூடிய மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைக்கும்.
மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் லோகோ பைலட் பாக்கியலட்சுமி
முதன்முதலில் மெட்ரோ ரயிலை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது ?
உண்மையை சொல்லபோனால் ஆரம்பத்தில் மிகவும் பயமாக இருந்தது. பயம் என்று சொல்லுவதை விட இன்னும் கூடுதல் பொறுப்பு உண்டானது. நம்மை நம்பி இத்தனை பயணிகள் வருகின்றனர். அவர்களது பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஒவ்வொரு முறையும் இந்த மெட்ரோ ரயிலின் சீருடையை அணியும் பொழுது வாழ்க்கையில் பெரிதாக சாதித்ததை போன்ற உணர்வு ஏற்படுகிறது. எங்கள் வீட்டில் நான் மெட்ரோ ரயிலை இயக்க போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் பெருமையாக எண்ணினார்கள். முதல்நாள் மெட்ரோ ரயிலை இயக்கும் பொழுது என் அம்மா நான் இயக்கிய ரயிலில் பயணித்தார். அதை இன்றைக்கு நினைக்கும்போதும் பூரிப்பாக இருக்கிறது.
பொறுப்புகள் அதிகம் உள்ள இந்த வேலையில் எப்படி பிரச்சினைகளையும், மன அழுத்தத்தையும் சமாளிக்கிறீர்கள்?
மற்ற வேலைகளை போல இந்த வேலை கிடையாது. எனவே ரயில் பெட்டிக்குள் நுழைந்துவிட்டால் எங்கள் சொந்த பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தையும் மூட்டைகட்டி வெளியில் வைத்துவிடுவோம். அப்படி இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமான மனநிலையோடு ரயிலை இயக்கமுடியும். நம்மை நம்பி ஏராளமான பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். அதனால் பொறுப்புடன் நாங்கள் ரயிலை இயக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை ரயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம் என்றால் எங்களது முழு எண்ணமும் ரயிலின் மீதுதான் இருக்கும்.
பெண் லோகோ பைலட் இயக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள்
மெட்ரோ ரயில் இயங்கும் முறை குறித்து பாக்கியலட்சுமி அளித்த தகவல் :
ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் வரும் ஒலிகள் மற்றும் அறிவுரைகள் அனைத்துமே ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். அதனால் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையம் வரும்பொழுதும் மற்றும் ரயிலுக்குள் கொடுக்கும் அனைத்து வாய்ஸ் அறிவுரைகளுமே ப்ரீ ரெக்கார்டட்தான். மெட்ரோ ரயில் கதவுகள் ஆட்டோமேட்டிக்தான். ஆனால் அதை மூடும் பொறுப்பு எங்களிடம்தான் உள்ளது. நாங்கள் கமெண்ட் கொடுத்தால் மட்டுமே கதவுகள் மூடப்படும். மேலும் பயணிகளின் வருகையை பார்க்க எங்களுக்கு பிரத்யேக கண்ணாடி வசதி இருக்கும். அதில் ரயில் பெட்டியின் கதவுகள் மூடப்படும் நிலையில், பயணிகள் யாரேனும் ஓடிவந்து ரயிலில் ஏற முயற்சிப்பதை நாங்கள் பார்த்தால், மூடிய கதவுகளை பயணிகளுக்காக மீண்டும் திறப்போம். பயணிகளை முதன்மையாக வைத்தே சென்னை மெட்ரோ இயங்குகிறது. அதுபோல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பொழுது ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்திற்கு பயணிக்க வெறும் இரண்டு நிமிடங்களே ஆகும். அதனால் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு பயணம் எளிதாகுகிறது
லோகோ பைலட்ஸின் கமெண்ட்ஸ் மற்றும் ரயில் இயக்கம்
ஒரு ரயில் நிலையத்தில் அதிகபட்சம் 30 நிமிடங்களே ரயில் நிற்கும். அதுமட்டுமில்லாமல் மெட்ரோ ரயில்கள் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் போகும். எப்பொழுதும் அனைத்து பயணிகளும் கண்காணிக்கப்படுவர். ஒருவேளை மெட்ரோ ரயிலுக்குள் பயணிகள் தின்பண்டங்களை உட்கொண்டாலோ அல்லது பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தாலோ அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வரும்.
வேலையில் சந்திக்கும் சவால்கள் குறித்து கனகலட்சுமி அளித்த தகவல் :
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நேரம் ரயில் இயங்க தாமதமாகலாம். அதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளை சரியான நேரத்தில் இறக்கிவிட முடியாமலும் போகும். அதுமட்டுமில்லாமல் ஒரு ரயில் பழுதானால் பின்னாடி வரும் ரயில்களின் நேரமும் மாறும். மேலும் அதில் வரும் பயணிகளின் பயண நேரமும் பாதிக்கப்படும். எனவே சரியான நேரத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். அதுபோல பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அதனை சமாளிப்பதும் சவாலாகத்தான் இருக்கும்.