முறையற்ற வாழ்க்கை முறையால் முதிர்வடையும் இளைஞர்கள்! எச்சரிக்கும் மருத்துவர் மோனிஷா அரவிந்த்

எப்போதுமே இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்.

Update:2024-07-09 00:00 IST
Click the Play button to listen to article

எப்போதுமே இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் தங்களது தோல், முடி ஆகியவற்றை பராமரிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் பலர் இருப்பர். இதனால் சிறு வயதிலேயே அவர்களுக்கு வயது முதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சல்களுக்கும் ஆளாக நேரிடலாம். எப்போதும் உடல் ஆரோக்கியமானதாக இருந்தால்தான் தெளிவான மற்றும் பளபளப்பான சருமம் நமக்கு கிடைக்கும். அந்த வகையில், நமது தோல் மற்றும் முடி பராமரிப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசியிருக்கிறார் தோல் மருத்துவர் திருமதி. மோனிஷா அரவிந்த். அதுகுறித்த செய்தி தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

வெயில் காலங்களில் நமது மேனியை பாதுகாத்து பராமரித்து கொள்வது எப்படி?

வெயில் காலங்களில் நம் மேனி பாதுகாப்பில் முக்கியமான பங்கு வகிப்பது சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாய்ச்சுரைஸர்கள்தான். இவைகள் வெயில் மட்டுமல்ல வீட்டிலேயே நீங்கள் இருந்தாலும் உடலில் ஏற்படும் வெப்பத்தினால் வரும் சரும பாதிப்புகளை தடுக்க உதவுகின்றன. குறிப்பாக உடலில் வரும் வெடிப்பு, எரிச்சல், அரிப்பு, வரவரப்பு தன்மை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாய்ச்சுரைஸர் பயன்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும். அதேபோல் சோப்புக்கு பதிலாக வாசனை வராத பிஎச் அளவு சரியாக இருக்கும் க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, நம் முகம் மென்மையாக மாறுவதுடன் தோலிலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இது தவிர நாம் தண்ணீர், இளநீர், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தினம்தோறும் அருந்துவதும் மிக அவசியம்.


க்ளென்சர் பயன்படுத்துவதால், முகம் மென்மையாக மாறுவதுடன் தோலிலும் பாதிப்பு ஏற்படாது

தொடர்ந்து மாய்ச்சுரைஸர் பயன்படுத்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? நம் மேனிக்கு சரியான மாய்ச்சுரைஸர் எது என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?

பொதுவாகவே எல்லோருடைய மேனிக்கும் பொருத்தமான ஒரே மாய்ச்சுரைஸர் என்று எதுவும் கிடையாது. ஏனெனில் ஆயிலி, ட்ரை, காம்பினேஷன் என பலவிதமான தோல் அமைப்பு ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. ஆகையால் உங்களுடைய மேனி எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிந்துக் கொண்ட பிறகே நாம் சரியான மாய்ச்சுரைஸரை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல மாற்றமும், பக்கவிளைவும் ஏற்படாது. அதுபோலவே கை, கால்களுக்கு பயன்படுத்தும் அதே மாய்ச்சுரைஸரை முகத்திற்கு நம்மால் பயன்படுத்த முடியாது. ஏனெனில் முகம் மிக மென்மையான பகுதி. அதனால் அதற்கு தகுந்த மென்மையான மாய்ச்சுரைஸர்களையே நாம் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். நம் பகுதியில் இருக்கும் கால சூழ்நிலையை பொறுத்தவரை லோஷன் அல்லது ஜெல் வகையை சார்ந்த மாய்ச்சுரைஸர்களே மிக சரியாக இருக்கும்.

சமீபகாலமாக பல நபர்கள் கூகுள், யூடியூப் போன்ற இணையதளங்களில் சொல்லப்படும் அல்லது விற்கப்படும் பொருட்களை மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே வாங்கி, தங்களின் மேனி பராமரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரலாம்?

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒரு பொருளை வாங்கி நம் மேனிக்கு பயன்படுத்தும்போது ட்ரைனஸ் பிரச்சினை அதிகரிக்கலாம். மேலும் நமது தோல் பகுதி, உணர்திறன் அதிகம் கொண்ட இடம் என்பதால் முறையற்ற, பெயர் கூட வைக்கப்படாத பொருளை வாங்கி பயன்படுத்தும் போது சிறிய பிரச்சினை கூட பெரிதாகி தோல் முழுவதும் பரவ ஆரம்பிக்கலாம். சிலர் பயன்படுத்தும் கிரீம் பளீரென நிறமாற்றதை உடனே கொடுத்தாலும் சீறுநீரக செயலிழப்பு வரை மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காரணம் அதில் அதிகளவு பாதரசமோ, ஸ்டீராய்டோ கலந்திருக்கும். இதில் பாதரசப் பயன்பாடு என்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் பெயர் கூட இல்லாத, உரிய அங்கீகாரம் பெற்றிடாத பொருட்களில் அவை கலந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு பொருள் பயன்படுத்திய சில நாட்களிலேயே நல்ல நிறமாற்றத்தை தருகின்றது என்றால் நீங்கள் நிச்சயம் அதனை சந்தேகிக்க வேண்டும். எப்போதுமே FDA அங்கீகரித்த பொருட்களில்தான் பாதரசம் கலந்திருக்காது. எனவே எல்லா தோல் பிரச்சினைகளுக்குமே மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவதே சரியான தீர்வாகும்.


முகத்திற்கான க்ரீம்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது 

சிலர் பாட்டி வைத்தியம், கை வைத்தியம் போன்ற முறைகளை பின்பற்றி வீட்டிலேயே தங்களது மேனியை பராமரிக்கிறார்கள். இது சரியா? ஏதேனும் பிரச்சினை வருமா?

வீட்டு வைத்தியத்தை பொறுத்தவரை தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால். நாம் பயன்படுத்தும் தயிர், எலுமிச்சை போன்ற பொருட்களின் உதவியுடன் மேல்புறம் இருக்கும் இறந்து போன செல்களை நம்மால் அப்புறப்படுத்த முடியுமே தவிர நிரந்தர தீர்வினை காண முடியாது. ஓரிருநாள் பளீரென நம் முகம் பார்க்க தெரிந்தாலும் காலம் முழுவதும் அது கைகொடுக்காது. சொல்லப்போனால் இதே தயிர், எலுமிச்சை, மஞ்சள் போன்ற பொருட்களில் இருந்துதான் தோல் மருத்துவர்கள் குறிப்பிடும் க்ரீம்களும் தயாரிக்கபடுகின்றன. இருந்தாலும் அடிப்படையான அந்த மூலப்பொருளில் என்ன தேவையோ அதை சரியான விகிதத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி தனித்தெடுத்து, சரியான பொருட்களை கலவையாக்கித்தான் நாம் க்ரீம்களாக பயன்படுத்துகிறோம். ஆனால் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் அந்த மூல பொருட்களையே நேரடியாக நம் முகத்திற்கோ, உடலுக்கோ பயன்படுத்துவது பெரிய மாற்றத்தை தராது. அதில் தேவையில்லாத எஞ்சிய சக்கைகளையும் சேர்த்தேதான் நம் முகத்திற்கும், உடலுக்கும் பயன்படுத்துகிறோம். தொடர்ந்து அவ்வாறு செய்தால் வேறுசில தோல் சார்ந்த பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. இதிலிருந்து தப்பிக்க குறைந்தபட்சம் சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாய்ச்சுரைஸர்களாவது பயன்படுத்துவது நல்லது.


வீட்டு வைத்தியத்தில் மூல பொருட்களை நேரடியாக நம் முகத்திற்கோ, உடலுக்கோ பயன்படுத்துவது மாற்றத்தை தராது 

சிலர் முடி உதிர்வு, மேனி பளபளப்பிற்கு கேரட், ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற ஜூஸ்களை பருகுங்கள் நல்ல மாற்றத்தை தரும் என்கிறார்களே. அது எந்த அளவிற்கு பயன் தரும்?

பொதுவாகவே பழங்கள், காய்கறிகள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய விஷயங்கள்தான். குறிப்பாக தோலுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை அவைகள் தருகின்றன. இருப்பினும் ஒருவர் ஒரு விஷயத்தை தொடர்ந்து பயன்படுத்தி மேனி மெருகேறியது என்றால், அதே மாற்றத்தை மற்றொருவருக்கும் அது தரும் என்பது உறுதி கிடையாது. அதற்கு ஆதாரங்களும் இல்லை. மேலும் இன்று பல நபர்கள் ஜூஸ் குடிக்கும்போது அதில் உள்ள சாறை மட்டுமே பருகி ஃபைபர் நிறைந்த சக்கையை தூக்கியெறிந்து விடுகிறர்கள். இதனால் அவர்களுக்கு ஒரு பலனும் கிடைக்காது. எனவே முடிந்தவரை ஜூஸ் குடிக்கும்போது அதில் உள்ள ஃபைபரையும் சேர்த்தே சாப்பிடுகள். அதுவும் சமீபத்தில் ABC ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த கலவை, பலராலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியவையே என்றாலும், அளவோடு பயன்படுத்துவதே நல்லது.

கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்கு வளரும், ஒரு வெள்ளை முடியை பிடுங்கினால் தலை முழுவதும் வெள்ளை முடி வந்துவிடும், தொடர்ந்து ஹெல்மட் அணிந்தால் வழுக்கை தலை வரும் என பலவிதமான பேச்சுக்கள் நிலவுகிறதே, இவைகள் உண்மையா?


கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டால் முடி நன்கு வளரும் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை - மருத்துவர்

கருவேப்பிலை உடலுக்கு நன்மை தரக்கூடிய கீரைதான். இருப்பினும் அதனை தொடர்ந்து சாப்பிட்டால் முடி நன்கு வளரும் என்பதை ஆய்வுபூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை. அதேபோல் ஒரு வெள்ளை முடியை பிடுங்கினால் தலை முழுவதும் வெள்ளை முடி வந்துவிடும் என்பது கற்பனையான ஒன்றே. ஒரு முடியின் வேருக்கும், மற்றொரு வேருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் தொடர்ந்து ஹெல்மட் பயன்படுத்தும்போது தலையில் ஏற்படும் வேர்வையினால் பொடுகு, ஈறு போன்ற பிரச்சினைகள் வருமே தவிர, வழுக்கை தலை வந்துவிடும் என்பதற்கு சான்று கிடையாது. ஒருவேளை பொடுகு, ஈறு பிரச்சினை அதிகமானால் அதனால் முடிஉதிர்வு ஏற்படலாம். குறிப்பாக இப்போது இருக்கும் இளைஞர்களிடத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கமே இத்தகைய வழுக்கை தலை பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. வேறு சிலருக்கு ஆர்மோன் மாற்றத்தின் காரணமாகவும், பரம்பரையாகவும் நிகழலாம்.

இன்றைய சூழலில் பல நபர்களுக்கு முன்கூட்டிய வயது முதிர்வு ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம்?


டிவி, மொபைல், வீடியோ கேம் போன்றவற்றின் அதீத பயன்பாட்டால் சிலருக்கு முன்கூட்டிேய வயது முதிர்வு நிகழ்கிறது - மருத்துவர்

நான் ஏற்கனவே கூறியது போல வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முழுமுதற் காரணம். ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை சாப்பிடுவது, ஒழுங்காக உடற்பயிற்சி செய்யாமல், சரியான நேரத்திற்கு தூங்காமல், டிவி, மொபைல், வீடியோ கேம் என பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டுமே மூழ்கி நம் உடலை சரியாக கவனிக்காமல் இருப்பதாலேயே இந்த முன்கூட்டிய வயது முதிர்வு நிகழ்வு நடக்கிறது. குறிப்பாக இன்றைய குழந்தைகளிடத்தில் இது அதிகளவு காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. முடிந்தவரை குழந்தைகளுக்கு முறையான உணவு பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி, உடலளவிலும் மனதளவிலும் ஆக்டிவாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை டிவி, மொபைல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இதுதவிர சிலருக்கு பரம்பரையாக வரும் ஆர்மோனல் பிரச்சினை காரணமாகவும் இந்த நிகழ்வு ஏற்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்