இன்ஹேலரை பயன்படுத்தும் முன்பு குலுக்குவது ஏன்? - நுரையீரல் நிபுணர் விளக்கம்

வீசிங்கிற்கான அறிகுறிகள், காரணங்கள், குறட்டை எதனால் வருகிறது? எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்து விளக்குகிறார் நுரையீரல் நிபுணர் அவினாஷ் நாயர்.

Update:2023-10-03 00:00 IST
Click the Play button to listen to article

சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்க அதிகரிக்க அதனால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக மூச்சு மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய மூச்சுப் பிரச்சினைகளில் ஒன்று வீசிங் என்கிற மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை. வீசிங்கிற்கான அறிகுறிகள், காரணங்கள், குறட்டை எதனால் வருகிறது? எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்து விளக்குகிறார் நுரையீரல் நிபுணர் அவினாஷ் நாயர்.

மூச்சுத்திணறல் பிரச்சினைக்கான முக்கிய காரணம் என்ன?

வீசிங் என்கிற மூச்சுத்திணறல் பிரச்சினை வர பல காரணங்கள் இருக்கின்றன. வயதுக்கேற்றபடி காரணங்களும் மாறும். குழந்தைகளுக்கு, வைரஸ் தொற்றுகள், ஒவ்வாமை மற்றும் மரபணு போன்ற காரணங்களால் மூச்சுத்திணறல் வருகிறது. வளர் இளம்பருவத்தினருக்கு, சிறுவயதிலிருந்தே வீசிங் பிரச்சினை இருப்பவர்களுக்கு வயதானாலும் அது தொடரும். தொழிற்சாலை, ஸ்ப்ரே கம்பெனி, ட்ராஃபிக் போலீஸ், தூசி அதிகமாக பகுதிகளில் வேலைசெய்பவர்கள் போன்ற குறிப்பிட்ட சில தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதன் காரணமாக மூச்சுத்திணறல் பிரச்சினை வரலாம். வயது அதிகமாகும்போது உடற்பருமன் போன்ற பிரச்சினைகளால் வயது வந்தோருக்கான ஆஸ்துமா (adult onset asthma) என்கிற நிலை ஏற்படலாம்.

மூச்சுத்திணறலின் அறிகுறிகள் என்னென்ன?

நமது நுரையீரல் குழாய் போன்றது. குழாய் சுருங்கிவிட்டால் எப்படி தண்ணீர் சரியாக போகாதோ, அதுபோலத்தான் மில்லியன்க்கணக்கான குழாய்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள நுரையீரலில் சுருக்கம் ஏற்படும்போது, காற்று உள்ளே செல்ல முயற்சித்தாலும் அதனால் முடியாது. அப்போதுதான் வீசிங் சத்தம் வருகிறது. இருமல், மார்பு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு அசௌகர்யம், தொண்டையில் அடைப்பு போன்ற லேசான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.


மூச்சுத்திணறலுக்கான காரணிகள்

இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது சிலர் அதை அடக்கிக்கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது?

இருமல் என்பது ஒரு முக்கிய அறிகுறி. சாதாரண சளி பிரச்சினை வந்தாலும் இருமல் வரும். சிலருக்கு அது தானாகவே போய்விடும். சிலருக்கு சிறு சிகிச்சை போதுமானது. அதே சமயம், காசநோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்ற பிற முக்கிய பிரச்சினைகளுக்கும் இருமல்தான் அறிகுறியாக இருக்கிறது. எனவே 2 வாரங்களுக்கும் மேல் தொடர் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வீசிங் ஏற்படும்போது சத்தம் அதிகமாக வருவது எதனால்?

மூச்சுத்திணறல் ஏற்படும்போது முதலில் கீழே இருக்கும் சுவாசக் குழாய்களில்தான் அடைப்பு ஏற்படும். மேலே இருக்கும் குழாய்களிலும் அடைப்பு வரவர சத்தம் வர ஆரம்பிக்கும். இதைவிட மோசமான விளைவு எப்போது ஏற்படுமென்றால், ஏற்கனவே வீசிங் இருப்பவர்களுக்கு அது திடீரென நிற்பதுதான். இதை சைலண்ட் செஸ் (Silent chest) என்கின்றனர். நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு காற்றே உட்புகாத நிலைதான் இது.


வீசிங் பிரச்சினைக்கான காரணிகள்

மூச்சுத்திணறலால் என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் வருகிறது?

சில நோய்களுக்கு மூச்சுத்திணறல் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்துமா, COPD, Bronchiectasis, Bronchiolitis போன்றவைகளுக்கு அறிகுறியாக வீசிங் வருகிறது. இதுதவிர, இதய செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கும் வீசிங் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதனை Cardiac asthma என்கின்றனர். மேலும், வயதானவர்கள், பக்கவாதம் வந்தவர்கள், சாப்பிடும் உணவானது தவறுதலாக நுரையீரலுக்குள் சென்று தொற்று ஏற்படுதல் போன்ற பல காரணங்களால் வீசிங் வருகிறது. எனவே வீசிங்கிற்கு சிகிச்சை என்பதைவிட, அதற்கான காரணிக்கு சிகிச்சை எடுப்பதே சிறந்தது.

வீசிங் வருவோர் செய்யக்கூடிய முதலுதவி சிகிச்சை குறித்து கூறுங்கள்...

வீசிங் வந்தால் முதலுதவி செய்யக்கூடாது. வேறு பிரச்சினைகளும் வீசிங் போலவே இருக்கலாம். உதாரணத்திற்கு குழந்தை சிறிய பொருள் ஒன்றை விழுங்கிவிட்டால்கூட வீசிங் சத்தம் கேட்கும். அதை Foreign body aspiration என்கின்றனர். இதற்கு முதலுதவி அளிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். அதேபோல், வயதானவர்களுக்கு சாப்பாடு புரை ஏறினால்கூட மூச்சுத்திணறல் ஏற்படலாம். எனவே வீசிங் வரும்போது நாமாக முதலுதவி சிகிச்சை எடுக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.


நுரையீரல் பிரச்சினையும் மூச்சுத்திணறலும்

நீண்ட நாளாக வீசிங் இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்ஹேலர் பயன்படுத்த வேண்டுமா?

இன்ஹேலர் என்பது மருந்தை திரவ வடிவில் ஒரு சிறு கேனில் அடைத்துவைப்பது. இதை Pressurized metered-dose inhalers (pMDI) என்கின்றனர். இதே மருந்துதான் நெபுலைசர், ரோட்டாகேப் போன்வற்றிலும் கிடைக்கிறது. இவை அனைத்துமே இன்ஹேலரின் வடிவங்கள்தான். ஒரு மாத்திரையை சாப்பிடும்போது அது வயிற்றுக்குள் சென்று, உடல் முழுவதும் பரவி, பின்னர்தான் நுரையீரலுக்கும் செல்கிறது. ஆனால் இன்ஹேலரை பயன்படுத்தும்போது, அது நேரடியாக நுரையீரலுக்குச் சென்று, உடனடியாக வேலைசெய்யும். அதேசமயம் மாத்திரையைவிட பக்கவிளைவுகள் மிகமிக குறைவு. அதேபோல், ஒரு மாத்திரையின் டோஸ் மில்லிகிராம் அளவில் இருக்கும். ஆனால் இன்ஹேலரின் டோஸ் மைக்ரோ கிராம் அளவில் இருக்கும். பொதுவாக 150 -200 தடவை பம்ப் செய்வது ஒரு மாத்திரை சாப்பிடுவதற்கு சமம்.

இன்ஹேலரை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. வீசிங்கிற்கு பல காரணங்கள் இருப்பதுபோலவே இன்ஹேலரை பயன்படுத்துவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுத்து அது குறையும்போது மருந்தின் அளவையும் குறைக்கலாம். இதை Step-down therapy என்கின்றனர். ஆனால் ஆஸ்துமா சற்று குறைந்தவுடனேயே சிலர் மருந்தை விட்டுவிடுகின்றனர். இப்படிச் செய்தால் குணமாகாது. 40% பேருக்கு மருந்தை படிப்படியாக குறைத்து நிறுத்தவும் முடியும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் எடுக்கவேண்டிய நிலை இருக்கும்.


இன்ஹேலர் பயன்பாடு

இன்ஹேலரை பயன்படுத்தும் முன்பு குலுக்குவது ஏன்?

இன்ஹேலரில் pMDI மருந்துகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் பெரும்பாலானவற்றில் காம்பினேஷன் மருந்துகளே இருக்கும். சிலவற்றில்தான் ஒரு மருந்து இருக்கும். ஆனால் இன்ஹேலர்களில் பம்பை அழுத்தும்போது மருந்து வெளிவர Propellant சேர்க்கப்பட்டிருக்கும். மருந்தும் Propellant-ம் தனித்தனியாக பிரிந்து மேலும் கீழுமாக தங்கிவிடும். அதேபோல் காம்பினேஷன் மருந்து என்பதால் குலுக்கிவிட்டு எடுத்தால்தான் மருந்திலுள்ள அனைத்து பலனும் நோயாளிக்கு முழுமையாக கிடைக்கும்.

மூச்சுத்திணறலுக்கு சிறந்த சிகிச்சை எது?

குழந்தைப்பருவத்தில் வீசிங் பிரச்சினை இருப்பவர்கள் வளர வளர அது தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு ௪௦ - 50 வயதுக்கு பிறகு வீசிங் வரும். வயது வந்தோருக்கான ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு வாழ்நாள் முழுக்க சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு குணமாக்கவும் முடியும்.


குறட்டை வருவதற்கான காரணம்

குறட்டை பிரச்சினை எதனால் வருகிறது?

நாம் தூங்கும்போது தசைகள் ரிலாக்ஸ் ஆவதால் நுரையீரல் மூச்சுக்குழாயானது சற்று சுருங்குகிறது. ஆனால் காற்றானது மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே செல்லாமல் மூச்சுக்குழாய் முழுமையாக அடைபடும்போது குறட்டை சத்தம் வருகிறது. அதாவது காற்றானது தொண்டைக்கும், வாய்க்கும் நடுவே செல்லும்போது palate (மேல்வாய்) என்ற பாகமானது அதிர்வதால் குறட்டை வருகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று obstructive sleep apnea, மற்றொன்று Habitual snoring. இரண்டாவது வகையால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தில் மாற்றம் போன்ற பிரச்சினைகள் வராது. இவர்கள் 30 சதவீதமாக இருப்பார்கள்.

மீதமுள்ள 70 சதவீதத்தினருக்கு ஆக்சிஜன் அளவு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், தூக்கம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காலையில் எழுந்திருக்கும்போது சோர்வு, போதிய தூக்கமின்மை, தலைவலி, ஞாபக மறதி, வாகனம் ஓட்டும்போது தூங்குதல், தூக்கத்திற்கு நடுவே சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.


குறட்டைக்கான தீர்வு

இது obstructive sleep apnea. இதனால் பக்கவாதம், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 40% அதிகமாக இருக்கிறது. அதுவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்களுக்கு பாதிப்பின் அளவு 50% அதிகமாக இருக்கும். உடல் பருமன், கழுத்து இடைவெளி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை எளிதில் வரலாம். குறட்டை அதிகமாக வரும்போது தூக்க பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

குறட்டையை கட்டுப்படுத்த வழிகள்...

சில தொண்டை பயிற்சிகள், உடல் எடையை குறைத்தல், வாழ்க்கைமுறையை மாற்றியமைத்தல் போன்றவை குறட்டையை கட்டுப்படுத்த உதவும். இதுதவிர, CPAP என்று சொல்லக்கூடிய மாஸ்க் வைத்து தூங்கவேண்டும். இதன்மூலம் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்