2 நிமிடம்தான் பல் துலக்க வேண்டும் - "நடிகர் செந்தில் மகன்" மருத்துவர் மணிகண்ட பிரபு விளக்கம்
ஒரு மனிதனுக்கு வாய் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் செயல்பாட்டுக்கு பற்களும் மிகவும் அவசியம்.
“பல் போனால் சொல் போகும்” என்று பெரியோர்கள் சொல்லி கேட்டிருப்போம். இது வெறும் பழமொழிக்காக மட்டும் அல்ல ஒரு மனிதனுக்கு பற்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் சொல்லப்பட்ட ஒன்று. ஒரு மனிதனுக்கு வாய் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் செயல்பாட்டுக்கு பற்களும் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட பற்களை நாம் ஆரோக்கியமாக பராமரிக்கிறோமா? என்றால் சந்தேகம்தான். காரணம் சரியான பராமரிப்பு இல்லாததால்தான் பல் வலி, பல் சொத்தை, பல் கறைகள், வாய் துர்நாற்றம், ஈறுகள் வீக்கம், வாய்ப்புற்றுநோய் போன்ற பல பிரச்சினைகள் தலை தூக்கி, கடவுள் இயற்கையாக கொடுத்த பல்லை இழந்து பெரும்பாலானவர்கள் செயற்கை பல்லை தேடி செல்லும் நிலையும் ஏற்படுகிறது. பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட நம் உடலை பாதிக்கும் என்பதற்கும் பல நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன. இப்படியான நிலையில், பல் பராமரிப்பு மற்றும் அவற்றை ஆரோக்கியமானதாக பார்த்துக்கொள்வது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசியுள்ளார் பல் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கி வரும் பல் மருத்துவர் மணிகண்ட பிரபு. இவர் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகராக கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் நடிகர் செந்திலின் மூத்த மகனாவார். ராணி நேயர்களுக்காக அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பை இங்கே காணலாம்.
பொதுவாகவே நமது பற்களை எவ்வாறு பாதுகாப்பது? அதில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது?
2 நிமிடம் பல் துலக்கினால் போதும் - மருத்துவர் மணிகண்ட பிரபு
முன்பு நமது அப்பா அம்மா காலத்தில் எல்லாம் பற்களின் மீது பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஏதேனும் பிரச்சினை வந்தால் உடனே அந்த பல்லை நீக்கி விடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு பற்களின் முக்கியத்துவம் தெரிகிறது. பற்கள் நமது அழகையும், உடலையும் மெருகேற்ற கூடிய ஒன்று என்பதை உணர்ந்ததனால்தான் அதன் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார்கள். இந்த விழிப்புணர்வே பல் மருத்துவத்துறையில் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கவும், நவீன மயமான முறையில் புது புது முயற்சிகளை மேற்கொள்ளவும் உத்வேகமாக இருந்து வருகிறது. பல் பராமரிப்பை பொறுத்தவரை காலை, இரவு, முடிந்தால் மதியம் கூட பல் துலக்குவது நல்லது. இதில் ஒரு சிலர் ஏனோ தானோ என பல் துலக்குவார்கள். வேறு சிலரோ பலமணி நேரம் பல் துலக்கி இனாமிலை இழந்து பல் கூச்சத்திற்கு ஆளாவார்கள். இவை அனைத்துமே தவறு. இரண்டே நிமிடம்தான் பல் துலக்க வேண்டும், அதையும் முறையாக செய்ய வேண்டும். முன்புறம், பின்புறம் என அனைத்திலும் கவனம் செலுத்தி பெரிய அழுத்தம் ஏதும் கொடுக்காமல் பல் துலக்குவதே சரியான முறையாகும். அதேபோல் ஒரு சிலர் பல் துலக்க பயன்படுத்தும் ப்ரஷை ஆறு மாதம் கூட பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறு. குறைந்தபட்சம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு மேல் ஒரு ப்ரஷை பயன்படுத்தக் கூடாது. இத்தகைய விஷயங்களை பின்பற்றினாலே எந்த பல் பிரச்சினையும் வராமல் நாம் பார்த்துக்கொள்ளலாம்.
இன்றைய சூழலில் பல் சொத்தை பிரச்சினை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வருகிறது. இந்த சிக்கலை ஆரம்பகாலத்திலேயே எப்படி கண்டுபிடிக்கலாம்?
பல் சொத்தை பிரச்சினை நரம்பு மண்டலம்வரை பரவி வலியை ஏற்படுத்த 4 ஆண்டுகள் ஆகும்!
பல் சொத்தை பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமான ஒன்றுதான். பல்லில் ஏற்படும் நிறமாற்றம், கூச்சம், சாப்பிடும்போது உணவு பொருட்கள் பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் பிரச்சினை போன்றவைகளை கொண்டே நம்மால் கண்டறிய முடியும். இதனை ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால். மிக எளிமையாக பல் சுத்தம் அல்லது ஃபில்லிங் போன்ற முறைகளை பயன்படுத்தி சரிசெய்து விடலாம். ஒருவேளை நம்முடைய அலட்சியத்தால் கால தாமதம் ஏற்பட்டால், சிறியதாக இருக்கும் பல் சொத்தை நமது வாய் பகுதியில் உள்ள நரம்பு மண்டலம்வரை பரவி வலியை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு நடக்க இரண்டு முதல் நான்கு வருட காலமாகும். அதுவரை நாம் கவனிக்காமல் இருப்பது நிச்சயம் நமது அலட்சியம்தான். இதனை துவக்கத்திலேயே கண்டறிந்தால் நமது பல்லையும் பாதுகாக்கலாம், செலவும் குறைவு.
பல் பாதுகாப்பில் தற்போது இம்பிளான்ட் என்கிற முறை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இம்பிளான்ட் என்றால் என்ன, கொஞ்சம் விளக்க முடியுமா?
இம்பிளான்ட் செய்யும் முறை மற்றும் செய்த பின்பு பற்களின் வடிவம் குறித்து விளக்கும் தோற்ற காட்சி
இம்பிளான்ட் என்பது பற்களின் அடிப்பகுதியில் நாம் ஏற்படுத்தும் ஓர் செயற்கை வேர் தான். பல நபர்கள் இம்பிளான்ட் என்றாலே பல் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் பல் இல்லாத இடத்தில் டைட்டானியம் மெட்டீரியலில் தண்டு போன்ற அமைப்பிலான ஒரு பொருளை நாம் பொறுத்துவோம். அதை பார்க்க ஸ்குரு வடிவிலான அமைப்பில் இருக்கும். இந்த டைட்டானியம், துரு பிடிக்காது. எலும்போடு இணைந்து ஒட்டி பிணைந்து செயல்படக்கூடிய தன்மை கொண்டது. இதில் பக்கவிளைவுகளும் கிடையாது. இதனை பொருத்தி மூன்று மாதங்கள் கழித்து அதனை சுற்றிலும் எலும்பு பகுதிகள் வளர்ந்து அதனை இறுக்கமாக பிடித்த பிறகு, எந்த வகையான பற்களையும் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கு அடித்தளமாக இருப்பதே அந்த டைட்டானியம் தண்டுதான். இதன் பிறகு எப்போதும் போலவே நமது பல் வடிவம் மாறிவிடுவதோடு, எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சாதாரண முறையில் பல் துலக்குவது, பற்களை பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்யலாம். இருப்பினும் முடிந்தவரை மிக கடினமான பொருட்களை கடிக்காமல் தவிர்ப்பது, அதற்கு தகுந்த உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.
நம்முடைய பற்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
ஈறுகளில் ரத்தம் வடிதல் மற்றும் பற்களில் நிறமாற்றம் குறித்த புகைப்படம்
பற்களில் நிறமாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல், கூச்சம், பற்குழி ஏற்பட்டு அதில் அவ்வப்போது உணவு பொருட்கள் மாட்டிக்கொண்டு சங்கடத்தை கொடுப்பது போன்ற விஷயங்கள் நிகழ்ந்தால், உங்கள் பல்லில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அதே போல் பொதுவாகவே பற்களின் நிறம் என்பது முழுமையான வெள்ளை நிறம் அல்ல. யானையின் தந்தம் என்ன நிறத்தில் இருக்குமோ, அந்த அளவிலான வெளிறிய வெண்மை நிறமே நம் பற்களின் நிறம். இதனால் விளம்பரங்களை பார்த்து நாம் ஏமாற வேண்டாம். மேலும் ஒரு சிலருக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிக்கும் தண்ணீரினால் கூட நிற மாற்றம் ஏற்படலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. மற்றபடி வாயில் அடிபட்டு பற்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பினால் நிறமாற்றம் வந்தால் ரூட் கேனல் முறை அல்லது பல்லை நீக்கி புது பல் வைப்பது போன்ற முயற்சிகளை செய்து அதற்கு தீர்வு காணலாம்.
ரூட் கேனல் என்றால் என்ன? அதற்கு எந்த மாதிரியான சிகிச்சைகளை நீங்கள் தருவீர்கள்?
ரூட் கேனல் சிகிச்சை மேற்கொள்ளும் முறை
ரூட் கேனல் என்பது, உங்களுடைய பல் சொத்தை வேர் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கு தீர்வு கொடுக்கக்கூடிய ஒரு முறையாகும். பொதுவாகவே நமக்கு பல் சொத்தை ஏற்படும்போது மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி பல்லின் நடு பகுதியில் கேனல் போன்ற ஒரு ஓட்டையை உருவாக்கிவிடும். இதை சரிசெய்ய ரூட் கேனல் சிகிச்சையின்போது அந்த ஓட்டையில் இருக்கும் தேவைற்ற ஆர்கானிக் பொருட்களையெல்லாம் நீக்கிவிட்டு ஒரு மெடிகேட்டட் குச்சி வடிவிலான பொருளை அதற்குள்ளே வைத்து மூடிவிடுவோம். அதாவது பல் சொத்தைக்கு மேலோட்டமாக ஃபில் செய்யாமல், அடி வேர்வரை சென்று செய்வதுதான் ரூட் கேனல். இந்த சிகிச்சையின்மூலம் ஒரே நாளிலும் நமக்கு பலன் கிடைக்கலாம். ஆனாலும் சிலருக்கு பல்லிற்கு கிழே பாதிப்பு அதிகமாகி கட்டி இருந்தால் அதை முறையான சிகிச்சையின் மூலம் நீக்கிவிட்டுதான் இதனை செய்ய முடியும்.