பெண்கள் காஜல், மஸ்காரா போன்றவற்றை பயன்படுத்தலாமா? - என்ன சொல்கிறார் நிபுணர்
குழந்தைகளுடைய கண்களை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு மட்டுமில்லாமல் பொதுவாகவே கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் கண் மருத்துவர் முகமது அஞ்சும் இஃபால்.
தீபாவளி என்றாலே புதுத் துணி, ஸ்வீட்ஸ் என ஒருபுறம் இருந்தாலும் கொண்டாட்டம் என்றாலே அது பட்டாசுதான். பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தைகளுடைய கண்களை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு மட்டுமில்லாமல் பொதுவாகவே கண்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் கண் மருத்துவர் முகமது அஞ்சும் இஃபால்.
யாரெல்லாம் லேசர் சிகிச்சையை மேற்கொள்ளலாம்?
லேசர் சிகிச்சையைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை எல்லோருக்கும் பரிந்துரைக்க முடியாது. நோயாளிகளை தொடர்ந்து கவனித்து 18 - 20 வயதுக்குப் பிறகு, கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை நிலையாகும். குறைந்தது 6 மாதங்களுக்குப் பிறகு லேசர் சிகிச்சையை பரிந்துரைக்கலாம். அதை lasik correction என்கின்றனர். அதாவது லேசர் கொண்டு கருவிழியில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் இந்த சிகிச்சை. இதனால் கண் கண்ணாடி பயன்படுத்தத் தேவையில்லை.
காண்டாக்ட் லென்ஸை எப்படி தேர்ந்தெடுப்பது?
அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கண் மருத்துவமனைகளில்தான் லென்ஸை வாங்கவேண்டும். காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவதற்கு முன்பு கைகளை கழுவ வேண்டும். லென்ஸ்களின் காலாவதி தேதியை கவனிக்கவேண்டும். கண் மருத்துவர் பரிந்துரைக்கும் நேரத்திற்கு மட்டுமே லென்ஸை பயன்படுத்தவேண்டும். லென்ஸை கண்களுக்குள் வைத்துக்கொண்டே தூங்கக்கூடாது, நீச்சலடிக்கக்கூடாது.
கண்களில் காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்தும் முறை
கண்களில் எரிச்சல் அல்லது சிவந்திருந்தால் லென்ஸை பயன்படுத்தக்கூடாது. லென்ஸை வைக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். கண்களில் லென்ஸை வைத்துக்கொண்டே தூங்கினால் கருவிழிக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து corneal hypoxia போன்ற பிரச்சினைகள் மற்றும் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். அப்படி தொற்று ஏற்பட்டால் அதனை குணமாக்குவது கடினம். அதேபோல் காண்டாக்ட் லென்ஸ் கேஸை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும் அல்லது முறையாக சுத்தம் செய்யவேண்டும். குறிப்பாக, காண்டாக்ட் லென்ஸ் சொல்யூஷனை தினமும் மாற்றவேண்டும்.
அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு வேலைசெய்பவர்களுக்கு வரக்கூடிய கண் பிரச்சினைகள் என்னென்ன?
ஐடி மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளில்கூட திரைகளின் முன்பு செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு திரை நேரம் (கம்ப்யூட்டர், செல்போன், டிவி போன்றவற்றின் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது) என்பது கணிசமாக அதிகரித்திருக்கிறது. முடிந்தவரை ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். ஒரு நிமிடத்தில் குறைந்தது 7 - 8 முறை கண்களை சிமிட்டினால் கருவிழிகள் வறண்டுபோவதை தடுக்கலாம். மேலும் திரையானது கைநீட்டும் தூரம் தள்ளியிருக்கவேண்டும். அதேபோல் திரை கண்களுக்கு சற்று தாழ்வாக இருப்பது நல்லது. திரையின் வெளிச்சத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிவைத்து பயன்படுத்தவேண்டும். எழுத்துகளின் அளவை பெரிதாக்கலாம். கண்களில் செயற்கை உயவுப்பொருட்களைப் (lubricants) பயன்படுத்தலாம்.
20 - 20 - 20 விதியை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடம் தொடர்ந்து திரையைப் பார்த்தால், அதன்பிறகு 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்றுப் பார்க்கவேண்டும். கண்களின் focus தன்மை மேம்படும். கண்கள் சோர்ந்து போகாது. அதேபோல் நகரும் பொருட்களை பின்தொடர்ந்து கவனிக்கவேண்டும்.
கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
சன் கிளாஸ்கள் சூரிய கதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்குமா?
வெயிலில் வேலை செய்பவர்களுக்கு UVA மற்றும் UVB கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு சன் கிளாஸ்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. இல்லாவிட்டால் கண்களில் புரை விழுதல், சதை வளருதல், கண்களில் கேன்சர் மற்றும் பிற தொற்றுகள் வரலாம். விழித்திரை பாதிப்படையலாம். எனவே சன் கிளாஸ்கள் அல்லது தொப்பிகளை பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. சிலர் சூரிய கிரகண சமயங்களில் வெறுங்கண்ணால் பார்ப்பார்கள். அது முற்றிலும் தவறு. அதனால் கண் நரம்புகள் பாதிப்படையும்.
ஐ ட்ராப்களை மருத்துவர் பரிந்துரையின்றி பயன்படுத்தலாமா?
செயற்கை லூப்ரிகண்டாக பயன்படுத்துபவர்களுக்கு பெரிதளவில் பாதிப்பு இருக்காது. ஐ ட்ராப்களை கடைகளில் வாங்கும்போது காலாவதி தேதியை முதலில் கவனிக்க வேண்டும். பாதுகாப்பான மற்றும் சுத்தமான இடங்களில் ஐ ட்ராப்களை வைக்கவேண்டும். ஐ ட்ராப் முனையை திறக்க கூரிய பொருட்களை பயன்படுத்தாமல், அதில் கூறியுள்ள அறிவுரையை பின்பற்றி திறக்கவேண்டும். அதேபோல் ட்ராப் பயன்படுத்தும்போது தலையை பின்புறமாக சாய்த்து, மேற்புறமாக பார்த்தவண்ணம் சொட்டுக்களை விடவேண்டும். அதிகமாக விழுந்துவிட்டால் டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்துக்கொள்ளலாம். அதேபோல் மருத்துவர் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ராப்களை பரிந்துரைத்தால் ஒவ்வொன்றுக்கும் இடையே குறைந்தது 5 நிமிட இடைவெளி தேவை. ஒரே ட்ராபை பலர் பயன்படுத்தினால் தொற்றுகள் பரவும்.
காஜஸ், மஸ்காரா பயன்படுத்தும் பெண்களுக்கு...
பெண்கள் காஜல், மஸ்காரா போன்றவற்றை பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம். ஆனால் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள சிறுசிறு உலோகக்கூறுகள் கண்களுக்குள் சொருகி கருவிழியை பாதிக்கும். முடிந்தவரை க்ளிட்டர் கலந்தப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதேபோல கடைகளில் சாம்பிள் பொருட்களை பயன்படுத்தி வாங்கும்போது, நிறையப்பேர் பயன்படுத்துவதை நாமும் பயன்படுத்துவதால் தொற்றுகள் பரவும். அதேபோல், தூங்குவதற்கு முன்பு கண்களிலுள்ள மேக் - அப்பை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் தொற்றுகள் பரவும். ஐலைனர் போடும்போது கண்களுக்குள் போடாமல் வெளிப்புறத்தில் போடுவது நல்லது. ஏனெனில் கண் இமைவரியில் மீபோமியன் சுரப்பிகள் (meibomian glands) இருப்பதால் மேக் - அப் துகள்களால் அடைப்பு ஏற்பட்டு, கண்களில் தொற்று ஏற்படலாம். கண்ணிமையை நீட்டிக்க (eyelash extensions) பயன்படுத்தும் க்ளூ சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம்?
பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுவது கண்கள் மட்டுமில்லாமல் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கேரட் போன்றவை கண்களுக்கு நல்லது. அதிக தண்ணீர் குடித்து ஹைட்ரேட்டேடாக இருக்கவேண்டும். தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி அவசியம். எண்ணெய் உணவுகளை குறைக்கவேண்டும். வாழ்க்கைமுறையில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
தீபாவளி சமயத்தில் கண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
பட்டாசு வெடிப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படுவதுண்டு. குறிப்பாக 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குழந்தைகளிடம் பட்டாசு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவேண்டும். திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டும். அதேபோல் பாதுகாப்பான, தீப்பிடிக்காத இடங்களில் பட்டாசுகளை வைக்கவேண்டும். பட்டாசு வெடிக்கும்போது பக்கத்தில் ஒரு வாளி தண்ணீர் அல்லது மணல் மற்றும் முதலுதவி பெட்டியை வைத்துக்கொள்வது நல்லது. தளர்வான மற்றும் சிந்தட்டிக் ஆடைகளை தவிர்த்துவிடலாம். பட்டாசு கண்களில் பட்டுவிட்டால் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். கண்களுக்குள் பட்டாசு துகள்கள் சேர்ந்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. பட்டாசு வெடிக்கும் குழந்தைகள் கண்களில் கைவைக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பட்டாசு வெடிக்க பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.