குழந்தையின்மை பிரச்சினையில் ஆணுக்கும் சம பொறுப்பு உண்டு - நிபுணர் விளக்கம்

கருவுறுதலில் பிரச்சினை என்றால் பெண்களுக்கு நிறைய ரத்த பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பு பரிசோதனை போன்ற பல டெஸ்ட்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு விந்தணு பகுப்பாய்வு என்ற ஒரே பரிசோதனைக்குள் விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் இயக்கம், விந்தணு குறைபாட்டுக்கு என்ன பரிசோதனை போன்ற பலவற்றை கண்டறியலாம்.

Update:2024-10-22 00:00 IST
Click the Play button to listen to article

இப்போது திருமணமாகும் பெரும்பாலான தம்பதிகளுக்கு இருக்கும் பிரச்சினை குழந்தையின்மை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வாழ்க்கைமுறை மாற்றம், உணவு முறை, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க, திருமணத்திற்கு முன்பே pre marital check up செய்துகொள்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கருவுறுதலில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சிகிச்சைகள் ஒருபுறம் அதிகரிக்க அதுகுறித்த விழிப்புணர்வும் இளைஞர்களிடையே அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. குழந்தையின்மைக்கான காரணங்கள் என்னென்ன? ஆண் - பெண் இருவரும் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தப்படுவது ஏன்? என்பது போன்ற பல சந்தேகங்களை விரிவாக விளக்குகிறார் கருவுறுதல் சிகிச்சை நிபுணர் Dr. வசுந்தரா ஜெகநாதன்.

குழந்தையின்மை பிரச்சினை இப்போது அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன?

20, 30 வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மை பிரச்சினைகளும் அதுகுறித்த விழிப்புணர்வும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது ஆறில் ஒரு தம்பதி இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். எப்படி சர்க்கரை நோய், பிபி போன்றவை ஒரு வீட்டில் யாரேனும் ஒருவருக்காவது இருக்கிறதோ, அதுபோல குழந்தையின்மை பிரச்சினையும் இருக்கிறது. அது ப்ரைமரி அல்லது செகன்டரி குழந்தையின்மை பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் பெண்ணின் வயது. 25-30 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பிறகு, கருவுறுதல் தன்மையானது குறைந்துகொண்டே போகும். ஆனால் நிறைய பெண்களுக்கு வேலை, குறிக்கோள்கள் மற்றும் இலக்கு போன்றவை இருப்பதால் திருமணம் என்பதையே தள்ளிப்போடுகின்றனர். ஆனால் இதற்கு பயாலஜி க்ளாக்கானது ஒத்துழைக்காது. இதனால் முதல் சிகிச்சையே அட்வான்ஸாக போகிறது அல்லது சிகிச்சை வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது. இரண்டாவது வாழ்க்கைமுறை. புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் போன்றவை ஆண், பெண் இருபாலருக்குமிடையே பொதுவானதாக மாறிவிட்டது. உணவு பழக்கவழக்கங்கள், ஒபிசிட்டி போன்றவை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, உட்கார்ந்த இடத்திலேயே ஜங்க் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. நிறையப்பேரின் வேலை நேரமும் முறையற்றதாக இருப்பதால் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அதுபோக, சுற்றுச்சூழல் மாசுபாடு, ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு போன்றவையும் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இதனால் விழிப்புணர்வு அதிகரிப்பு என்ற மற்றொரு நல்ல விஷயமும் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் விந்தணு குறைபாடு இருந்தாலோ அல்லது கருவுறுதலில் சிக்கல்கள் இருந்தாலோ தத்தெடுத்தல்தான் ஒரே தீர்வு அல்லது குழந்தை இல்லாமலேயே இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் இப்போது டெக்னாலஜி வளர வளர கருவுறுதல் சிகிச்சை குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.


மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் தூக்கமின்மையால் ஏற்படும் கருவுறுதல் பிரச்சினைகள்

குழந்தையின்மை பிரச்சினை இருக்கும் அனைவருக்குமே IVF கைகொடுக்குமா? அல்லது இயற்கை கருவுறுதலுக்கு சாத்தியம் இருக்கிறதா?

இயற்கை முறையில் கருத்தரித்தலைத்தான் பெரும்பாலான கருவுறுதல் சிகிச்சை நிபுணர்கள் விரும்புவார்கள். அதில் IVF என்பது இந்த சிகிச்சையின் கடைசி நிலையாக பார்க்கப்படுகிறது. அதிலும் 100% ரிசல்ட் கிடைக்குமா என்று உறுதியாக சொல்லமுடியாது. IVF சிகிச்சை எடுக்கும்போது சிகிச்சை எடுப்பவர்களின் உணர்ச்சிகள், பொருளாதாரம் மற்றும் சிகிச்சைக்கான வெற்றி என அனைத்தையும் பொருத்துதான் ரில்சட் இருக்கும். அதனால் இயற்கை முறை கருத்தரித்தலுக்கான வழிகளை மேம்படுத்துவது மருத்துவர்களின் முதல் முயற்சியாக இருக்கும். அது சாத்தியமாகாத பட்சத்தில் IUI போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். அதிலும் முடியாதபோதுதான் IVF பரிந்துரைக்கப்படும். அனைத்துவிதமான கருவுறாமை பிரச்சினைகளுக்கும் IVF மட்டுமே தீர்வாகாது. ஏனென்றால் IVF சிகிச்சை கைகொடுக்காமல் மீண்டும் இயற்கைமுறை கருத்தரித்தல் மற்றும் IUI போன்றவற்றின்மூலம் கருவுற்ற தம்பதிகளும் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் சிகிச்சைபெறும் தம்பதி இளமையாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். குறிப்பாக, தம்பதி 35 வயதிற்குள் இருந்து, பெண்ணுக்கு கருமுட்டை போதுமான அளவு உற்பத்தியாகி, ஆணுக்கும் விந்தணுவில் பிரச்சினைகள் இல்லையென்றால் IVF சிகிச்சை தோல்வியடைந்தாலும் இயற்கை முறையில் கருத்தரித்தலை சாத்தியமாக்க முடியும். எனவே கருத்தரித்தலில் பெண்களின் வயதுதான் மிகமிக முக்கியமானது.


கருத்தரித்தலுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்

குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

குழந்தையின்மை பிரச்சினைக்கு ஆண், பெண் இருவருக்குமே சரிசமமான பங்குண்டு. பெண்களுக்கு 30% பிரச்சினைகள் இருந்தால், ஆண்களுக்கும் அதே 30% பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் கருவுறுதல் பிரச்சினை ஆண்களுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதற்கு, புகைப்பழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றை முக்கிய காரணங்களாக சொல்லலாம். இதுதவிர வெளியே சொல்லமுடியாத உடலுறவில் நாட்டமின்மை, விறைப்புத்தன்மை குறைபாடு, வளர்ச்சியடையாத விந்து வெளியேற்றம் போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கு இருக்கலாம். எனவேதான் இப்போது சிகிச்சைக்கு வரும்போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக வர மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருவுறுதலில் பிரச்சினை என்றால் பெண்களுக்கு நிறைய ரத்த பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பு பரிசோதனை போன்ற பல டெஸ்ட்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு விந்தணு பகுப்பாய்வு என்ற ஒரே பரிசோதனைக்குள் விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் இயக்கம், விந்தணு குறைபாட்டுக்கு என்ன பரிசோதனை போன்ற பலவற்றை கண்டறியலாம். இதுதவிர, செக்‌ஷுவல் மெடிசன், ஆண்ட்ராலஜி, நியூரோ ஆண்ட்ராலஜி போன்ற சிறப்பு மருத்துவ பிரிவுகளும் இருக்கின்றன. அதன்மூலம் சிகிச்சைக்காக வரும் தம்பதிகளுக்கு என்ன விதமான பிரச்சினை இருக்கிறது? அவர்களுக்கிடையே உடலுறவு அடிக்கடி இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் ஆண்களுக்கு என்ன பிரச்சினை? பெண்களுக்கு என்ன பிரச்சினை? என்பதை ஆண்ட்ராலஜிஸ்ட் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கண்டறிவர். இப்படி முழுமையான பரிசோதனை செய்யும்போது குழந்தையின்மை பிரச்சினைக்கான காரணத்தை தெளிவாக கண்டறிந்து பரிசோதனை அளிக்கமுடியும்.


குழந்தையின்மை சிகிச்சையில் ஆண்களும் பரிசோதனைக்கு செல்வது அவசியம்

புதிதாக திருமணமானவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ளலாம்?

இப்போது pre marital check up இருக்கிறது. பொதுவாக பெண்கள் 45 - 50 வயதிற்குள் மெனோபாஸ் நிலையை அடைவர். அதுவே குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரிக்கு 35 - 40 வயதிற்குள் மெனோபாஸ் ஏற்பட்டிருந்தால் அதை pre-mature மெனோபாஸ் என்பர். இதுபோன்ற குடும்ப பின்னணியில் உள்ள ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த பெண்ணுக்கும் அதே பாதிப்பு இருக்க வாய்ப்புகள் இருக்குமென்பதால் கருமுட்டை பரிசோதனை செய்துகொள்ளலாம். இதுதவிர, கருக்குழாய், கருப்பையில் அறுவைசிகிச்சை, எண்டோமெட்ரியோசிஸ், நீர்க்கட்டிகள், சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினை இருக்கும் பெண்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதேபோல் ஆண்களும் ரத்த பரிசோதனை, விந்தணு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


சீரற்ற மாதவிடாயால் கருவுறுதலில் பிரச்சினைகள் ஏற்படும்

சரியான வாழ்க்கைமுறையை பின்பற்றியும் சில பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. இது எதனால்?

21லிருந்து 35 நாட்களுக்குள் பீரியட்ஸ் வருகிறது என்றால் அது சாதாரண மாதவிடாய் சுழற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு முறையும் 3 -5 நாட்கள் மாதவிடாய் இருக்கவேண்டும். இந்த சுழற்சியானது ஒவ்வொரு மாதமும் அதே இடைவெளியில்தான் வரவேண்டும். அதுவே ஒரு மாதம் 21 நாளிலும், அடுத்து 45 நாட்கள் கழித்தும், அதற்கடுத்து 60 நாட்கள் கழித்தும் வந்தால் அது சீரற்ற மாதவிடாய் எனப்படுகிறது. மாதவிடாய் சீராக இருந்தால் கருமுட்டை உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மட்டும் பார்க்கலாம். அதுவே 6 மாதம் சுழற்சி சீராக இருந்து, அடுத்த 6 மாதத்திற்கு சீரற்றதாக இருந்தால் என்ன பிரச்சினை என்பதை கண்டறிய வேண்டும். இப்போது சிகிச்சைக்கு வரும் 10-ல் 8 பேருக்கு பிசிஓடி பிரச்சினை இருக்கிறது. சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை, ஹார்மோன் பிரச்சினையால்கூட சீரற்ற மாதவிடாய் ஏற்படும். எல்லாமே சரியாக இருந்தாலும் திடீரென டயட்டில் ஏற்படுத்திய மாற்றம், திடீர் பயணம், தூக்கமின்மை, அழுத்தம் போன்றவற்றாலும் மாதவிடாய் ஒழுங்காக வராது. ஆனால் இதுவும் இல்லாத பட்சத்தில் நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறதா? அல்லது கருமுட்டை உற்பத்தி குறைந்துகொண்டே போகிறதா? என்பதை பரிசோதிக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்