அதிக உடற்பயிற்சி குழந்தையின்மைக்கு காரணமா? - விளக்குகிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்

இயற்கை முறையில் கருவுறுதலுக்கான வழிமுறைகளையும், கருவுறாமைக்கான காரணங்கள் குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் சாமுண்டி சங்கரி.

Update:2023-10-24 00:00 IST
Click the Play button to listen to article

தற்போதைய சூழலில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று குழந்தையின்மை. இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியர்கள் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நன்மையை மட்டுமே உண்டாக்குவது இல்லை. என்னதான் நவீன உலகின் வளர்ச்சி ஒருபுறம் வான்னோக்கி உயர்ந்தாலும் இயற்கை முறைதான் சிறந்த தீர்வினை அளிக்கும். அவ்வாறு இயற்கை முறையில் கருவுறுதலுக்கான வழிமுறைகளையும், கருவுறாமைக்கான காரணங்கள் குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் சாமுண்டி சங்கரி.

கருவுறுதல் பிரச்சினைக்கு வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கிறதா?

நிச்சயமாக. பெண்களுக்கு ஏற்படும் கருவுறாமை பிரச்சினைக்கு, அவர்களின் வாழ்க்கைமுறையும் ஒரு முக்கியக் காரணம்தான். ஐ.டி துறையில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் இரவு நேரப்பணிகளில் அதிகம் ஈடுபடுவதால், அவர்களின் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படும். இரண்டாவது சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாதது மற்றும் மூன்றாவதாக இன்றைய சூழலில் அதிகளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது. இவை அனைத்தும் இயற்கையாக ஏற்படும் கருவுறுதலைத் தடுக்கும்.


கருத்தரித்தல் பிரச்சினைக்கான வெளிப்புற காரணிகள்

இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படும் கருவுறுதல் பிரச்சினைகளுக்கு மூலக்காரணங்கள் என்னென்ன?

வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதைவிட மிக முக்கியமான காரணங்களாக இருப்பது, முதலாவதாக சுற்றுச்சூழல் மாசுபாடுதான். சாலைகள் எங்கும் வாகனங்களின் எண்ணிக்கைகள் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட புகையானது மனிதர்களுக்கு நோய்கள் வர வழிவகுக்கிறது. இரண்டாவதாக உணவு பழக்கங்கள், வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனென்றால் ஏராளமான மக்கள் பீட்ஸா மற்றும் பர்கர் போன்ற உணவுகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். அதனைப்போலவே காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. மூன்றாவது உடற்பயிற்சி, தினந்தோறும் குறைந்தபட்சம் அரைமணிநேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நான்காவது, போதுமான தண்ணீர் குடிப்பது. நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரையில் தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை கருவுறுதலுக்குத் தடையாக இருக்கிறதா?

கருவுறாமைக்கு மன அழுத்தம் போன்றவையும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் உடல் பருமன், பாலிசிஸ்டிக் கருப்பை குறித்த பிரச்சினைகளுக்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது. அதேபோல், ஆண்களுக்கு விந்து பகுப்பாய்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது


மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வால் கருத்தரிப்பில் பிரச்சினை

பெண்கள் கருவுறுதல் பிரச்சினைகளில் சிக்காமல் குழந்தையை பெற்றெடுக்க சரியான வயது எது?

உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்குமே கருவுற்றுதலுக்கான ஏற்ற வயது என்றால் அது இருபது முதல் முப்பது வயது வரை தான். இயல்பாகவே எல்லா பெண்களுக்குமே ஒவ்வொரு மாதமும் இயற்கையாகவே கருமுட்டைகள் உருவாகும். அந்த முட்டைகள் முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு குறையத் தொடங்கும். பின் நாற்பது வயதிற்குப்பிறகு முட்டையின் உருவாக்கம் முற்றிலுமாக நின்று விடுவது வழக்கம்தான். எனவே பெண்கள் முதல் பிரசவத்தை தங்களின் முப்பது வயது முதல் முப்பத்தைந்து வயதிற்குள் திட்டமிட்டு குழந்தையை பெற்றெடுப்பது நல்லது.

கருவுறுதலில் அதிக பாதிப்புகள் ஏற்படுவது பெரும்பாலும் ஆண்களுக்கா? அல்லது பெண்களுக்கா?

இருபாலருக்கும் சமமான அளவில்தான் பாதிப்புகள் இருக்கின்றன. ஆண்களுக்கு நாற்பது சதவிகிதம் என்றால் பெண்களுக்கும் அதே நாற்பது சதவிகிதம்தான். அதேபோல ஆண், பெண் இருவருக்குமே சேர்த்து இருபது சதவிகிதம் என்ற அடிப்படையில் பிரிக்கலாம். அதிகப்படியான ஆண்களுக்கு கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்பட முக்கியக் காரணமே புகை மற்றும் போதை பழக்கங்கள்தான். இதுதவிர அதிகளவிலான உடற்பயிற்சியில் ஈடுபடுதலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்றைய பெண்களைப் பொறுத்தவரையில் வேலை மற்றும் குடும்பம் என்று இரண்டையுமே இயல்பாக கையாளுகின்றனர். அதிகப்படியான பெண்களுக்கு கருவுற்றுதலில் சிக்கல்கள் ஏற்பட முக்கியக் காரணம், சரியான வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தெளிவாக திட்டமிடாததுதான்.


கருத்தரித்தலில் ஆண்கள் - பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்

பெண்களின் உடல் எடை கருவுற்றுதலுக்கு தடையாக இருக்கிறதா?

பாலிசிஸ்டிக் ஓவரியன் பாதிப்பு உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதும், அதைப்போலவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் பாதிப்பு ஏற்படுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒரு பெண் கருவுற வேண்டுமென்றால் அவர்களின் உடல் எடை சரியான அளவில் இருக்கவேண்டியது அவசியமாகும். உடலில் இருக்கும் பாடி மாஸ் இன்டெக்ஸின் (BMI) அளவானது, 25 முதல் 28 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருப்பது நல்லது. இல்லையேல் ஒபிசிட்டி என்று சொல்லக்கூடிய உடல் பருமன் பாதிப்பானது அதிகரிக்கும்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் பாதிப்புக்கான முக்கியக் காரணம் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரியன் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆனோவிலேஷன்(anovulation). அதாவது ரத்தக் கசிவு. பெண்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை உருவாகும் கருமுட்டையானது இந்த ஆனோவிலேஷனால் தடைபடும். மேலும் இது குழந்தை பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆண்களை போல பெண்களுக்கும் முகத்தில் மீசை, பருக்கள் ஏற்படுவதும், உடல் எடை அதிகரிப்பு போன்றவையும் பாலிசிஸ்டிக் ஓவரியன் பிரச்சினைக்கான அறிகுறிகளாகும். தற்போது கருவுறாமை குறித்த பாதிப்புகளுக்காக மருத்துவர்களை அணுகும் 50 முதல் 60 சதவிகிதமான பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் பிரச்சினை இருப்பது தெரிய வருகிறது.


பிசிஓஎஸும் கருத்தரித்தல் பிரச்சினையும் 

பிசிஓஎஸ் இருப்பதால் பெண்கள் குழந்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

பிசிஓஎஸ் இருப்பதால் ரத்த கசிவு அதிகம் ஏற்படும். எனவே கருமுட்டைகள் உருவாகுவதில் தடை ஏற்படும். அதுபோக உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. இதனை சரிவர கவனிக்காமல் பாலிசிஸ்டிக் ஓவரியன் மற்றும் ஒபிசிட்டி பாதிப்போடு குழந்தைப்பெறுவது தொடர்வதால் கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்த சிக்கல்கள் அதிகரிக்கும்.

ஏ.எம்.எச் என்றால் என்ன?

ஏ.எம். எச் என்பது குறிப்பிட்ட ஒரு ஹார்மோன் வகையைச் சேர்ந்தது. இது பெண்களின் கருமுட்டைகளின் அளவை குறிக்கும். இயல்பாகவே பெண்களின் கருமுட்டையின் இருப்பு என்பது 1.2 முதல் 3.7 வரை இருப்பது அவசியமாகும். மேலும் கருமுட்டையின் இருப்பானது 4-க்கும் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே குழந்தை பெற திட்டமிடும் பெண்கள், ஏ.எம்.எச் டெஸ்ட் மூலம் கருமுட்டைகளின் இருப்பு எண்ணிக்கையை அறிந்துகொள்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்