தெரிந்தே இந்த தவறை செய்வதுதான் ஆஸ்துமாவுக்கு காரணம் - விளக்குகிறார் தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர்

நிறைய குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதுதான்.

Update:2024-03-12 00:00 IST
Click the Play button to listen to article

நாளுக்குநாள் டெக்னாலஜி எப்படி அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு நோய்க்கிருமிகளின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் சாப்பிடும் உணவுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தூக்கம் போன்றவை உடலின்மீது அதீத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்பெல்லாம் Autoimmune disease என்ற வார்த்தையையே கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இன்று அடிக்கடி இந்த வார்த்தையை கேட்கிறோம். அதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைவதும், மாறுவதும்தான். கலப்படம் நிறைந்த உணவுகள் ஒருபுறம் என்றால் மன அழுத்தம் மறுபுறம். இவை இரண்டும் சேர்த்து உடலின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் எளிதில் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகிறோம். ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன? எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து விளக்குகிறார் தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் பாக்கியராஜ்.

நாள்பட்ட தொற்று நோய்களுக்கு தீர்வு உண்டா? சைனஸ், சளி தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு என்ன?

சைனஸ், சளி போன்ற தொற்றுகள் உடல் தன்மையை சார்ந்தவை. சிலருக்கு தூசி அலர்ஜியை ஏற்படுத்தும். சிலருக்கு சில உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். சிலருக்கு தக்காளி, கத்தரிக்காயிலிருக்கும் சிறு விதைகள்கூட அலர்ஜியை ஏற்படுத்தும். இதுபோன்ற அலர்ஜிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் மருத்துவர்களிடம் போனால்தான் தீர்வு கிடைக்கும். அல்லது முதன்முறை மருத்துவரிடம் செல்லும்போதே என்ன பிரச்சினை என்பது குறித்து தெளிவாக கூறினால் அதற்கேற்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எல்லாருக்கும் ஒரே மாதிரியான அலர்ஜி இருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தொற்று நோய்கள் பாதிக்காமல் இருக்க எளிமையான ஆலோசனைகள் சொல்லுங்கள்!

உடலின் தன்மையை பொருட்படுத்தாமல் நிறையப்பேர் இஷ்டத்துக்கு சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, கலோரிகளை கணக்கில் கொள்ளாமல் இறைச்சி வகைகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, இறைச்சி சாப்பிடுவதால் உடலில் 1000 கலோரி சேர்ந்துவிட்டது என்றால் அதனை குறைக்க வாக்கிங் செல்லவேண்டும். ஆனால் அதை நிறையப்பேர் செய்வதில்லை. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் வாக்கிங் செல்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. உடற்பயிற்சி என்பதே முன்பு போல இல்லாமல் போய்விட்டது.


தொற்றுநோய்கள் பரவும் முறை

அதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். காலை எழுந்தவுடன் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக சூப் குடிக்கலாம். எப்போதுமே இனிப்பான மற்றும் சுவையான உணவுகள் கெடுதல்தான். காலையில் ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சியும் செய்யவேண்டும். சாப்பிடும் உணவுகளில் போதுமான கலோரி இருக்கவேண்டும். அதேசமயம் அதிக கலோரிகளை எரிக்கும் வகையில் உடலுழைப்பும் வேண்டும். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்’ என்பதைபோல உடல் நன்றாக இருந்தால்தான் மனமும் நன்றாக இருக்கும். எனவே பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்வதுடன் இனிப்புக்கு தேன் சேர்க்கலாம். சர்க்கரை வியாதி இருப்பவர்கள்கூட சிறிது தேன் சாப்பிடலாம். தானிய வகைகளை கட்டாயம் சாப்பிடவேண்டும்.

சிலருக்கு குளிர்ந்த தண்ணீர் குடித்தாலே சளி பிடிப்பது போன்று இருக்கும், தும்மல் வரும். சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கவேண்டும் என தோன்றும். இவை தொற்று கிருமியினால் வருவதா?

இதில் சைக்காலாஜிகல் உணர்வுகளும் உண்டு. சிலருக்கு வியாதியும் இருக்கலாம். நீரிழிவு நோயாளிகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்தவுடன் அல்லது சாப்பிட்டவுடன் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற மனவியாதியாகவும் இருக்கலாம்.


ஜெனிட்டிக்கல் டிஸார்டரால் ஏற்படும் ஒவ்வாமை  

ஒவ்வாமை எதனால் வருகிறது? ஜெனட்டிக்கலால் வருவதா? இல்லை தொற்று கிருமிகளால் வரக்கூடியதா?

இது சிலருக்கு ஜெனிட்டிக்கல் டிஸார்டராக இருக்கும். சிலருக்கு உணவுகளாலும் ஏற்படும். இந்த பிரச்சினைக்கு நோயெதிர்ப்பு சக்திதான் காரணம். சிலருக்கு நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை எடுத்துக்கொண்டால் கண்கள் வீங்கிவிடும். சிலருக்கு மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் முதலில் டெஸ்ட் ஊசி போட்டுவிட்டுதான் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு காரணம், ஆன்டிபயாட்டிக்குகள் பெனிசிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து உருவாக்கப்படுகிறது. இதனால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் டெஸ்ட் ஊசி முதலில் செலுத்தப்படுகிறது. அதுபோலத்தான் உணவும். சில உணவுகளை சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட்டால் அதனை தவிர்த்துவிட்டு, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியுமா?

ஏழை, எளிய மக்களுக்கு பண வசதி குறைவு மற்றும் மேல்கட்ட சிகிச்சைகளை அணுகுவது என்பதே அவர்களுக்கு சற்று கடினமானதாக இருக்கிறது. ஆரம்பகட்ட நோய்களுக்கு அவர்கள் வீட்டிலேயே சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படுமாயின் உடனடி நிவாரணம் கிடைக்க அலோபதி சிகிச்சை எடுப்பது சிறந்தது. ஏனெனில் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைமுறை. அப்படி ஆதாரப்பூர்வமாக நிரூப்பிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.


ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சை 

ஆஸ்துமா, வீசிங் பிரச்சினை இருப்பவர்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்யவேண்டும்?

ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சினை இருப்பவர்களுக்கு ஏற்கனவே தங்களது உடல் குறித்து தெரியும். இவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறையும். அப்போது நெபுலைசர் என்ற கருவியை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு சரிசெய்யப்படும். மூச்சுக்குழாய் அடைப்பதால்தான் மூச்சுவிட சிரமப்படுவர், மூச்சுத்திணறலும் ஏற்படும். சிலருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்படும்போதே மருத்துவரை அணுகாமல் பஃப் மட்டும் செய்துகொண்டு சமாளிக்க முயற்சி செய்வர். இதனால் இரவில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே மூச்சுத்திணறல் ஏற்படும்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும். குளிர்நேரங்களில் ஆஸ்துமா, எயிட்ஸ், கேன்சர், ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட, Immunocompromised நோயாளிகள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். எப்போதும் மருந்துகளை கையில் வைத்திருக்கவேண்டும்.

தொண்டையில் சதை வளர்ச்சி பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? டான்சில்ஸ் பிரச்சினை இருப்பவர்கள் குளிர் தண்ணீர் குடிக்கக்கூடாதா?

டான்சில்களின் வேலையே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுப்பது. ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டதால்தான் டான்சில்ஸின் செயல்பாடானது குறைகிறது. குளிர்தண்ணீர் குடித்தால் தொண்டை வலி ஏற்படுகிறது என்றால் அதனை தவிர்க்கவேண்டும். குளிர் தண்ணீரை குடிப்பதால் தொற்று அதிகரிக்கும்போது சிகிச்சை எடுப்பது நல்லது. நிறைய குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதுதான். இன்ஸ்டன்ட் ஃபுட் என்று சொல்லக்கூடிய அனைத்து உணவுகளிலுமே கெமிக்கல் இருப்பதால் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவுமுறைகளில் கவனம் செலுத்தினாலே இதுபோன்ற பாதிப்புகள் வராது.


பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது உடலுக்குக் கேடு

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கிக் குடிப்பது சுகாதாரமானதா?

இன்று எது சரி எது தவறு என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அனைவருக்குமே அறிவு இருக்கிறது. ஆனால் வெளியே செல்லும்போது தாகத்தை தீர்த்துக்கொள்ள எது கிடைக்கிறதோ அதை வாங்கி உடனடியாக குடித்துவிடுகிறோம். அது சரியான உணவா என்பதை அப்போது யோசிப்பது இல்லை. முன்பெல்லாம் பயணம் செய்யவேண்டிய சூழல் இருந்தால் வீட்டிலேயே நிறைய பாட்டில்களில் தண்ணீர், வேண்டிய உணவு போன்றவற்றை உடன் எடுத்துச்செல்வர். இன்று நாம் வெளியே சென்று சாப்பிடும் அனைத்து உணவுகளுமே தவறு என்பது அனைவருக்குமே நன்கு தெரியும். உணவுகளில் கெமிக்கல் சேர்த்தால்தான் கெட்டுப்போகாது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் தயிரை 5 நாட்கள் வைத்து பயன்படுத்த முடியுமா? ஆனால் கடைகளில் 5 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது என்றால் அதற்கு கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்தாது என்பதற்காக ஆதாரங்கள்தான் இருக்கிறதே தவிர, அவற்றை பல நாட்கள் பயன்படுத்தினால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்பதற்கான சான்றுகள் இதுவரை தரப்படவில்லை. எனவே அத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டுமே அதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போது சிறுசிறு கடைகளில் இருக்கும் உணவுகள்தான் சரியாக இருக்கின்றன. அவர்கள் செய்யும் உணவுகளை ஓரிரு நாட்களில் விற்றுத்தீர்த்து விடுவர். ஆனால் பெரிய பெரிய கடைகளில் இருக்கும் உணவுகள் என்றாலே அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். நோய் வந்தால்தான் மருந்து தேவை. எனவே சரியான நேரத்திற்கு சாப்பிட்டு சரியான நேரத்திற்கு தூங்கினாலே நோய் வருவதை தவிர்க்கலாம்.

உடலை எப்படி பராமரிக்கிறோம்? சரியான நேரத்திற்கு சரியான முறையில் சாப்பிடுகிறோமா? உடற்பயிற்சி செய்கிறோமா? என்பதை யோசித்தாலே பிரச்சினைகள் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்