அதிகளவில் ஹெட்போன் பயன்படுத்தினால் என்னவாகும்? - விளக்குகிறார் ENT நிபுணர்
ஆரம்பத்திலேயே பிரச்சினை கண்டறியப்பட்டால், குழந்தைக்கு 8 மாதம் ஆனவுடனேயே அறுவைசிகிச்சை செய்து சரிசெய்துவிடலாம். குழந்தைக்கு காது கேட்டால்தான் பேச்சுத்திறன் வளரும். அறுவைசிகிச்சைக்கு பிறகு ஸ்பீச் தெரபி கொடுத்தால் பிற குழந்தைகளை போலவே இந்த குழந்தையும் நன்றாக செயல்படும்.
உடலில் எந்த பகுதியில் வலி ஏற்பட்டாலும் பெரும்பாலும் நம்மால் பார்க்கமுடிவதால் அதற்கான சிகிச்சை எடுப்பது சற்று எளிதாக இருக்கும். அதுவே வெளிப்புற உறுப்புகளாக இருந்தாலும் நம்மால் பார்க்கமுடியாத காது மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பது சற்று சிரமம்தான். குறிப்பாக எளிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிற டான்சில், காது வலி மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றிற்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். டான்சில் பிரச்சினைகள் மற்றும் செவித்திறன், பேச்சுத்திறன் பாதிப்புகள் குறித்து நம்முடன் உரையாடுகிறார் காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் மோனிகா.
டான்சில்ஸ் எதனால் வருகிறது? இதனை சரிப்படுத்துவது எப்படி?
டான்சிலை ஒரு நிணநீர் கணு (lymph node) என்று சொல்வார்கள். வெளியே இருந்து பிற நுண்ணுயிரிகள் நுரையீரலினுள்ளே செல்லாமல் பாதுகாப்பதுதான் டான்சிலின் வேலை. தொண்டையில் பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது குரல்வளை (oropharynx). இந்த பகுதியில்தான் டான்சில் இருக்கும். தொடர்ந்து இங்கு தொற்று சேரும்போது டான்சில் வீங்க ஆரம்பிக்கிறது. அடிக்கடி இதனால் வலி ஏற்பட்டு, தொல்லைகள் உருவானால் அறுவைசிகிச்சை மேற்கொள்வதுதான் ஒரேவழி.
டான்சில் பிரச்சினை அதிகரித்தால் மூளையை பாதிக்கும் என்பதெல்லாம் உண்மை கிடையாது. டான்சிலை பொருத்தவரை 7 - 8 வயதிற்குள் தானாகவே சுருங்கிவிடும். அந்த வயதிற்கு பிறகும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் டான்சில் பிரச்சினையை கவனிக்காமல் விட்டுவிட்டால் அடிக்கடி தொற்றுகள் ஏற்படும்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் டான்சில் பிரச்சினை வராது; டான்சிலில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் வீங்கும் என்கிறார்கள். ஆனால் அறுவைசிகிச்சை மேற்கொண்டவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடக் கொடுக்கிறார்களே.. இது சரியா?
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் வரும் என்றில்லை. ஐஸ்கிரீம் என்பது உறைந்த நிலையில் இருப்பதால் அதில் கிருமிகள் அதிகளவில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இது சளிபிடிப்பதற்கு ஒரு தூண்டு காரணியாக அமையும். அதுவே டான்சிலை நீக்கியபிறகு, அந்த பகுதியானது பொசுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அப்போது சூடாகவோ அல்லது காரமான உணவுகளையோ சாப்பிடக்கூடாது. இதனால் தொண்டையை இதமாக்க கூலான பொருட்களை சாப்பிடக் கொடுக்கிறோம். அதேபோல் தொண்டை வலி இருக்கும்போது உப்புத் தண்ணீரால் கொப்பளிப்பதும் டான்சிலை கரைப்பதற்கு அல்ல; வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்காகத்தான்.
வாய் மற்றும் தொண்டையில் கேன்சர் வருவதற்கான காரணங்கள் என்னென்ன?
பெரும்பாலும் வாய் மற்றும் தொண்டையில் கேன்சர் வருவதற்கான காரணமே புகையிலை பயன்பாடு, புகைத்தல் மற்றும் ஆல்கஹால் எடுத்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பல வருடங்கள் இருப்பதுதான். இந்தவகை கேன்சரை அதன் நிலையை பொருத்துதான் குணப்படுத்த முடியுமா அல்லது முடியாதா என்று கூறமுடியும். ஆரம்பகட்ட நிலை அல்லது கேன்சராக உருவாவதற்கு முந்தைய நிலை என்றால் முழுமையாக குணப்படுத்த முடியும். தொண்டை புற்றுநோய் வந்தால் குரல் மாறுதல், மூச்சுத்திணறல், விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். அதுவே நாளடைவில் தண்ணீர் குடிக்கவே சிரமப்படுவார்கள்.
காது கேளாமை, வாய் பேசமுடியாமை போன்றவை மரபணு குறைபாடா? இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தையை சிகிச்சைமூலம் சரிசெய்ய முடியுமா?
இப்போது இருக்கும் டெக்னாலஜியை பயன்படுத்தி சரிசெய்ய முடியும். குழந்தைகளுக்கு இது மரபணுரீதியாக வருகிறதா? அல்லது பிறவி குறைபாடா? என்பதை கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலநேரங்களில் இதுபோன்ற குறைபாடு, குழந்தை கருவிலிருக்கும்போது தாய்க்கு ஏற்பட்ட தொற்றாலோ அல்லது குழந்தை பிறந்தபிறகு வந்த மூளைக்காய்ச்சல் போன்ற பிற காரணங்களாலோ உருவாகியிருக்கலாம். பிறந்த குழந்தைக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் மூலம் காது கேட்கிறதா என்பதை மருத்துவர் பரிசோதித்து பார்ப்பார். அப்படி ஆரம்பத்திலேயே பிரச்சினை கண்டறியப்பட்டால், குழந்தைக்கு 8 மாதம் ஆனவுடனேயே அறுவைசிகிச்சை செய்து சரிசெய்துவிடலாம். குழந்தைக்கு காது கேட்டால்தான் பேச்சுத்திறன் வளரும். அறுவைசிகிச்சைக்கு பிறகு ஸ்பீச் தெரபி கொடுத்தால் பிற குழந்தைகளை போலவே இந்த குழந்தையும் நன்றாக செயல்படும்.
பிறந்த குழந்தைக்கு காது கேட்கிறதா என்பதை ஸ்க்ரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறியலாம்!
சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே நன்றாக பேசமட்டார்கள். அவர்களை நன்றாக பேசவைக்க என்ன சிகிச்சை அளிக்கவேண்டும்?
இதுபோன்ற பிரச்சினை இருக்கும் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக எந்த பிரச்சினையும் இருக்காது. அப்படியிருந்தால் அவர்களால் எதுவுமே பேசமுடியாது. பேசுவதில் சிரமம் இருக்கும் குழந்தைகளை ஸ்பீச் தெரபிஸ்ட்டிடம் காட்டி கவுன்சிலிங் அளித்தால் பேச்சுத்திறன் மேம்படும்.
அதிகளவில் ஹெட்போன் பயன்படுத்துவது நல்லதா? சிலருக்கு அடிக்கடி காதில் சீழ் வடிகிறதே. எதனால்?
நமது காதின் கேட்கும் திறன் 70 முதல் 80 டெசிபல் அளவுதான் இருக்கும். ஹெட்போன்களிலும் அந்த டெசிபல் அளவை கணக்கிட்டுத்தான் தயாரித்திருப்பார்கள். ஆனால் தொடர்ந்து ஹெட்போனை பயன்படுத்தும்போது, அதை சுத்தமாக பராமரிக்காவிட்டால் வெளிப்புற கிருமிகளை காதுக்குள் நாமே கொண்டுசெல்கிறோம். இதனால் காதின் வெளிப்புறத்திலும் காது ஜவ்விலும் தொற்று ஏற்படும். இதுபோன்று தொற்று ஏற்பட்டால் காதில் சீழ் வடியும். நீண்ட நாட்கள் இதேநிலை தொடர்ந்தால் காதிலிருக்கும் எலும்புகள் கூட அரிக்கப்படும். இதனை unsafe ear என்பார்கள்.
திக்குவாய் பிரச்சினை பிறவியிலேயே வரக்கூடியதா?
இது பிறவி பிரச்சினை கிடையாது. குழந்தை பேச ஆரம்பிக்கும்போது வரக்கூடிய பிரச்சினைதான். இதுபோன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபி அளிக்கும்போது முழுமையாக சரிசெய்ய முடியும்.
உடற்பயிற்சியை போன்று காது, மூக்கு, தொண்டைக்கு பயிற்சிகள் உண்டா?
மூக்கிலிருந்து காதானது ஒரு காற்றுக்குழாய் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இதனால்தான் சளிபிடிக்கும்போது காதும் அடைக்கிறது. இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்.
காதுகேளாமைக்கு பொருத்தப்படும் hearing aid செயல்படும் முறை
மூக்குத்தண்டில் அடிபட்டால் அதுவே தானாக சரியாகிவிடும் என்கிறார்களே... இது உண்மையா?
முகத்தில் அடிபட்டாலே முதலில் பலமான அடிபடுவது மூக்கில்தான். கை எலும்பு, கால் எலும்பு உடைவதை போன்றதுதான் மூக்கு எலும்பும். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. மூக்கில் எலும்பு பகுதி மற்றும் தண்டுப்பகுதி என இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முறிவானது எந்த பகுதியில் இருக்கிறதோ அதைப் பொருத்துதான் சிகிச்சையும் அளிக்கப்படும். சிலருக்கு சிறு அடிபட்டு வீங்கியிருக்கும் பட்சத்தில் வீக்கத்திற்கு மட்டும் சிகிச்சை அளித்தாலே போதும். அது தானாகவே சரியாகிவிடும். அதுவே எலும்பு முறிவு ஏற்பட்டு, எலும்பு இடம்பெயர்ந்திருந்தால் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
நிறையப்பேருக்கு அதிக தும்மல் வருவது எதனால்?
அடோபி என்கிற சுவாசக்குழாய் அலர்ஜியால் அடிக்கடி தும்மல் வரும். ஒருசிலருக்கு தூசி அல்லது சளி போன்ற உடலுக்கு சேராத பொருட்களால் அலர்ஜி ஏற்படும். இதுபோன்ற அலர்ஜி உள்ளவர்களுக்கு ஒரேநேரத்தில் 20 அல்லது 30 முறைகூட தும்மல் வரும். சைனசைட்டிஸ் என்பது வேறு. சைனஸ் என்பது அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒரு பாகம். அதில் தொற்று ஏற்படுவதைத்தான் சைனசைட்டிஸ் என்கிறார்கள். இது இரண்டும் வேறு வேறு. சைனசைட்டிஸ் பிரச்சினைக்கு எண்டோஸ்கோபிக் சர்ஜரி மேற்கொண்டு சரிசெய்யலாம்.
காது கேளாதவர்களுக்கு வைக்கப்படும் hearing aid எப்படி செயல்படுகிறது?
காது கேளாமையை conductive hearing loss அல்லது Sensorineural hearing loss என வகைப்படுத்துவார்கள். வயதானவர்களுக்கு பெரும்பாலும் நரம்பு சார்ந்த Sensorineural hearing loss ஏற்படுவதால் அவர்கள் hearing aid பயன்படுத்தவேண்டும். அதேபோல் காதுகேளாமையால் பேசமுடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கும் hearing aid உதவியாக இருக்கும். எந்த வயதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதை பொருத்தும் hearing aid வழங்கப்படும். ஆரம்பகட்ட நிலையாக இருந்தால் cochlear implant வழங்கப்படும். இதனை பயன்படுத்தும்போது நன்றாக காதுகேட்பவர்களுக்கு சத்தம் எப்படி கேட்குமோ அதேபோல் அவர்களுக்கும் நன்றாக கேட்கும். ஒன்று அல்லது இரண்டு வயதிற்குள்ளான குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தும்போது அவர்களுடைய கற்றல், கேட்டல், பேச்சு திறமையை வளர்க்க உதவியாக இருக்கும். பேச்சுத்திறன் மேம்பட்ட பிறகு இதனை காதில் வைத்தால் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது.
சுவாசக்குழாய் அலர்ஜியால் ஏற்படும் தொடர் தும்மல் பிரச்சினை
சிலருக்கு மூக்கின் அமைப்பு மாறியிருப்பதால் பேசுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு அறுவைசிகிச்சைதான் தீர்வா?
வாய்க்குள் டான்சில் இருப்பது போன்றதுதான் மூக்கடைப்பும். மூக்கிற்கு பின்னால் இருக்கும் அடினாய்டு என்று சொல்லக்கூடிய சதையானது மூக்கை அடைத்துக்கொண்டிருந்தால் வாய் வழியாக சுவாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி வாய்வழியாக சுவாசித்துக்கொண்டே இருந்தால் பற்கள் முன்பாக வருதல், முகம் சோர்ந்து இருத்தல், எப்போதும் அடைப்பு இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்று இடையூறு இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
முகத்தில் அடிபட்டு மூக்கு அல்லது காது சேதமடைந்திருந்தால் சரிசெய்வது எப்படி?
பிளாஸ்டிக் சர்ஜரிதான் தீர்வு. மூக்கை பொருத்தவரை முக அமைப்பை சீர்படுத்தவும், உறுப்பின் செயல்பாட்டை சரிபடுத்தவும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. காஸ்மட்டிக் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்க என இரண்டுவிதமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். அதேபோல் காது பெரும்பாலும் வெளிப்புறத்தில்தான் சேதமடைந்திருக்கும். அவர்களுக்கு காஸ்மட்டிக் அறுவைசிகிச்சை மேற்கொள்வார்கள்.
காதில் எண்ணெய் விடுவது சரியானதா? பட்ஸ் பயன்படுத்தலாமா?
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காதில் ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விடுவது ஓகேதான். ஆனால் நிறைய எண்ணெயை ஊற்றுவது நல்லதல்ல. காதில் இருக்கும் ஜவ்வுதான் கேட்பதற்கு உதவுகிறது. காதில் இருக்கும் அழுக்கை எடுக்கும்போது அது எவ்வளவு உள்ளே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதன்மீது பட்ஸ் பயன்படுத்தும்போது அதை பெரும்பாலும் உள்ளே தள்ளிவிடுவார்கள். இதனால் பட்ஸே ஜவ்வை காயப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
காதில் பட்ஸ் பயன்படுத்துதல் - காதுக்குள் சென்ற பூச்சியை மருத்துவர் உதவியுடன் வெளியே எடுத்தல்
காதுக்குள் பூச்சி போய்விட்டால் உள்ளே தண்ணீர் ஊற்றலாமா?
இல்லை. உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். காதுக்குள் பூச்சி போய்விட்டால் கடுமையான வலி இருக்கும். அதை வீட்டிலேயே எடுக்க முற்படும்போது காதுக்குள் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.
சிறுகுழந்தைகள் காசை விழுங்குவது, மீன் முள்ளை விழுங்குவது போன்றவற்றை செய்யாமல் இருக்க பெற்றோர் எப்படி அவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகள் பெரும்பாலும் வேர்க்கடலை, மாதுளை போன்றவற்றை மூக்கில் அல்லது காதில் போட்டுக்கொள்வார்கள். இதுபோன்ற உணவுகளை பெற்றோர் கொடுக்கும்போது கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் அப்படி மூக்கில் எதையாவது போட்டுக்கொண்டாலும் அதை சொல்லக்கூட தெரியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மூக்கிலிருந்து நீர் அல்லது சீழ் வடியும்போதுதான் பெற்றோர் மருத்துவரிடம் காட்டுவார்கள். அதன்பிறகு பரிசோதித்து பார்க்கும்போது மூக்கில் எதையேனும் குழந்தை போட்டிருப்பது தெரியவரும். எனவே குழந்தைகளிடம் எதை கொடுத்தாலும் பெற்றோர் கண்காணிப்பிலேயே இருப்பது அவசியம். அதேபோல் குழந்தை காசை விழுங்கிவிட்டால் அது தொண்டைப்பகுதியிலேயே இருக்கும்வரை தலைகீழாக பிடித்து சுற்றுவது போன்ற பாட்டி வைத்திய முறைகளை கையாளலாம். அதுவே மூச்சுக்குழாய்க்குள் சென்றபிறகு உயிர் போகும் நிலைகூட ஏற்படும். எனவே அப்போது பாட்டி வைத்தியம் கைகொடுக்காது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்வரை காது, மூக்கை பராமரிப்பது எப்படி?
வெளிப்புற சுகாதாரம் மிகவும் அவசியம். மூக்கை பொருத்தவரை தினமும் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. அதேபோலத்தான் காதும் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் தன்மையுடையது. அதில் பட்ஸ் அல்லது பிற பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டியது இல்லை. அலர்ஜி பிரச்சினை இருப்பவர்கள் அதற்கான காரணிகளை தவிர்த்துவிட வேண்டும்.