சோப்பா? ஃபேஸ் வாஷா? முகம் கழுவ எது பெஸ்டு? - தோல் மருத்துவர் மோனிஷா அரவிந்த்
விட்டிலிகோ ஆரம்ப நிலை என்றால் மாத்திரைகள் மற்றும் க்ரீம்கள் மூலமே சரிசெய்துவிடலாம். அதுவே நிலைமை கைமீறிவிட்டால் முதலில் அதை கட்டுப்படுத்தி, புதிதாக உருவாகாமல் தடுக்கவேண்டும்.
ஸ்கின் கேர் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. ஆனால் பலருக்கு தனது சருமத்தின் தன்மையை தெரிந்துகொண்டு அதற்கேற்ப பராமரிக்க தெரிவதில்லை. இதனால் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். எனவே ஒவ்வொருவரும் சருமத்தை பராமரிக்க துவங்கும்முன்பே தங்களுடைய சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும் என்கிறார் தோல் மருத்துவர் மோனிஷா அரவிந்த். மேலும் சருமத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் தொற்றுகள் குறித்தும், அதற்கு எப்படி முறையாக சிகிச்சையளிப்பது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறார் அவர்.
நரைமுடிக்கு என்ன மாதிரியான ஹேர் டை பயன்படுத்தலாம்?
அமோனியா மற்றும் பிபிடி இல்லாத ஹேர் கலர்களை பயன்படுத்தலாம். அதுவே ஹென்னா பயன்படுத்தினால் நேச்சுரல் ஹென்னாவை வாங்கி பயன்படுத்தவும். கருப்பு கலர் கலந்த ஹென்னாவில் பிபிடி கலந்திருக்கும் என்பதால் அதை பயன்படுத்தவேண்டாம். இண்டிகோ பவுடரில் பிபிடி இருக்காது என்பதால் அதையும் பயன்படுத்தலாம்.
சரும நிறத்தை அதிகரிக்க மெடிக்கல் ஷாப்களில் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும்?
மெர்க்குரியானது சரும நிறத்தை வெளிரச்செய்யும். ஆனால் இது சிறுநீரகத்தை பாதிக்கக்கூடியது. இதுபோக, ஸ்டீராய்டு, ஹைட்ரோகுயினான் மற்றும் ரெட்டினாய்டு காம்பினேஷனில் வரக்கூடிய க்ரீம்கள் சருமத்திற்கு நிறத்தை கொடுப்பதோடு, கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும். இந்த காம்பினேஷன் க்ரீம்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய ஒருசில பாதிப்புகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது. அதை மெடிக்கல் ஷாப்களில் வாங்கி பயன்படுத்தும்போது, சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறிவிடும். மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு பிறகு, மீண்டும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறாமல் அதே க்ரீமை வாங்கி பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமம் மெலிந்து, உள்ளிருக்கும் நரம்புகள் அப்படியே வெளியே தெரிய ஆரம்பிக்கும். வெயில் பட்டால் உடனே முகம் சிவப்பாகிவிடும். இதனால் சருமத்தின் தன்மையே மாறி, அதனை சரிசெய்ய கிட்டத்தட்ட 7 - 8 வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும்.
நரைமுடிக்கு அமோனியா, பிபிடி கலக்காத ஹேர் டையை தேர்ந்தெடுக்க வேண்டும்
ரெட்டினால் என்றால் என்ன? அது ஏன் இப்போது மிகவும் பிரபலப்படுத்தப்படுகிறது?
ரெட்டினால் என்பது வைட்டமின் "ஏ"விலிருந்து எடுக்கப்படுவதுதான். இது சுருக்கங்கள், சருமத்துளைகள் போன்ற பிரச்சினைகளுக்கும் சருமம் வயதாவதை தடுப்பதற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதனால்தான் ரெட்டினால் குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது.
படை, சொறி, சிரங்கு போன்ற பிரச்சினைகள் பரம்பரை பரம்பரையாக வருவதா? அல்லது உணவுகளின்மூலம் வருவதா?
படை என்பது ஒரு பூஞ்சைத் தொற்று. இது ரத்தத்தால் வருவது கிடையாது. ஆனால் இந்த படர் தாமரையானது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. சிரங்கு என்பதும் மற்றொரு வகை தொற்று. அதுவும் பிறருக்கு பரவக்கூடியது. இது பெரும்பாலும் டவல், பிரஷ், சோப், பெட்ஷீட் மற்றும் தலையணை போன்றவற்றை மாறிமாறி பயன்படுத்துவதால் பரவுகிறது. பெரும்பாலும் பெரியவர்களிடமிருந்துதான் குழந்தைகளுக்கு பரவுகிறது.
முகத்தில் சோப் பயன்படுத்துவதற்கும், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?
சோப்பில் பி.ஹெச் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால்தான் சோப் பயன்படுத்தி முகத்தை கழுவும்போது பளிச்சென இருப்பதுபோன்று தெரியும். ஏனென்றால் சோப்பானது முகத்தில் இருக்கும் இயற்கையான ஆயிலைக்கூட முழுவதுமாக நீக்கிவிடும். இப்படி ஆயிலானது முற்றிலும் நீக்கப்படும்போது சிலருக்கு எண்ணெய் சுரப்பு அதிகமாகும், சிலருக்கு குறைந்து சருமம் வறண்டுவிடும். இதில் ஏதேனும் ஒன்று நடந்தாலுமே சருமம் சேதமடையக்கூடும். அதனால்தான் முகத்தில் சோப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சிலர் கடலை மாவு பயன்படுத்தினால் சரும நிறம் கூடும் என்பார்கள். ஆனால் இயற்கையான நிறம் என்னவோ அதுதான் சருமத்திற்கு இருக்கும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த குறைந்தது 3 மாத பராமரிப்பு அவசியம்
திருமணத்திற்கு முன்பு சருமம் பளபளப்பாக தெரிய சிகிச்சை எடுக்கிறார்களே. அப்படி செய்வதால் சரும நிறத்தை மாற்றமுடியுமா?
சருமத்தை ஹெல்தியாக மாற்றமுடியும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது எண்ணெய் சுரப்பானது அதிகமாகவோ அல்லது வறட்சியாகவோ இல்லாமல் அதை சரியான அளவில் பராமரிப்பதுதான். இதனால் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக மாறும். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தால் மாற்றமுடியாது. பொதுவாக சருமத்தில் மாற்றத்தை காண மூன்று மாதங்கள் தேவைப்படும்.
கோடை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்ப அலர்ஜிகள் வரும். இதுபோன்றவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி?
கோடைகாலத்தில் வியர்வையால்தான் அதிக பிரச்சினைகள் வரும். எனவே ஒருநாளில் இரண்டுமுறை குளிப்பது, தளர்வான காட்டன் ஆடைகளை அணிவது என வியர்வை அதிகமாக சுரப்பதை கட்டுப்படுத்தலாம். சிந்தட்டிக், நைலான் மற்றும் பாலியஸ்டர் போன்ற உடைகளை தவிர்க்கவேண்டும். வாசனையற்ற மைல்டு சோப்களை பயன்படுத்தவேண்டும். மாய்ச்சுரைஸர் மற்றும் சன் ஸ்க்ரீன் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்தவேண்டும். இறுக்கமான லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதுவே குளிர்காலத்தில் கொசுத்தொல்லைதான் முக்கிய பிரச்சினையாக இருக்கும். அந்த காலங்களில் முடிந்தவரை மாலை 4 மணிக்குமேல் முழுக்கை கொண்ட காட்டன் உடைகளை அணியவேண்டும். குளிர்காலத்தில் எக்ஸிமா மற்றும் சரும வறட்சி பிரச்சினைகள் அதிகம் இருக்குமென்பதால் உடல் முழுக்கவும் மாய்ச்சுரைஸர் தடவிக்கொள்ள வேண்டும். வீரியமிக்க சோப்கள், லூஃபா, ஸ்க்ரப் மற்றும் நார்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
கைகளில் அதிகளவு சானிடைசர் பயன்படுத்தினால் எக்ஸிமா பாதிப்பு ஏற்படும்
சானிடைசர் பயன்படுத்தினால் கைகளில் பாதிப்பு ஏற்படுமா?
சானிடைசர் போடுவதால் சருமம் பாதிப்படைவது உண்மைதான். ஆனால் எவ்வளவு முறை சானிடைசர் பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்து பாதிப்பின் அளவும் இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை சானிடைசர் பயன்படுத்தினால் பெரியதாக பாதிப்பு இருக்காது. ஆனால் சிலருக்கு கைகளில் எக்ஸிமா இருக்கும். பாத்திரம் கழுவும் சிலருக்கு வரக்கூடிய இந்த பிரச்சினையானது சானிடைசர் போடுபவர்களுக்கும் வரலாம். சானிடைசர் போட்டாலும் 5 நிமிடங்கள் கழித்து உடனே மாய்ச்சுரைசர் போடவேண்டும். இருப்பினும் சானிடைசர் போடுவதால் எக்ஸிமா வருவது பொதுவான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
சருமத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?
சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை பொருத்தவரை எதை பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்து பயன்படுத்தவேண்டும். மாய்ச்சுரைஸர் மற்றும் சன் ஸ்க்ரீன் மிகமிக முக்கியம். அகத்தின் வெளிப்பாடுதான் சருமம் என்பதால், சோகமாக இருந்தாலோ, மகிழ்ச்சியாக இருந்தாலோ, சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அதிகம் சாப்பிட்டாலோ அதன் வெளிப்பாடு சருமத்திலும் தெரியும். சருமத்தை பராமரிக்க நினைப்பவர்கள் அளவாக சாப்பிடுவது, நேரத்திற்கு தூங்குவது, ஆக்ட்டிவாக இருப்பது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்பது மிகமிக அவசியம். எப்போது வெளியே போனாலும் அல்லது வீட்டிலேயே ஸ்க்ரீன் டைம் அதிகமாக இருந்தாலும் சன் ஸ்க்ரீன் போடுவது மிகவும் முக்கியம். அடுத்து தூங்கும் முன்பு மாய்ச்சுரைஸர் தடவ வேண்டும். முக்கியமாக உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, எண்ணெயில் பொரித்தவை போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். காய்கள், பழங்கள், வீட்டில் செய்யும் உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் நிறைய குடிப்பதும், உடல் ஃபிட்டாக இருப்பதும் அவசியம். சருமத்தை பராமரிக்க நினைத்தால் தூக்கம், டயட், உடலுழைப்பு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது ஆகிய நான்குடன் ஸ்கின் கேர் முறைகளையும் பின்பற்றுவது முக்கியம்.
பி.ஹெச் அளவை பொருத்து ஸ்கின் கேர் பொருட்களை தேர்ந்தெடுத்தல்
முதன்முதலாக ஸ்கின் கேர் செய்ய நினைப்பவர்கள் எதில் கவனம் செலுத்தவேண்டும்?
முதன்முதலாக சருமத்தை பராமரிக்கவேண்டும் என நினைப்பவர்கள் முதலில் போகவேண்டியது சரும நிபுணரிடம்தான். முதலில் நாம் பயன்படுத்தும் க்ளென்சர், மாய்ச்சுரைஸர் மற்றும் சன் ஸ்க்ரீன் மூன்றும் நமது சருமத்திற்கு ஒத்துப்போகிறதா என்பதை பார்க்கவேண்டும். ஏனென்றால் சிலருக்கு முகப்பரு வரலாம், சிலருக்கு கருமை இருக்கலாம், சிலருக்கு கருவளையமோ, முகப்பரு தழும்புகளோ பிரச்சினையாக இருக்கலாம். எனவே அடிப்படையை செட் செய்வதுதான் ஸ்கின் கேரில் முக்கியம்.
வெண் குஷ்டம் எதனால் வருகிறது? அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது?
வெண் குஷ்டம் என்பது விட்டிலிகோ. இது தன்னுடல் எதிர்ப்பு சக்தி பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. உடலில் இருக்கும் செல்களே மெலனினை சுரக்கக்கூடிய மெலனோசைட்ஸுக்கு எதிராக வேலை செய்து அதை தடுக்கும் நிலைதான். இதனால் மெலனின் சுரக்காமல் சருமம் வெள்ளையாக மாறிவிடும். இதற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. ஆரம்ப நிலை என்றால் மாத்திரைகள் மற்றும் க்ரீம்கள் மூலமே சரிசெய்துவிடலாம். அதுவே நிலைமை கைமீறிவிட்டால் முதலில் அதை கட்டுப்படுத்தி, புதிதாக உருவாகாமல் தடுக்கவேண்டும். அதன்பிறகு சருமத்தின் நிறத்தை மாற்ற லேசர், உடலில் தொடை போன்ற பகுதிகளிலிருந்து மெலனோசைட்களை எடுத்து அதை நிறமற்ற பகுதிகளில் ஊசி மூலம் செலுத்துதல் போன்ற ஒருசில சிகிச்சைமுறைகள் இருக்கின்றன.
படை, சிரங்கு, சொறி போன்ற பரவலாக ஏற்படும் சரும பிரச்சினைகள்
நிறையவகை தோல் நோய்கள் இருக்கின்றன. என்னென்ன மாதிரியான பிரச்சினைகளுக்காக அதிகளவில் சிகிச்சைக்கு வருகிறார்கள்?
விட்டிலிகோ, சொரியாசிஸ், எக்ஸிமா போன்றவை ஒருவகை தோல்நோய்கள். உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் வருதல், பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகள், முடி கொட்டுதல், அக்கி, சிக்கன்பாக்ஸ் போன்ற அனைத்துமே ஒவ்வொரு வகை தோல்நோய்கள்தான். இவை அனைத்துக்குமே சரும நிபுணர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.
லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் கேன்சர் வருமா?
முன்பெல்லாம் லிப்ஸ்டிக்கில் phytates போன்ற மூலக்கூறுகளை பயன்படுத்தியதால் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வந்தன. ஆனால் இப்போது நிறைய நல்ல பிராண்டு லிப்ஸ்டிக்குகளில் phytates போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. அதேசமயம் லிப்ஸ்டிக் போடுவதால் உதட்டின் நிறம் மாறலாம். அதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.
கேன்சர் வருவதற்கான மூலக்கூறுகள் சேர்க்கப்படாத லிப்ஸ்டிக்குகள் சந்தையில் உள்ளன
சரும பிரச்சினைகள் அதிகமானால் உள்ளே கேன்சர் வருமா?
சரும பிரச்சினைகளால் உள்ளே கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் உள்ளே கேன்சர் இருந்தால் அதன் வெளிப்பாடு சருமத்தில் தெரியலாம். தோல் மருத்துவரிடம் இதுபற்றி சொல்லும்போது அதற்கான டெஸ்ட்களை அவரே செய்துவிடுவார்.
சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். அதனால் தொற்றுகள் ஏற்படுமா?
இது மரபணுரீதியாக ஏற்படக்கூடியது. சிலருக்கு நரம்பின் செயல்பாடானது சற்று அதிகமாக இருப்பதால் உடல் முழுவதுமே அதிகமாக வியர்க்கும். அதனால்தான், தேர்வு, இண்டர்வியூ மற்றும் பதற்றமான சூழ்நிலைகளில் அதிகமாக வியர்க்கும். இது சாதாரணமானதுதான்.