பற்களை பாலிஷ் செய்வதால் என்னவாகும்? - விளக்குகிறார் பல் மருத்துவர்

பல்லின் நிறமே மாறி முளைக்கிறது என்றால் அதற்கு எண்டமிக் ஃப்ளூரோசிஸ் என்று பெயர். நாம் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடு இருக்கும்போது அந்த தண்ணீரை குடிப்பதால், அது எலும்பு மற்றும் பற்கள் உருவாகும் பகுதியில் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் பற்கள் முளைக்க காரணமாக அமைந்திவிடும்.

Update: 2024-05-06 18:30 GMT
Click the Play button to listen to article

ஒருவரை பார்க்கும்போது முதலில் நாம் அனைவருமே ஒரு சிறிய புன்னகையை காட்டுவதுண்டு. அந்த முதல் இம்ப்ரஷன் அழகாக இருக்க பற்களை பராமரிப்பது மிகவும் அவசியம். பற்கள் அழகாக வரிசையாக இல்லையே என்று நினைத்து சிரிக்கவே கூச்சப்படும் நிறையப்பேரை நாம் பார்த்திருக்கிறோம். வரிசையாக இல்லாவிட்டாலும் பற்கள் சுத்தமாக இருப்பது அவசியம். ‘வாய்சுத்தம் உடற்சுத்தம்’ என சொல்வதுண்டு. ஆம், வாய் சுத்தமாக இருந்தால்தான் உட்புற உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். பல் மற்றும் நாக்கின் தன்மையை வைத்தே உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டிய பற்கள் குறித்து நம்முடன் உரையாடுகிறார் மூத்த பல் மருத்துவர் நாசர்.

பல் பராமரிப்பு ஏன் அவசியம்?

பெரும்பாலானோர் பற்களை சரியாக பராமரிப்பதில்லை. பற்களை பொருத்தவரை இரண்டு முக்கிய பிரச்சினைகள் வரும். ஒன்று உணவு பற்களில் தங்குதல், இரண்டாவது பற்களில் கருப்பான குழி தெரியும். தினமும் முறையாக பல் துலக்கினாலே இந்த பிரச்சினைகள் சரியாகிவிடும். வருடத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகினாலே போதுமானது. பல் சொத்தை ஏற்பட்டுவிட்டால் அதனை குணப்படுத்துவது கடினம். எனவே பற்களை முறையாக பராமரித்தாலே பல் சொத்தை மற்றும் ஈறு அலர்ஜி போன்ற 80% பேருக்கு வரக்கூடிய முக்கியமான பிரச்சினைகளை வராமல் தடுத்துவிடலாம். தினமும் இரண்டுமுறை பல் துலக்கி சுத்தப்படுத்துவது அவசியம்.


ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பல் பரிசோதனை செய்தல் அவசியம்

ஆரோக்கியமான பற்களை எப்படி கண்டுபிடிப்பது?

பல்லின் எனாமல் எப்போதும் அடர்த்தியாக இருக்கும். அதனுள் டென்டின் இருக்கும். அதற்கும்கீழ்தான் வேர்களும் அதனடியில்தான் சிமெண்ட்டும் இருக்கும். டென்டினுக்கும் வேருக்கும் நடுவில்தான் பற்கூழ் குழி இருக்கிறது. எலும்பைவிட கடினமாக இருக்கக்கூடிய எனாமல் உடைந்துவிட்டால் மீண்டும் வளராது. அந்த பகுதியைத்தான் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். எனாமலில் கரிம மற்றும் கனிம மூலப்பொருட்கள் இருக்கின்றன. இந்த கரிம மூலப்பொருட்கள் தேய்ந்துபோகும்போது பல்லில் குழி விழும். எனவேதான் பற்கூச்சம் ஏற்படும்போது பல் மருத்துவரை அணுகவேண்டி இருக்கும். அதேபோல் சூடான அல்லது கூலான பொருட்களை சாப்பிடும்போது பற்கூச்சம் அல்லது வலி இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். உணவுத்துகள்கள் பற்களில் தங்கிவிட்டாலும் பிரச்சினைதான். இதனால் பல்லில் ரத்தம் வடியும். பற்குழியில் உணவுப்பொருட்கள் தங்கினாலும் அதனை உடனே சுத்தம் செய்துவிடுவது அவசியம். தினமும் முறையாக பல் துலக்கினாலே இந்த பிரச்சினைகள் வராது.

Tooth Implant ஏன் செய்யப்படுகிறது?

பற்களில் சொத்தை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு பல்லை நீக்கிவிட்டால் மீண்டும் முளைக்காது என்பதால் அந்த இடத்தில் செயற்கை பல்லை பொருத்தவேண்டும். இதனை கழற்றி மாட்டுவதைப் போன்றோ அல்லது அருகிலிருக்கும் இரண்டு பற்களை பாலமாக இணைப்பது போன்றோ அல்லது டைட்டானியத்தால் செய்யப்பட்ட செயற்கை பல்லை வேர்க்கால்களில் பொருத்துவது போன்றோ வெவ்வேறு விதமாக செய்யலாம். செயற்கை பல்லை நிரந்தரமாக பொருத்துவதைத்தான் Tooth Implant என்பார்கள். டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட இம்ப்ளான்ட்டை கீழ்த்தாடையில் நிரந்தரமாக பொருத்த கீழ்த்தாடைக்கு மூன்று மாதங்களும், மேல்தாடைக்கு ஆறு மாதங்களும் ஆகும். இது பொதுவான முறை என்றாலும் இப்போது பல் பிரச்சினைக்கு வருகிற பெரும்பாலானோர் உடனே பல்லை பொருத்தவேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு பற்களையும் சேர்க்கக்கூடிய bicortical implants என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படும்.


Tooth Implant செய்யும் முறை

விழுந்த பற்கள் மீண்டும் முளைப்பதில்லை ஏன்?

பால் பற்கள் மற்றும் நிலையான பற்கள் என இரண்டு வகை பற்கள் இருக்கின்றன. 7 - 8 மாதத்திற்குள் முளைத்து இரண்டரை வயதுக்கு பிறகு விழுந்துவிடக்கூடியவை பால் பற்கள். பால் பற்கள் 20 தான் இருக்கும். இந்த சமயத்தில் முன்முனை பற்கள் (premolars) முளைக்காது. 6 வயதுக்குப் பிறகு கீழ்ப்பகுதியில் இருந்து ஒவ்வொரு பல்லாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முளைக்கத்தொடங்கும். 6 வயதில் முதல் நிலையான கடைவாய் பல்லும் 8 வயதில் இரண்டாவது நிலையான கடைவாய் பல்லும், 18-25 வயதுக்குள் மூன்றாவது நிலையான கடைவாய் பல்லும் முளைத்துவிடும். இப்படித்தான் பல்லை வைத்தே ஒருவரின் வயதை தீர்மானிக்க முடிகிறது. நிலையான பற்கள் 32. இவை விழுந்தால் திரும்ப முளைக்காது.

பல் செட் யாருக்கெல்லாம் வைக்கலாம்? எந்த வயதினருக்கு வைக்கலாம்?

ஒரு பல், இரண்டு பல் அல்லது அனைத்து பற்களும் போனாலும் பல் செட் பொருத்தலாம். ஒன்று அல்லது இரண்டு பற்கள் போய்விட்டால் கழற்றி மாட்டுவதைப் போன்றுதான் முன்பெல்லாம் பல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் இப்போது எல்லாருமே நிலையான பற்கள் வேண்டுமென்று கேட்பதால் implant சிகிச்சைதான் பெரும்பாலும் அளிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் பக்கத்திலிருக்கும் இரண்டு பற்களையும் சிறிது க்ரைண்ட் செய்து ப்ரிட்ஜ் போன்று நடுவில் அமைப்பார்கள்.


பற்களை சுத்தப்படுத்தி பாலிஷிங் செய்தல் 

பற்களை பாலிஷ் செய்வது நல்லதா?

பற்களை க்ளீனிங் மற்றும் பாலிஷிங் செய்யும்போது எனாமலை பாதிக்காதவண்ணம் செய்தால் நல்லது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆசிட் பயன்படுத்தி தேய்த்துவிடுவதால் ஆரம்பத்தில் பற்கள் வெள்ளையாக தெரிந்தாலும் எனாமல் போய்விடுவதால் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பல்லை க்ளீனிங் செய்வது என்பது வேறு. பாலிஷிங் என்பது வேறு. ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது ஆசிட் பயன்படுத்தி பாலிஷ் செய்யும்போது எனாமல் பாதிப்படையும். மேலும் இதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் செய்யவேண்டி இருக்கும். எனவே இதனை இளைஞர்கள் முடிந்தவரை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. வயதானவர்கள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.

வேப்பங்குச்சி, ஆலங்குச்சி அல்லது பொடிகளை பல் துலக்க பயன்படுத்தலாமா?

‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்று நம் முன்னோர்கள் சொன்னது சரிதான். பல்லை துலக்குவதற்கு காரணம், பற்களில் தங்கும் உணவுத்துகள்கள் போன்ற அழுக்குகளை நீக்குவது, இரண்டாவது ஈறுகளுக்கு மசாஜ் கொடுத்து வலிமையாக்குவது, மூன்றாவது நாக்கை சுத்தப்படுத்துவதுதான். இந்த குச்சிகளை அடிப்படையாகக் கொண்டுதான் டூத் ப்ரஷ்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு வேளையும் பல் துலக்கினாலே எந்த பிரச்சினையும் வராது. காலை எழுந்தவுடன் பெட் காபி குடிக்கும் பழக்கம் நிறையப்பேருக்கு இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. ஆனால் இரவு தூங்க போகும் முன்பு அவர்கள் கட்டாயம் ப்ரஷ் செய்துவிடுவார்கள். நாம் இரவும் ப்ரஷ் செய்யாமல் காலை எழுந்தவுடன் பெட் காபி குடிப்பதால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எல்லா பேஸ்ட்டுகளுமே பல்லுக்கும் ப்ரஷ்ஷுக்குமான உராய்வுப்பொருளாகத்தான் செயல்படுகின்றன. அந்த காலத்தில் மாட்டுசாணத்தை காயவைத்து எரித்து சாம்பலாக்கி, அதில் உப்பு சேர்த்து அதை பல் துலக்க பயன்படுத்துவார்கள்.


தாடை எலும்பு உடைந்தால் அதனை சரி செய்யும் reduction, fixation, immobilisation சிகிச்சைமுறை

விபத்தில் தாடை எலும்பு உடைந்து பற்கள் போனவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும்?

தாடை உடைந்துவிட்டால் அடிப்படை சிகிச்சைமுறையானது reduction, fixation, immobilisation என்று இருக்கும். உடலில் எந்த பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் இதே சிகிச்சைமுறைதான். உடைந்த தாடையை ஒன்றாக சேர்த்து ஒட்டிவிட்டால் அது reduction. உடைந்த இடத்தை மட்டும் சரிசெய்வது fixation. சேர்க்கப்பட்ட பகுதிகளை நிலையாக்குவது immobilisation. தாடைப்பகுதியை சரிசெய்த பிறகு விழுந்த பற்களுக்கு பதிலாக செயற்கை பற்களை பொருத்தலாம்.

Root canal சிகிச்சை என்றால் என்ன?

பற்களுக்கு நடுவில் இருக்கும் பல்ப் என்று சொல்லக்கூடிய பற்கூழ் குழியில் பிரச்சினை ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் சிகிச்சைதான் Root canal. பற்கூச்சம் இருக்கும்போதே மருத்துவரை அணுகினால் எளிதில் சரிசெய்து விடலாம். ஆனால் அந்த கூச்சம் வலியாக மாறும்போது பல்லை எடுக்கவேண்டி இருக்கும் அல்லது பற்கூழ் குழியை நீக்கவேண்டி இருக்கும். பல்ப்பை நீக்கும் சிகிச்சையைத்தான் Root canal என்கிறார்கள். பாதிக்கப்பட்ட பல்ப்பை நீக்கிவிட்டு அதில் செயற்கையான பல்ப்பை நிரப்பி அதன்மீது க்ரவுன் என்று சொல்லக்கூடிய கவரை போட்டு ஃபிக்ஸ் செய்துவிடுவார்கள். பொதுவாக பற்களை அடைக்க கோல்டு பயன்படுத்துவார்கள். ஏனென்றால் எதை கடித்தாலும் கோல்டு நிலையாக நிற்கும். ஆனால் மற்ற கனிமங்கள் அதுபோல் நிலையாக நிற்பதில்லை. அதேசமயம் தங்கம் விற்கிற விலைக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதும் கடினம். அதற்கு பதிலாகத்தான் மெர்க்குரி மற்றும் சில்வர் எனாமல் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல் அடைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதால் பல்லின் நிறத்திலேயே filling வேண்டுமென்று நிறையப்பேர் கேட்கிறார்கள். அப்படி பல்லின் நிறத்திலேயே filling பயன்படுத்தும்போது ஒரு டிகிரி வெப்பம் அதிகமாக பட்டாலும் அது பெரிதாகிவிடும். இதனை coefficient thermal expansion என்கிறார்கள். பல்லும் filling மெட்டீரியலும் ஒரே தன்மையுடையதாக இருக்காது என்பதால் பாக்டீரியாக்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் பல்லில் ஓட்டை விழும். நிறமும் மாறும்.


Tongue cleaner பயன்படுத்தி தினமும் நாக்கை சுத்தம் செய்தல்

சிலருக்கு பற்கள் மெலிந்து கருப்பாக இருக்கிறதே... இது எதனால்?

சொத்தை இருந்தால் பல் கருப்பாக மாறிவிடும். எனாமல் தேய்ந்தவர்களுக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கும், அதை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் பற்களின்மேல் அந்த துகள்கள் படிந்திருக்கும். அதை சுத்தப்படுத்தும்போது போய்விடும். பல்லின் நிறமே மாறி முளைக்கிறது என்றால் அதற்கு எண்டமிக் ஃப்ளூரோசிஸ் என்று பெயர். நாம் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடு இருக்கும்போது அந்த தண்ணீரை குடிப்பதால், அது எலும்பு மற்றும் பற்கள் உருவாகும் பகுதியில் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் பற்கள் முளைக்க காரணமாக அமைந்துவிடும்.

பல் கட்டுதல் எந்தவயதிலிருந்து செய்யலாம்?

எந்த வயதினர் வேண்டுமானாலும் பல் கட்டிக்கொள்ளலாம். ஒரு பல்லை நீக்கிவிட்டால் பக்கத்திலிருக்கும் பல் சரிய ஆரம்பித்துவிடும். அப்படி அந்த பல் சரியும்போது அதற்கும் அதற்கடுத்த பல்லுக்குமிடையே சொத்தை உருவாகிவிடும். பார்ப்பதற்கு நன்றாக இருக்கவேண்டும், கடித்து சாப்பிடவேண்டும், தெளிவாக பேசவேண்டும் என்பதுதான் பல்லை கட்டுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள். சிலர் பல்லை கட்டாமலேயே விடும்போது ஆங்காங்கே gap விழுந்துவிடும்.

Tongue cleaner பயன்படுத்தலாமா?

100% பயன்படுத்தலாம். மெட்டல் அல்லது ப்ளாஸ்டிக் டங்க் க்ளீனர்களை பயன்படுத்தலாம். எப்போது மருத்துவரிடம் சென்றாலும் ‘வாயைத் திற, நாக்கை நீட்டு’ என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் நாக்கில் ஒரு படலம் உருவாகும். அதை வைத்தே என்னமாதிரியான நோய் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். 

Tags:    

மேலும் செய்திகள்