"Fatty Liver"ஆல் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா? - எச்சரிக்கிறார் மருத்துவர் விஜய் சக்ரவர்த்தி

சிலருக்கு சிவப்பணு பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது கல்லீரல் செல்களில் பிரச்சினை இருந்தாலோ அல்லது உடற்பருமனோ அல்லது ஹெபடைடிஸ் போன்ற வைரல் தொற்றுகளாலோ மஞ்சள் காமாலை வரலாம். வைரல் தொற்றுகளால் மஞ்சள் காமலை வந்தால் தொற்று குறைய குறைய மஞ்சள் காமாலையும் குறைந்துகொண்டே வரும்.

Update:2024-09-10 00:00 IST
Click the Play button to listen to article

உலகளாவிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளில் உடல் பருமன் இப்போது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் உடலில் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படுவதாக பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடல் எடை அதிகரிப்பில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இடுப்புப்பகுதி எடை அதிகரிப்பு. இடுப்பு சுற்றளவு சற்று அதிகமாக இருந்தாலே எப்படி பெண்களுக்கு பிசிஓடி வரும் என்று சொல்லப்படுகிறதோ அதேபோலத்தான் ஆண், பெண் என அனைவருக்குமே கல்லீரல் பிரச்சினையும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் விஜய் சக்ரவர்த்தி. கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார் இவர்.

Fatty liver பிரச்சினை நிறையப்பேருக்கு இருப்பதாக சொல்கிறார்கள். யாரெல்லாம் கட்டாயம் சிகிச்சை எடுக்கவேண்டும்?

பொதுவாக மாஸ்டர் செக்கப்பிற்கு சென்றாலே நிறையப்பேருக்கு Fatty liver ஸ்டேஜ் 1, க்ரேடு 2 என்றெல்லாம் ரிசல்ட் வருகிறது. இதனால் Fatty liver என்றாலே என்ன என கேள்வி வருகிறது. கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத்தான் Fatty liver என்கின்றனர். நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மிகவும் அதிகமாக இருந்தால், உடல் பயன்படுத்தியவை தவிர மற்ற அனைத்தும் ட்ரை க்ளிசரைடுகளாக உருவாக்கப்பட்டு, கல்லீரலில் சேர்கின்றன. முன்பெல்லாம் ஒருநாளைக்கு ஒருவேளை அல்லது இரண்டுவேளை சாப்பிடுவது, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை பொதுவான ஒன்றாக இருந்தது. இதனால் உடல் இயக்கத்திற்காக அவர்களுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரலில் சேர்ந்திருக்கும் இந்த ட்ரை க்ளிசரைடுகள் பெரிதும் உதவியாக இருந்தன. ஆனால், இப்போது நினைத்த நேரத்திற்கெல்லாம் சாப்பிடும் பழக்கம் உருவாகிவிட்டதால், அதிகப்படியாக சேர்க்கும் கார்போஹைட்ரேட்கள் எல்லாம் கொழுப்பாக மாறி கல்லீரலில் சேர்ந்துவிடுகின்றன. மனித கல்லீரலின் எடை 1.5 கிலோ. அதில் 5%-க்கும் மேல் கொழுப்பு சேர்ந்தால் அதை Fatty liver என்கின்றனர்.


Fatty liver பிரச்சினையை பரிசோதனை மூலம் கண்டுபிடித்தல்

Fatty liver-ஆல் ஆரம்பத்தில் பிரச்சினை இல்லை என்றாலும், சில வருடங்கள் கழித்து அதுவே பிரச்சினையாக உருவெடுக்கும். கல்லீரலில் கொழுப்பு சேர சேர அது மிகவும் கடினமாகி சிரோசிஸ் என்ற நிலையை அடைந்துவிடும். இந்த நிலையில் கல்லீரல் தனது செயல்திறனை இழந்திருக்கும். லிவர் சிரோசிஸ் ஏற்பட்டால் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வாக இருக்கும்.

Fatty liver பிரச்சினையின் அறிகுறிகள் எந்த ஸ்டேஜில் தெரிய ஆரம்பிக்கும்?

ஆரம்பத்தில் பல வருடங்களுக்கு அறிகுறிகளே தென்படாது. அதனால்தான் ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் போன்ற அடிப்படை பரிசோதனை செய்யவேண்டும். இதற்கும்மேல் ஃபைப்ரோ ஸ்கேன், எலக்ஸ்ட்ரோக்ராபி, MRI எலக்ஸ்ட்ரோக்ராபி போன்ற பரிசோதனைகள் Fatty liver அடுத்த நிலைக்கு சென்றுவிட்டதா என்பதை பரிசோதிக்க உதவுபவை. மது அருந்துபவர்கள் மற்றும் மது அருந்தாதவர்கள் என Fatty liver-ஐ இரண்டாக பிரிக்கலாம். மேற்கூறியவை அனைத்தும் மது அருந்தாதவர்களுக்கான பிரச்சினைகளும் பரிசோதனைகளும். இதை Nonalcoholic fatty liver disease என்று அழைக்கின்றனர். இதனால்தான் கார்போஹைட்ரேட்டை புதியவகை ஆல்கஹால் என்றுகூட சொல்கின்றனர். Fatty liver-ஐ முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் சிரோசிஸ் எனும் கடைசிநிலைக்கு சென்றுவிடும். இதற்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள பல லட்சங்கள் செலவாகும். முன்பெல்லாம் 50 வயதில் Fatty liver பிரச்சினை ஏற்பட்டால் அது சிரோசிஸ் நிலையை அடையும்போது 70 வயதாகிவிடும். ஆனால் இப்போது 25 -30 வயதிற்குள்ளாகவே இந்த பிரச்சினை வந்துவிடுவதால் 50 வயதிற்குள்ளாகவே பிரச்சினை அதிகமாகிவிடும். இதற்கு மிகவும் குறைந்த சிகிச்சைமுறைகளே இருக்கின்றன. எப்படியும் கடைசியாக, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே சரிசெய்வது அவசியம்.


சிரோசிஸ் நிலை ஏற்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு

உணவு கட்டுப்பாடுகளால் Fatty liver-ஐ சரி செய்யலாமா?

கார்போஹைட்ரேட் கட்டுப்பாடு மிகவும் அவசியம். Fatty liver பிரச்சினை இருப்பவர்களுக்கு 10% எடை இழப்பு தேவை. குண்டாக இருப்பவர்கள் இப்படி எடையை குறைக்கும்போது 3ஆம் நிலையிலிருந்து 2ஆம் நிலை, 4ஆம் நிலையிலிருந்து 3ஆம் நிலை என ஒரு ஸ்டேஜ் முன்பாக செல்ல வாய்ப்பிருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவே வேகவைத்த உணவுகளை சாப்பிட்டால் பிரச்சினை மிகமிக குறைவு. அதேபோல் பழங்களை அப்படியே சாப்பிடும்போது நார்ச்சத்து கிடைக்கும். அதையே கடையில் ஜூஸாக வாங்கி குடிக்கும்போது அதில் ஃப்ரக்டோஸ்தான் இருக்கும். அதை குடித்தவுடனே ஃப்ரக்டோஸ் குளுக்கோஸாக மாறி, அதிகப்படியானவை கல்லீரலில் படிந்துவிடும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸுடன், ஜூஸ், ஸ்வீட்ஸ் போன்றவைதான் கல்லீரலுக்கு மிகப்பெரிய எதிரி.

நீரிழிவு, உடற்பருமன், பிபி, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு Fatty liver பிரச்சினையும் வந்தால் வெகு சீக்கிரத்திலேயே அடுத்தடுத்த நிலைக்கு சென்றுவிடும். இடுப்பு சுற்றளவு 88 சென்டி மீட்டருக்கும் மேல் இருப்பவர்களுக்கு Fatty liver பிரச்சினை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ரத்த பரிசோதனை செய்யாமலேயே கண்டுபிடிக்கலாம். கழுத்தைச் சுற்றி கருமையாக (Acanthosis nigricans) இருப்பவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். இப்படி இருந்தாலே நீரிழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிசிஓடி பிரச்சினை இருக்கும் நிறைய பெண்களுக்கு கழுத்தை சுற்றி கருமை படிந்திருக்கும், இடுப்பு சுற்றளவு அதிகமாக இருக்கும். அவர்களுக்கும் Fatty liver பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.


உடற்பருமனாக இருப்பவர்களுக்கு Fatty liver பிரச்சினை இருக்க வாய்ப்புகள் அதிகம்

மரபணுரீதியாகவே சற்று எடை கூடுதலாக இருப்பவர்களுக்கும் Fatty liver பிரச்சினை இருக்க வாய்ப்புகள் இருக்கிறதா?

வாய்ப்புகள் அதிகம். ஓபிசிட்டி இருப்பவர்களுக்கு உடல் முழுக்க சதையாக மட்டுமே இருக்காது. அவற்றில் கொழுப்புதான் அதிகம் இருக்கும். அந்த கொழுப்பு கல்லீரலில் இருந்தால் அதை Fatty liver என்கின்றனர்.

கல்லீரல் அல்லது பித்தப்பையில் பாதிப்பு ஏற்பட்டால் ஒன்றையொன்று மாறி மாறி பாதிக்குமா?

ஒன்றையொன்று கட்டாயம் பாதிக்கும் என்றெல்லாம் சொல்லமுடியாது. இரண்டு உறுப்புமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் என்றாலும் கல்லீரலில் வரும் பிரச்சினை பித்தப்பைக்கும் பரவும் என்று கிடையாது.

மஞ்சள்காமாலை பற்றி சொல்லுங்கள்?

மஞ்சள் காமாலை வர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பிலிருபின் அதிகமானால் அதை மஞ்சள் காமாலை என்கின்றனர். ரத்த சிவப்பணுக்கள் சிதைந்து வரக்கூடியதுதான் பிலிருபின். இந்த பிலிருபினானது கல்லீரல் மூலமாகத்தான் வளர்சிதைமாற்றம் அடைவதால் கல்லீரல் பாதிப்படைகிறது. சிலருக்கு sickle cell anemia போன்று ரத்த சிவப்பணு சிதைவு நோய்கள் இருக்கும். இதனாலும் மஞ்சள் காமாலை வரலாம். சிலருக்கு சிவப்பணு பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது கல்லீரல் செல்களில் பிரச்சினை இருந்தாலோ அல்லது உடற்பருமனோ அல்லது ஹெபடைடிஸ் போன்ற வைரல் தொற்றுகளாலோ மஞ்சள் காமாலை வரலாம். வைரல் தொற்றுகளால் மஞ்சள் காமலை வந்தால் தொற்று குறைய குறைய மஞ்சள் காமாலையும் குறைந்துகொண்டே வரும். சில மருந்துகள், மூலிகைகள் போன்றவற்றாலும்கூட கல்லீரல் பாதிப்படையும். இப்படி மஞ்சள் காமாலை வருவதற்கு கிட்டத்தட்ட 40 காரணங்கள் இருக்கின்றன.


மஞ்சள் காமலை வருவதற்கான காரணங்கள்

மதுபழக்கத்தை கைவிட முடியாதவர்கள் உணவு கட்டுப்பாட்டின்மூலம் கல்லீரல் பாதிப்பை தடுக்க முடியுமா?

இதுபோன்ற எந்த பிரச்சினைகளையும் உணவுமூலம் சரிசெய்யமுடியாது. உதாரணத்திற்கு, நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் லட்டையும் சாப்பிட்டுவிட்டு, உப்பையும் சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா? அதுபோலத்தான் ஆல்கஹாலும். நிறையப்பேர் மது அருந்திவிட்டு liver detoxification செய்வார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. கல்லீரலை சுத்தப்படுத்த ஒரே வழி எடையை குறைப்பதுதான்.

கீழாநெல்லியை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாக்கப்படுமா?

கீழாநெல்லி சாப்பிட்டும், ஹெபடைடிஸ் பி போன்ற வைரல் காய்ச்சலோ அல்லது மது அருந்தினாலோ அது கண்டிப்பாக கல்லீரலை பாதிக்கத்தான் செய்யும். அதேபோலத்தான் கூல் ட்ரிங்க்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு கீழாநெல்லி சாப்பிட்டால் பலன் கிடைக்காது. ஒருபுறம் சத்தான ஒரே ஒரு உணவை எடுத்துவிட்டு, மற்றொருபுறம் தீங்கு விளைவிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டாலும் Fatty liver பிரச்சினை வரத்தான் செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்