வெள்ளைப்படுதலுக்கான காரணங்களும் தீர்வுகளும் - விளக்குகிறார் சித்த மருத்துவர் யோக வித்யா

பெண்களை பொறுத்தவரையில் கருப்பை சார்ந்த பல பிரச்சினைகள் இருந்து வந்தாலும் அதில் வெள்ளைப்படுதல் என்பது ஒரு தலையாய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

Update: 2023-11-27 18:30 GMT
Click the Play button to listen to article

பெண்களை பொறுத்தவரையில் கருப்பை சார்ந்த பல பிரச்சினைகள் இருந்து வந்தாலும் அதில் வெள்ளைப்படுதல் என்பது ஒரு தலையாய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்த வெள்ளைப்படுதல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதிக வெள்ளைப்படுதலால் அழகு ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்ன? போன்ற வெள்ளைப்படுதல் சார்ந்த பல கேள்விகளுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வையும், வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார் சித்த மருத்துவர் யோக வித்யா.

வெள்ளைப்படுதல்

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன்னரும், பின்னரும் வெள்ளைப்படுதல் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. ஆனால், அதுவே மாதம் முழுவதும் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அது ஆபத்திற்குரியதே. பிறப்புறுப்பு வெளியேற்றம் என்பது பெண்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனுடைய ஈரத்தன்மை மற்றும் PH நிலை சீராக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாது, துர்நாற்றம் அடிக்காது. ஆனால், இந்த PH நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதாவது அவற்றின் அமிலத்தன்மை அதிகரிக்கும் போதுதான் பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த அமிலத்தன்மை அதிகமாக இருந்தால் பெண்கள் உடுத்தும் உள்ளாடைகள் எளிதில் கிழிந்து விடும். அதேபோல் பிறப்புறுப்பு சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே ஆண்களின் விந்தணுக்கள் பெண்ணின் திரவத்துக்குள் சென்று கருக்குழாயில் இருக்கும் முட்டைகளுடன் சேர்ந்து கருவானது உருவாகும்.


வெள்ளைப்படுதலால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

பிறப்புறுப்பு வறட்சி

பொதுவாக 40 முதல் 45 வயதில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் நெருங்கும். இந்த சமயம் அவர்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி அதிகமாக ஏற்படும். இதனால் அவர்களால் உடலுறவில் ஆர்வம் காட்ட முடியாத நிலை ஏற்படும். இப்போதெல்லாம் சிறுவயது கொண்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் தன்மை குறைவதினாலோ, கருமுட்டை தரமாக வளராதிருப்பதினாலோ, நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகளினாலோ சுரோணிதம் என்று சொல்லக்கூடிய திரவமானது சரியாக சுரப்பதில்லை. இதனாலேயே அவர்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்களின் தாம்பத்ய உறவுகளை மேற்கொள்வதில்லை.

வெள்ளைப்படுதலைக் குறைக்கும் வழிகள்

இப்படி எந்தஒரு பிரச்சினையும் இல்லாமல் பிறப்புறுப்பு சுரப்பு சீராக இருக்க, உட்கொள்ளும் உணவுகளில் காரத்தன்மை மற்றும் புளிப்புத்தன்மை குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை அதிகமாக உட்கொள்வதன் மூலமே உடம்பின் சூடு அதிகமாகி அமிலத்தன்மை அதிகரித்து PH நிலை மாறி பிறப்புறுப்பு சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் வாரத்திற்கு ஒருமுறை அல்லது திங்கள், புதன், சனி என்று வாரத்திற்கு மூன்று நாட்கள், தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம் உடம்பின் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் குறையும்.


வெள்ளைப்படுதலுக்கு காரணமான உணவுகள்

மாதம் முழுவதும் வெள்ளைப்படுதல்

பொதுவாகவே மாதம் முழுவதும் அதிகமாக வெள்ளைப்படும் பெண்களுக்கு உள்ளாடைகள் எளிதில் நனைந்துவிடும். சிலர் அதிக வெள்ளைப்படுதலால் நாப்கின்கள் பயன்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இதை பொருட்படுத்துவதால் பெண்கள் பலரும் தங்களது தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அதிக வெள்ளைப்படுதல் இருப்பவர்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் அதிகமாக இருக்கும். கண் பகுதியில் குழி விழுந்தது போல் இருக்கும். இடுப்பு எலும்புகள் பலவீனமாக இருக்கும். உடல் எப்போதும் சூடாகவே இருக்கும். இவையெல்லாம் அதிக வெள்ளைப்படுதலுக்குரிய அறிகுறிகளாகும். இந்த அதிக வெள்ளைப்படுதலை உணவு முறையினாலும், வாழ்க்கை முறையினாலும் குறைக்க முடியும்.

அதேநேரம் வெள்ளைப்படுதலில் துர்நாற்றமும், வெவ்வேறு நிறங்களில் பிறப்புறுப்பு சுரப்புகள் இருந்தாலும் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஏனென்றால் கருப்பையில் காசநோய் தொற்று காரணமாகவும், பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகளாலும் இது போன்று ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு முழு கருப்பை சுத்தம் செய்வதும், ரத்தம் சுத்தம் செய்வதும், குடல்கள் சுத்தம் செய்வதும் மிக மிக அவசியம்.


அதிகப்படியான வெள்ளைப்படுதலால் அவதி

வெவ்வேறு நிறங்களில் வெள்ளைப்படுதலுக்கான தீர்வுகள்

பச்சை மற்றும் ஆரஞ்சு வெள்ளைப்படுதல் இருப்பவர்கள் கருப்பையை சுத்தம் செய்ய மலைவேம்பாதி தைலத்தை மாதவிடாய் நாட்களில் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே கருப்பை சுத்தமாகும். ஊதா வெள்ளைப்படுதல் இருப்பவர்கள் முதலில் நார்த்திசுக் கட்டி இருக்கிறதா என்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து கொள்வது சிறந்தது.

வெள்ளைப்படுதலைக் குறைக்கும் 5 வகையான மூலிகைகள்

பித்த சமனி என்று சொல்லப்படும் எலுமிச்சை சாறுடன் இஞ்சி, தேன் போன்றவற்றை அன்றாடம் காலை 11 மணியளவில் குடிக்கலாம். இது அதிக அமிலத்தன்மை கொண்டிருந்தாலும் உடலுக்குள் செல்லும்போது அல்கலைனாக மாறி விடுகிறது.


குடல் சுத்தம் மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மூலிகைகள்

காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணியை ஜூஸாக அரைத்து அதில் சிறிதளவு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கும்போது நம் குடல்கள் சுத்தமாகும். உடலின் உஷ்ணத்தை குறைக்கும். வெள்ளைப்படுதல் படிப்படியாக குறையும்.

மதிய உணவில் வெள்ளரியை துருவி அதில் தயிர் ஊற்றி ¼ பங்கு மாம்பருப்பு பொடியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் படிப்படியாக குறைந்து விடும். இந்த மாம்பருப்பில் துவர்ப்பான சுவை இருப்பதாலும், வெள்ளரியில் குளிர்ச்சி தன்மை இருப்பதாலும் தயிரில் பாக்டீரியல் தன்மை இருப்பதாலும் இது நிச்சயம் வெள்ளைப்படுதலுக்கு தீர்வளிக்கும்.

சித்த மருத்துவத்தில் குமரி என்றழைக்கப்படும் கற்றாழையை தோலை நீக்கிவிட்டு 7 முறை நன்றாக கழுவிய பின்னர் காலையில் வெறும் வயிற்றில் தயிரோடு கலந்து சாப்பிடலாம். தயிர் பிடிக்காதவர்கள் கற்றாழையுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நல்ல ஜூஸாக அரைத்து குடித்தால் கருப்பை இயற்கையாகவே சுத்தமாகும். சூடு தணியும். வெள்ளைப்படுதல் இருக்காது.


வெள்ளைப்படுதலை குறைக்கும் உணவுகள்

20 பன்னீர் ரோஜா இதழ்களை கொண்டு அவற்றில் பனங்கற்கண்டு மற்றும் தேன் சேர்த்து வெயிலில் வைத்தெடுத்தால் அது ஜாம் பக்குவத்தில் வரும். இதை காலையில் ஒரு டேபிள் ஸ்பூன், இரவு தூங்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தாலே வெள்ளைப்படுதலில் மாற்றங்களை காணலாம்.

அதிக வெள்ளைப்படுதலை சாதாரணமாக எண்ணி அதை அப்படியே விட்டுவிடுவதால் எலும்புகளின் சத்துக்கள் குறையும். எடை குறையும். உடல் முழுவதும் எப்போதும் உஷ்ணமாக இருக்கும். கண்களில் குழி விழுந்து கண்களை சுற்றி கருவளையங்கள் சூழ்ந்திருக்கும். எனவே வெள்ளைப்படுதலால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக வெள்ளைப்படுதலுக்கு தீர்வு காண்பது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்