சருமத்திற்கு ஏற்ப மாய்ச்சுரைசரை எப்படி தேர்ந்தெடுப்பது? - விளக்குகிறார் சரும நிபுணர்

சருமம் கருமையடையாமல் பாதுகாக்கவும், எந்த சேதமும் ஏற்படாமல் இருக்கவும் சன் ஸ்க்ரீன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். UV rays, blue light போன்றவற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

Update:2024-06-04 00:00 IST
Click the Play button to listen to article

இன்று மார்கெட்டில் ஏராளமான சரும பராமரிப்பு பொருட்களை நம்மால் பார்க்க முடிகிறது. நமது சருமத்திற்கு எது பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமலேயே பலரும் பல ப்ராடக்ட்ஸை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்காக அதைவிட அதிகமாக செலவு செய்கிறார்கள். சரும பராமரிப்பு தொடர்பான தவறான கருத்துகள் குறித்தும், சருமத்திற்கு ஏற்றவாறு எப்படி பராமரிப்பது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறார் தோல்நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் மைத்ரேயி ராஜேந்திரன்.

அடர், மாநிறம் மற்றும் வெளிர் நிறம் என வெவ்வேறு சரும நிறங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன?

சரும நிறம் என்பது மரபணுரீதியாக நமக்கு கிடைப்பது. எப்போது சரும நிறத்தை மாற்றவேண்டும் என நினைக்கிறோமோ அப்போதுதான் அதனால் பிரச்சினைகள் வரும். மற்றபடி, தினசரி சரும பராமரிப்பை மேற்கொள்வது சருமத்திற்கு நன்மையையே தரும். உதாரணத்திற்கு, மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்குள்ளவர்களுக்கு வெள்ளை சருமம் இருக்கும். அதற்கு அவர்கள் சருமத்தில் மெலனோசைட்கள் குறைவாக இருப்பதே காரணம். அவர்களுக்கு சூரிய கதிர்களால் புண்கள் மற்றும் தோல் கேன்சர் போன்றவை எளிதில் வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியா உட்பட ஆசிய மக்களுக்கு மெலனின் அதிகமாக இருக்கும். அதுவே சூரிய கதிர்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். இதனால் உலகளவில் ஒப்பிடும்போது நமது சருமத்தில் நன்மைகள்தான் அதிகம் இருக்கின்றன.

ஆரோக்கியமான சருமம் எப்படி இருக்கவேண்டும்? 

சருமத்தை வெளியே பராமரித்தால் மட்டும் போதாது; உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பொருத்துதான் சரும ஆரோக்கியம் இருக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, தூக்கம் போன்றவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும். வெள்ளையாக இருந்தால் ஆரோக்கியமான சருமம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சரும நிறத்தை வைத்து ஆரோக்கியத்தை கணக்கிடமுடியாது. சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருப்பதோடு, ஒரே டோனிலும் (even tone) இருக்கவேண்டும். தேவையற்ற அலர்ஜிகள் வராமல் தடுப்பது, முதுமை தோற்றத்தை தள்ளிப்போடுவது போன்றவைதான் ஆரோக்கியமான சருமத்திற்கான அறிகுறிகள்.


எண்ணெய் அல்லது வறண்ட சருமத்திற்கு ஏற்றவாறு CTM ப்ராடக்டஸை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்

எந்தெந்த சருமத்திற்கு ஏற்ப CTM ப்ராடக்டஸை தேர்ந்தெடுக்கவேண்டும்?

இப்போது எல்லோரும் CTM பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதில் டோனரை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. அதை பயன்படுத்துவதால் எந்த பிரச்சினையும் வராது. சருமம் ஃப்ரஷ்ஷாக இருக்கும். நிறைய டோனர்களில் சாலிசிலிக் ஆசிட் போன்ற சருமத்திற்கு தேவையான மூலக்கூறுகள் இருக்கின்றன. அவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். க்ளென்சர் மற்றும் மாய்ச்சுரைசரை சருமத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சருமத்தில் சுரக்கும் எண்ணெயை குறைக்கும் வகையில் சில க்ளென்சர்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த க்ளென்சர்களை எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இதை வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் மேலும் வறட்சியாக்கிவிடும். எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் ஹைட்ரேட்டிங் அல்லது மைல்டு க்ளென்சர்களை பயன்படுத்தலாம்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் என்ன மாதிரியான மாய்ச்சுரைசர் பயன்படுத்தினால் முகத்தில் எண்ணெய் வடியாது?

பொதுவாகவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ச்சுரைசர் பயன்படுத்த தேவையில்லை என நினைப்பார்கள். ஆனால் மாய்ச்சுரைசருக்கும் எண்ணெய் சருமத்திற்கும் தொடர்பில்லை. சருமத்தின் மேற்புற அடுக்கை பாதுகாக்கத்தான் மாய்ச்சுரைசர் பயன்படுத்துகிறோம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ச்சுரைசர் உட்பட மற்ற எந்த சரும ப்ராடக்ட்ஸை வாங்கினாலும் அதில் நான்-கோமிடோஜெனிக் அல்லது ஆயில்-ஃப்ரீ அல்லது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது என குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சரும கருமையை (Pigmentation) போக்க க்ளைகாலிக் ஆசிட் போன்ற மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாமா?

சாலிசிலிக் ஆசிட், க்ளைகாலிக் ஆசிட் போன்றவற்றை ‘ஆக்ட்டிவ்ஸ்’ என்று சொல்கிறோம். இதுபோன்ற ஆக்ட்டிவ்ஸை மருத்துவரின் பரிந்துரையின்றி தானாக வாங்கி பயன்படுத்துவது நல்லதல்ல. இதுபோன்ற ஆசிட் மூலக்கூறுகள் சிலருடைய சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவர் பரிசோதித்து, ஒருவருடைய சருமத்திற்கு என்ன ஆசிட் மூலக்கூறு பிரச்சினையை ஏற்படுத்தாது என்பதை கண்டறிந்து வழங்கும்போது எந்த எதிர்வினையும் ஏற்படாது. சரும கருமை ஏற்பட்டிருப்பவர்கள் அது மோசமாகாமல் இருக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். சருமம் கருமையடையாமல் பாதுகாக்கவும், எந்த சேதமும் ஏற்படாமல் இருக்கவும் சன் ஸ்க்ரீன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். UV rays, blue light போன்றவற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.


மார்க்கெட்டில் கிடைக்கும் க்ரீம்களை மருத்துவர் பரிந்துரையின்றி வாங்கி பயன்படுத்தக்கூடாது

சன் ஸ்க்ரீனை எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்?

சன் ஸ்க்ரீனை எல்லா காலநிலைகளிலும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் எல்லா நாளுமே சூரிய ஒளியின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். எப்போது வெளியே சென்றாலும் அதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி முகத்திற்கு போடும்போது 2 finger rule-ஐ பயன்படுத்தவேண்டும். அதேபோல் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பூசவேண்டும். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் 3 அல்லது 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் சன் ஸ்க்ரீன் தடவவேண்டும். காலையில் தடவும் சன்ஸ்க்ரீன் மாலைவரைக்கும் அதே அளவு பாதுகாப்பை கொடுக்காது.

Sun Tan-ஐ நீக்குவதற்கு உருளைக்கிழங்கு, தக்காளி ஜூஸ்களை பயன்படுத்தலாமா?

Sun Tan ஓரிரு மாதங்களில் தானாகவே போய்விடும். அப்படி போகாத பட்சத்தில் சரும நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனென்றால் ஏற்கனவே சூரிய கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் புண், அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது உருளைக்கிழங்கு, தக்காளி, எலுமிச்சை போன்ற பொருட்களை பயன்படுத்தும்போது அதனால் சருமம் மேலும் பாதிப்படையும். இதுபோன்ற பொருட்கள் பொதுவாகவே சருமத்திற்கு நல்லதல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால் ஆரம்பத்தில் எந்த ரியாக்‌ஷன் காட்டாவிட்டாலும் ஒருகட்டத்தில் ரியாக்ட் பண்ணும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.


வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் போட்டுக்கொள்ள வேண்டும்

ஏபிசி ஜூஸ் குடிப்பதால் பலன் கிடைக்குமா? அல்லது பாதிப்பு ஏற்படுமா?

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டில் நிறைய ஆன்டி ஆக்சிடண்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றை ஜூஸாகத்தான் குடிக்கவேண்டும் என்று அவசியமில்லை. அப்படியே சாப்பிட்டாலும் சத்துகள் கிடைக்கும். இவை உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆக்ஸிடேட்டிவ் டேமேஜையும் சரியாக்கும். ஆக்ஸிடேட்டிவ் டேமேஜ் ஏற்படுவதால்தான் சரும கருமை, வயதான தோற்றம் போன்றவை ஏற்படுகிறது. தினமும் ஏபிசி காய்கறிகளை எடுத்துக்கொண்டால் அவை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். ஏபிசி ஜூஸ் குடித்தால் கருமை நீங்குமே தவிர சரும நிறம் கூடாது. இவை தவிர, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கும் உணவுகளையும் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி குறைந்தது ஒரு காய் மற்றும் ஒரு பழம் சேர்ப்பது அவசியம்.

டாட்டூ போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன? இதனால் கேன்சர் வருமா?

டாட்டூ போடுவதால் கேன்சர் வருவதற்கான சான்றுகள் இதுவரை இல்லை. ஆனால் எந்த இடத்தில் டாட்டூ போடுகிறோம் என்பதை அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோக்களுக்கு சென்று ஆலோசித்து போடவேண்டும். அதுதவிர உடலில் கிருமிகளின் தாக்கம் இருக்கும் இடங்களில் போட்டாலோ அல்லது மற்றவருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினாலோ தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. உடலில் முக்கியமான நரம்புகள் செல்லும் இடங்களில் டாட்டூ போடுவதை தவிர்ப்பது நல்லது.


ஏபிசி ஜூஸ் குடித்தால் உடலில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிடேட்டிவ் டேமேஜ் சரியாகுமே தவிர சரும நிறம் கூடாது

சரும முடியை நீக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உடல் மற்றும் முகத்திலிருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதால் எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படாது. அதேசமயம் முடி இருப்பதால்தான் சருமம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தமும் இல்லை. அழகாக தெரியவேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ முடியை நீக்கும்போது என்ன முறையை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நல்ல ரிசல்ட் வேண்டுமென்றாலும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கவும் லேசர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அடுத்ததாக ட்ரிம்மர் மற்றும் ரேசர் போன்றவற்றை பயன்படுத்துவதும் பாதுகாப்பானதுதான். ஆனால் அதற்கான முறையான வழிமுறைகளை பின்பற்றவேண்டும். வாக்ஸிங் மற்றும் த்ரெட்டிங் செய்யும்போது சருமம் பாதிப்படையும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை முடிந்தவரை தவிர்த்துவிடலாம்.

ரேசர் பயன்படுத்தும்போது வறண்ட சருமத்தின்மீது அப்படியே பயன்படுத்தக்கூடாது. க்ளென்சர் அல்லது மாய்ச்சுரைசர் தடவியபிறகுதான் பயன்படுத்தவேண்டும். மிகவும் மென்மையாக கையாள்வதுடன், முடி வளர்ச்சியின் திசையிலேயே ரேசரை பயன்படுத்தவேண்டும். எதிர்திசையில் பயன்படுத்தினால் in-grown hair வரும் வாய்ப்புகள் அதிகம். ரேசர் பயன்படுத்தியவுடன் மாய்ச்சுரைசர் தடவிக்கொண்டால் நல்லது.

ஸ்கின் கேன்சர் வருவதற்கான காரணம் என்ன? அதை எப்படி கண்டுபிடிப்பது?

நீண்ட நாட்கள் சூரிய கதிர்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும்போது ஸ்கின் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதுபோக, மரபணுரீதியாகவும் நிறையப்பேருக்கு கேன்சர் வருவதற்கான தன்மை உடலிலேயே இருக்கும். இது இல்லாமலும் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மெலனோமா என்ற வகை கேன்சர் இந்தியர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் அதுவும் வரலாம். இதுதவிர வேறு சில ஸ்கின் கேன்சர்களும் இருக்கின்றன. அவையும் இந்திய சருமத்திற்கு வருவது அரிதுதான். உதாரணத்திற்கு பல வருடங்களாக ஒருவருக்கு இருக்கும் தழும்பு அல்லது மச்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, அரிக்கவோ அல்லது நீர் வடியவோ அல்லது பெரிதாகவோ அல்லது வெயிலில் செல்லும்போது எரியவோ செய்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும். உடனடியாக பரிசோதனை செய்துவிட்டால் பயாப்சி மூலம் அது என்ன பிரச்சினை என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கேன்சராக இருந்தால் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம்.


சூரிய கதிர்களின் தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும்போது ஸ்கின் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்

குழந்தைப் பிறப்புக்குப்பின் வரக்கூடிய ஸ்ட்ரெட்ச் மார்க்கை சரிசெய்ய முடியுமா?

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை பெரும்பாலும் சரிசெய்யமுடியாது. சருமம் விரிவடையும்போது சருமத்தின் ஆழமான அடுக்குகளில் இருக்கும் கொலாஜன் மற்றும் ஃபைபர் போன்றவை அளவுக்கு அதிகமாக விரிவடைவதாலோ அல்லது உடைவதாலோதான் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகிறது. ஸ்ட்ரெச் மார்க்ஸின் கலர் மற்றும் அளவை குறைக்கமுடியும். ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஸ்ட்ரெட்ச் மார்க் குறைவாக இருந்து குழந்தை பிறந்தவுடன் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தால் சில நேரங்களில் முழுவதுமாக சரிசெய்யலாம்.

ஃபேஷியல் செய்வதில் இருக்கும் நன்மை தீமைகள் என்னென்ன?

அதிக தாக்கம் ஏற்படாமல் சருமத்தை ரிலாக்ஸ் ஆக்கவும், மசாஜ் செய்யவும் செய்யப்படுவதுதான் ஃபேஷியல். அதற்கு பயன்படுத்தும் ப்ராடக்ட்ஸ் சருமத்திலிருக்கும் கருமையை நீக்குவது, மிருதுவாக்குவது போன்ற வேலைகளை செய்யும். எந்தவகை ஃபேஷியல் செய்தாலும் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்வது நல்லது. நேச்சுரல் மற்றும் ஆர்கானிக் ப்ராடக்ட்ஸை பயன்படுத்தி ஃபேஷியல் செய்தாலும் சிலருக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


ஆர்கானிக் ப்ராண்டாக இருந்தாலும் ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லதல்ல

வெட்டிவேர் போன்ற ஸ்க்ரப்களை பயன்படுத்தலாமா?

ஓடிசி அல்லது ஆர்கானிக் ப்ராண்டாக இருந்தாலும் ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லதல்ல. ஸ்க்ரப்களை பயன்படுத்தும்போது சருமத்தில் ஏற்கனவே இருக்கும் உராய்வுகள் மேலும் அதிகமாகும். பயன்படுத்தியவுடன் ப்ரைட்டானது போல தோன்றினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமம் கடினமாகி கருமையும் அதிகமாகும். சில ப்ராடக்ட்ஸ் சருமத்திற்கு ஒத்துப்போனால் பயன்படுத்தலாம். அதையே ஸ்க்ரப்பாக பயன்படுத்தக்கூடாது.

லெமன், ஆரஞ்சு போன்ற பீலிங் பவுடர்களை பயன்படுத்துவதால் என்ன பலன்?

சாப்பிடும் பொருட்களை சருமத்தின்மீது பயன்படுத்துவதால் எந்த பலனும் கிடைக்காது. அதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே போதும். சாப்பிடும் பொருட்களை பவுடராக்கி பயன்படுத்தும்போதோ அல்லது ஜூஸாக்கி சருமத்தில் தடவும்போதோ சிட்ரிக் ஆசிட் சருமத்தை சேதப்படுத்தலாம். கடலை மாவு, பயித்தம் மாவு போன்றவை சருமத்திற்கு ஒத்துப்போனால் தாராளமாக பயன்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்