குற்றச்செயல்களுக்கு துணைபோகும் "டெலிகிராம் செயலி" - சி.இ.ஓ கைது!

உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் டெலிகிராம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கிறது. யூ-டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வி-சாட் போன்ற செயலிகளில் இருக்கும் பெரும்பான்மையான வசதிகளுமே டெலிகிராம் என்ற ஒரு செயலியிலேயே இருப்பதால் பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் உட்பட பெரிய புள்ளிகள் பலரும் முக்கிய தரவுகள் மற்றும் தகவல்களை பரிமாற டெலிகிராம் செயலியைத்தான் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

Update:2024-09-03 00:00 IST
Click the Play button to listen to article

அமெரிக்க தேர்தல், இஸ்ரேல் - காசா போர், உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை போன்ற பலவற்றுக்கு மத்தியில் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டிருப்பது உலகளவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டு போலீசால் கைது செய்யப்பட்டு, பின்னர் பல தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சட்டவிரோதமாக பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு டெலிகிராம் செயலி துணைபோவதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடமிருந்து மறைப்பதாகவும், அதனால் அந்நிறுவனத்தின் சிஇஓவை கைது செய்திருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா அவரை விடுவிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியது. இந்நிலையில் 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு 5 மில்லியன் யூரோ அபராதம் செலுத்தி நிபந்தனையில் வெளிவந்திருக்கிறார் துரோவ். இந்தியாவில் பல சீன செயலிகள் தடை செய்யப்பட்டது போன்று பலநாடுகளில் டெலிகிராமும் தடைசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. டெலிகிராம் செயலியில் என்ன வசதிகள் மற்றும் பிரச்சினைகள் இருக்கின்றன? பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது எப்படி? பிற நாடுகள் அவரை விடுவிக்க முனைப்புக் காட்டியது ஏன்? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக பார்க்கலாம்.

டெலிகிராம் செயலியின் வசதிகளும் பிரச்சினைகளும்

39 வயதான பாவெல் துரோவ் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். இவரும் இவருடைய சகோதரரான நிகோலா துரோவும் இணைந்து 2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்த செயலிதான் டெலிகிராம். துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த செயலியை உலகளவில் சுமார் ஒரு பில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர். வாட்ஸ்-அப், மெசெஞ்சர் போன்ற பல செயலிகள் இருந்தாலும் டெலிகிராமை அதிகளவில் பயன்படுத்த முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதிலிருக்கும் குரூப் மற்றும் சேனல் வசதிகள்தான்.


டெலிகிராம் செயலி நிறுவனத்தின் சி.இ.ஓ. பாவெல் துரோவ்

மற்ற செயலிகளில் குறைந்த எண்ணிக்கையில்தான் ஒரு குரூப்பில் பயனர்களை சேர்க்கமுடியும் என்கின்ற நிலையில் டெலிகிராம் குரூப்பில் 2 லட்சம் பயனர்களை சேர்க்கமுடியும். அதுபோக, பிற செயலிகள் end-to-end encryption வசதியை default-ஆக வைத்திருக்கும் நிலையில், டெலிகிராமில் அது ஆப்ஷனாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயனர்களின் தரவுகளை அரசால் கண்காணிக்கமுடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக, தீவிரவாதம், கடத்தல் மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய பாலியல்ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் இந்த செயலியை பயன்படுத்தி குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதாக பிரான்ஸ் அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால் இந்த செயலி பாதுகாப்பு குறைவானது என்றும், அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு செயலி இயங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் 2022ஆம் ஆண்டு ஏற்கனவே சட்டவிதிகளுக்கு உட்படாததை காரணம் காட்டி சுமார் 5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு தங்களுடைய நாட்டு சட்டங்களை பின்பற்றவில்லை என்பதை காரணம்காட்டி, ஜெர்மனியும் ரூ.42 கோடியை அபராதமாக விதித்தது. 2023ஆம் ஆண்டு இதையே காரணம் காட்டி பிரேசிலும் டெலிகிராம் செயலியை சஸ்பெண்ட் செய்தது. இப்படி பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பிற நாடுகள் பாதுகாப்பு கொள்கைகளை மேம்படுத்தவும், அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயலியை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்றும் கூறிவரும் நிலையில், குறிப்பிட்ட பயனர்களின் தரவுகளை தர மறுத்ததாகக் கூறி, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.


சில முக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட டெலிகிராம்

அதன்பிறகு 2021ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் டெலிகிராம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கிறது. யூ-டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வி-சாட் போன்ற செயலிகளில் இருக்கும் பெரும்பான்மையான வசதிகளுமே டெலிகிராம் என்ற ஒரு செயலியிலேயே இருப்பதால் பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் உட்பட பெரிய புள்ளிகள் பலரும் முக்கிய தரவுகள் மற்றும் தகவல்களை பரிமாற டெலிகிராம் செயலியைத்தான் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை தடயமே இல்லாமல் நாமே டெலிட் செய்யும் அளவிற்கு இதில் வசதிகள் இருக்கின்றன. இத்தனை வசதிகள் இருப்பதால் என்னவோ, குற்றங்களும் இதன்மூலம் அதிக அளவில் நடப்பதாக நிறைய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக, நாடுகளுக்கு எதிரான சதி வேலைகளை செய்வோர் பயன்படுத்தும் செயலி டெலிகிராம்தான் என்று கூறியிருக்கின்றன.

Mossad உளவாளியால் காட்டிக்கொடுக்கப்பட்ட துரோவ்!

இப்படி பல தரப்புகளிலிருந்தும் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக இருப்பதாகவும், இந்த செயலி குற்றங்களுக்கு துணைபோவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டுவந்த நிலையில், சட்டவிரோத குற்ற செயல்களுக்கு துணைபோவதுடன், குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியதாகவும், பயனர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்த குற்றத்திற்காகவும் பாவெல் துரோவை ஆகஸ்ட் 24ஆம் தேதி கைது செய்தது பிரான்ஸ் அரசு. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் தொடர்ந்துவரும் நிலையில், அமெரிக்க நாட்டுடன் துணைநிற்கும், உலகிலேயே மிகச்சிறந்த உளவாளி அமைப்பான இஸ்ரேலின் Mossad அமைப்பைச் சேர்ந்த பெண்ணின் உதவியுடன்தான் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துபாயைச் சேர்ந்த 24 வயதான ஜூலி வாவிலோவா என்ற பெண், க்ரிப்டோ கோச் மற்றும் ஸ்ட்ரீமராக இருக்கிறார். ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படும் இவருக்கும், துரோவிற்கும் இடையே நீண்ட நாட்களாக தொடர்பு இருப்பதை அவருடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கும் பதிவுகள்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.


பாவெல் துரோவுடன் பயணித்த க்ரிப்டோ கோச் ஜூலி வாவிலோவா

ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ் மற்றும் அராபிக் போன்ற பல மொழிகளை சரளமாக பேசக்கூடிய இவர், துரோவுடன் பல நாடுகளுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கிறார். இப்பெண்ணுடன் அஜர்பைஜானிலிருந்து பிரான்ஸுக்கு ப்ரைவேட் ஜெட்டில் சென்ற துரோவை பிரான்ஸ் நாட்டு போலீசார் கைது செய்திருக்கின்றனர். இப்பெண் Mossad உளவாளி என தெரியக்கூடாது என்பதற்காகவே அவரையும் சேர்த்து கைது செய்திருப்பதாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும், அதற்குபிறகு அந்த பெண் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த செயலிமூலம்தான் ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் போர் குறித்த தகவல்களை பரிமாறி வந்ததாகவும், இப்போது இச்செயலிமீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் இரண்டு நாடுகளுக்கிடையேயான போரில்கூட பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த துரோவ்!

கிட்டத்தட்ட 5 நாட்கள் பிரான்ஸ் நாட்டின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த துரோவிடம் பலகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டதாக அந்நாடு தெரிவித்திருக்கிறது. அதன்பிறகு, பாரீஸ் நீதிமன்ற அமர்வின்முன்பு துரோவ் ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாதம், போதைப்பொருட்கள் கடத்தல், குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணைபோவதாகக் கூறி கிட்டத்தட்ட 12 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் கேட்ட விவரங்களுக்கு டெலிகிராம் தரப்பில் பதில் எதுவும் வராத காரணத்தால் பிப்ரவரி மாதத்திலிருந்து அதுகுறித்து விளக்கம் கேட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பே அதுகுறித்து விசாரணைக்கு அழைத்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால்தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் டெலிகிராம் செயல்பட்டு வருவதாகவும், விதிகளை முறையாக பின்பற்றுவதாகவும் டெலிகிராம் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.


அபராதம் செலுத்தி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த துரோவ்

மேலும் தங்களுடைய செயலியை பயன்படுத்தி மற்றவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு செயலியை பொறுப்பேற்க சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் 5 மில்லியன் யூரோவை அபராதமாக செலுத்தி நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கிறார் துரோவ். வாரத்திற்கு இரண்டுமுறை காவல்நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்றும், பிரான்ஸ் நாட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே துரோவ்மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்கள் அனைத்தும் நிரூபணமானால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

துரோவிற்கு கிடைக்கும் ஆதரவு!

ரஷ்ய நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் இன்றுவரை பாவெல் துரோவை தனது நாட்டு குடிமகனாகத்தான் கருதுவதாக, ரஷ்யா தாமாக முன்வந்து தெரிவித்திருக்கிறது. அவரை வெளிக்கொண்டுவர ரஷ்ய தூதரகத்தின் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் #FreePavel என்ற ஹேஷ்டேக்குடன் பாவெலின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.


துரோவிற்கு ஆதரவு தெரிவிக்கும் எலான் மஸ்க் - எதிர்ப்பு தெரிவிக்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

இப்படி தொடர்ந்து பல தரப்புகளிலிருந்து நேரடி மற்றும் மறைமுக அழுத்தங்கள் பிரான்ஸுக்கு எழுந்த நிலையில், துரோவின் கைது நடவடிக்கை அரசியல்ரீதியானது இல்லை என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் துரோவ் கைதிற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக பிரான்ஸிடமிருந்து லெக்லெர்க் டாங்கிஸ் மற்றும் ரஃபேல் உட்பட சில போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்