ஸ்கூலுக்கு வந்த 6 வயசு பச்ச புள்ளைய பாத்ரூம்ல வச்சி... வாத்தி செய்த கொடூரம்! குமுறும் பெற்றோர்!
சுமார் 7 மணிநேரம் போராட்டம் நடத்திய நிலையில், புதுச்சேரி - கடலூர் செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே தவளக்குப்பம் காவல்நிலையத்துக்கும், குழந்தைகள் நல குழுவுக்கும் இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
பிள்ளைகள் பள்ளிக்கு சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நிலை மாறி, பள்ளியிலேயே ஆசிரியர்களால் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. இதனால் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் பயப்படும் நிலை உருவாகிவிட்டது. பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ராமநாதபுரத்தில் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அடங்குவதற்குள் மற்றொரு பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில் 6 வயது சிறுமிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்த வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆசிரியரை பாதுகாக்க முயன்ற பள்ளிக்குள் புகுந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர், குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ளார். இதுபோன்று தவறு செய்யும் ஆசிரியர்கள்மீது கடுமையான தண்டனை எடுக்கப்படவேண்டுமென பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. புதுச்சேரியில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரத்தையும் காணலாம்.
பாத்ரூமில் வைத்து பாலியல் தொல்லை
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் படித்துவந்த 6 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு போக மறுத்துள்ளார். அவருடைய அம்மா வலுக்கட்டாயமாக அவரை பள்ளிக்கு கூட்டிப்போக முற்பட்டதில், உடலில் ஆங்காங்கே வலிப்பதாகவும், அதனால் பள்ளிக்கு போகமாட்டேன் எனவும் கூறி அழுதிருக்கிறார் சிறுமி. இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த சிறுமியின் தாயார் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லை என்பதையும், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிப்பதையும் பார்த்து மருத்துவரிடம் கூட்டிப்போயுள்ளார். மருத்துவமனையில் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரிடம் பொறுமையாக விசாரித்ததில் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்று ‘பேட் டச்’ செய்வதாக கூறியதுடன், இதுவரை தன்னிடம் அந்த ஆசிரியர் நடந்துகொண்ட மோசமான நடத்தை அனைத்தையும் விவரித்திருக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அடையாளம் காட்டும்படி சிறுமியை பெற்றோர் கூட்டிசென்றபோது, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆண் ஆசிரியர்களையும் ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று நிறுத்தியுள்ளனர். சிறுமியிடம் தன்னை துன்புறுத்திய நபர் யார் என்று கேட்டபோது ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி நிர்வாகத்திடமும் புகாரளித்துள்ளனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் அந்த ஆசிரியரை பாதுகாத்ததாக தெரிகிறது. விசாரித்ததில் அந்த ஆசிரியர் 25 வயது மணிகண்டன் என்பதும், அந்த பள்ளியில் 12ஆம் வகுப்பிற்கு வேதியியல் பாடம் எடுத்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. ஏற்கனவே அந்த நபர் 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்மீது புகார் உள்ளது தெரிந்ததும் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், சிறுமியை துன்புறுத்திய ஆசிரியரை பிடித்து அடித்து தாக்கி, சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சுமார் 7 மணிநேரம் போராட்டம் நடத்திய நிலையில், புதுச்சேரி - கடலூர் செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே தவளக்குப்பம் காவல்நிலையத்துக்கும், குழந்தைகள் நல குழுவுக்கும் இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
கழிப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டன்
போலீசார்மீது குற்றச்சாட்டு
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து மணிகண்டனை மீட்டு காவல்நிலையத்துக்கு கூட்டிச்சென்றனர். போலீசாரும் குற்றஞ்செய்த நபரை பாதுகாப்பதாக நினைத்து, ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து, வகுப்பறைகளிலிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், ஆசிரியரை பொதுமக்களின் பிடியிலிருந்து மீட்க, போலீசார் அவர்கள்மீது தடியடி நடத்தியதாக அடிபட்ட காயங்களை காட்டி சிறுமியின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டினர். தங்களிடம் மோசமாக நடந்துகொண்ட உதவி ஆய்வாளர் சண்முக சத்யா உட்பட பிற போலீசார்மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். மற்ற இடங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு சரியான நீதி கிடைக்காவிட்டாலும் தங்களுடைய ஊரில் இனி இதுபோல் நடக்க யாரும் முயற்சிக்கக்கூடாது, அந்த வகையில் இந்த ஆசிரியருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கள்மீது தடியடி நடத்திய போலீசார்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுமிக்கு நடந்த அவலத்தை மறைக்க நினைத்த பள்ளி தாளாளர்மீதும், பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட போலீசார்மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிக்கு சீல் வைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்மீது நள்ளிரவில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மணிகண்டனை அடித்து உதைத்ததோடு பள்ளியையும் சூறையாடிய சிறுமியின் உறவினர்கள்
மீனவர்கள் போராட்டம்!
தங்களுடைய ஊரில் சிறுமிக்கு நடந்த இந்த அவலத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மணிகண்டனை தங்களிடம் ஒப்படைக்குமாறும், சிறுமியிடம் அவன் நடந்துகொண்டதற்கு தக்க தண்டனையை தாங்களே கொடுப்போம் எனவும் உள்ளூர் பெண்கள் ஆக்ரோஷமாக பேசியதுடன், தொடர்ந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், பள்ளியின் நுழைவாயில் பூட்டுப்போடப்பட்டு மூடப்பட்டது. இதனால் 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் நடைபெறும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில், பள்ளிக்கு விரைவில் சீல் வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட மணிகண்டன் சிறுமியிடம் மட்டுமல்லாமல், மேல்நிலை மாணவிகளின் நோட்டுப்புத்தகங்களில் உடல்நலம் குறித்து விசாரிப்பதுபோல ஆபாச வார்த்தைகளை எழுதியுள்ளார். குறிப்பாக, சிறுமிகளிடம் மாத்திரை சாப்பிட்டாயா? என்பது போன்றும் மாதவிடாய் குறித்தும் பாலியல் ரீதியான வார்த்தைகளை எழுதியிருந்ததும் பெற்றோர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து மணிகண்டன் வகுப்பெடுத்த மாணவிகளின் நோட்டு புத்தகங்களை வாங்கி ஆய்வுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் மணிகண்டனை கைதுசெய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டம்
தொடரும் அவலங்கள்!
புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பள்ளி ஆசிரியர்களாலேயே மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன. சமீபத்தில் வேலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் முகமது சானேகோ என்பவர் 10-ஆம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்பும்படியும், வீடியோகால் செய்யும்படியும் கட்டாயப்படுத்தியதுடன், தான் சொல்வதை செய்யாவிட்டால் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். அதற்கு பயந்து, ஆசிரியர் சொன்னதைப்போன்று மாணவி நடந்துகொள்ள, அடுத்து பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்த மாணவனுக்கு உசேன் என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து, மனரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வரவே, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் போன்றோர் பள்ளிக்கே நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ஆசிரியர் உசேனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் ஒருபுறமிருக்க, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமையாசிரியர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக பள்ளியில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களே, மாணவ மாணவிகளிடம் இதுபோன்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது கவலையடையச் செய்கிறது.