"ஆடையின்றி வீடியோகால் வா" - பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டிய இளைஞனை தட்டித்தூக்கிய போலீஸ்!

சில பெண்கள் பயந்துபோய் முஜீப்பின் ஆசைக்கு இணங்கியதாகத் தெரிகிறது. இப்படி சுமார் 20 பெண்களுடைய நிர்வாணப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முஜீப்பின் செல்போனில் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து முஜீப் அலி மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

Update:2025-01-28 00:00 IST
Click the Play button to listen to article

சமூக ஊடகங்களின் தாக்கமானது சிறுவர் முதல் வயதானவர்கள்வரை காணப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் பலர் இன்ஸ்டாகிராம் செயலியின் பயன்பாட்டை அதிகம் விரும்புகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் மேக்கப், டான்ஸ், குக்கிங் மற்றும் தங்களது அன்றாட வாழ்க்கை குறித்து ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் பலருடன் பழக்கம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், அதை சிலர் தவறான நோக்கங்களுடன் பயன்படுத்துவதால், அவர்களுடைய வலையில் சிக்கி சிலர் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்நாப் சாட் போன்ற தொடர்பு செயலிகளின்மூலம் பல மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. அப்படி புதுச்சேரியில் சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் ஒருவர், அவரிடம் ஆபாச வீடியோ காலில் பேச வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அச்சிறுமி மறுக்கவே அவருடைய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அனுப்பி மிரட்டியுள்ளார். அந்த இளைஞனை திட்டம்போட்டு பிடித்த போலீசார் தற்போது போக்சோ சட்டத்தின்கீழ் அவனை கைதுசெய்திருக்கின்றனர். புதுச்சேரியில் நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய நட்பு

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிடுவதையும், ரீல்ஸ் போடுவதையும், ஸ்டோரி போடுவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்க விரும்பிய அப்பெண், தெரியாத நபர்களிடமிருந்து வரும் ரிக்வஸ்ட்களையும் அக்சப்ட் செய்திருக்கிறார். அப்படி அவருக்கு பழக்கமானவர்தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமாக்கோட்டையைச் சேர்ந்த முஜீப் அலி. முஜீப் அலி அந்த சிறுமியின் ஸ்டோரிகளுக்கு ரிப்ளை போடுவதில் ஆரம்பித்து தொடர்ந்து சாட்டிங்கும் செய்து வந்துள்ளார். நாளடைவில் இவர்களுக்கிடையே நட்பு உருவாகியிருக்கிறது. அந்த பழக்கத்தால் சிறுமி முஜீப்பிடம் தொடர்ந்து பேசிவந்துள்ளார். இருவருக்குமிடையேயான நட்புறவு வளர வளர வாட்ஸ்-அப் எண்ணையும் பகிர்ந்துள்ளார் அச்சிறுமி. முஜீப்பும் வாட்ஸ்-அப் மூலம் சிறுமியின் புகைப்படங்களை கேட்டு வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய முஜீப், தன்னுடன் வீடியோ காலில் ஆடையின்றி பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு ஒத்துக்கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த முஜீப், சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அதை அவருக்கே அனுப்பி வைத்துள்ளார். மேலும் தன்னை நேரில் வந்து சந்திக்காவிட்டால் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து விளக்கிக்கூறி அழுதுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகாரளிக்க, முஜீப் அலியை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.


ஆபாச வீடியோகால் பண்ணச்சொல்லி சிறுமியை மிரட்டிய முஜீப்

திட்டமிட்டு பிடித்த போலீசார்

போலீசாரின் திட்டப்படி, முஜீப்பிடம் தொடர்ந்து எப்போதும்போல பேசுமாறு சிறுமியிடம் கூறியிருக்கின்றனர். மேலும் நேரில் சந்திக்க வற்புறுத்திய முஜீப்பிடம், போலீசாரின் அறிவுரைப்படி புதுச்சேரி - கடலூர் எல்லைப்பகுதியான முள்ளோடை என்ற இடத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு சிறுமி கூறியிருக்கிறார். சிறுமி ஒருவழியாக தன்னை தனிமையில் சந்திக்க ஒப்புக்கொண்ட மகிழ்ச்சியில் திருவாரூரிலிருந்து பைக்கில் முள்ளோடை பகுதிக்கு வந்துள்ளார் முஜீப். ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முஜீப்பை பிடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, சிறுமி குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்த முஜீப், சிறுமியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சைபர் கிரைம் போலீசார், முஜீப்பை கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், திருவாரூரைச் சேர்ந்த முஜீப் அலி, என்ஜினீயரிங் படித்திருப்பதாகவும், சிங்கப்பூரில் வேலைசெய்துவந்த அவர், கொரோனா காலகட்டத்தில் 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இங்கு வந்தபிறகு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் தொடர்புகொண்டு பேசிவந்ததுடன், இதற்காகவே 16 இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தன்னுடன் பேசி பழகும் பெண்கள் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் அவர்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து, சிறுமியைப் போன்றே அவர்களையும் மிரட்டி வந்துள்ளான். அதில் சில பெண்கள் பயந்துபோய் முஜீப்பின் ஆசைக்கு இணங்கியதாகத் தெரிகிறது. இப்படி சுமார் 20 பெண்களுடைய நிர்வாணப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முஜீப்பின் செல்போனில் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து முஜீப் அலி மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.


முஜீப்பை பிடிக்க புதுச்சேரி போலீசார் போட்ட திட்டம்

போலீசாரின் விளக்கம்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் தவறாக நடக்கமுயன்ற சம்பவம் குறித்து புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விளக்கியுள்ளனர். ஆய்வாளர் தியாகராஜன் கூறுகையில், “கடலூருக்கு வரும்படி ஏற்கனவே சிறுமியிடம் கூறியிருந்த முஜீப், ‘நீ கடலூர் வரவில்லை என்றால் உன்னுடைய போட்டோக்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன்’ என்று மிரட்டியதுடன், மார்ஃபிங் செய்த ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஆய்வாளர் கீர்த்தி, தலைமை காவலர் இருசவேல், காவலர் அரவிந்தன், பெண் காவலர் கமலி ஆகியோருடன் நானும் கடலூர் சென்று, சிறுமியை வரச்சொன்ன இடத்திற்கே சென்றோம். அங்கு வந்த முஜீப்பை பிடித்ததுடன், அவனுடைய செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுமி உட்பட பலரின் மார்ஃபிங் செய்த புகைப்படங்கள் இருந்தன. மேலும் முஜீப்பிடம் நடத்திய விசாரணையில் 2020ஆம் ஆண்டிலிருந்தே இதே செயலில் அவன் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. இதற்காகவே 10க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி அவற்றின்மூலம் பல பெண்களிடம் சாட் செய்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணிபுரிந்துவந்த முஜீப், இந்தியா வந்துள்ளான். மீண்டும் அங்குசெல்ல முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இடையே பெண்களிடம் தவறாக நடந்துவந்தது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தெரியவந்திருக்கிறது. இன்னும் அவனுடைய செல்போன் தொடர்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.


சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்கும் பெண்களுக்கு எஸ்.பி. நாரா சைதன்யா அட்வைஸ்

இச்சம்பவம் குறித்து இணையவழி எஸ்.பி. நாரா சைதன்யா பேசுகையில், “சமூக வலைதளங்களில் முகம் தெரியாத புதிய நபர்கள் கொடுக்கும் ரிக்வஸ்ட்களை ஏற்கவேண்டாம். சமூக வலைதளங்களில் நாம் பார்ப்பது அனைத்தும் உண்மை இல்லை. ஆடையின்றி புகைப்படம் எடுப்பதும் வீடியோகால் செய்வதும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே அதுபோன்ற புகைப்படங்கள் எடுக்கவேண்டாம். யாருக்கும் வீடியோகாலும் செய்யவேண்டாம். சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் வந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடமோ அதுபற்றி தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு இணைய வழியில் புகார் அளிக்கவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்