கணவன் கண்முன்னே பெண்ணின் ஆடையை கழற்றி அட்டூழியம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெற்ற போலீசார்!

மூவருக்கும் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், தலா ரூ.36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு பிறகு விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update:2025-03-04 00:00 IST
Click the Play button to listen to article

‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதன் அர்த்தம் அனைவரும் நன்கு அறிந்ததே. நாம் யாராக இருந்தாலும் செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். 24 வருடங்களுக்கு முன்பு செய்த தவறுக்கான தண்டனை பெற்றுள்ளனர் திண்டுக்கல்லை சேர்ந்த 3 போலீசார். 2001ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட பெண்ணை கணவரின் கண்முன்னே ஆடைகளை கழற்றி மானபங்கம் படுத்தியதில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த அவமானம் தாங்காமல் விஷம் அருந்தி கணவனும் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் தீர்ப்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியிருக்கிறது. அப்போது பணியில் இருந்த காவலர்கள் தற்போது ஓய்வுபெற்றிருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒருபுறம் இருக்க, 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 13 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கும் அபராதத்துடன்கூடிய சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் தீர்ப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு வழக்குகளின் முழு விவரத்தையும் விரிவாக பார்க்கலாம்.

2001ஆம் ஆண்டு நடந்த கொடுமை!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல்நிலையத்துக்குட்பட்ட சேடப்பட்டி கிராமத்தில் கூலித்தொழில் செய்யும் ஒருவர் தனது மனைவியுடன் வசித்துவந்துள்ளார். 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்துவீட்டில் நகை திருட்டுப்போனதாக கொடுக்கப்பட்ட புகாரில் விசாரணைக்காக, இருவரும் செம்பட்டி காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் பெண்களை இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் தங்கவைப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அந்த காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த ரங்கசாமி, காவலர்களான வீரத்தேவர் மற்றும் சின்னத்தேவர் ஆகியோர் அரசின் விதிமுறைகளை மீறி அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இரவு நேரத்தில் இருவரையும் காவல் நிலையத்தில் தங்க வைத்ததோடு, அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு, ஆடைகளை கழற்றி மானபங்கம் செய்துள்ளனர். அதுபோக, விசாரணை என்ற பெயரில் விடிய விடிய லத்தியாலும் அடித்து தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக காயமடைந்த இருவரையும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டுமென்று மிரட்டி அனுப்பியுள்ளனர். இந்த அவமானம் தாங்காமல் வீட்டிற்கு சென்றதும் அந்த பெண் தற்கொலை செய்ய முயன்று வீட்டினருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் ஊராரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காப்பாற்றியுள்ளனர். இதில் மனமுடைந்த அந்த நபர், தனக்கும் தனது மனைவிக்கும் நேர்ந்த கொடுமை குறித்து அப்போதைய திண்டுக்கல் கோட்டாட்சியரான ஜெகநாதனிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிப்ரவரி 25ஆம் தேதி விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் அந்த நபர். அவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


போலீசாரின் தவறான விசாரணையால் தற்கொலைக்கு முயன்ற பெண் (உ.ம்)

24 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை

பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து பிரச்சினை பெரிதாகவே, இச்சம்பவம் குறித்து செம்பட்டி காவல்நிலையம் மற்றும் ஊர் மக்களிடம் கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மற்றும் 40 சாட்சியங்களை திண்டுக்கல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஜெகநாதன், இதுகுறித்த வழக்கையும் தொடர்ந்தார். அதில், ஆய்வாளர் ரங்கசாமி, காவலர்கள் சின்னத்தேவர் மற்றும் வீரத்தேவர் ஆகியோர்மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகளிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் செம்பட்டி காவல்நிலையத்தில் அப்போது பணியில் இருந்த 3 பேரும் குற்றவாளிகள் என பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்றுபேருமே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஆய்வாளர் ரங்கசாமிக்கு 77 வயது, காவலர்களான சின்னத்தேவருக்கு 69 வயதும், வீரத்தேவருக்கு 68 வயதும் ஆகிறது. இவர்கள் மூவருக்கும் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், தலா ரூ.36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு பிறகு விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


24 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெற்றிருக்கும் போலீசார்

சென்னை வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 19 வயது நபரான பிரகாஷ், தனது 16 வயது கூட்டாளியுடன் சேர்ந்துகொண்டு, 13 வயது சிறுமியை அருகிலிருந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் தூக்கிச்சென்று இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர்மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பிரகாஷ் குற்றம்புரிந்தது நிரூபணமான நிலையில், கைது செய்யப்பட்டான். 16 வயது சிறுவன் மைனர் என்பதால் அந்த வழக்கானது சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பிரகாஷ்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தின் தீர்ப்பும் திண்டுக்கல் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட அதேநாளில், அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி வழங்கப்பட்டது. பிரகாஷ் மீது தொடுக்கப்பட்ட வழக்கானது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையுடன், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்மீது பாய்ந்த போக்சோ

சிறார் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?

12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது வழக்குத் தொடரமுடியாது. அதற்கு நமது சட்டத்தில் இடமில்லை. மாறாக, தவறு செய்த சிறுவனின் பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்கப்படும். அதையும் மீறி குற்றம்புரிந்தால் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கும் சேவைமையங்களை அணுக பரிந்துரை செய்யப்படும். அப்படியும் சிறுவன் திருட்டு அல்லது பிற குற்றத்தை நிறுத்தவில்லை என்னும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சிறுவன் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு மேற்பார்வையாளரை நியமிக்கும். பெரும்பாலும் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை சீர்படுத்த HALT என்று சொல்லக்கூடிய சிறார் குற்ற தடுப்பு திட்டத்திடம் கொண்டுசெல்லலாம். இதில் பங்கேற்று தன்னால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டாலோ அல்லது ஏற்படுத்திய சேதத்திற்கான பணத்தை செலுத்திவிட்டாலோ HALT திட்டத்தை முடித்ததாக அர்த்தம். அதன்பிறகு சிறுவன்மீது குற்றவியல் பதிவுகள் எதுவும் இருக்காது. ஆனால் அதுவே சிறுவன் இந்த திட்டத்தில் பங்கேற்க மறுப்பது அல்லது முடிக்காமல் பாதியில் விட்டுவிடுவது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் அதுவே அரசு வழக்கறிஞர்மூலம் வழக்காக மாற்றப்படும். 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தவறு இழைக்கும்போது அவர்கள் சிறார் குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை பெறுவார்கள். சில நேரங்களில் 22 வயதுவரைகூட இந்த சட்டம் பொருந்தும். பெரும்பாலும் இவர்களுக்கு ஊதியமில்லாத சமூக சேவை மற்றும் பயிற்சிகளே தண்டனையாக வழங்கப்படும். இதில் 16 அல்லது 17 வயது சிறுவர்களுக்கு அதிகபட்ச தண்டனையே 2 ஆண்டுகள்தான். அதுவே அதற்கும் கீழ் என்றால் ஒரு ஆண்டுதான் தண்டனை காலம். 

Tags:    

மேலும் செய்திகள்