வரதட்சணையாக "இருட்டுக்கடையை" கேட்டார்களா? அல்லது பெண்ணின் தவறை மறைக்க நாடகமா? உண்மை என்ன?
அல்வாவுக்கு பெயர்போன "திருநெல்வேலி இருட்டுக்கடை"யை வரதட்சணையாக எழுதி தருமாறு மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாக, இருட்டுக்கடை அல்வா உரிமையாளரும், அவரது குடும்பத்தினரும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகாரை மறுத்துள்ள மருமகன் வீட்டார், திருமணம் ஆகியும் நேரம் காலம் இல்லாமல் ஃபோன் பேசிக்கொண்டு இருக்கும் தங்கள் பெண்ணின் தவறை மறைக்கவே அவர்கள் இவ்வாறு நாடகம் ஆடுவதாகவும், மேலும் அந்த கடையே அவர்களுடையது இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர். நெல்லை இருட்டுக்கடை அல்வா பிரச்சினையின் உண்மை பின்னணி என்ன? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இருட்டுக்கடை அல்வா வரலாறு
நெல்லை இருட்டுக்கடையின் தோற்றம்
"இருட்டுக்கடை அல்வா", ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் முதன் முதலாகத் திருநெல்வேலியில் 1940-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள கடைகளிலேயே இந்த இருட்டுக்கடை அல்வா கடை மட்டுமே மிகவும் பழமை வாய்ந்த கடை ஆகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றால் போல இருட்டான சூழ்நிலையில்தான் இன்றுவரை செயல்படுகிறது. பழைய காலத்து நாற்பது வாட்ஸ் குண்டு பல்புதான் இன்று வரை அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய 85 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அல்வா கடையானது, அலாதியான தனது அல்வாவின் சுவையால் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பிரசித்தமானது. முன்னர் இந்தியாவின் வட மாநிலத்திலிருந்து வணிகம் செய்வதற்காகத் தமிழகத்தின் தென்பகுதியான திருநெல்வேலிக்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த சிங் குடும்பத்தினர், அவர்கள் ஊரின் அல்வாவை இங்கு தயார் செய்துள்ளார்கள். தாமிரபரணியின் தண்ணீர் அல்வாவிற்கு பயன்படுத்தப்படுவதால் அலாதியான சிறப்பான தனிச்சுவை இந்த அல்வாவிற்கு உண்டு.
பிப்ரவரியில் நடந்த கோலாகல திருமணம்
இப்படியாக கடந்த 4 தலைமுறைகளாக இருட்டுக்கடையை நடத்திவரும் குடும்பத்தை சேர்ந்த கவிதா சிங்கின் மகளான ஸ்ரீ கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த யுவராஜ் சிங் மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நெல்லை மாவட்டம் தாழையூத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருநெல்வேலியே திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழா, பாரம்பரிய முறையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என திருமண விழா களை கட்டியது. சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் வைரலாகின. திருமணத்தில் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். யார் கண் பட்டதோ என்னவோ தடபுடலாக நடந்த திருமணம் தற்போது தடாலடியாக விவாகரத்து வரையில் அதுவும் தமிழக முதல்வரிடம் புகார் தெரிவிக்குமளவிற்கு விஷயம் பூதாகரமாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
என்ன நேர்ந்தது புதுப்பெண் ஸ்ரீ கனிஷ்காவிற்கு?
திருமணமான சில நாட்களிலேயே ஸ்ரீ கனிஷ்காவிற்கு திருமண வாழ்க்கை கசந்து போயுள்ளது. காரணம் ஸ்ரீ கனிஷ்காவின் குடும்பத்திற்கு சொந்தமான இருட்டுக்கடை அல்வா கடையை, கணவர் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணையாக கேட்டதாக நெல்லை காவல் நிலையத்தில் கனிஷ்கா பரபரப்பான புகார் அளித்துள்ளார். திருமணமாகி 40 நாட்களே கடந்த நிலையில், கடையை கேட்டு, தனது கணவர் பல்ராம் சிங்கின் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக புதுமணப்பெண் கனிஷ்கா குற்றம்சாட்டியுள்ளார். பல்ராம் சிங் குடும்பத்தார் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, கனிஷ்காவின் தாயாரான கவிதா சிங்கும் திருநெல்வேலி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்த புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரு குடும்பமும் மாறிமாறி குற்றச்சாட்டு!
இதனை தொடர்ந்து இரண்டு குடும்பங்களும் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது, இருட்டுக்கடை பிசினஸை எழுதிக்கொடுக்கவில்லை என்றால் உங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று தாலி கட்டிய அரை மணி நேரத்தில் உறவினர்கள் முன்வைத்து மணமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் கடுமையாக பேசினார்கள் என்றும், காசுக்காக தன் மகளை கல்யாணம் செய்திருக்கிறார்கள் என்றும் கனிஷ்காவின் தாயார் கவிதா சிங் கூறியுள்ளார். இதனையடுத்து கோவையில் கனிஷ்காவின் கணவரும், மாமனாரும் செய்தியாளர்களைச் சந்தித்து பதில் பேட்டி அளித்தனர். கவிதா சிங்கின் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.
மணமகன் பல்ராம் சிங் & அல்வா கடை
கடையே அவர்களுடையது இல்லை?
கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதாரண குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்துதான் நாங்கள் அந்த பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால், 350 நாட்களுக்கு முன்னர்தான் அந்த இருட்டுக்கடை அல்வா கடையே கவிதா சிங்கின் கைக்கு வந்துள்ளது. அதற்கு முன் அவர் ஒரு மெக்கானிக்கின் மனைவி மட்டுமே. அவர்கள் வெறும் கார் வொர்க்ஷாப் நடத்தி வந்தார்கள். அவருடன் பார்ட்னராக இருந்தவர்களின் கையெழுத்தை இவரே போட்டுக்கொண்டு அந்த அல்வா கடையை எடுத்துக்கொண்டதாக நெல்லை டிசி அலுவலகத்தில் புகார் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த திருமணத்தில் தாங்கள் ஒரு ரூபாய்கூட வரதட்சணை வாங்கவில்லை என்றும், அவர்கள் விருப்பப்பட்டு மகளுக்கு சீர் செய்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் இந்த கடையில் உரிமையாளர்களாக இருந்த சுலோச்சனா பாய், ஹரி சிங் மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுவதாகவும், அவர்கள் இறந்தவுடனேயே அல்வா கடை, கவிதா சிங் கைக்கு வந்துவிட்டதாகவும், இந்த கடையை கைப்பற்றுவதற்கு முறைகேடு செய்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் திருநெல்வேலி ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதற்கான ஆவணங்கள் இன்னும் இருக்கிறது. டாக்குமெண்ட் மெயின்டனன்ஸ் சென்டருக்கு அது சென்றுவிட்டதால், நாங்கள் ஏதாவது செய்துவிடுவோமோ என்று பயந்துதான் என் மீதும் புகார் சொல்கிறார்கள். இருட்டுக்கடை அல்வா என்ற பெயர் இருக்கிறதே தவிர, இவர்களுக்கு திருநெல்வேலி இந்தியன் வங்கியில் 5 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இவர்கள் இரண்டு கார் வைத்திருந்தார்கள். அதற்கும் தவணை செலுத்த முடியாமல் கடந்த வாரம் இன்னோவா காரை விற்றுவிட்டார்கள். மருமகள் கனிஷ்காவுக்கு இரவு நேரங்களில் தேவை இல்லாமல் செல்போன் அழைப்புகள் வருகின்றது. இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, அவள் சிங்கிள் சைல்டு என்பதால் நண்பர்கள் அதிகம், அவர்களுடன்தான் பேசுகிறார் என்று எங்களிடம் தெரிவிக்கிறார்கள். இதேபோன்று அந்த கிளாஸுக்குப் போகிறேன், இந்த கிளாஸுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு 2 – 3 மணி நேரத்துக்கு கனிஷ்கா வெளியே சென்றுவிடுவதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டால், பார்லருக்கு போய்விட்டதாகவும் கூறுகிறார். 5 மணி நேரமாக ஒரு பெண் வீட்டுக்கே வரவில்லை என்றால், நாங்கள் என்ன சொல்வது? இதுபோன்று, கேள்வி ஏதும் கேட்காமல் விட்டுவிட்டு இருக்கும் குடும்பம் நாங்கள் கிடையாது. இதையெல்லாம் கேட்டால் என்னை சந்தேகப்படுகிறீர்களா? என்ற ரீதியில் பிரச்சினை செய்கிறார். அதுவே இன்று இவ்வளவு பெரிய பிரச்சினையாகி, என் மகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கனிஷ்கா திருப்பிவிட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும், கனிஷ்காவிற்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்றுபோய் இருக்கிறது. எதனால் திருமணம் நிறுத்தப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. இந்த விவரங்களும் எங்களுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் தெரியவந்தது என்றும் கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் கூறியுள்ளார்.
மணமகன் பல்ராம் சிங் வீட்டார் மீது குற்றம்சாட்டிய மணமகள் கனிஷ்கா குடும்பத்தினர்
டிஃபெண்டர் காரை கேட்டோமா?
அத்துடன், கார் வாங்கித்தரும்படி நாங்கள் யாரும் வற்புறுத்தவில்லை என்றும், டிஃபெண்டர் காரை இவர்கள் புக் செய்ததாக சொல்கிறார்கள், ஆனால் அந்த காரை நான்தான் புக் செய்தேன் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மாமனார் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக சமரசமாக போகலாம் என்று தான் மெசேஜ் அனுப்பியதாகவும், அதை அவர்கள் டெலிட் செய்துவிட்டு மாற்றி சொல்கிறார்கள் என்றும், இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா மீது யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி இருதரப்பும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்வதால், உண்மையில் நடந்தது என்ன? என்பது முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே தெரியவரும். அதேநேரம், வரதட்சணை புகாராக தொடங்கிய இந்த பிரச்சினையின் மூலம், 2 மர்ம மரணங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.