தான் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை தந்த தந்தை... கணவனை கொன்று வெட்டி வீசிய மனைவி!

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டார்” என்று கூறியுள்ளார். சொந்த கணவனை கொடூர கொலைசெய்த சாவித்திரிமீது கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய சட்டப்பிரிவுகள் 101 மற்றும் 238-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update:2025-01-07 00:00 IST
Click the Play button to listen to article

தீய பழக்கம் தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாட்டால் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது இதனால் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த சில வருடங்களில் பெற்ற மகள்களையே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கும் தந்தைகள் குறித்த செய்திகளை அடிக்கடி பார்க்கமுடிகிறது. அப்படியொரு சம்பவம்தான் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் அதில் ட்விஸ்ட் என்னவென்றால் சொந்த மகளையே பாலியல் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய குடிகார கணவனின் தலையில் பெரிய கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததுடன், உடலை இரண்டாக வெட்டி வயலில் வீசியிருக்கிறார் மனைவி. போலீசாரின் விசாரணையில் முதலில் கொலைசெய்ததை மறுத்த அப்பெண், பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அதிர்ச்சி வாக்குமூலத்தையும் கொடுத்திருக்கிறார்.

துண்டு துண்டாக கிடந்த உடல்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள சிக்கோடி பகுதியில் உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாலே. கிட்டத்தட்ட 40 வயதாகும் இவருடைய மனைவியின் பெயர் சாவித்திரி(30). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், இளைய மகனும் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி இவர்கள் வாழும் உமாராணி கிராமத்தின் வயல்வெளியில் மனித உடற்பாகங்கள் கிடப்பதாக உள்ளூர் மக்கள் சிக்கோடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு தலை சிதைந்த நிலையில் இரண்டு துண்டுகளாக கிடந்த உடற்பாகங்களை கண்டறிந்து அதுகுறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது ஸ்ரீமந்த் என்பது தெரியவர, அதுகுறித்து அந்த கிராம மக்களிடம் விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் ஸ்ரீமந்திற்கு குடிப்பழக்கம் இருப்பதும், அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், அழுது புலம்பி நாடகமாடிவந்த ஸ்ரீமந்தின் மனைவி சாவித்திரிமீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் முதலில் இல்லை என்று மறுத்தபோதிலும் ஒருவழியாக தான் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். சாவித்திரி அளித்த வாக்குமூலம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


கொடூரமாக கொலைசெய்யப்பட்ட ஸ்ரீமந்த் - மனைவி சாவித்திரி

மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

சாவித்திரிக்கு மிக இளம்வயதிலேயே ஸ்ரீமந்துடன் திருமணம் நடந்திருக்கிறது. அப்போதிருந்தே ஸ்ரீமந்த் அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததுடன், தனக்கு பணம் வேண்டும் என்பதற்காக பலருடன் தனது மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். இப்படி எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்த இவர்களுடைய வீட்டில் ஜனவரி 1ஆம் தேதியும் அதேபோன்றதொரு பிரச்சினை அரங்கேறியுள்ளது. இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீமந்த், தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி சாவித்திரியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுக்கவே, தனது 13 வயது மகளை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சாவித்திரி, போதை தலைக்கேறி விழுந்து கிடந்த கணவனின் தலையில் பெரிய கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இரவில் தனி ஆளாக உடலை இழுத்துக்கொண்டு போக முடியாததால் இரண்டு துண்டுகளாக வெட்டி, சிறிய ட்ரம்மில் அடைத்து உருட்டிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து சாவித்திரி அளித்த வாக்குமூலத்தில், “என் கணவர் தினமும் என்னை பணம் கேட்டு அடிப்பார். அவருக்கு பைக் வாங்கவேண்டும் என்பதற்காக பலருடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துவார். அன்றிரவு என்னை அவருடன் இருக்க அழைத்தார். நான் மறுத்ததும் எங்களுடைய பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போதையில் மயங்கிக்கிடந்த எனது கணவனின் தலையில் பெரிய கல்லை தூக்கிப்போட்டு கொலைசெய்தேன்.

இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், உடலை அகற்ற முற்பட்டேன். ஆனால் முடியாததால் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டினால் எளிதில் அகற்றிவிடலாம் என்று யோசித்து, இரண்டாக வெட்டி, அவற்றை இரண்டு பிளாஸ்டிக் ட்ரம்களில் அடைத்தேன். உடலை வயலில் வீசியபிறகு, ட்ரம்களை அங்குள்ள கிணற்றில் கழுவி அவற்றையும் கிணற்றுக்குள் வீசிவிட்டேன். ரத்தக்கறை படிந்த போர்வை, பெட் இரண்டையும் இறுக்கிக்கட்டி கொண்டுசென்று அதே கிணற்றில் வீசிவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் அவருடைய ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, வீட்டில் சிந்தியிருந்த ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்ததுடன், அவரை கொல்ல பயன்படுத்திய கல்லையும் சுத்தமாக கழுவினேன். அப்போது நான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அவற்றை எரித்து, அந்த சாம்பலை சாலையோரத்தில் இருக்கும் குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டேன்” என்ற அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார்.


சென்னையில் பெற்ற மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகாரளித்த தாய்

இதுகுறித்து, பெலகாவி காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “இந்த பெண் செய்த செயல் நம்பமுடியாத வகையில் உள்ளது. உடலை அகற்ற வெட்டிய விதம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளியை சிக்கோடி போலீசார் மிக குறுகிய நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர். முதலில் தனது பிள்ளைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என்று நினைத்து சாவித்திரி பொய் சொல்லியுள்ளார். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டார்” என்று கூறியுள்ளார். சொந்த கணவனை கொடூர கொலைசெய்த சாவித்திரிமீது கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய சட்டப்பிரிவுகள் 101 மற்றும் 238-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சம்பவம் சென்னையில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு அரங்கேறியது. கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், தனது 13 வயது மகளை தந்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார் அப்பெண். அவ்வப்போது தனது அம்மாவை சென்று பார்த்துவரும் அச்சிறுமி, கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அம்மாவிடம் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படவே தனது மகளை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை தெரிவித்துள்ளனர். சிறுமியிடம் அதுகுறித்து தாய் விசாரித்தபோது அப்பாவும், அண்ணனும் தன்னை பாலியல் சித்திரவதை செய்ததாகக் கூற, பதறிப்போன அப்பெண், உடனடியாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை அங்கிருந்த காவல் ஆய்வாளர் வாங்க மறுத்ததாகக் கூறி அப்பெண் போராட்டத்தில் இறங்கிய நிலையில், உயரதிகாரிகளின் காதுகளுக்கு விஷயம் செல்ல, புகாரை பெற்றுக்கொண்டார் காவல் ஆய்வாளர். விசாரணைக்கு பிறகு சிறுமியின் தந்தை மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.


பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை உயர்வு

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

பொதுவாகவே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. அவற்றை தடுக்க அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் சட்டத்தின் வெளிச்சத்திற்கு வராமல் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களும், குறிப்பாக, சொந்த குடும்பத்தினராலேயே பெண் குழந்தைகள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனைகள் கிடைத்தாலும் திருமணமான பெண்களுக்கு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கொடுமைகள் மற்றும் அநீதிகள் வெளிச்சத்திற்கு வராததால் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஸ்ரீமந்த் - சாவித்திரி வழக்கில், குற்றம் செய்த ஸ்ரீமந்த் கொலை செய்யப்பட்டிருப்பதால், சாவித்திரி குற்றவாளியாக மாறியுள்ளார். இந்திய சட்டப்படி, கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிராமப்புறங்களில் அதிகம் தேவைப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்