கேரளாவில் "சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 பேர்" - அதிர்ச்சியளிக்கும் முழு தகவல்!

இந்த தகவல் சிறுமியின் பள்ளிக்கும் பரவ, அங்குள்ள விளையாட்டு ஆசிரியார்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறுமியுடன் படித்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் அவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்தது தெரியவந்தது. அதில் குறிப்பாக, சில நேரங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமையும் அரங்கேற்றபட்டிருப்பதுதான் இதில் உச்சக்கட்ட கொடூரம்.

Update:2025-01-21 00:00 IST
Click the Play button to listen to article

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்தான் தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. ஒரு சிறுமியை 5 ஆண்டுகளில் 62 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மிரட்டி அச்சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நாள்தோறும் பேசப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சிறுவர் மற்றும் சிறுமிகளின் நலன் குறித்து கேரள அரசால் நியமிக்கப்பட்ட குழந்தைகள் நல வாரியத்தின் ஆலோசனையின்போது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அப்படி ஒரு வாரியம் இல்லாதிருந்தால் இக்கொடூரம் வெளியே வராமல் குற்றவாளிகள் உல்லாசமாக வெளியே உலாவியிருப்பர். தன்னிடம் யார் யார் எப்போது எங்கு எப்படி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்? என்பதை சிறுமி விளக்கியதை அடுத்து ஒவ்வொரு குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தனிப்படை அமைத்து மற்ற குற்றவாளிகளை தேடும் முயற்சியில் கேரள போலீசார் இறங்கியுள்ளனர். பத்தனம்திட்டா சிறுமிக்கு நடந்தது என்ன? நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்.

ஆடிப்போன அலுவலர்கள்!

கேரள மாநிலத்தில் மாதந்தோறும் மகிளா சமக்யா என்ற குழந்தைகள் நலத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சிறுவர் சிறுமிகளிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்துகொள்வதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கிவருகின்றனர். குறிப்பாக, பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எதிர்காலத்தில் அவர்கள் எப்படி தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்குவதுண்டு. அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கிராமப்பகுதிகளுக்கு அலுவலர்கள் சென்று சிறுவர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு கிராமப்பகுதியில் ஒரு ஆசிரியர் குழந்தைகள் நலத்துறை அலுவலரிடம் தனது பள்ளியில் படித்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு மாணவி விளையாட்டில் கெட்டிக்காரி எனவும், ஆனால் அவள் எப்போதும் வித்தியாசமாக இயற்கைக்கு மாறாக நடந்துகொள்வதுடன், மற்றவர்களுடன் பழகுவதில்லை என்றும் கூறியிருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 18 வயதை எட்டியிருந்த அந்த சிறுமியை அலுவலர்கள் தனியாக அழைத்து பேசியுள்ளனர். அவர்கள் தன்னிடம் நன்றாக பேசிப் பழகுவதைக் கண்ட சிறுமி அவர்களிடம் தனக்கு கடந்த சில ஆண்டுகளில் நடந்தவற்றை குறித்து மனம்திறந்திருக்கிறார். அதைக் கேட்ட அலுவலர்கள் ஆடிப்போனதுடன் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து உடனடியாக குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சிறுமிக்கு நிகழ்ந்த தொடர் பாலியல் வன்கொடுமை

5 ஆண்டுகளில் 62 பேர்!

சிறுமி படிக்கும் பள்ளி மற்றும் அவருடைய கிராமம் உட்பட சுற்றுவட்டாரப்பகுதி என எங்கு சென்று விளையாட்டு வீராங்கனை என்று கேட்டாலும், அந்த சிறுமியின் பெயரைத்தான் சொல்வார்களாம். அந்த அளவிற்கு தடகளப் போட்டிகளில் சிறந்தவராக திகழ்கிறார் இவர். இருப்பினும் அவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டதற்கான காரணம்தான் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது. சிறுமி 13 வயதாக இருந்தபோது ஆரம்பித்து தற்போது வரை அவரை பலபேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி கூறியுள்ளார். யார் யார், எப்போது, எங்கு வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்ற முழு விவரத்தையும் சிறுமி அலுவலர்களிடம் கூற, உடனடியாக அவர்கள் பத்தினம்திட்டா எஸ்.பிக்கு அதுகுறித்து தகவல் கொடுத்திருக்கின்றனர். தகவலின்பேரில் அதிகாரிகள் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். அதில், சிறுமிக்கு 13 வயதாக இருந்தபோது அவருடைய அப்பாவின் நண்பராக அறியப்பட்ட சுபின் என்ற இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு வந்துபோயுள்ளார். அவர் சிறுமியிடம் நன்றாக பேசி நெருங்கிப் பழகியதுடன், அவருக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவர் வீடியோவாக பதிவுசெய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதை வைத்து சுபினின் நண்பர்கள் பலர் வீடியோவை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தொடர்ந்து இந்த தகவல் சிறுமியின் பள்ளிக்கும் பரவ, அங்குள்ள விளையாட்டு ஆசிரியார்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறுமியுடன் படித்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் அவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்தது தெரியவந்தது.


சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சுபின்

அதில் குறிப்பாக, சில நேரங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமையும் அரங்கேற்றபட்டிருப்பதுதான் இதில் உச்சக்கட்ட கொடூரம். சிறுமி சொன்ன நபர்களை லிஸ்ட் எடுத்து பார்க்கும்போது மொத்தம் 62 பேர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் முக்கியமான ஆதாரமே சிறுமியின் தந்தையுடைய செல்போன் என போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த செல்போன் எண்ணிற்கு எந்தெந்த தேதியில் யார் யார் அழைத்திருக்கிறார்கள்? என்பதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண, போலீசார் கால் ஹிஸ்டரியை வைத்து அதன்மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையை முடுக்கிய போலீசார்!

தொடர் பாலியல் வன்கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் சிறுமிக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதுடன், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்விதமாக காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் 40 பேர்மீது இதுவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்ட சுபின் (24) உட்பட 44 பேர் இதுவரை போலீசாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் லிஸ்ட்டில் இருக்கும் சிலர் வெளிநாடுகளில் வசித்துவருவதால் இந்த வழக்கின் விசாரணையில் தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பத்தனம்திட்டாம் காவல் கண்காணிப்பாளர் வி.ஜி வினோத்குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலர் சிறுமி வசித்துவரும் அதேபகுதியைச் சேர்ந்த அவருக்கு நன்கு பரிச்சயமானவர்கள்தான் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.


பத்தனம்திட்டா சிறுமி வழக்கில் தொடரும் கைதுகள்

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர், சிறுமி வசித்துவரும் காலனியைச் சேர்ந்தவர்தான் என்பதும், மேலும் அவரை இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களில் பலர் அவருடைய பள்ளித் தோழர்கள்தான் என்பதும் விசாரணையில் உறுதியாகி இருப்பதாக காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க பெண் போலீசார் பலரை நியமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சிறுமியின் வாக்குமூலத்தை பதிவுசெய்தல், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்தல், வழக்கின் ஆதாரங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு பணியில் நியமிக்கப்பட்டிருக்கும் டிஐஜி அஜீதா பேகம் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களில் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் சிறப்பு புலனாய்வுக்குழு ஈடுபட்டிருக்கிறது. இந்த குற்றம் தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் இதுவரை 30 வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. சிறுமி கூறிய லிஸ்ட்டின்படி 62 பேர் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்டாலும், 59 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 44 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் தவிர 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சிறுமிக்கு இதுபோன்ற குற்றம் இழைத்த அனைவரையும் சட்டத்தின்முன் நிறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்