அதிகரிக்கும் நாய்க்கடி பிரச்சினைகள் - சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் என்னென்ன?
ஒருவர் ஒரு வளர்ப்புநாயை மட்டுமே பூங்காவிற்குள் கொண்டுவர அனுமதி உண்டு. பூங்காவினுள் குழந்தைகள் விளையாடும் இடங்களில் நாய்களுக்கு அனுமதி இல்லை. வளர்ப்பு நாய்களின் கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும்தான் பூங்காவிற்குள் வாக்கிங் அழைத்து செல்லவேண்டும்.
வீட்டில் நாய் வளர்க்கவேண்டும், அதிலும் வெளிநாட்டு வகை நாய்களைத்தான் வளர்க்கவேண்டும் என அதிக விலை கொடுத்து நாய்க்குட்டிகளை வாங்கி வீட்டில் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாகவும், எனவே தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் எனவும் பலதரப்புகளில் இருந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இப்போது வளர்ப்பு நாய்களும் தெருநாய்களுக்கு இணையாக பொதுமக்களை கடிப்பது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வெளிநாட்டு ரக நாய்கள் கொடூரமாக பொதுமக்களை கடித்து குதறும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி பொதுவெளியில் நடமாடுவதற்கே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை ராட்வீலர் நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வரிசையாக நாய்க்கடி குறித்த செய்திகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பது குறித்த விவரங்களை சற்று அலசலாம்.
யார் அந்த சிறுமி?
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக உள்ளவர் ரகு. இவருடைய மனைவி சோனியா, பூங்காவை பராமரித்து வருகிறார். இத்தம்பதி பூங்காவிலிருக்கும் ஒரு சிறிய அறையில் தங்கி வசித்து வருகின்றனர். ரகு தனது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு சென்றுவிட்ட நிலையில், சோனியா வழக்கம்போல மே 5ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய 5 வயது பெண் குழந்தை சுதிக்ஷா அங்கு விளையாடிக் கொண்டிருந்தார். பூங்காவின் எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவரின் 2 ராட்வீலர் இன நாய்கள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறியதில், குழந்தை பலத்த காயமடைந்தது. குழந்தையை நாய்களிடமிருந்து மீட்க முயன்ற சோனியாவையும் நாய்கள் கடித்து குதறின. ஒருவழியாக நாய்களிடமிருந்து குழந்தையை மீட்ட மதன் என்ற இளைஞர், குழந்தையை தூக்கிக்கொண்டு பூங்காவைவிட்டு ஓடினார். படுகாயமடைந்த குழந்தை முதலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறும், சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் தான் பார்த்துக்கொள்வதாகவும் நாயின் உரிமையாளர் புகழேந்தி என்பவர் கூறியதன்பேரில் குழந்தை தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆயிரம்விளக்கு போலீசார் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் குழந்தைக்கான சிகிச்சை முழுவதையும் புகழேந்தி ஏற்றுக்கொண்ட நிலையில் நிபந்தனை ஜாமீனில் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
ராட்வீலர் நாய்கடித்த சிறுமியின் தந்தை ரகு
இந்நிலையில் மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸின்பேரில் சிறுமியை தாக்கிய இரண்டு நாய்களும் புகழேந்தியின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் சிங்கம்புணரி பண்ணை வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டன. இதனிடையே சிறுமியின் முகத்தை நாய்கள் பலமாக கடித்ததால் சிறுமிக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளவேண்டி இருந்ததால் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் சிகிச்சை செலவை ஏற்பதாக உறுதி அளித்தது. சிகிச்சை முடிந்துவிட்டதாகவும், டிஸ்சார்ஜ் செய்துகொள்ளலாம் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதனால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை நாயின் உரிமையாளர்தான் ஏற்கவேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே நாயின் உரிமையாளரான புகழேந்தியிடம் வீட்டில் நாய் வளர்ப்பதற்கான உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மாநகராட்சி நடவடிக்கை
சிறுமியை நாய்கடித்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “23 வகையான வெறித்தனம் அதிகமுள்ள நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கு மத்திய அரசு ஒரு கட்டத்தில் தடை விதித்திருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட விலங்குகள் நல விதிமுறைகளின்படி, தெருநாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்களை நடத்தவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. சட்டவிரோதமாக விலங்குகளை வளர்க்கக்கூடாது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அவர்களுக்கு நண்பர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில் இதுகுறித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும். குறிப்பாக, நாய் ஆர்வலர்களின் கருத்தையும் ஏற்றுக்கொண்டு, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாய்க்கடி விவகாரங்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தபோது
வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆன்லைனில் லைசன்ஸ் வாங்கும் வசதி செய்துதரப்பட்டிருக்கிறது. தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் நிறையப்பேர் அதை செய்யாமல் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். அப்படியே உரிமமின்றி வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்தாலும் அதற்கு அபராதம் செலுத்தவேண்டுமே தவிர, செல்லப்பிராணிகளை அரசு எடுத்துக்கொள்ளாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவண்ணம் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களின் தொல்லை ஒருபுறம் அதிகரித்துவருவதால் அவற்றிற்கும் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடும்படி மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி செய்துவருகிறோம்” என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து கேட்டபோது, “சிறுமியை நாய்கடித்த விவகாரத்தில், புகழேந்தி என்பவர், தான் வீட்டில் வளர்த்த நாய்களுக்கு உரிமம் பெறாததால் அவருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. முறையாக விசாரணை நடத்தப்பட்டு கால்நடைத்துறையுடனும் ஆலோசித்து பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் உடல்நலம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பெற்றோரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் பேசிவருகிறோம்” என்று கூறினார்.
இதுபோக, பூங்காக்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், சென்னையிலிருக்கும் பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதன்படி, இனிமேல், உரிமம் பெற்று, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களை மட்டுமே பூங்காவிற்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும். ஒருவர் ஒரு வளர்ப்புநாயை மட்டுமே பூங்காவிற்குள் கொண்டுவர அனுமதி உண்டு. பூங்காவினுள் குழந்தைகள் விளையாடும் இடங்களில் நாய்களுக்கு அனுமதி இல்லை. வளர்ப்பு நாய்களின் கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும்தான் பூங்காவிற்குள் வாக்கிங் அழைத்து செல்லவேண்டும். மேற்கூறிய அனைத்தையும் பூங்கா காவலர் முழுமையாக கண்காணித்த பிறகே நாய்களை உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்களில் ராட்வீலரும் ஒன்று
நாய் வளர்க்க உரிமம் பெறுவது எப்படி?
சிறுமியை நாய்கடித்த விவகாரத்திற்கு பிறகு, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்மூலம் நேரடியாக வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறுமி நாய்க்கடி சம்பவம் நடந்த மே 5ஆம் தேதிக்கு முன்புவரை, வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்க வெறும் 397பேர் மட்டுமே உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை தொடர்ந்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பத்திருக்கின்றனர். அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வுசெய்து ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள், நாயின் போட்டோ, வயது, இனம், ரேபிஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை தெளிவாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
நாயை விற்றவரே ரெஜிஸ்டர் செய்துவிட்டதாக கூறியிருந்தால் அது வேறு பதிவு. அதாவது நாய்க்குட்டிகளை விற்பவர்கள் கென்னஸ் க்ளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்யவேண்டும். இது நாய் என்ன வகையை சார்ந்தது என்பதை கண்டறிய பதிவு செய்யப்படுவது. இதில் ஒரு நாய் எந்த அளவிற்கு பியூரர் பிரீட் என்பதை ஆய்வு செய்து தருவார்கள். ஆனால் ஒருவர் வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமானால் அதற்கு அனுமதி பெற மாநகராட்சியிடம் பதிவு செய்யவேண்டும். சென்னையை பொருத்தவரை நுங்கம்பாக்கம், திரு.வி.க நகர், கண்ணம்மா பேட்டை போன்ற இடங்களிலிருக்கும் கால்நடை மையங்களில் நாய் வளர்க்கும் உரிமம் சான்றிதழை பெறலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சான்றிதழை ஆண்டுக்கு ஒருமுறை 50 ரூபாய் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இதை ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். இப்படி வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெறும்போது அவற்றின் கழிவுகளை அகற்றுதல், இனப்பெருக்கம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
வீட்டில் நாய் வளர்க்க ஆன்லைனில் பதிவு செய்யும் முறை
ஆன்லைனிலேயே எப்படி பதிவுசெய்வது?
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் வளர்த்தால் உரிம சான்றிதழ் பெறுவது கட்டாயம். ஆன்லைனில் பதிவுசெய்ய, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் online servicesக்கு செல்லவும். அதில் pet animal license-ஐ க்ளிக் செய்யவும். அதற்குள் New User-ஐ க்ளிக் செய்து பெயர், முகவரி போன்ற விவரங்களை நிரப்பவும். மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை கொடுத்தால் ஓடிபி வரும். இப்போது மாநகராட்சி இணையதளத்தில் உங்களுடைய பெயரில் அக்கவுண்ட் ஓபனாகிவிடும்.
அதன்பிறகு log-in செய்து இடதுபக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் new pet registration என்பதை க்ளிக் செய்யவும். அதில் நாயின் பெயர், இனம், அடையாளம், நிறம், பாலினம், வயது போன்ற விவரங்களுடன் கருத்தடை செய்யப்பட்டது மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்த விவரங்களையும் கொடுக்கவேண்டும். அதில் உரிமையாளர் புகைப்படம், நாயின் புகைப்படம், முகவரி ப்ரூஃப் போன்றவற்றை அப்லோட் செய்து கட்டணம் செலுத்தினால் போதும், உரிமத்தை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்த உரிமம் காலாவதி ஆகும்போது மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்கவேண்டும். இப்படி முறையாக செல்லப்பிராணிகளை வளர்க்கும் பட்சத்தில் பொதுவெளிகளில் பிரச்சினைகள் வந்தாலும் உரிமையாளருக்கு அளிக்கப்படும் தண்டனை சற்று குறையும்.