கேரள திரையுலகில் மட்டும்தான் பாலியல் சீண்டலா? தமிழ் திரையுலகில் இல்லையா?

கேரள திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் WCC பெரும்பாங்காற்றியது. அதேபோல் The Voice of Women என்ற அமைப்பின்கீழ் தெலுங்கு திரையுலக பெண்கள் அளித்த புகார்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்ட அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையை வெளியிடுமாறு சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Update: 2024-09-09 18:30 GMT
Click the Play button to listen to article

ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதிலிருந்தே கேரள திரைத்துறை மட்டுமல்லாமல் அனைத்து திரைத்துறைகளிலுமே குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலையாள திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் அம்மா (மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம்) சங்கத்திலிருந்து பதவி விலகியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையின் விடுபட்ட பக்கங்களையும் சமர்பிக்கவேண்டுமென கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பக்கங்கள் வெளிவந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பிற திரையுலகங்களிலும் இதேபோன்று பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக பல நடிகர் நடிகைகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, தமிழ் நடிகைகள் பலர் இதுகுறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்படும் என்று 'நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி' ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹேமா கமிட்டி அறிக்கை - சுருக்கம்

2015ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து விசாரிக்க, 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதுதான் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு. இந்த குழு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து கேரள திரைத்துறை பெண்கள் பலரிடமிருந்து பெற்ற வீடியோ, ஆடியோ அடங்கிய ஆவணங்களுடன்கூடிய 290 பக்க அறிக்கையை தயார்செய்து அதை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்பித்தது. 2019ஆம் டிசம்பர் மாதம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை பல்வேறு தரப்பு அழுத்தங்களுக்கு பிறகு கடந்த மாதம்தான் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் 233 பக்கங்கள்தான் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கை வெளியானதிலிருந்தே மலையாள திரையுலகமே ஸ்தம்பித்திருக்கிறது. அதன்பிறகு சில நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்மீது வெளிப்படையாகவே சில நடிகைகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ஹேமா குழு சமர்பித்த அறிக்கை

திரைத்துறை பெண்களுக்கு ஆதரவாக பல நடிகர்களும் பேசிவருகின்றனர். ஆனால் அறிக்கையில் வெளியிடப்படாத அந்த பக்கங்களில்தான் பெண்கள் தங்களை துன்புறுத்தியவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும், பெண்கள் எப்படி துன்புறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் யாரை காப்பாற்ற அரசு இப்படி செய்தது? என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில்தான் கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்படி ஹேமா கமிட்டி அறிக்கையின் அனைத்து பக்கங்களுடன், அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும் செப்டம்பர் 9ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இனிதான் கேரள திரைத்துறையில் மவுனம்காக்கும் பல நடிகர்கள் வாய்திறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோகன்லால் பதவி விலகலும் விளக்கமும்

மலையாள திரையுலகமே, குறிப்பிட்ட 15 பேரின் தலைமையின்கீழ்தான் இயங்குவதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அறிக்கை வெளியான பிறகு, மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்குக்கூட பாலியல் சமரசம் செய்யவேண்டி இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டிய நிலையில், நடிகர் மோகன்லால் உட்பட சில முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என 17 பேர் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகினர். இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இவர்கள் பதவியேற்ற நிலையில், இவர்களுடைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டுவரை உள்ளது. 


அம்மா சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மோகன்லால் விளக்கம்

நடிகர் சங்க உறுப்பினர்கள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதால் இந்த குழுவையே கலைக்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் மோகன் லால். அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் பதவி விலகியதுடன் அந்த குற்றச்சாட்டு பொய்யானது என போலீசில் புகாரும் அளித்தார். இதுபோன்று பதவி விலகல்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அதுகுறித்து வாய் திறக்காமலேயே இருந்துவந்தனர். இதற்கிடையே, குற்றச்சாட்டுகள் வந்தால் அதனை முழுமையாக விசாரித்து குற்றவாளிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், அதேசமயம் பொய்யான குற்றச்சாட்டு எனும் பட்சத்தில் புகாரளித்தவர்மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிக்கை வெளியிட்டார் நடிகர் பிருத்விராஜ். இப்படி பலதரப்புகளிலிருந்தும் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினை குறித்து பேசினார் மோகன் லால். மலையாள திரையுலகை அழித்துவிட வேண்டாம் எனவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் அம்மா சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், தான் பதவியிலிருந்து விலகியது தப்பிப்பதற்காக அல்ல என்றும் கூறியிருக்கிறார்.


தன்மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு நிவின் பாலி மறுப்பு

நிவின் பாலி மீது குற்றச்சாட்டு

பல நடிகர்கள் இந்த பிரச்சினையில் சிக்கியிருக்கும் நிலையில், நடிகர் நிவின் பாலி மீது, பட வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு பெண் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்ட நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என நிவின் பாலி கூறினார். மேலும் அந்த பெண் யாரென்றே தெரியாது எனவும், அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும், தான் தவறு செய்யவில்லை என்பதில் 100% உறுதியாக இருப்பதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி துபாயிலிருக்கும் ஒரு ஹோட்டலில் வைத்து நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி மதியம் முதல் 15ஆம் தேதி மாலைவரை தான் கொச்சியில் தங்கியிருந்ததற்கான ஹோட்டல் ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார் நிவின் பாலி.


டோலிவுட் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து சமந்தா பதிவு

தெலுங்கு சினிமா குறித்து சமந்தா

இப்படி மலையாள சினிமாவில் குழப்பங்கள் நீடிக்க, தெலுங்கு சினிமா குறித்து பேசியிருக்கிறார் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு கேரள திரைத்துறை பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக உருவாக்கப்பட்டதுதான் ‘Women in Cinema Collective' (WCC) என்ற அமைப்பு. இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு திரையுலகமும் அங்கு, 'The Voice of Women' என்ற அமைப்பை 2019ஆம் ஆண்டு உருவாக்கியது. கேரள திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் WCC பெரும்பாங்காற்றியது. அதேபோல் The Voice of Women என்ற அமைப்பின்கீழ் தெலுங்கு திரையுலக பெண்கள் அளித்த புகார்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்ட அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையை வெளியிடுமாறு சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், தெலுங்கு திரையுலகிலிருக்கும் அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்பதாகவும், கேரள நடிகைகள் கூட்டமைப்பான WCC-இன் முயற்சியை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள் குறித்த The Voice of Women குழுவின் அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்றும் அதில் கூறியிருக்கிறார்.


நடிகர் விஷால் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான விமர்சனம்

தமிழ் சினிமாவிலும் பாலியல் குற்றங்கள்

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பேட்டியளித்த நடிகர் விஷால், திரைத்துறை பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென்றும், குற்றச்சாட்டுகள் வந்தால் அதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அனைத்து துறைகளிலுமே, தன்னிடம் தவறாக நடக்க முற்படும் ஆண்களை பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். இதையடுத்து விஷாலை மீண்டும் சீண்டியிருக்கிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அதுகுறித்த பதிவில், “உங்கள் வாழ்க்கையில் வந்த பல பெண்கள் உங்களைவிட்டு விலகியது ஏன்? உங்களுடைய நிச்சயதார்த்தம் நின்றது ஏன்? என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன” என்று பதிவிட்டிருக்கிறார். விஷால் மீது ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும் தன்னிடம் பல தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தவறாக நடக்க முற்பட்டதாகவும் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, மனித உரிமைகள் அமைப்பு ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போன்றோர் தன்னிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்த ஸ்ரீரெட்டி, நடிகர் நானி உட்பட பல தெலுங்கு இயக்குநர்கள்மீதும் குற்றஞ்சாட்டி இருந்தார்.


கேரள திரையுலக சர்ச்சை மற்றும் மோகன்லால் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகா

ராதிகாவின் சர்ச்சை பேச்சும் நடிகர் சங்க தீர்மானமும்

தவறாக நடக்கும் ஆண்களை செருப்பால் அடியுங்கள் என நடிகர் விஷால் கூறியதற்கு பதில் கருத்து தெரிவித்த நடிகை ராதிகா, தமிழ் திரையுலகிலும் இதுபோன்ற குற்றங்கள் இல்லாமல் இல்லை எனக் கூறினார். விஷால் சொல்வதைப் போன்று பெண்கள் செருப்பால் அடித்துவிட்டால் அதன்பிறகு அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? என்றும், சில யூடியூபர்கள் நடிகைகளை ஆபாசமாக பேசுகிறார்கள், அவர்களை விஷால் செருப்பால் அடிக்கட்டும், நானும் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று ஆக்ரோஷமாக பேசினார். ராதிகாவின் இந்த கருத்து குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், கேரளாவில் நடிகைகளின் கேரவனில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டிருந்ததாக மேலும் ஒரு தகவலை தெரிவித்தார். அதுகுறித்து, மோகன் லால் தன்னை அழைத்து விசாரித்ததாகவும், கேரள சிறப்பு புலனாய்வு துறையும் கேட்டதற்கு ஆமாம் என்று தான் பதில் அளித்ததாகவும் கூறியிருக்கிறார்.

பாலியல் சீண்டல் குறித்து நடிகை குஷ்பூ பேசியபோது, எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை என்றும், தான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை என்றும் கூறியிருக்கிறார்.


பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசிய குஷ்பு

இதனிடையே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர் புகாரளித்து, அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்றும், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தின்போது, நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிப்பது முதல் அவர்களது பாதுகாப்புவரை அனைத்து உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க ஏதுவாக, தனி தொலைபேசி எண் மற்றும் இமெயில் போன்றவையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக திரைத்துறையில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், உண்மையாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட திரைத்துறை பெண்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்