பெண்களுக்கு கடன் கொடுக்கும்போது உஷாரா இருங்க! திரும்ப தரலைன்னாலும் எதுவும் செய்ய முடியாது?
எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அதை வெகு எளிதாக கையாண்டு வெற்றிகொள்வதில் ஆண்களுக்கு நிகராக பெண் வழக்கறிஞர்களும் இன்று பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டி வருகின்றனர்.
சட்டத்துறையில் பெண்களின் பங்கு என்பது அபரிமிதமானதாக இருக்கிறது. எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அதை வெகு எளிதாக கையாண்டு வெற்றிகொள்வதில் ஆண்களுக்கு நிகராக பெண் வழக்கறிஞர்களும் இன்று பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் திருமதி ஆஷா, சட்ட ரீதியாக சில பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும், தான் எடுத்து நடத்தி வெற்றிகண்ட மிகவும் கடினமான வழக்குகள் குறித்தும் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் எடுத்து நடத்தி வெற்றிகண்ட குற்ற வழக்குகள், கடினமான சிவில் வழக்குகள் மட்டுமின்றி சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி சிலர் எப்படியெல்லாம் ஏமாற்றி வழக்குகளில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பது பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அந்த தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
நீங்கள் சமீபத்தில் எடுத்து நடத்தி வெற்றி கண்ட சிவில், குற்றவியல் வழக்குகள் என்னென்ன?
அண்மையில் நான் எடுத்து நடத்திய வழக்கு ஒன்று என் மனதை மிகவும் பாதித்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார். அப்போது அவர், அவரின் உறவுக்கார பெண் ஒருவரிடம் 5 லட்சம் பணத்தை கடனாக கொடுத்து அதை திரும்ப வாங்க முடியாமல் காவல்துறை வரை சென்று வந்ததையும், மகன்கள், மகள் ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் தான் கடன் கொடுத்த விஷயம் அவர்களுக்கு தெரியாது என்பதையும், எப்படியாவது அந்த பெண்ணிடம் இருந்து வர வேண்டிய தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் ஏற்கனவே காவல்துறைக்கு சென்றதால் 2 லட்சம் மட்டும் அப்பெண் வழங்கியிருக்கிறார் என்றும், மீதியிருக்கும் ரூ.3 லட்சத்தை திருப்பி தராமல் அலைக்கழித்ததால் அவர் என்னை தேடி வந்ததாகவும் கூறினார். நானும் அந்த வழக்கை சிவில் வழக்காக எடுத்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று வாதாடினேன். முதியவரிடம் பணத்தை வாங்கிய பெண், முதலில் நீதிமன்றத்தில், தான் அவரிடம் பணம் வாங்கவே இல்லை. வேண்டும் என்றே என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்று கூறினார். பிறகு என்னுடைய தரப்பில் இருந்து அந்த பெண்மணி கடன் வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டி நிரூபித்ததும் நீதிமன்றமும் அதை ஆராய்ந்து வாங்கிய பணத்தை முதியவருக்கு திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், அப்பெண்மணியிடம் இருந்து அந்த பணத்தை வாங்க முடியவில்லை. காரணம், அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவர். அவரது பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த பெண்மணி வாடகை வீட்டில்தான் இருக்கிறார்.
கடன் கொடுக்கும்போது பல்வேறு காரணிகளை ஆராய்ந்துதான் கொடுக்க வேண்டும் - வழக்கறிஞர்
இருப்பினும் மீண்டும் முதியவருக்காக மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்தோம். அதை இ.பி. பெட்டிஷன் என்று சொல்லுவோம். அதாவது அந்த பெண்மணியிடம் சொத்துக்கள், விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை வைத்து பணத்தை வாங்கிவிடலாம் என்பதற்காக. அந்த பெண்மணியிடம் அப்போது வீட்டில் விலை உயர்ந்த டூவீலர், தொலைக்காட்சி பெட்டியெல்லாம் இருந்ததன் அடிப்படையில் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. போலீஸ், டவாலி ஆகியோரின் பாதுகாப்புடன் அவரின் வீட்டிற்கு வருகிறோம் என்பதை முன்கூட்டியே தனது வழக்கறிஞர் மூலமாக தெரிந்துகொண்ட அந்த பெண் எல்லாவற்றையும் இடம் மாற்றி மறைத்துவிட்டார். அதனால் அந்த முயற்சியும் கைவிட்டுப்போய் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டோம். கடைசிவரை அந்த பெண்மணியை எங்களாலும் சரி, நீதிமன்றத்தாலும் சரி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், அந்த இடத்தில் ஏமாற்றியது ஆணாக இருந்தால் அவரை கைது செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது. அதே பெண்ணாக இருந்தால் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. இதனால் அந்த பெண்ணை எதுவும் செய்ய முடியாததால் வழக்கில் இருந்து அவர் தப்பித்துவிட்டார். இறுதியாக ஏமாந்து நின்றது அந்த முதியவர்தான்.
நான்கு ஆண்டுகள் எடுத்து நடத்தப்பட்ட வழக்கில் நான் ஜெயித்தும்கூட முதியவருக்கு அந்த பணத்தை பெற்று தர முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அவரின் நிலையை பார்த்து நீதிபதியே மிகவும் வருத்தமுற்றார். இதில் இருந்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு அவர் அந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்கு தகுதி உள்ளவரா? அவரால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியுமா? என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்து கொடுக்க வேண்டும். அது உறவுக்காரராக, நண்பராக யாராக இருந்தாலும் சரி. நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு கடன் கொடுத்து ஏமாந்தால், சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது!
இந்த வழக்கை போன்றே விவாகரத்து வழக்கு ஒன்றையும் வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறீர்கள்.. ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை காப்பற்ற முடியாமல் போனது ஏன்?
மதுரைக்கு அருகில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஜவுளிக்கடையில் பணியாற்றுகிறார். அவருக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். அந்த இளைஞருக்கு திருநெல்வேலியில் இருந்து 50 பவுன் நகை போட்டு பெண் எடுக்கிறார்கள். அப்படி பெரிய இடத்து சம்மந்தம் வரும் போதே நாம் கொஞ்சம் உஷராக இருக்க வேண்டும் அல்லது நன்கு விசாரிக்க வேண்டும். இப்படி பெரிய இடத்து சம்மந்தம் வந்தால் நம் மகன் சந்தோசமாக இருப்பான். அவன் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றம் இருக்கும் என்று நினைத்து அந்த இளைஞரின் அம்மாவும் மகனை தேடி வந்த வரனை ஏற்று அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால், வசதியாக வாழ்ந்த அந்த பெண்ணால், தன் கணவரோடு வசதி குறைவான இடத்தில் சந்தோஷமாக வாழ முடியவில்லை. மேலும், அப்பெண்ணிற்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினையும் இருந்திருக்கிறது. இதனால் திருமணம் ஆன, சிறிது நாட்களுக்குள்ளாகவே அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அப்பெண் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் அந்த இளைஞன் அப்பெண்ணிடம் இருந்து விவாகரத்து கேட்டு தனது சொந்த ஊரான மதுரை கோர்ட்டை அணுகாமல், திருநெல்வேலி கோர்ட்டை அணுகியிருக்கிறார். பிறகு அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணமானதை காண்பித்து விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் திருமதி ஆஷா
இதற்கிடையில், அப்பெண்ணின் குடும்பத்தினர் தன் மகள் போட்டுசென்ற 50 பவுன் நகை, திருமணம் செய்த பையனிடம் இருக்கிறது. அதை பெற்று தர வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். காவல் நிலையத்தில் அப்பையனை அழைத்து பேசியதில், தான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டதாகவும், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றும் கூறிவிடுகின்றார். இந்த நேரம் வேறொருவரை திருமணம் செய்துகொண்ட அப்பெண் விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் பெற்றோர், முதல் கணவரை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவர் மீது மீண்டும் பழைய வழக்கான நகை வழக்கை கையில் எடுத்து நீதிமன்றத்திற்கு வருகின்றனர். ஒன்று நகையை கொடுக்க வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில்தான், இந்த வழக்கு என்னிடம் வந்தது. இந்த வழக்கில் இனி எதுவும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் அந்த பையனை அப்ஸ்காண்ட் ஆக சொல்லி கேட்கும்போது, நான் செய்யாத தவறுக்காக ஜெயிலுக்கு போககூட தயார். ஆனால், மறைந்து வாழ்ந்தால் எனது அம்மாவை தொந்தரவு செய்வார்கள். வாடகை வீட்டில் இருக்கும் அவரை நான் இப்படியான ஒரு சூழ்நிலையில் விட்டுவிட்டு போக முடியாது என்று சொல்லவும் வேறு வழியின்றி அந்த இளைஞர் ஜெயிலுக்கு போய்விட்டார். இப்போது இரண்டு மாத தண்டனை முடிந்து சிவில் பிரிசனில் இருக்கிறார். எப்போது நம்மை தேடி ஒரு பொருள் தானாக வருகிறதோ, எந்த யோசனையும் இல்லாமல் பேராசைப்பட்டு அதை ஏற்றுக்கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். அதனால் சாதாரண ஒரு குடும்பத்திற்கு, வசதியான வீட்டு பெண் நிறைய நகை போட்டு வருகிறாள் என்றால் ஏமாந்துவிடாமல், நன்கு விசாரித்து முடிவெடுங்கள்.
பெண்கள் அதிக வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய முன்வந்தால் இளைஞர்கள் கவனமாக இருங்கள்!
குற்றவியல் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது? அதுபற்றி ஒரு வழக்கறிஞராக உங்களுடைய கருத்து என்ன? இந்த சட்டங்களால் என்ன பயன்?
குற்றவியல் திருத்தச் சட்டங்கள் கடந்த ஜூலை 01-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டன. இதை எங்களை போன்ற வழக்கறிஞர்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால் இதில் எங்களுக்கு சாதகமான விஷயங்களும் இருக்கின்றன. பாதகமான விஷயங்களும் இருக்கின்றன. IPC இந்திய அரசியலமைப்பு சட்டம் என்று சொல்லும்போது நமது வாயில் எளிதாக நுழைந்து விடுகிறது. ஆனால் இப்போது அதன் பெயரை மாற்றி PNS என்று சான்ஸ்கிரிட் மொழியில் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வார்த்தையை எல்லோராலும் எளிதாக உச்சரிக்க முடியாது. அதற்காகத்தான் எங்கள் வழக்கறிஞர்களும் இந்தியா முழுவதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஒரு கொலை குற்றவாளியை 50 நாட்களுக்குள் கண்டுபிடித்து கைது செய்து அந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அது மக்களுடைய பார்வையில் சரியாக இருந்தாலும், சாத்தியப்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று. டொமஸ்டிக் வைலன்ஸ் ஆக்ட் , கன்சியூமர் ஆக்ட் ஆகியவற்றை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அப்படி முடிக்க முடிவதில்லை. அப்படியிருக்கும்போது கொலை வழக்குகளை 50 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் சாத்தியம் கிடையாது.