அடுத்தடுத்து அபகரிக்கப்பட்ட நடிகை கவுதமியின் நிலங்கள்! - நில மோசடி சட்டம் என்ன சொல்கிறது?

புகார் குறித்து காவல்துறை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், சென்னை ஈசிஆர் ரோட்டில் வசித்துவரும் நடிகை கவுதமி, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

Update: 2024-06-03 18:30 GMT
Click the Play button to listen to article

நடிகர் நடிகைகள் பொதுவாகவே தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழில்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சில நேரங்களில் இதுபோன்ற பிஸினஸ்களின் பொறுப்புகளை நம்பகமான ஆட்களிடம் ஒப்படைத்துவிடுவர். ஆனால் சில நேரங்களில் தாங்கள் நம்பியவர்களே மோசடிகளில் ஈடுபடுவதுண்டு. அப்படி பல ஆண்டுகள் தன்னிடம் நம்பிக்கையாக இருந்தவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி நடிகை கவுதமி போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். செபி நிறுவனம் விற்பனைக்கு தடைவிதித்திருந்த தன்னுடைய நிலத்தை தன்னிடம் போலியாக விற்பனை செய்து கோடிகளில் பணத்தை ஏமாற்றியதாக கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் பல மாதங்களாக தொடர் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இதேபோன்று மற்றொரு நில மோசடி வழக்கில் கவுதமி பணத்தை ஏமார்ந்துவிட்டதாக புகார் அளித்தார். இரண்டு வெவ்வேறு இடங்களில் கவுதமியிடம் நடத்தப்பட்ட நில மோசடி குறித்த விவரத்தை தெளிவாக காணலாம்.

நடிகை கவுதமியிடம் நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம்

80 மற்றும் 90களின் இளைஞர்களுடைய கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை கவுதமி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழில் முன்னணி நடிகையாக உருவானபிறகு தமிழ்நாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் தொடர்ந்து டிவி ஷோக்கள் மற்றும் படங்களில் நடித்துவந்த கவுதமி கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கவுதமிக்கு சில வருடங்களுக்குமுன்பு காரைக்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அழகப்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கவுதமியிடம் நம்பிக்கை ஏற்படும்படி நடந்துகொண்டதால் தனது நிலம் வாங்கல் விற்றல் சொத்து தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரிடமே ஒப்படைத்திருக்கிறார் கவுதமி.


நடிகை கவுதமியின் நிலத்தை ஏமாற்றிய குற்றத்தில் சிக்கியுள்ள அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியாள்

மேலும் அழகப்பனின் ஆலோசனையின்படி சினிமாத்துறையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்திருக்கிறார். இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் என்ற பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விவசாய நிலம் இருப்பதாகவும் அது விற்பனைக்கு இருப்பதாகவும் கவுதமியிடம் கூறியிருக்கிறார். மேலும் 2016ஆம் ஆண்டே நில புரோக்கர் நெல்லியான் என்பவர் நிலத்தை பேசி முடித்துவிட்டதாகவும், அவர்மூலமாக சுலபமாக வாங்கிவிடலாம் எனவும் கூறியிருக்கிறார். அதற்காக கவுதமியிடமிருந்து ரூ. 3 கோடியே 16 லட்சம் பணமும் கேட்டிருக்கிறார். அழகப்பன்மேலிருந்த நம்பிக்கையால் அந்த நிலத்தை பற்றி எதுவும் விசாரிக்காமல் பணத்தை அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியாள் ஆகியோரின் வங்கிக்கணக்கில் பணமாகவும், காசோலையாகவும் கொடுத்திருக்கிறார் கவுதமி.

இந்நிலையில், தான் பணம் கொடுத்து வாங்கிய நிலம் செபி நிறுவனத்தால் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டது என்பது பின்னர்தான் அவருக்கு தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் விசாரித்ததில் அழகப்பன், நெல்லியான் மற்றும் தனியார் நிறுவன இயக்குநர்களான ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் உள்ளிட்டோர் அந்த நிலம் குறித்த முழு விவரத்தையும் அறிந்திருந்தும் தன்னிடம் அதை மறைத்து விற்றது தெரியவந்தது. மேலும் வெறும் ரூ. 57 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி தன்னிடம் ரூ. 3.16 கோடிக்கு விற்றதும் தெரியவந்தது. இதற்கு பாஜகவும் துணைபோனதாகக்கூறி 2023 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார் கவுதமி. மேலும் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் கவுதமி புகாரளித்தார். அந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கவுதமியிடம் மே 6ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. நேரில் ஆஜரான அவர், தான் ஏமாற்றப்பட்ட முழுவிவரத்தையும் போலீசாரிடம் விளக்கினார்.


கவுதமியின் நிலத்தை மோசடி செய்த குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பலராமன்

அதன்பேரில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு, பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், அவரது மகன்கள் சொக்கலிங்கம், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி, அவரது கூட்டாளிகள் ரமேஷ்சங்கர் ஷோனாய், பாஸ்கர், விசாலாட்சி, நில புரோக்கர் நெல்லியான், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கவுதமியிடம் நிலத்தை ஏமாற்றிய மற்றொரு வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளி

நடிகை கவுதமி திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரிலிருந்த தனக்கு சொந்தமான 8.53 ஏக்கர் நிலத்தை விற்பனைக்கு சென்னையைச் சேர்ந்த பலராமன் என்பவரிடம் விட்டுள்ளார். அவர் அந்த நிலத்தை ரூ. 11 கோடிக்கு விற்றுவிட்டு தனக்கு வெறும் ரூ. 4.1 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்திலிருந்த எனக்கு சொந்தமான சுமார் 8.3 ஏக்கர் நிலத்தை விற்றுத் தருவதாகக் கூறி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர், அந்த இடத்தையும், அதற்கு அருகிலிருக்கும் மற்ற இடங்களையும் சேர்த்து மும்பையைச் சேர்ந்த ஜெயா ஹிந்த் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 2015ஆம் ஆண்டு விற்பனை செய்துவிட்டு எனக்கு ரூ. 4.1 கோடி மட்டும் கொடுத்தனர். அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வந்தபிறகுதான், நான் ஏமாற்றப்பட்ட விவரம் எனக்குத் தெரியவந்தது. எனவே என்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் இதில் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த புகார் குறித்து காவல்துறை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், சென்னை ஈசிஆர் ரோட்டில் வசித்துவரும் நடிகை கவுதமி, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருந்தது.


நில மோசடி குறித்த குற்றங்களுக்கு இந்திய அரசியலமைப்பின்கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

இதுபோக, அமெரிக்காவில் வசித்துவரும் தன் அண்ணன் ஸ்ரீகாந்த் சார்பிலும் கவுதமி மற்றொரு புகார் அளித்திருந்தார். அதில், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் கவுதமியின் தாயார் வசுந்தரா தேவிக்கு சொந்தமான நிலத்தில், கவுதமியின் அண்ணனுக்கு சேரவேண்டிய 1.26 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதை விற்பனை செய்ய 2015ஆம் ஆண்டு அழகப்பன் என்பவருக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிலத்தை 60 லட்சம் ரூபாய்க்கு விற்றும் பணத்தை தனது அண்ணனிடம் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில நிலத்தை விற்ற சில மாதங்கள் கழித்து, அதே நிலத்தை தனது கூட்டாளியான ரகுநாதன் என்பவருக்கு ரூ. 1.63 கோடிக்கு விற்றிருப்பதாகவும் ஆனால் இதுவரை பணத்தை தரவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில் நில மோசடி செய்த குற்றத்தில் அழகப்பன், ரகுநாதன் மற்றும் சுகுமார் ஆகிய மூவர்மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டம் கூறுவது என்ன?

நடிகை கவுதமி தொடர்ந்து நில மோசடி புகார்களை எழுப்பி வருகிறார். இவருடைய புகாரில் தடை செய்யப்பட்ட நிலத்தை விற்பனை செய்தது, அதிகார பத்திரம் பெற்று நிலத்தை விற்று பணத்தை கொடுக்காதது, அதிக விலைக்கு விற்கப்பட்ட தனது நிலத்தின் தொகையை ஏமாற்றியது போன்ற குற்றங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவை பொருத்தவரை பிறருடைய நிலத்தை ஏமாற்றி வாங்கினாலோ அல்லது விற்றாலோ அல்லது விற்ற பணத்தை ஏமாற்றினாலோ குறைந்தது 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. நில மோசடி சட்டப்பிரிவுகளான IPC 419, 464, 471, 403, 441, 447, 489 -இன் கீழ் கட்டாயம் 7 ஆண்டுகள் சிறைதண்டனை உறுதியாகிறது. அதேபோல் பிறருடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வசித்தாலும், உரிமையாளரை தங்கவிடாமல் செய்தாலும் சட்டப்படி குற்றமாகும். எனவே நடிகை கவுதமியின் நில மோசடி வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்