மீண்டும் மலரும் "தெய்வம் தந்த பூ" - சின்மயி பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு

பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் நாவில் அந்த சரஸ்வதி தேவியே குடிகொண்டிருப்பதாலோ என்னவோ இவர் பாடிய அத்தனை பாடல்களும் இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வரிசையில் இருந்து வருகின்றன.

Update:2024-09-10 00:00 IST
Click the Play button to listen to article

தேனினும் இனிமையாக பாடும் குரல் வளத்தை கொண்டவர்தான் பாடகி சின்மயி ஸ்ரீபாதா. அந்த சரஸ்வதி தேவியே அவர் நாவில் குடிகொண்டிருப்பதாலோ என்னவோ இவர் பாடிய அத்தனை பாடல்களும் இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வரிசையில் இருந்து வருகின்றன. மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடல் மூலம் பாடகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தன் குரலால், பாடலால் ரசிக்க வைத்திருக்கிறார். மிகச்சிறந்த பாடகி என்பதை தாண்டி டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி என பல முகங்களோடு வலம்வரும் சின்மயி, தன் பாடல்கள் வாயிலாக எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டாரோ, அதே அளவுக்கு தன் வெளிப்படையான கருத்துகளுக்காக விமர்சிக்கவும் பட்டார். தமிழ் சினிமாவில் மீ டூ இயக்கத்தின் முதல் முகமும், குரலுமாக பார்க்கப்படும் சின்மயி ஸ்ரீபாதா, வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறிய குற்றச்சாட்டிற்காக 6 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது மட்டுமின்றி டப்பிங் யூனியனில் இருந்தும் விலக்கப்பட்டார். இப்படி பல தடைகளை கடந்து இன்றும் திரையுலகில் தன்னை ஒரு சிறந்த பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக நிலைநிறுத்த முயற்சித்துவரும் சின்மயி, தனது 40-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஒரு பாடகியாக அவர் எதிர்கொண்ட சவால்கள், பெற்ற வெற்றிகள், விமர்சனங்கள், திருமணத்திற்கு பிறகு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது போன்ற பல தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

சின்மயியின் ஆரம்பகாலம்


ஒரு தெய்வம் தந்த பூவாக, அம்மா பத்மாசினியுடன் பாடகி சின்மயி 

மனதை மயக்கும்விதமான பாடல்களை பாடி, எப்போதும் நம் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்ளும் சின்மயி ஸ்ரீபாதா, 1984-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பத்மாசினி என்பவருக்கு மகளாக பிறந்தார். இவர் தாய்மொழி தமிழ் என்பதனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். சின்மயி குடும்பமே இயல்பாகவே இசை குடும்பம் என்பதால் அது அவருக்கும் எளிதாக வந்துவிட்டது. அதாவது சின்மயியின் அப்பா வழி தாத்தாவான ஸ்ரீபாதா பினாகபாணி ஒரு மருத்துவர் மட்டுமின்றி பத்மபூஷன் விருது பெற்ற மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞரும் ஆவார். இவரது அப்பா குறித்த தகவல்கள் பெரியளவில் வெளிவராத நிலையில், சின்மயி பிறந்து சிறிது நாட்களிலேயே தொழில் நிமித்தமாக மும்பையில் இருந்து சென்னை வந்த இவரது அம்மா பத்மாசினி இங்கு இந்திரா நகரில் தங்கி தனியொரு பெண்மணியாக இவரை வளர்த்துள்ளார். மேலும் அதே பகுதியில் செயல்பட்டுவந்த இந்து பள்ளியில் மகளை சேர்த்து படிக்கவைத்தவர், வெறும் படிப்போடு நிறுத்திவிடாமல் அந்த சிறுவயதிலேயே தன்னை போன்றே சிறந்த பாடகியாகவும், கர்நாடக இசைக் கலைஞராகவும் பெரிய அளவில் வர வேண்டும் என்று கர்நாடக இசை, ஹிந்துஸ்தான், கிளாசிக்கல் போன்ற இசையையும் மிகவும் கண்டிப்புடன் சொல்லிக் கொடுத்துள்ளார். அம்மா பத்மாசினியின் கண்டிப்புமிக்க இசை படிப்பு சின்மயிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததால் 10 வயதிலேயே இந்திய அரசிடமிருந்து இளம் சாதனையாளர்களுக்கான கர்நாடக இசை விருது மற்றும் CCRT எனப்படும் உதவித்தொகையைப் பெற்றார். மேலும் 2000 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் இருந்து கஜல்களுக்காக தங்கப் பதக்கத்தையும், 2002 இல் ஹிந்துஸ்தானி இசைக்கான வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இப்படி இசையில் அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே சென்றவர் பள்ளி படிப்பையும் முடித்த கையோடு, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இந்த நேரம் தன் இசை திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக சன் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் அதிலும் தன் வெற்றி முத்திரையை பதித்தார்.

வாய்ப்பு தந்த ரகுமான்


'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் இசைப்புயலால் பாடகியாக அறிமுகம் செய்யப்பட்ட சின்மயி 

இசை என்னும் வைரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பட்டைத்தீட்டி மெருகேற்றி வந்த சின்மயியின் திறமையை சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகர் ஸ்ரீநிவாஸ் அடையாளம் கண்டார். குறிப்பாக அவர் பாடியவிதம் மிகவும் பிடித்து போய் பாராட்டியதுடன் அவரை இசைப்புயல் ரகுமானுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகம்தான் அப்போது அவர் இசையமைத்துக் கொண்டிருந்த மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ திரைப்படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலை பாடும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. சற்று கடினமாக தெரியும் இந்த பாடலை தனக்கே உரிய அழகுடன் வெகு இயல்பாகவும், உயிரோட்டத்துடனும் பாடி அனைவரையும் ரசிக்க வைத்ததுடன், முதல் பாடலிலேயே இந்திய அளவில் மிகப்பெரிய புகழையும், பாராட்டுகளையும் பெற்றார். ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதையும் முதல் படத்திலேயே பெற்றார். மேலும் இதே பாடலை தெலுங்கிலும் ரகுமானின் இசையில் பாடிய சின்மயி தெலுங்கு திரையிசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த பாடலை இன்றும் சின்மயி எந்த மேடையில் ஏறி நின்று தமிழ், தெலுங்கு என இரண்டிலும் மாறி மாறி பாடினாலும் ரசிகர்களின் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்து போகும் அளவுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இருந்து வாய்ப்புகள் வர, தொடர்ந்து பாடி புகழ் பெற ஆரம்பித்தார். அதிலும் சின்மயி தனது தாய்மொழியான தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன், ஃப்ரெஞ்ச், மராத்தி, ஸ்பானிஷ், பஞ்சாபி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமை பெற்றவர் என்பதாலேயே அவரால் பிறமொழி பாடல்களையும் எளிதாக பாட முடிந்தது. தமிழ், தெலுங்கில் எப்படி சின்மயி ஒரு பாடகியாக வெற்றிகரமான முத்திரையை பதிக்க ரகுமான் காரணமாக இருந்தாரோ அதே போன்றுதான் பாலிவுட்டிலும் சின்மயி கால்பதிக்க அவரே தூண்டுதலாக இருந்தார். அதன்படி 2005-ஆம் ஆண்டு 'மங்கள் பாண்டே; தி ரைசிங்' என்ற திரைப்படத்தில் 'ஹோலி ரே' பாடலைப் தனது இசையிலேயே பாட வைத்து அதன்முலம் சின்மயியை பாலிவுட்டில் தடம் பாதிக்க வைத்தார். இதன்பிறகு அங்கும் தன் மென்மையான குரலால் ரசிகர்களை தன் வசப்படுத்திய சின்மயி தொடர்ந்து ரகுமான் இசையில் 'குரு' படத்தில் இடம்பெற்ற 'தேரே பீனா', 'மையா மையா' ஆகிய பாடல்களை இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்திலும் பாடி தேசிய அளவில் புகழ்பெற்றார். அதேநேரம் ரகுமான் இசையில் இவர் தமிழில் பாடிய ‘சஹானா சாரல் பூத்ததோ” பாடலும், ‘கிளிமாஞ்சாரோ” பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இன்றும் முதலிடத்தில் இருக்கும் வகையில் அமைந்தது மட்டுமின்றி இரண்டாவது, மூன்றாவது முறை என தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக்கொடுத்தன.

பின்னணியிலும் முன்னணி


பாடகியாக இருந்து பின்னணிக் குரல் கலைஞராக மாறிய சின்மயி 

இதன்பிறகு ரகுமானை தவிர தமிழில் இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தீனா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், டி.இமான் என்று வரிசையாக மெலோடி, ஜாலி, சோகம் என பலவிதமான ஜானர் பாடல்களை பாடி தன் தேன் சொட்டும் குரலால் ஒட்டுமொத்த திரை இசை ரசிகர்களையும் கட்டிப்போட்டார். இந்த 22 ஆண்டுகளில் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே வெற்றிப்பாடல்களாக அமைந்து சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதை நான்கு முறையும், தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை ஐந்து முறையும் பெற்றுக்கொடுத்தன. மேலும் பாடகி என்பதை தாண்டி திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்க தொடங்கிய சின்மயி, சூர்யாவின் 'ஜில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகை பூமிகா தொடங்கி பத்மபிரியா, வேதிகா, சமீரா, திரிஷா, சமந்தா, தமன்னா என முன்னணி ஹீரோயின்கள் அனைவருக்கும் இன்றும் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இதில் தமிழை தாண்டி பிறமொழி படங்களுக்கும் குரல் கொடுத்துவந்தவருக்கு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'யே மாயா செஸாவே' என்ற படத்தில் சமந்தாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததற்காகச் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் எப்படி எஸ்.பி.பாலசுப்ரமணியம், உலக நாயகன் கமல்ஹாசனின் தெலுங்குக் குரலாக அறியப்படுகிறாரோ, அதேபோன்று சமந்தாவின் தெலுங்குக் குரலாக சின்மயியும் மாறிப்போனார். இப்படி நிறைய பாடல்களை பாடியும், பின்னணி குரல் கொடுத்தும் புகழின் உச்சாணிக்கொம்பில் சின்மயி ஏறிக்கொண்டிருந்த சமயத்திலேயே தனது சமகால நண்பரும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார். இனி திருமணத்திற்கு பிறகு திரைப்பயணம் தடைபடும் என்று அவரின் ரசிகர்கள் நினைக்க, கணவரின் முழு ஒத்துழைப்போடு பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தனது பயணத்தை இடைவிடாமல் தொடர்ந்தார். இவர்களின் புரிதலுடன் கூடிய அழகான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2022-ஆம் ஆண்டு ஒரு மகன், மகள் என இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.


சின்மயி - ராகுல் ரவீந்திரன் திருமண புகைப்படம் 

சுற்றி வளைத்த சர்ச்சை

அழகான குடும்ப வாழ்க்கை, இசையுலகிலும் ராணி என சின்மயி பயணித்துவந்த நேரத்தில், சின்மயி,  2018-ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் புகாரினை தெரிவித்து மீடூ என்ற சர்ச்சையை கிளப்ப அது நாடு முழுவதும் பரபரப்பானது. அப்போதுதான் மீடூ என்ற இயக்கம் சர்வதேச அளவில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் விதமாக பல அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த தருணம் என்பதால் தமிழகத்திலும் பாடகி சின்மயி மிகவும் துணிச்சலாக மீடூ இயக்கத்தினை முதல் முறையாக தொடங்கி, தான் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டுமல்லாமல் தன்னைப்போல் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி தவித்த பல பெண்களின் மன குமுறல்களையும், குற்றச்சாட்டுகளையும் வெளிச்சம்போட்டு காட்டி அதில் தொடர்புடைய ஆண்கள் பலரையும் வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தினார். இதனால் பொதுவெளிகளில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவமானங்களுக்கும், ஆபாச வார்த்தைகளின் தாக்குதல்களுக்கும் ஆளானார் சின்மயி. அவர் சொன்ன தகவல்கள் பொய் என சிலர் கூறினாலும், இந்த விமர்சனங்களால் மனதளவில் அவர் நிறைய காயப்பட்டிருந்தாலும், மனத்திற்குள்ளாக அழுது தீர்த்திருந்தாலும், தனக்கு நிகழ்ந்தது குறித்து பேசியதற்காக இப்படியா நம்மை விமர்சிப்பது என்று வேதனைப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் மிகவும் மனதைரியத்துடன் கடந்து, தைரியம் மிக்க பெண்ணாக, தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த ஒத்துழைப்பால் தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக இன்றளவும் அதே துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகிறார்.


2018ல் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் புகாரினை தெரிவித்த சின்மயி  

மீண்டும் வெளிச்சத்தை நோக்கி

"நான் பொய் பேசவில்லை. எனக்கு யாரும் நேர்மையான பெண்மணி என்று சான்றிதழ் தர தேவையில்லை. தன்னந்தனியாக நடந்தாலும் என்னால் நடக்க முடியும்" என்ற ஒரு மனதைரியத்தை கொண்டவராக எப்போதும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் சின்மயி, நீண்ட இடைவேளைக்கு பிறகு பல எதிர்ப்புகளை தாண்டி லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குநரின் முயற்சியால் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். பிறகு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்து பிஸியான ஒரு கலைஞராக மீண்டும் பயணிக்க தொடங்கியவர், தன் மானசீக குருவான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்திலும் பாடினார். அதே வேளையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக இப்போதும் குரல் கொடுத்து வரும் இவர், சமீபத்திய ஒலிம்பிக்ஸ் சர்ச்சையின்போது இமானே கெலிப்-க்கு ஆதரவாக குரல் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏன் தற்போது மலையாள திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘ஹேமா கமிட்டி’ விவகாரத்தில் கூட கருத்து தெரிவித்திருந்த சின்மயி, தமிழ், தெலுங்கு உள்பட பிற திரையுலகிலும் இதுபோன்ற ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக, இங்கு “அது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை” என கூறியிருக்கிறார். இது மீடூ தந்த வலியின் வெளிப்பாடே என்றாலும், இவரின் கம்பேக் பயணம் மீண்டும் வேகமெடுத்து அடுத்தடுத்த உயரங்களை தொட அவரின் இந்த 40-வது பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்