உங்கள் உடலில் எங்கெல்லாம் டாட்டூ போடலாம், போடக்கூடாது என்று தெரியுமா?

உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் டாட்டூ போட்டுக்கொள்ளலாம் என்ற கருத்தும் தவறு என்கின்றனர் நிபுணர்கள்.

Update:2023-07-25 09:45 IST
Click the Play button to listen to article

இளைஞர்கள் மத்தியில் இப்போது ‘டாட்டூ’ போடுவது மிகவும் பிரபலமாக இருக்கிறது. நமது பாட்டி காலத்தில் பச்சை குத்துதல் பரவலாக இருந்து வந்தது. அம்மா காலத்தில் அந்த பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் இப்போது மீண்டும் பெருகியிருக்கிறது. இந்த பச்சைக் குத்துதல் 5000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. எகிப்தில் ‘மம்மி’ பதப்படுத்தும் போது பச்சைக் குத்தியிருந்ததாக தொல்லியல் துறை வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் அதே காலகட்டத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவிலும் புழக்கத்தில் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் பல வழிபாடுகள் இருந்தது நமக்கு தெரியும். மம்மி வழிபாடு குறித்து நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் டாட்டூ வழிபாடு கூட எகிப்தில் இருந்திருக்கிறது. எகிப்தில் பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் திடமாக இருக்க வேண்டும் என்பதற்காக டாட்டூ போட்டு வந்தனர். டாட்டூ போடுவதன் மூலம் மனதைரியம் கிடைக்குமென அவர்கள் நம்பினர். அவர்கள் விலங்குகளின் எலும்பு, பல் மற்றும் தாவரத்தின் முட்களை கூர்மையாக்கி டாட்டூ ஊசியாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.


டாட்டூ போடுதல் பாதுகாப்பானதா? டாட்டூ போடுவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து விளக்குகிறார் டாட்டூ ஆர்டிஸ்ட் இகோவா.

டாட்டூ போடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படுமா?

டாட்டூ போடுவதற்கு முன்பு தன்னுடைய உடலைப்பற்றி முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு நீரிழிவு நோய் இருப்பவர்கள் டாட்டூ போடும்போது, அந்த காயம் ஆறுவதில் சிக்கல் ஏற்படும். அதேபோல், பிற உடல் பிரச்சனைகளுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு டாட்டூ போடும்போது, கெமிக்கல் பிரச்சனைகளால் சருமத் தொற்று ஏற்படலாம். இதனை சிகிச்சைமூலம் சரிசெய்ய முடியும். அதேபோல் மது அருந்தி இருக்கும்போது டாட்டூ போடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மது அருந்தி இருக்கும்போது இரத்த ஓட்டம் அதிகமாவதால் டாட்டூ இங்க் சரியாக சருமத்தில் சேராமல் எளிதில் மங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

டாட்டூ போடுவதன் நன்மை தீமைகள் என்ன?

டாட்டூவை பொருத்தவரையில் அப்படி நன்மை தீமை என்றெல்லாம் எதுவுமில்லை. டாட்டூ எல்லோருக்குமே பொருந்தும். வெளிநாட்டினர் சருமம் இந்திய நாட்டவரைப் போன்று இருக்காது. அவர்கள் வெயிலில் சுற்றினாலும் அவர்கள் சரும நிறம் மாறாது. அதனால் நாம் அவர்களை போன்று பல்வேறு வண்ணங்களில் டாட்டூ போடுவதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக கருப்பு இங்க்கைவிட பிற கலர் இங்க்குகளில் கெமிக்கல்கள் மாறும். இதனாலும் சருமத் தொற்றுகள் வரும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல், 21 வயதுக்கு மேல் டாட்டூ போடுவது பாதுகாப்பானது. தற்காலிக டாட்டூ (Temporary tattoo) போடும்போது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய டாட்டூக்களை போடுவது பாதுகாப்பானது. சிலர் 6 மாதம் வரை இருக்கக்கூடிய தற்காலிக டாட்டூக்களை போட்டுக்கொள்வார்கள். இந்த சமயத்தில் சற்று அரிக்கிறதே என்று அந்த இடத்தை தேய்த்தாலோ அல்லது சொரிந்துவிட்டாலோ தொற்றுகள் வரும் வாய்ப்புகள் உண்டு. நிரந்தர டாட்டூ ஒன்றும் செய்யாது.


சருமத்திற்கு ஏற்ப டாட்டூ இங்க் நிறத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

பெரும்பாலும் கருப்பு நிற சருமம் உடையவர்களுக்கு கருப்பு இங்க் மட்டுமே செட் ஆகும். மாநிறத்தினருக்கு சிவப்பு பொருந்தும். ஆனால் பழுப்பு நிற சருமம் உடையவர்களுக்கு பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை இங்க் மட்டுமே பொருந்தும். மஞ்சள், ஆரஞ்சு போன்ற இங்குகள் பொருந்தாது

டாட்டூ ஊசிகள் மற்றும் நிறங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒரு இரண்டு அல்லது மூன்று அங்குலம் டாட்டூவாக இருந்தால் 5RL ஊசியை பயன்படுத்தலாம். ஃபில்லருக்கு RS பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தலாமா?

இது தவறானது மற்றும் பாதுகாப்பற்றது. ஒருவருக்கு டாட்டூ போடும்போது பயன்படுத்திய இங்க் மற்றும் ஊசியை பிறருக்கு பயன்படுத்தும்போது, ஒருவருக்கு இருக்கும் சரும பிரச்சனைகள் பிறருக்கும் பரவ வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ஒருவருக்கு பயன்படுத்திய கேப், இங்க், க்ளவுஸ் மற்றும் ஊசி என எதையுமே பிறருக்கு பயன்படுத்தக்கூடாது.

நிரந்தர டாட்டூவை அழிக்க முடியுமா?

தற்காலிக டாட்டூவை அழிப்பது சுலபம். ஆனால் நிரந்தர டாட்டூவை அழிப்பதற்கு குறைந்தது 3 அல்லது 4 செக்‌ஷன்கள் தேவைப்படும். கருப்பு இங்க்குக்கும், கலர் இங்க்குக்கும் சிட்டிங்ஸ் மாறுபடும். ஒவ்வொரு சிட்டிங்கிலும் இங்க்கானது கொஞ்சம் கொஞ்சமாக மங்கிகொண்டே வரும். இருப்பினும், டாட்டூவை முழுவதுமாக அழித்து பழைய நிலைக்கு சருமத்தை கொண்டுவர முடியாது. டாட்டூ முழுமையாக அழிந்து விட்டாலும் சிறிய பேட்சாக தெரியும்.


சென்சிடிவ் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடலாமா?

சென்சிடிவ் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடுவது பாதுகாப்பற்றதுதான். மார்பு, கழுத்து மற்றும் கெண்டைக்காலின் பின் பகுதிகளில் டாட்டூ போடும்போது அதிக வலி ஏற்படும். தொடைகளில் டாட்டூ போடும்போது முன்னர் கூறிய மூன்று பகுதிகளைவிடவும் வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். டாட்டூ மெஷினின் பவரானது இடத்திற்கு இடம் மாறுபடும். அதற்கேற்ப வலியும் மாறுபடும். ஒரே பவரில் வைத்து டாட்டூ போட்டால் தோல் கிழிந்து விடும்.


காயம் மற்றும் தழும்புகளின்மீது டாட்டூ போடுவது பாதுகாப்பானதா?

காயம் ஏற்பட்ட உடனே டாட்டூ போட முடியாது. காயம் மற்றும் தழும்பை பொருத்தே டாட்டூ போடமுடியும். உதாரணத்திற்கு தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை மறைக்க டாட்டூ போடுபவர்கள், காயம் ஏற்பட்டு குறைந்தது 3 முதல் 5 வருடங்களுக்கு பிறகே டாட்டூ போடவேண்டும். ஏனெனில் சாதாரணமாக இருக்கும் சதையின் தன்மையானது காயம் ஏற்பட்ட பிறகு மென்மையாக மாறிவிடும். அதாவது பிடிப்புத்தன்மை முன்போல் இருக்காது. அந்த பகுதிகளில் எந்த ஊசியை பயன்படுத்தினாலுமே, சற்று ஆழமாகத்தான் இறங்கும். சிறு தழும்புகள் அல்லது காயங்களை மறைக்க சிறிய டாட்டூவே போதுமானது. ஆனால், பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் அந்த தழும்பை மறைக்க டாட்டூ போட்டால், ஒரு முழு நாள் கூட தேவைப்படலாம்.


மங்கிப்போன டாட்டூவை புதுப்பிக்கலாமா?

மங்கிப்போன டாட்டூவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அது பரவியிருந்தால் புதுப்பிப்பது சிரமம். நல்ல நிபுணத்துவமுள்ள கலைஞரிடம் டாட்டூ போட்டால் அவர்கள் இங்க் பரவாமல் போடுவார்கள். அப்படியிருந்தால் புதுப்பிப்பது எளிது.

Tags:    

மேலும் செய்திகள்