திருமண பிளவுஸ்களுக்கு இவ்வளவு நேரம் எடுக்குமா? - பகிர்கிறார் ஆரி டிசைனர்
வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் வாட்ஸ் அப் மூலமாக சேலைகளுக்கு ஏற்றவாறு, தங்களுக்கு விருப்பமுள்ள மாடல்களை தேர்வு செய்வோரும் உண்டு.
பொதுவாகவே பெண்கள் எப்போதும் தங்கள் அழகுபடுத்திக்கொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்கள். விதவிதமாக ஆடைகளை அணிவதில் அவர்களுக்கு எப்போதும் அலாதி பிரியமுண்டு. மற்றவர்கள் அணியும் ஆடைகளிலிருந்து தங்களுடைய ஆடை தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களின் பிரத்யேக சாய்ஸ், ஆரி வொர்க் எனப்படும் புதுவிதமாக வேலைப்பாடுகள். இன்றைய நவீன யுக பெண்கள் பாரம்பரிய முறையை தவிர்த்து, விதவிதமாக சேலை மற்றும் வண்ணமயமான ஜாக்கெட்கள் அணிவதையே விரும்புகின்றனர். அதற்கு ஏற்றாற்போல இன்றைய ஆடை வடிவமைப்பாளர்களும் பெண்களின் மனதை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில், பார்த்தவுடன் பிடிக்கும் வகையில் ஆரி வேலைப்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர்.
அதில், நிறங்கள் முதல் கற்கள் வரை நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரையில் ஆரி வேலைபாடுகள் செய்யப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்யமுடிந்த வேலை என்பதால் இந்த வேலைப்பாடுகளை கற்றுக்கொள்வதில் பெண்களும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இதுகுறித்து ஆரி டிசைனர் நிவேதாவுடனான ஓர் உரையாடல்...
ஆரி வேலைப்பாடு
எப்படி ஆரி வேலைபாடுகளின்மீது ஆர்வம் வந்தது?
இயல்பாக சிறுவயதிலிருந்தே `ஃபேஷன்’ துறைமீது எனக்கு ஆர்வம் இருந்தது. என்னை அழகுபடுத்திக்கொள்ளும் பொழுதும் சரி, பிறரை அழகுபடுத்தி பார்க்கும்பொழுதும் சரி; எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிதான் இத்துறைமீது இருந்த ஆர்வத்தை தூண்டச்செய்தது. பிறகு அதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக முன்னேறி தற்போது ஆரி வேலைப்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். நான் இந்தத் தொழிலை சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகவே செய்துவருகிறேன். கொரோனா காலத்திற்கு முன்னரெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆரி வேலைப்பாட்டில் ஈடுபடத் தொடங்கி தற்போது ஷோரூம் வைத்து விற்பனை செய்துவருகிறேன்.
சாதாரண பிளவுஸிற்கும், ஆரி பிளவுஸிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
சாதாரண பிளவுஸ் என்பது அந்தந்த சேலைகளுக்கு ஏற்றாற்போல உடுத்திக்கொள்வது. ஆனால் ஆரி என்பது ஒரு கலை. இதனை அவரவர் விருப்பதிற்கேற்றாற்போல வடிவமைத்துக்கொள்ளலாம். சாதாரண சேலையாக இருந்தாலும்கூட அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் காட்ட வேண்டுமானால் ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆரி வேலைப்பாடுகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து தரப்படும்.
சாதாரண ஆரி பிளவுஸ் மற்றும் மணமகள் வேலைப்பாடு நிறைந்த பிளவுஸ்
முதலில் வாடிக்கையாளரின் உடல் அளவிற்கேற்ப துணியை அளவெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த துணியை நீள பலகையில் வைத்து ஃபிக்ஸ் செய்யவேண்டும். பின்னர் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு டிசைன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் வாட்ஸ் அப் மூலமாக சேலைகளுக்கு ஏற்றவாறு, தங்களுக்கு விருப்பமுள்ள மாடல்களை தேர்வு செய்வோரும் உண்டு. அதுமட்டுமல்லாமல் தாமாகவே வேண்டிய வேலைப்பாடு வடிவங்களை சொல்லி தைத்து வாங்கிச்செல்வோரும் உண்டு.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ஆடைகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன?
தென்னிந்திய முறைப்படி முகூர்த்த சேலைகள், பல்லாக்கு சேலைகள், மணமகன், மணமகள் ஆடைகள் என ஏராளமான வகைகள் இருக்கின்றன. தமிழ் கலாசார முறைப்படி எடுத்துக்கொண்டால் ஆடைகளில் ஒரு மானையோ, பல்லாக்கில் தூக்குவது போன்ற ஒரு காட்சியையோ அல்லது திருமணப் பெண்ணையோ கூட காட்சிபடுத்த முடியும்.
ஆரி வேலைப்பாட்டின் வகைகள்
ஆரி வேலைபாட்டின் வகைகள் என்னென்ன? ஒரு வேலைப்பாட்டை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பீட் ஒர்க், ஜர்துசி ஒர்க், திரெட் ஒர்க் போன்றவைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சேலைகளுக்கு ஏற்றவாறு எதற்கு எது பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து வடிவமைத்து தரப்படும். ஒரு சாதாரண சேலைக்கு ஆரி வேலைபாடு நிறைந்த பிளவுஸை வடிவமைக்க அதிகபட்சம் ஒரு நாள் தேவைப்படும். ஆனால் மணமகள் ஆடைகளுக்கு முதலில் செட்டிங் செய்வது முதல் இறுதி வடிவமைப்பு வரை கிட்டத்தட்ட ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை எடுக்கும்.
இதுவரை நீங்கள் செய்த வேலைபாடுகளில் உங்களின் மனதுக்கு பிடித்தது எது?
திருமண மணப்பெண்களுக்கு வடிவமைக்கும் பிளவுஸ்கள் அனைத்துமே என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றுதான். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமான ஒரு தருணம். எனவே மணப்பெண்களுக்காக செய்யப்படும் வேலைப்பாடுகள் அனைத்துமே மனதிற்கு மிகவும் நெருக்கமானவை.