அழகுக்கு அழகு சேர்க்கும் பிரைடல் மேக்கப்!

ஒப்பனைகளை பொருத்தவரை நியூட் மேக்கப், எச்.டி மேக்கப், மேட் மேக்கப், டியூவி மேக்கப், ஹேர்ப்ரஷ் மேக்கப், எடிட்டோரியல் மேக்கப், செலிபிரிட்டி மேக்கப், பெர்மனெண்ட் மேக்கப் என பல வகைகள் இருக்கின்றன.

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

பெண் என்றாலே அழகுதான். ஆனால் அந்த அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக முன்பை காட்டிலும் இப்போது பெண்கள் ஒப்பனையில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் வெளியில் செல்லும்போதோ அல்லது விழாக்களுக்கு செல்லும்போதோதான் ஒப்பனை செய்துகொண்டனர். ஆனால் இப்போது பெண்கள் வீட்டில் இருந்தாலும் சரி, பக்கத்துக் கடைக்கு சென்றாலும் சரி ஒப்பனை செய்யாமல் வெளியே செல்வதற்கே தயங்குகின்றனர். ஒப்பனைகளை பொருத்தவரை நியூட் மேக்கப், எச்.டி மேக்கப், மேட் மேக்கப், டியூவி மேக்கப், ஹேர்ப்ரஷ் மேக்கப், எடிட்டோரியல் மேக்கப், செலிபிரிட்டி மேக்கப், பெர்மனெண்ட் மேக்கப் என பல வகைகள் இருக்கின்றன.

குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக தெரிய ஆசைப்படுவார்கள். அதற்காக அந்த நாளில் உடை மற்றும் அணிகலன்களுக்கு தரும் முக்கியத்துவத்தை போன்றே புகைப்படத்திலும் அழகாக தெரிய அணியும் உடைகளுக்கேற்ப ஒப்பனையை தேர்வு செய்கின்றனர் இக்காலத்து மணப்பெண்கள். டார்க் டோன், லைட் டோன் என்று தங்களின் சருமத்திற்கேற்ற ஒப்பனைகளை ஒரு நாளுக்கு முன்னரே ட்ரயலும் பார்க்கின்றனர். இன்னும் சில மணப்பெண்கள் 3 மாதத்திற்கு முன்பிருந்தே தங்கள் சருமத்தை பொலிவு செய்துகொள்கின்றனர்.


பிரைடல் மேக்கப்

நகரத்திற்கு ஒரு அழகு நிலையம் அமைந்திருந்த காலம்போய் தெருவுக்கு ஒரு அழகு நிலையம் என்ற அளவிற்கு ஒப்பனை மிகப்பெரிய தொழிலாக மாறி இருக்கிறது. இப்போதோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பியூட்டி கோர்ஸ் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அதற்கான காரணம் அதில் வரும் வருமானம் என்று சொல்லலாம். யாருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று அழகு கலை நிபுணர்கள் காத்திருந்த நாட்கள் மறைந்து இந்த நாளில் இந்த அழகு கலை நிபுணர் இருப்பாரா என்று எதிர்பார்க்கும் அளவிற்கு அழகு கலை நிபுணர்களின் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.

பிரைடல் மேக்கப்

இன்று முறையாக கோர்ஸ்களில் சேர்ந்து பிரைடல் மேக்கப் கற்றுக்கொள்வதற்கு 50,000 - 1 லட்சம் செலவாகிறது. இதுபோன்ற பெரிய தொகை செலுத்தி பிரைடல் மேக்கப் கற்றுக் கொண்டாலும் ஒரு பிரைடல் மேக்கப்பிற்கு குறைந்தது 30, 000 முதல் 1 லட்சம் வரை வருவாயை ஈட்டுகின்றனர்.

இதுபோன்ற ஒப்பனையை கற்றுக்கொள்ள தனியாக 3 மாதம் முதல் 1 வருடம் வரை பியூட்டி கோர்ஸ் வகுப்புகள் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. கோர்ஸ் முடித்ததற்கு ஒரு தகுதி சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த பியூட்டி கோர்ஸ் நடத்துவதும் ஒருவிதமான வருவாயை ஈட்ட உதவும் அமோகமான தொழிலாக வளர்ந்திருக்கிறது. பியூட்டி கோர்ஸை பயில வயது வரம்பு தேவையில்லை. பயிலும் ஆர்வம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. மேலும் இந்த தொழில் செய்ய இடம் ஒரு தடையாக அமைவதில்லை. அழகுசாதனப் பொருட்கள் இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

முகூர்த்த நாட்களில் குறைவான நேரத்தில் எளிதாக மற்றும் அழகாக ஒப்பனை செய்வது எப்படி என்பதை அழகுக்கலை நிபுணர் நிவாஷினி விளக்கியுள்ளார்.


முகூர்த்தம் ஹேர் ஸ்டைல் செய்யும் முறை

முகூர்த்தம் ஹேர் ஸ்டைல்

முதல் ஸ்டெப்பாக முடி எந்த அளவிற்கு நீளமாக இருந்தாலும் அதை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கிரிம்பர் (crimper) உபயோகித்து கிரிம்ப் செய்ய வேண்டும். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய நேரமில்லை என்றால் நேரடியாகவே கிரிம்பர் மூலமே முடியை கிரிம்ப் செய்துகொள்ளலாம். கிரிம்ப் செய்வதன் மூலம் தலைமுடி அடர்த்தியாக காணப்படும். அதனால் ஹேர்ஸ்டைல் நன்றாக தெரியும். கிரிம்ப் செய்தவுடன் முன் முடியை இரண்டுப் பகுதிகளாக பிரித்துவிட்டு பின் முடியை கொஞ்சம் கொஞ்சமாக back comb செய்து ஸ்பிரே அடித்து பஃப் அமைக்க வேண்டும். அடுத்து முன் பகுதியிலிருக்கும் முடியையும் அதே போல் back comb செய்து சிறிது சுருட்டி கிளிப் போட வேண்டும். மீதமுள்ள பின் முடியை பின்னல் போட்டு கொண்டை போட வேண்டும். கொண்டை போட்ட பின்னர் சவுரி முடியை கொண்டையுடன் கட்டி கொண்டையை சுற்றி பூ வைக்கவேண்டும். அந்த சவுரியின் நடுவில் பில்லை மாட்டினால் முகூர்த்தம் ஹேர் ஸ்டைல் ரெடி.


கண்களுக்கு ஐ ஷேடோ மற்றும் முகத்திற்கு மாய்சரைஸர்

பொதுவாகவே மணப்பெண் ஒரு மாதத்திற்கு முன்பே ப்ளீச், ஃபேஷியல் செய்வது நல்லது. அதேபோல் திருமணம் நடக்கும் 3 நாட்களுக்கு முன்னால் மீண்டும் ப்ளீச்சிங், ஃபேஷியல் மற்றும் முகத்திலுள்ள முடிகளை நீக்கி, அந்த 3 நாட்களும் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்கின் பீலிங், கெமிக்கல் பீலிங் போன்றவற்றை 3 மாதங்களுக்கு முன்பே செய்துகொள்ள வேண்டும்.

முகூர்த்தம் மேக்கப்

ஒரு காட்டன் பேடில் மிசில்லர் வாட்டரை டிப் செய்து முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். அடுத்ததாக சருமத்திற்கு ஏற்ற டோனரை தேர்வு செய்து புதிய காட்டன் பேடினால் முகத்தில் டோனர் தடவ வேண்டும். டோனரை தொடர்ந்து மாய்சரைஸர் தடவ வேண்டும். இந்த கிளென்சர், டோனர் மற்றும் மாய்சரைஸர் தடவும் முறையானது CTM முறை என்று சொல்லப்படுகிறது.


ஃபேஸ் மற்றும் ஐ மேக்கப் 

அடுத்தபடியாக உதட்டில் லிப் பாம் தடவ வேண்டும். அடுத்து கண்களில் ஐ பிரீமியர் பேஸ் போட வேண்டும்.

பியூட்டி ப்ளெண்டர் வைத்து பிரீமியர் பேஸை முகத்தில் மென்மையாக பூசவேண்டும். அடுத்தகட்டமாக ஸ்கின் டோன் மற்றும் திருமண உடைக்கு ஏற்ற ஐ ஷேடை தேர்ந்தெடுத்து பிரஷ்ஷால் கண்களின் மேல் தடவவேண்டும். அடுத்து ஷேட்களுக்கு ஏற்ற கன்சீலரை தடவி, புடவை அல்லது அணியும் உடைகளுக்கேற்ப ஷிம்மர் வண்ணத்தை தேர்ந்தெடுத்து ஷிம்மர் செய்ய வேண்டும். அதிக கிளிட்டராக காண்பிக்க, கொஞ்சம் ஷிம்மர் பவுடரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கண்களுக்கு கிளிட்டர் அல்லது ஷிம்மர் பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் கண்களுக்கான மேக்கப்பை முடித்து வீட்டுக்கு பின்னர் முகத்திற்கு மேக்கப் செய்வது நல்லது. முதலில் முகத்திற்கு மேக்கப் செய்துவிட்டு பின்னர் கண்களுக்கான மேக்கப் செய்வதாக இருந்தால் ட்ரான்ஸ்லுசென்ட் பவுடரை கண்களைச் சுற்றி தடவிவிட்டு பின்னர் கண்களுக்கான மேக்கப் செய்யவேண்டும்.


முகத்திற்கு பவுண்டேஷன் போடுதல்

கண்களுக்கு மேக்கப் முடித்தபிறகு முகத்தில் பிரைமர் தடவ வேண்டும். மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க ஸ்மாஷ் பாக்ஸ் பிரைமர் பயன்படுத்தலாம் அல்லது கலர் பாக்ஸ் பிரைமரை பயன்படுத்தலாம். பிரைமரை பிரஷ்ஷால் தடவுவதைவிட விரலினால் தடவுவது நல்லது.

பிரைமரைத் தொடர்ந்து கலர் கரெக்டர் பயன்படுத்த வேண்டும். முகத்தில் கருவளையங்கள் அதிகமாக காணப்பட்டால் சிவப்பு கரெக்டரையும் கொஞ்சமாக இருந்தால் ஆரஞ்சு கரெக்டரையும் பயன்படுத்த வேண்டும்.

பின்னர் பவுண்டேஷன் போட வேண்டும். பிரைடல் என்றாலே பிரைட்டாக இருக்க வேண்டும் என்பதால் பவுண்டேஷனை எப்போதும் சரும டோனிற்கு 1 டோன் அதிகமாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷன் போட்டு பவுண்டேஷன் பிரஷ் கொண்டு ப்ளென்ட் செய்ய வேண்டும்.


மேக்கப்பிற்கு பிறகான சிகை அலங்காரம் 

அடுத்ததாக ஹைலைட்டர் போட வேண்டும். ஹைலைட்டரை தேர்வு செய்யும்போது சரும டோனிற்கு 2 ஷேட்ஸ் லைட்டர் ஷேட்ஸையே தேர்வு செய்யவேண்டும். அதேபோல் டோனிற்கு 2 ஷேட்ஸ் டார்கர் ஷேட்ஸாக காண்டோரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹைலைட்டர் மற்றும் காண்டோரை பயன்படுத்திய பின்னர் ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர் தடவி மேக்கப்பை செட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக கண்களில் மை தடவுவது, ஐ லைனர் போடுவது, புருவத்தை டார்க் செய்வது போன்றவற்றை செய்யவேண்டும்.

இறுதியாக லிப் லைனர் பயன்படுத்தி உதட்டை சுற்றி அவுட்டர் லைன் போட வேண்டும். அதன் பின்னர் உடைக்கேற்ற லிப் ஷேட் தடவி முடித்து செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி முகத்தில் ஸ்பிரே செய்தால் போட்ட மேக்கப் செட் ஆகிவிடும். இதன்பிறகு கண்களின் மேல் ஐலேஷஸ் வைத்து முகத்திற்கேற்ப பொட்டு வைத்தால் அட்டகாசமான லுக்கில் அழகான மணப்பெண் ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்