முகத்தின் லுக்கையே மாற்றி அமைக்கும் ஐ-ப்ரோ த்ரெட்டிங்
அழகு கலை பயிற்சியில் முதலில் கற்றுக் கொடுப்பது ஐ-ப்ரோ த்ரெட்டிங்தான். ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்வதற்கு குறைந்த நேரம் எடுத்தாலும் அதில் கற்றுக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் அதிகம்.
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை குளிப்பாட்டி, பவுடர் போட்டு, பொட்டு வைத்து, புருவம் அழகாக வளர வேண்டும் என்று புருவத்தில் மை தீட்டி அழகு பார்ப்பார்கள். ஆனால், வளர்ந்த பிறகு புருவம் மெலிதாக இருந்தாலும் தடியாக இருந்தாலும் புருவம் அவர்களின் லுக்குக்கேற்ப அமைய வேண்டும் என்பதற்காக ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்து கொள்கிறார்கள். அழகு கலை பயிற்சியில் முதலில் கற்றுக் கொடுப்பதும் ஐ-ப்ரோ த்ரெட்டிங்தான். ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்வதற்கு குறைந்த நேரம் எடுத்தாலும் அதில் கற்றுக்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் அதிகம். நுணுக்கங்கள் நிறைந்த ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்வதெப்படி என்பதை விளக்குகிறார் அழகு கலை நிபுணர் பிரியா.
ஐ-ப்ரோ த்ரெட்டிங்
எப்போதும் ஐ-ப்ரோ த்ரெட்டிங் செய்வதற்கு முன்னர் முதலில் புருவத்தில் பவுடர் தடவ வேண்டும். பவுடர் தடவினால் மட்டுமே புருவத்தில் இருக்கும் முடிகள் தெளிவாக தெரியும். மேலும் வியர்வை இருந்தாலும் வியர்வை நீங்கி த்ரெட்டிங் செய்ய எளிதாக இருக்கும். வலப்பக்க புருவத்தை த்ரெட்டிங் செய்யும் போது வலது பக்கம் முன்புறம் நின்றும், இடப்பக்க புருவத்தை த்ரெட்டிங் செய்யும் போது இடது பக்கம் பின்புறம் நின்றும் த்ரெட்டிங் செய்ய வேண்டும்.
த்ரெட்டிங் செய்யும் முன் பவுடர் பூசுதல் - த்ரெட்டிங் செய்யும்போது புருவத்தின் மேலும் கீழும் பிடித்தல்
குறிப்பாக த்ரெட்டிங் செய்யும் போது வாடிக்கையாளருடன் நெருக்கமாக நிற்காமல் சிறு இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். த்ரெட்டிங் செய்துகொள்பவர்களையே புருவத்தின் மேலும் கீழும் பிடிக்க சொல்ல வேண்டும்.
த்ரெட்டிங் நூலை பயன்படுத்தி புருவத்தின் விளிம்பிலிருந்து தொடங்கி எங்கு வளைவு வேண்டுமோ அங்கு நூலை நுணுக்கமாக பயன்படுத்தி த்ரெட்டிங் செய்ய வேண்டும். எடுத்தவுடனேயே புருவத்தை மெலிதாக்கக் கூடாது. புருவம் தடியாக இருந்தால் எளிதாக மெலிதாக்கி கொள்ளலாம். ஆனால், புருவத்தை மெலிதாக்கிய பிறகு தடியாக்க முடியாது.
புருவத்தை நமக்கு ஏற்ற வகையில் த்ரெட்டிங் செய்துவிட்டு நீளமாக இருக்கும் முடியை வெட்டி கொள்ள வேண்டும். இரு புருவமும் ஒன்றாக அமைய, புருவம் சேரும் நடுப்பகுதியில் த்ரெட்டை அழுத்தி வைத்து அடையாளம் ஆக்கி கொள்ளலாம். அந்த அடையாளத்தை வைத்து அடுத்த புருவத்தை த்ரெட்டிங் செய்ய தொடங்கலாம்.
புருவங்களின் வடிவத்தை சரிசெய்தல் - க்ரீம் பயன்படுத்தி மசாஜ் செய்தல்
முதல் புருவத்தை செய்தது போல அடுத்த புருவத்தையும் மூக்கு பகுதியிலிருந்து தொடங்கி எங்கு வளைவு வேண்டுமோ அங்கு வளைவு அமைத்துவிட்டு மற்ற முடியை மெலிதாக்கி கொள்ளலாம். த்ரெட்டிங் செய்துவிட்டு நீளமாக இருக்கும் முடியை வெட்டி விடலாம்.
த்ரெட்டிங் செய்தவுடன் மசாஜ் க்ரீம் பயன்படுத்தி புருவ பகுதியில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். அப்போதுதான் அப்பகுதியில் ரத்தம் கட்டி கொண்டு பொரிப்பொரியாக ஆகாமல் இருக்கும். மசாஜ் செய்வதால் புருவத்தில் ஏற்படும் வலியும் குறையும்.