முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை அகற்ற அருமையான ஃபேஸ் பேக்!
ரோமங்களை நீக்க பலரும் ரேஸர் மற்றும் ஷேவ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி செய்வது தவறு என்றும், இதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. இதற்கு மாற்று வழியாக ரோமங்களை நீக்க அருமையான ஃபேஸ் பேக் ஒன்றை பகிர்ந்துள்ளார்
By : ராணி
Update: 2023-10-23 18:30 GMT
பெண்கள் பலருக்கும் மேல் உதட்டிலும் தாடைப் பகுதியிலும் முகத்திலும் முடி வளர்வது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்றும், அது தங்கள் அழகை குறைக்கிறது என்றும் வருத்தப்படுகின்றனர். இந்த ரோமங்களை நீக்க பலரும் ரேஸர் மற்றும் ஷேவ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி செய்வது தவறு என்றும், இதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. இதற்கு மாற்று வழியாக ரோமங்களை நீக்க அருமையான ஃபேஸ் பேக் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்பேக்கிற்கு தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- சந்தனம் - தேவையான அளவு
- பால் - சிறிதளவு
- கற்றாழை ஜெல் - ½ டீஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் - ¼ டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - சிறிதளவு
ஃபேஸ் பேக் தயாரிப்பு முறை:
- தேவையான அளவு சந்தனம் எடுத்து அதில் சிறிது பால் விட்டு, சந்தனம் தேய்க்கும் கல்லில் நன்கு தேய்த்து அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கற்றாழை ஜெல், மஞ்சள், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்தால் சுலபமான ரோமங்களை நீக்கும் ஃபேஸ் பேக் ரெடி!
- இதனை தடவும் முன்பு முகத்தை தயார் செய்யவேண்டும். முதலில் சிறிது பச்சை பால் கொண்டு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைக்கவும். அடுத்து கலந்து வைத்த பேஸ்ட்டை ஒரு பிரஷ்ஷால் முகத்தில் தடவ வேண்டும். இந்த பேக்கை கண்களின்மேல் தடவாமல் முகத்தின் மற்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
ஃபேஸ் பேக்கை தடவுதல்
- குறிப்பாக மேல் உதடு, தாடை பகுதி என்று முகத்தில் அதிக ரோமங்களுள்ள இடங்களில் கவனம் செலுத்தி தடவுவது சிறந்தது. இதனை கழுத்துப் பகுதியிலும் கீழிருந்து மேலாக தடவ வேண்டும் . 2- 3 கோட்டிங் தடவிய பின்னர் 10 - 15 நிமிடங்களுக்கு காயவிட்டு பின்னர் ஈரத்துணியால் முகத்தை சுத்தமாக துடைத்தெடுக்க வேண்டும்.
- இதை தினமும் குளிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ரோமங்கள் இருக்கும் இடங்களில் மட்டும் தடவிக் குளிக்கலாம் அல்லது வாரத்திற்கு ஒருமுறை முகம் முழுவதும் தடவலாம்.
ஃபேஸ் பேக்கை அகற்றுதல்
- இந்த ஃபேஸ் பேக்கைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் முகத்திலிருக்கும் ரோமங்கள் நிச்சயம் நீங்கும்.
- முகத்திலிருக்கும் ரோமங்களை நீக்குவதற்கு ரேஸர்கள் பயன்படுத்தாமல் இதுபோன்ற இயற்கையான ஃபேஸ்பேக் உபயோகித்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த ஃபேஸ்பேக் ரோமங்களை நீக்குவது மட்டுமல்லாமல் முகத்தையும் பிரகாசமாக்கும்.