ஜெயலலிதாவுடனான அந்த தருணத்தை மறக்கமுடியாது - பிரபல பியூட்டிஷியன் மைதிலி

நாங்கள் படித்தகாலத்தில் கிராமத்திலுள்ள பெண்களிடையே பார்லர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இந்த கோர்ஸ் படிக்க ஊக்குவித்தோம். கிட்டத்தட்ட 4 லட்சம் பேரை இப்படி உருவாக்கி இருக்கிறோம்.

Update:2023-08-22 00:00 IST
Click the Play button to listen to article

இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை சின்ன ஃபங்ஷன் என்றாலே பார்லருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். த்ரெட்டிங், ஃபேஷியல், ப்ளீச்சிங், கலரிங், விதவிதமான ஹேர் கட் என்று தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை அழகுக்கலை மீது தனக்கு இருக்கும் பற்று குறித்தும், இந்தத் துறையில் தனது வளர்ச்சி குறித்தும் நம்மோடு பகிர்கிறார் பிரபல அழகுக்கலை நிபுணர் மைதிலி.


ஆரம்ப காலத்தில் மைதிலியின் பியூட்டி பார்லர்

1980 - 1990 காலகட்டத்தில் பியூட்டி பார்லர் வைக்கும் ஆர்வம் எங்கிருந்து வந்தது?

சின்ன வயதிலிருந்தே மற்றவர்களை அழகுபடுத்தி பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. படிக்கும் காலத்திலிருந்தே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, புடவை கட்டுதல், தலை அலங்காரம் செய்தல் போன்றவற்றை செய்வதுண்டு. நீளமான முடி, பூவைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின்மீதும் அதிக ஆர்வம் இருந்ததால், 1986ஆம் ஆண்டு நான் அழகுக்கலை படிப்பை தேர்ந்தெடுத்தேன். நான் படித்த காலத்தில் பியூட்டி பார்லர் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. அதனாலேயே பியூட்டி பார்லர் குறித்து கிராமங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது. நாங்கள் படித்தகாலத்தில் கிராமத்திலுள்ள பெண்களிடையே பார்லர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இந்த கோர்ஸ் படிக்க ஊக்குவித்தோம். கிட்டத்தட்ட 4 லட்சம் பேரை இப்படி உருவாக்கி இருக்கிறோம்.

இப்போதெல்லாம் முகத்தை ப்ளீச் செய்கிறார்கள். ஆனால் கிராமங்களில் மஞ்சள் தேய்த்து குளிப்பதுண்டு. அதுவே நேச்சுரல் ப்ளீச்சிங் தான். சாம்பல் வைத்து தேய்த்து கால்களிலிருக்கும் முடியை நீக்கிவிடலாம். குழந்தைகளுக்கு உடலை நீவி குளிப்பாட்டுவதையே இப்போது ஸ்பா என்கின்றனர். புருவங்களை ட்ரிம் செய்வதைத் தவிர, கிராமங்களில் அனைத்தையுமே பின்பற்றினார்கள். இதைத்தான் இப்போது அழகுக்கலையில் பயன்படுத்துகிறோம்.


ஃபேர்னெஸ் க்ரீம்

பார்லர் தொடங்கியபோது என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

நான் படிக்க போகும்போதே பியூட்டி பார்லருக்கு போகிறேன் என்று யாருக்கும் தெரியாமல்தான் சென்றேன். அப்போது எனக்கு திருமணமாகி குழந்தை இருந்தது. நகையை வைத்துதான் படித்தேன். அழகுக்கலையில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தினேன். 90-களில் அழகுக்கலை குறித்து வார இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். வெளிநாட்டுக்குச் சென்று அழகுக்கலை குறித்த கோர்ஸ்களை படித்து அங்கும் வகுப்புகள் எடுத்தேன். இப்படித்தான் படிப்படியாக முன்னேறினேன். பியூட்டீஷியன் சங்கத்தை ஆரம்பித்து கிராமங்களிலுள்ள பெண்களுக்கு பயிற்சிகளை அளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன்.


வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற தருணங்கள்

90- களில் பிரபலமான மைதிலிஸ் ஃபேர்னெஸ் க்ரீம் குறித்து கூறுங்கள்?

பெரும்பாலான மாவட்டங்களில் சொந்த பார்லர்களை நிறுவினேன். அதன்பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஃபேர்னெஸ் க்ரீம் தயார் செய்யலாம் என்ற யோசனை வந்தது. கொத்தமல்லி எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்தித்தான் க்ரீமை தயாரித்திருந்தேன். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்களை தாங்களே விளம்பரம் செய்யமாட்டார்கள். ஆனால் நானே என்னுடைய க்ரீம் விளம்பரத்தில் நடித்தேன். அதனாலேயே அந்த க்ரீம் மிகவும் பிரபலமானது.

சினிமாத்துறையில் யாருக்கெல்லாம் மேக்-அப் போட்டிருக்கிறீர்கள்?

பஞ்சதந்திரம் படத்தில் நானே நடித்திருக்கிறேன். சித்தி சீரியலில்கூட வந்திருக்கிறேன். பெரும்பாலானா நடிகைகளுக்கு நான் மேக்-அப் போட்டிருக்கிறேன். நான் மேக்-அப் போடாத நடிகைகளே இல்லை என்றே கூறலாம்.


டிவி நிகழ்ச்சியின்போது

மறக்கமுடியாத தருணத்தை பகிரமுடியுமா?

ஒருநாள் மாலை பார்லரைவிட்டு வெளியே வந்தேன். திடீரென ஒரு புது மணப்பெண் அழுதுகொண்டே வந்தார். என்னாச்சு என்று கேட்டேன். தனக்கு வேஷம் போட்டதுபோல் மேக்-அப் போட்டிருக்கிறார்கள் எனவும், அதனாலேயே மாப்பிள்ளை வீட்டார் தன்னை திட்டுவதாகவும் கூறினார். 6 மணிக்கு ரிசப்ஷன். 5.30 மணிக்கு அந்தப் பெண் வந்திருந்தாள். அரை மணிநேரத்தில் அந்தப் பெண்ணை தயார் செய்து அனுப்பினேன். பணத்தையும் தாண்டி என்னுடைய திறமை அந்த பெண்ணின் வாழ்க்கைக்கு உதவியதை நினைத்து பெருமைப்படுகிறேன்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மைதிலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேக்-அப் போட்ட அனுபவம் பற்றிக் கூறுங்கள்...

ஒருநாள் ஜெயலலிதா வீட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அம்மா கூப்பிடுவதாகச் சொன்னார்கள். அப்போது நான் வெளியூரிலிருந்தேன். மறுநாள் காலை 9 மணிக்கு வருவதாகக் கூறினேன். சரியாக 9 மணிக்கு அவர் வந்தார். என்னுடைய நிகழ்ச்சிகளை பார்த்திருப்பதாகக் கூறினார். அரோமா தெரபி குறித்து நான் லண்டனுக்குச் சென்று படித்துவிட்டு வந்திருந்தேன். அதுகுறித்து வெளியான நிகழ்ச்சி நன்றாக இருந்ததாகக் கூறினார். மேலும், உடற்பருமனால் வலி இருப்பதாகவும், எடை குறைப்பு பற்றியும் என்னிடம் கேட்டார். மறுபடியும் அடுத்த நாள் காலை 9 மணிக்கு வரச்சொன்னார். அதிலும் என்னுடைய பார்லரிலிருந்தே சிகிச்சைக்கான பொருட்களை கொண்டுவரச் சொல்லியிருந்தார். 8-9 மாதங்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்ததில் கிட்டத்தட்ட 20 கிலோ எடை குறைந்தது. தினமும் உற்சாகமாக பேசுவார். இதை வாழ்க்கையில் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.


தலைமுடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

  • தலைமுடியை ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன்பு முடியின் வலிமை மற்றும் தன்மை எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
  • எந்த ஹேர்ஸ்டைல் செய்வதற்கு முன்பும் முடியிலுள்ள சிக்கை நீக்கிவிட்டு பிறகுதான் செய்யவேண்டும். முடியை முன்பகுதி, பின்பகுதி என இரண்டு பகுதிகளாக பிரிக்கவேண்டும். முடியின் அடர்த்திக்கு ஏற்றாற்போல் பல பகுதிகளாகக்கூட பிரிக்கலாம்.
  • அயர்னிங் ராட் (Ironing Rod) கொண்டு முடியை மேலிருந்து கீழாக ஸ்ட்ரெய்ட் செய்யவேண்டும். இப்படி பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கும் முடி முழுவதையும் ஸ்ட்ரெய்ட் செய்யவேண்டும்.
  • அதன்பிறகு சீரம் தடவினால் முடி அழகாக இருக்கும். ஸ்ட்ரெய்டனிங்கை வாரத்திற்கு ஒருமுறை பண்ணலாம். தினமும் பண்ணக்கூடாது. அதேபோல் முடியின் வேர்க்கால்களிலிருந்து 1 அல்லது 2 இஞ்ச் தள்ளித்தான் ஸ்ட்ரெய்டனிங் செய்யவேண்டும். 
Tags:    

மேலும் செய்திகள்