வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் இப்படித்தான் போட வேண்டும் - விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர்
உடல் சூடு அதிகரிப்பதுதான் பெரும்பாலான முடி மற்றும் உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதால் உடலை எப்போதும் குளுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். எனவே வெயில்காலங்களில் கற்றாழை ஜெல் மற்று ஜூஸ் போன்றவற்றை குடிக்கலாம்.
ஒவ்வொரு காலநிலையும் மாற மாற அதற்கேற்ப உடல் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும்போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, வெயில்காலம் மற்றும் மழைக்காலங்களில் தலைமுடி மற்றும் சருமம் இரண்டுமே கடுமையாக பாதிப்படையும். அதிலும் வெயில்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. சருமத்தில் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருக்கும் என்பதாலேயே பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். எனவே சருமம் மற்றும் தலைமுடியின்மீது அதிக அக்கறை செலுத்தி பராமரிக்கவேண்டும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் மாலதி.
தலைமுடி பராமரிப்பு
தினமும்கூட தலைக்கு குளிக்கலாம். அப்படி முடியாவிட்டால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வழக்கமாக தலைக்கு குளித்தல் அவசியம். அதேபோல் தலைமுடியின் தன்மைக்கு ஏற்றவாறு நல்ல தரமான ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம் பயன்படுத்த வேண்டும்.
வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே தலைமுடியை பராமரிப்பதும் அவசியம்.
ஏற்கனவே பொடுகு இருப்பவர்களுக்கு வெயில்காலத்தில் இன்னும் பொடுகுத் தொல்லை அதிகமாகும். எனவே தலைக்கு குளித்துவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும். அதுமட்டுமில்லாமல் வெயிலில் செல்லும்போது தலைமுடியும் சேதமடையும். எனவே சீரம் பயன்படுத்தி முடியை பாதுகாக்கலாம்.
வெயில் காலத்தில் சூரிய ஒளியால் சருமம் பாதிப்படைவதை தடுக்க SPF அதிகமுள்ள சன்ஸ்கிரீன்
சரும பராமரிப்பு
வெயில்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நமது சருமத்தில் சீபம் (சருமம் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய்) அதிகமாக உற்பத்தியாகும்.
வறண்ட சருமம் இருப்பவர்களுக்குக் கூட வெயில்காலம் வந்தால் காம்பினேஷன் ஸ்கின்னாக மாறிவிடும். வியர்வை அதிகமாக சுரப்பதால் சருமத் துளைகள் சற்று அதிகமாகவே திறந்துவிடும்.
இதனால் சிலருக்கு சருமம் கருத்துவிடும். சிலருக்கு முகப்பரு வரும். ஏற்கனவே முகப்பரு இருப்பவர்களுக்கு அது சிவந்துவிடுவதுடன் முகம் முழுவதும் பரவிவிடும். எனவே தனிமனித சுகாதாரம் மிகவும் அவசியம்.
மற்ற நாட்களில் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன்களை விட SPF அதிகமுள்ள சன்ஸ்கிரீன்களை வெயில்காலத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டும். குளிர்காலங்களில் SPF30 இருக்கும் சன்ஸ்கிரீன்களை பயன்படுத்தி இருந்தால், வெயிலில் செல்லும்போது SPF50 இருக்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தவேண்டும்.
சன்ஸ்கிரீன் போடும் முன்பு முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அதற்கேற்ற க்ளென்சர்களை பயன்படுத்தவேண்டும். அதன்பிறகு டோனர் தடவி, அதன்மீது மாய்ச்சுரைஸர் போட்டுவிட்டுதான் சன்ஸ்கிரீன் போடவேண்டும்.
அதேபோல், சன்ஸ்கிரீனை மிகவும் குறைவாக பயன்படுத்தக்கூடாது. குறைந்தது ஒரு விரல் அளவாவது எடுத்து பயன்படுத்தினால்தான் சருமம் பாதுகாக்கப்படும். SPF 40 இருக்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் 2 அல்லது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். நேரடியாக சூரிய ஒளியின்கீழ் வேலை செய்யும்போது கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும்.
முகத்திற்கு பயன்படுத்தவேண்டிய சன்ஸ்கிரீன் அளவு
வெயிலால் ஏற்பட்ட சரும கருமையை (Sun tanning) நீக்குவது எப்படி?
வெயிலில் செல்லும்போது சன்ஸ்கிரீன் போட்டாலும்கூட சிலருக்கு சருமம் கருமையடைந்துவிடும். அதை வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
ஒரு பவுலில் பப்பாளி பழத்தையும், தேனையும் சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் தடவி, முகம் முழுக்க சர்குலர் வடிவில் 5 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். இப்படி தினசரி செய்யும்போது அன்றன்றைக்கு ஏற்பட்ட கருமை அன்றைக்கே நீங்கிவிடும்.
தலைமுடிக்கு என்ன பேக் போடலாம்?
தலைமுடியை குளித்து சுத்தமாக வைத்திருப்பதுடன் சிறிது பராமரிப்பும் அவசியம். எனவே கற்றாழை ஜெல்லை எடுத்து அதை சுத்தமாக்கி தலையில் மாஸ்க் போல போடலாம். இதனால் உடல் குளுமையாவதுடன், பொடுகும் குறையும்.
வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து மென்மையாக அரைத்தும் தலையில் தடவலாம். இதனாலும் உடல் குளுமையாகும். பொடுகும் நீங்கும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்து முடியின் நுனிவரை தேய்த்து, பின்னர் முடி முழுவதையும் தலைக்கு மேல் வைத்து மாஸ்க் போல் போடவேண்டும். இதனை 10 அல்லது 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து கழுவிவிட்டால், ஸ்பா செய்தது போன்று முடி மிருதுவாக இருக்கும். ஆனால் வாழைப்பழத்தை தடவினால் முடியை நன்றாக தேய்த்து கழுவுவது அவசியம்.
தலைமுடி பராமரிப்பில் வெந்தயம் மற்றும் வாழைப்பழம்
இவற்றை செய்ய மறக்கவேண்டாம்!
உடல் சூடு அதிகரிப்பதுதான் பெரும்பாலான முடி மற்றும் உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதால் உடலை எப்போதும் குளுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். எனவே வெயில்காலங்களில் கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸ் போன்றவற்றை குடிக்கலாம்.
நிறைய மோர் மற்றும் இளநீர் குடிக்கலாம். இதனால் சருமம் மற்றும் தலைமுடி இரண்டுமே நன்றாக இருக்கும்.
முடிந்தவரை கடுமையான கெமிக்கல்களை சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடலாம். அதேபோல் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் நல்ல தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு போன்றவையும் மிகவும் அவசியம். இதனுடன் யோகா, சிறுசிறு உடற்பயிற்சிகளும் செய்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.