`எந்த ராசிக்கு எப்படி?' - 2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

2024 புதிய ஆண்டிற்கான ஆண்டு ராசி பலன்களை கணித்து வழங்கியுள்ளார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.

Update:2024-01-02 00:00 IST
Click the Play button to listen to article

2024 புதிய ஆண்டிற்கான ஆண்டு ராசி பலன்களை கணித்து வழங்கியுள்ளார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.

மேஷம் - மேன்மை கிடைக்கும்

மிக அமர்க்களமாக ஆரம்பிக்கக்கூடிய ஆண்டு. கடன், நோய், எதிர்ப்புகள் அனைத்தும் விலக கூடிய ஆண்டு. வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு இந்த ஆண்டில் நிச்சயம் வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நிச்சயம் மாற்றங்கள் காண்பர். குடும்பத்தில் சண்டை சச்சரவு, கணவன் மனைவி பிரிதல், பூர்வீக சொத்து வழக்கு, அண்ணன் தம்பி உறவில் பிரச்சினை, அண்ணன் தங்கை உறவு பிரச்சினை என்று வழக்கு சார்ந்த விஷயங்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நல்ல மேற்படிப்புகள் கிடைக்கும். வேலை, தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமணமாகாத பெண்களுக்கு நிச்சயம் மனதிற்கு பிடித்த வரன் அமையும்.

ரிஷபம் - சாதனை புரிவீர்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது சாதிக்கக்கூடிய ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் குடும்பத்தில் மங்கள விஷயங்கள் நடைபெறும். சுப கடன்கள் அதிகரிக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து அனுமதி கிடைக்கும். தொழிலில் லாபம் காண்பீர்கள். கடந்த ஆண்டில் வீழ்ந்த விஷயங்களிலிருந்து கம்பீரத்தோடு எழுச்சி பெறுவீர்கள். சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை எண்ணி வருந்திய ரிஷப ராசி பெற்றோர்களின் குழந்தைகள், பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்பார்கள். குறிப்பாக கணவன் மற்றும் குழந்தையை எண்ணி மன அழுத்தத்தில் இருந்த பெண்களுக்கு மன அழுத்தம் நீங்கும்.


மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான ஆண்டு பலன்கள் 

மிதுனம் - பொற்காலமான ஆண்டு

கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் கஷ்டத்திலிருந்து ஏமாற்றமடைந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து கஷ்டங்களும் ஏமாற்றங்களும் அகலும். இளம்பருவத்தினருக்கு புதிய காதல் ஏற்படும். காதல் நிறைவேறும். இழந்த காதல் மீண்டும் கைகூடும். புதிய உறவுகள் புதிய நட்புகள் கிடைக்கும். எல்லா மிதுன ராசி இளம்பருவத்தினரும் ஜெயிக்கும் ஆண்டு. 40 - 50 வயதினருக்கு தொழிலில் நிலைத்தன்மை ஏற்படும். 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது பொற்காலமான ஆண்டு. இதுவரை வாய்ப்புகளை நழுவவிட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடி வரும். அவரவர் துறையில் சாதிக்க நினைத்தவர்கள் நிச்சயம் இந்த ஆண்டு சாதிப்பார்கள்.

கடகம் - ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

அஷ்டம சனி நடக்கும் கடக ராசிக்காரர்கள் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். இளம்பருவத்தினர் சோம்பலை தவிர்த்துவிடுங்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையை விட்டுவிட வேண்டாம். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர நாம் எதையும் தேடி செல்லக்கூடாது. யாரிடமும் சட்டென்று வார்த்தைகளை விட வேண்டாம். குறிப்பாக எதையும் யாரையும் நம்ப வேண்டாம். கடக ராசி இளம்பருவத்தினர்கள் சமூக வலைதளங்களில் மிக ஜாக்கிரதையாக இருக்கக் கூடிய ஆண்டு. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதை தவிர்த்து விடலாம். பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாமல் சிக்கனமாக செலவு செய்வது மிக மிக அவசியம். கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம். நண்பர்களுடன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனக்கட்டுப்பாடு மிக அவசியம். முடிவாக எதையும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்ய வேண்டாம்.

சிம்மம் - சிறப்புகள் நிறைந்த சிறப்பான ஆண்டு

மாற்றங்கள் நடக்கும் சிறப்பான ஆண்டு. ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே சாதிக்கும் வாய்ப்பு சிம்ம ராசிக்காரர்களுக்கு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி புரிதலில் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மே மாதத்திற்கு பின் புதிய தொழில்கள் அமையும். தொழில் விரிவாகும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். பதிவு உயர்வு, சம்பள உயர்வு என்று ஏதேனும் ப்ரோமோஷன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பான ஆண்டு. அந்தஸ்து கௌரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நிகழும். பிள்ளைகள் குறித்து சந்தோஷப்படுவீர்கள். குறிப்பாக உங்களுக்கடுத்து உங்கள் பிள்ளைகள் உங்கள் தொழிலை நடத்துவார்கள் என்று பிள்ளைகளின் மேல் நம்பிக்கை ஏற்படக்கூடிய ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆண்டின் முற்பகுதியில் வாழ்க்கையில் பல நன்மைகளும் பிற்பகுதியில் தொழிலில் பல நன்மைகளும் நடக்கும்.

கன்னி - அனைத்திலும் வெற்றி

மே மாதத்திற்கு பின் கன்னி ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கும். சொந்த வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, வழக்கு, நோய் என அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். ஆண்டின் முதல் நான்கு மாதத்திற்கு படிப்பு, தொழில் என தொலைதூர பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டு. பிள்ளைகள் குறித்து கவலைப்படும் பெற்றோர்களுக்கு கவலைகள் மற்றும் குழப்பங்கள் நீங்கும். எல்லா நிலைமைகளிலும் கன்னி ராசிக்காரர்கள் சற்று புத்திசாலியாக செயல்படுவீர்கள். ஏப்ரல் மாதத்திற்கு பின் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவீர்கள். சொந்த ஊரில் நிலம் மற்றும் இடம் வாங்க, வீடு கட்ட, கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டில் நல்லது நடக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொலைதூர யாத்திரை மேற்கொள்வீர்கள். கன்னி ராசி இளைஞர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். படிப்புக்கு கிளம்பிய எதிர்ப்புகள் நீங்கும். புது வாகனம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2024, முன்னேற்றம் காணும் அற்புதமான ஆண்டு.


சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான ஆண்டு பலன்கள் 

துலாம் - கடன் தீரும் அமர்க்களமான ஆண்டு

துலாம் ராசிக்காரர்களுக்கு வருடத்தின் ஆரம்பமே மிக அமர்க்களமாக அமைந்திருக்கிறது. கடன்கள் ஒழியும். மே மாதத்திற்கு பின் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு கனவுகள், வெளிநாட்டு எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்பிருக்கிறது. இளைஞர்கள் மத்திய அரசு பணி கிடைக்க வேண்டி எழுதிய தேர்வில் மே மாதத்திற்கு பின் வெற்றி காண்பார்கள். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற கிழக்கு திசை பயணம் மேற்கொள்ள விரும்பும் துலாம் ராசிக்கார இளைஞர்களின் எண்ணம் நிறைவேறும். நல்ல மருந்துகள் எது? நல்ல மருத்துவம் எது? என்பதை அறிவீர்கள். பங்காளி தகராறு தீரும். வழக்கு பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். கடந்த ஆண்டுகளில் இழந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பெறுவீர்கள். துலாம் ராசி பெண்களுக்கு இது நிம்மதியான ஆண்டாகும். பெண்களின் சுமைகளை பகிர்ந்து புரிந்து கொள்ளும் ஆண்டாக விளங்குகிறது. இளம் பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எனவே இது துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்புமிக்க நல்ல ஆண்டு.

விருச்சிகம் - முன்னேற்றம் காண்பீர்

முதல் ஆறு மாதங்கள் கிணற்றில் போட்ட கல் போல இருக்கும். முதல் 2, 3 மாதங்களுக்கு அதிகம் கோபப்படுவீர்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த சோதனைகள் அனைத்தும் விலகும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். ஆனால், அந்த செலவுக்கேற்ற வாய்ப்பு, வசதி, வருமானம் வரும். கடந்த ஆண்டுகளில் ஒரு காரியத்திற்காக மேற்கொண்ட முயற்சியானது இந்த ஆண்டில் நிச்சயம் கைகொடுக்கும். உதாரணமாக பெரியோர்கள், தொழில் மேம்பட முயற்சித்தவர்கள், தொழிலில் மேன்மை அடைவார்கள். இளைஞர்களின் நட்பு காதலாக மாறும். புதிய நட்பு மற்றும் நல்ல உறவுகள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொழில் வெற்றி கொடுக்கும். 50 - 60 வயது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் நன்மை ஏற்படும். இந்த ஆண்டில் பல விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு - அதிகம் சம்பாதிப்பீர்கள்

மிகவும் நல்ல ஆண்டு. எடுத்த முயற்சிகள் பலிக்கும். நல்ல வருமானம் வரும். ஆனால், அந்த நல்ல வருமானத்தை முன்னேற்றத்திற்கான செலவாக வைப்பீர்கள். குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு வரும் பணத்தை, பணமாக வைத்துக் கொள்ளாமல் அதை பொருளாக மாற்றி வைக்க கூடிய நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது. கௌரவம் உயரக் கூடிய நல்ல ஆண்டு. தனுசு ராசி ஆண்களுக்கு பெண் உறவால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் நீங்கி அவர்களே உங்களை புரிந்து கொண்டு இறங்கி வருவார்கள். அதேபோல அதிக பெண்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தனுசு ராசி ஆண்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படக்கூடிய ஆண்டாக இருக்கிறது. தனுசு ராசி பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனவலி தீரக்கூடிய ஆண்டு. துறை சார்ந்த முன்னேற்றங்கள் இருக்கும். பணிபுரியும் அலுவலகத்தில் நிம்மதி இருக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். நினைத்ததை தைரியமாக செய்யலாம். கடந்த காலத்தில் இழந்த வாய்ப்புகள் தேடி வரும். இந்த ஆண்டு நன்கு சம்பாதிக்கும் ஆண்டாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

மகரம் - பூரண சந்தோஷம் காண்பீர்கள்

பட்ட வேதனைகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். மனவலிமை, புத்துணர்ச்சி அதிகரிக்கும். குரு பெயர்ச்சியின் பலன்களாக 5 வருடமாக சந்தித்த சோதனைகள் எல்லாம் மே முதல் செப்டம்பர் என 5 மாதத்தில் பஞ்சாய் பறந்து போகும். இந்த 5 மாதத்தில் மனக்கவலைகள் அனைத்தும் தீர்ந்து முன்னேற்றம் கிடைத்து நல்ல வேலை அமைந்து, நல்ல திருமணம் அமைந்து, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்து, மகன் மகளின் கஷ்டங்கள் விலகி, திருமண வாழ்க்கை விவாகரத்து வழக்கில் இருந்தால் அது இழுத்துக் கொண்டே போகாமல் சட்டென்று சேருவீர்கள் அல்லது பிரிவீர்கள் என்று அனைத்திலும் தெளிவான தீர்வுகள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இவ்வாண்டு அமைந்துள்ளது. வயதானவர்கள் மகர ராசி இளைஞர்களை பார்த்து சந்தோஷப்படுவார்கள். வேலை மற்றும் தொழிலமைப்புகள் அமோகமாக இருக்கும். மகர ராசி பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தேடி வரும். குறிப்பாக நீங்கள் பணிபுரிய விரும்பும் அலுவலகத்திலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, பூரண சந்தோஷத்தை அனுபவிக்கக்கூடிய நல்ல ஆண்டாக இருக்கிறது.


தனுசு, கும்பம், மகரம், மீனம் ராசிகளுக்கான ஆண்டு பலன்கள் 

 கும்பம் - மனக்கட்டுப்பாடு மிக அவசியம்

கையில் இருக்கும் காசு கரையும். கையில் காசு கரைந்தாலும் வீடு, வாகனம் வாங்குவீர்கள். 50 வயதுக்கு மேற்பட்ட கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை செட்டில் ஆகும் ஆண்டு. மேலும் ரொம்ப நாளாக எது கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறீர்களோ அந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெற்று இந்த ஆண்டில் கிடைக்கும். வியாபாரம் சிறந்திருக்கும். தொழில் கைகொடுக்கும். குடும்பத்தில் நல்ல மதிப்பு ஏற்படும். சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் உழைப்பதற்காக கஷ்டங்கள் மேற்கொண்டாலும் அதற்கான தக்க வருமானம் பெறுவீர்கள். கடன் ஏற்பட்டாலும் சொத்து சேர்ப்பு இருக்கும். 30 வயது மற்றும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரெண்டும் கெட்டான் நிலை இருக்கும். வாய்ப்புகளை தவறவிடுவீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்காதீர்கள். வேலையை விட்டுவிடாதீர்கள். நிதானம் தேவை. பணம் விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பங்களில் கசப்பு ஏற்படும். உங்களை பார்த்து மற்றவர்களுக்கு பொறாமை இருக்கும். பேராசை வேண்டாம். மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். கெட்ட பழக்கத்திற்கு அறிமுகமாகாமல் விலகி இருப்பது நல்லது. கூடா நட்பு கேடாய் முடியும். காதல் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சோம்பலின்றி முயற்சியை நம்பி வேலையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடிய ஆண்டாக விளங்குகிறது.

மீனம் - கவனம் தேவை

விரயங்கள் நிறைந்த ஆண்டு. வருமானங்கள் வரும், ஆனால் அதை தக்க வைத்து கொள்ள முடியாது. யாருடனும் சேர்ந்து தொழில் தொடங்க வேண்டாம். பணம் விஷயத்தில் கவனம் தேவை. குறிப்பாக சொந்தக்காரர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்க வேண்டாம். வேலை, தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வரும் வருமானத்தை முதலீடாக்குவது சிறந்தது. பங்குச்சந்தையை நம்ப வேண்டாம். மீறி அதை செய்தால் முதலில் பணம் கைகொடுத்தாலும் பின்னர் வந்ததை விட அதிக இழப்பு இருக்கும். உழைப்பு வீணாக போகாது. எதிலும் நிதானமும் கவனமும் தேவை. நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தை வேண்டி சிகிச்சை பெறுபவர்களுக்கு குழந்தை தங்கும். குடும்பத்தில் உடல்நிலை சீராகும். குடும்ப விஷயம் அனைத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் அமைப்புகளில் சற்று கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்