அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு மரணங்கள்? காரணம் என்ன?
பரிந்துரைக்கப்படும் அளவுக்கும் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் நடுத்தர வயதை நெருங்கும்போது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 டையாபட்டிஸ் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று விளக்குகிறது அந்த ஆய்வு.
மாரடைப்பு என்றாலே பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும் என்ற கருத்தை மாற்றியிருக்கிறது சமீபத்திய நிகழ்வுகள். சிறுவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர்கள், இளம்வயதினருக்கும்கூட திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழப்பது குறித்த செய்திகள் வெளியாகி நம்மை கலங்கடித்த வண்ணமே இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்தின்மீது அதீத அக்கறை கொண்டவர்களுக்குக்கூட ஏன் மாரடைப்பு வருகிறது? என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் அறிகுறிகள் என்னென்ன? எப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படுவது? என்பது குறித்து விளக்கியுள்ளனர் இதய நிபுணர்கள்.
மாரடைப்பும் அதன் பொதுவான அறிகுறிகளும்:
உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனைத்தான் மாரடைப்பு என்று குறிப்பிடுகின்றனர்.
- நெஞ்சு வலி
- மூச்சுத்திணறல்
- தோள்பட்டை வலி
- தாடை வலி
- கழுத்து மற்றும் முதுகில் அசௌகர்யம்
- சோர்வு
- தலைசுற்றல்
- மயக்கம்
- குளிர்ந்த வியர்வை போன்றவை மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்
இன்றைய இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பதற்கு மருத்துவர்கள் கூறும் காரணங்கள்:
- அதீத உடற்பயிற்சி
- மன அழுத்தம்
- ஸ்டீராய்டு மற்றும் புரோட்டீன் பவுடர்கள் பயன்பாடு
- புகைப்பிடித்தல்
- உடற்பருமன்
- நிபுணர் ஆலோசனையின்றி உடற்பயிற்சி செய்தல் போன்றவை.
மருத்துவர் ஆலோசனை அவசியம்
அதிகப்படியான உடற்பயிற்சி ஆபத்தே!
இளம்வயதிலேயே தங்கள் உடலின் தன்மையைவிட அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு CAC என்று சொல்லக்கூடிய coronary artery calcification பிரச்சினையானது அவர்கள் 40 வயதை எட்டும்போது உருவாகும் என்கின்றன ஆய்வுகள். கால்சியமானது திட்டுதிட்டாக இதயத்தமனிகளில் படிவதாலேயே CAC பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே பல இதய நோய்களுக்கு காரணியாக அமைகிறது என எச்சரிக்கின்றன ஆய்வுகள். அதாவது, ஒரு வாரத்தில் 450 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதைவிட குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களைவிட CAC பிரச்சினை வரும் வாய்ப்புகள் 27% அதிகம் என அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத்துறை எச்சரிக்கிறது.
மிதமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாரத்திற்கு 150 நிமிடங்களும், ஏரோபிக் போன்று தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாரத்திற்கு 75 நிமிடங்களுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்படும் அளவுக்கும் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் நடுத்தர வயதை நெருங்கும்போது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 டையாபட்டிஸ் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று விளக்குகிறது அந்த ஆய்வு.
தி மில்லியன் வுமன் இதழில் அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, இதய நோய்கள், ரத்தக்கட்டுகள் உடைதல் அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகம் என்று கூறுகிறது. மெதுவாக ஜாக்கிங் செய்பவர்களைவிட வேகமாக ஜாக்கிங் செய்பவர்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறது கோபன்ஹேகன் சிட்டி இதய ஆய்வு அறிக்கை. குறிப்பிட்ட வேகத்தைவிட அதிவேகமாக ஜாக்கிங் செய்பவர்களுக்கு இதய பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் 9 மடங்கு அதிகம் என்றும் எச்சரிக்கின்றது.
அதீத உடற்பயிற்சி கூடாது
அதிகப்படியான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தென்படும் அறிகுறிகள்:
- உடல் அசௌகர்யம்
- மங்கலான பார்வை
- நாள்பட்ட நெஞ்சுவலி
- தலைவலி மற்றும் காய்ச்சல்
- மூட்டு வீக்கம் மற்றும் வலி
- இதயத்துடிப்பு அதிகரிப்பு
- தசை இறுக்கம்
- இரவில் வியர்த்தல்
- உடற்பயிற்சிக்கு பிறகு மூச்சுவிடுவதில் சிரமம்
- அதீத உடற்பயிற்சியால் உடல்வலி
அதீத உடற்பயிற்சியால் உடல்வலி
இதுதவிர மார்புப்பகுதி கனமாக தோன்றுதல் மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் மிதமான உடற்பயிற்சியே உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஜிம்மிலோ அல்லது வீட்டிலோ உடற்பயிற்சி செய்யும்போது மார்புப்பகுதியில் கணம், தலைசுற்றல், தாடை அல்லது தோள்பட்டையில் வலி ஏற்பட்டால் உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுவது நல்லது என்கிறார் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இதய நிபுணர் மனிஷ் இந்துஜா. அதேபோல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் அந்த நபருக்கு இருக்கும் அழுத்த அளவு, புகைப்பழக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை பொருத்தே மாரடைப்பின் அறிகுறிகளும் தாக்கமும் இருக்கும் என்கிறார் அவர்.
ஜிம்மில் சேர்வதற்கு முன்போ அல்லது கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் முன்னரோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது என்கிறார் அக்கார்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நிபுணர் ஷிம்மி மனோச்சா. அதிலும் குறிப்பாக, தொடர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும்கூட ஸ்டாமினா அளவு, உடலின் தாங்கும் சக்தி, உடலின் ஸ்ட்ரெஸ் அளவு போன்றவற்றை தெரிந்துகொள்ள ரெகுலர் ஹெல்த் செக் - அப் அவசியம் என்கிறார்.
இதயத்தை பாதுகாப்பது அவசியம்
இதய பிரச்சினைகளை குறைக்க சில வழிகள்:
- ஒவ்வொரு தனி நபரும் அவரவருடைய உடலின் வலிமை மற்றும் அளவுக்கு ஏற்றாற்போல் பயிற்சிகளை செய்யவேண்டும்.
- 30 நிமிடங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அடுத்து சிறிது ஓய்வு கட்டாயம் தேவை என்பதை மறக்கவேண்டாம்.
- தசைகளை பாதுகாக்க மற்றும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க கார்டியோவில் தொடங்கி வலிமை பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
- அதிக குளிர் அல்லது அதிக சூடாக இருக்கும் இடங்களில் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல.
- உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும், பின்னரும் குறிப்பிட்ட இடைவெளியில் நன்றாக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகமிக அவசியம்.